தனி குடித்தனம்




தன் மனைவி கனகு அழுதுகொண்டிருப்பதை பார்த்த ராஜேந்திரனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது. இங்க பாரு கனகு எதுக்கு அழுகறே? உன் மகன் உனக்கு அனுசரணையா பேசலையின்னு தானே அழுகறே ? விட்டு தள்ளு, அது அவன் வாழ்க்கை, தன்னோட பொண்டாட்டி மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறான்.உனக்கு ஏற்கனவே பி.பி இருக்கு, இதுல வீணா மனசை போட்டு அலட்டிகிட்டா தேவையில்லாம, உடம்புக்குத்தான் தொந்தரவு வரும். அவளை தேற்றினார். அவள் விசும்பலுடன், ஏங்க நியாயமுன்னு ஒண்ணு இல்லையா?
சாயங்காலம் அவன் வர்ற நேரத்துல வெளியே கிளம்பறேயேன்னு கேட்டேன், நான் அவருகிட்டே போனில சொல்லிட்டேன் நான் எங்க போயிருக்கேன்னு அவருக்கு தெரியும்,, அப்படீன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசறா, சரி அவன் வரும்போது இவதான் வெளியே போயிட்டாளேன்னு நான் காப்பி கொடுத்தேன். அவன் எங்கேம்மா மலர்? அப்படீன்னு கேட்டான், நான் உள்ளதை சொன்னேன். அதுக்கு அவ திரும்பி வந்து என்ன உங்க பையன் கிட்ட என்ன சொன்னீங்க? அப்படீன்னு சண்டைக்கு நிக்கறா. இவனாவது நான்தான் அம்மா கிட்டே கேட்டேன்னு சொல்லனும்ல, அப்படியே மரமாட்டம் நிக்கறான். சரி விடும்மா, அப்படீன்னு என்னையத்தான் தடுக்கறான், அவன் பொண்டாட்டிய கொஞ்சம் சும்மா இருன்னு சொல்ல மாட்டேங்கறான் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தார் இராஜேந்திரன்.
அவரும், பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அம்மா, மகன் மருமகள் பேசிக்கொண்டதை. இருந்தாலும் மனைவி வருத்தப்படக்கூடாது என்று மீண்டும் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டார்.
இது ஒரு வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான். மகனுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாதம் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாய் இருந்ததாய் ஞாபகம், அதன் பின் அடிக்கடி இருவருக்கும் உரசிக் கொள்வது வாடிக்கை ஆகி விட்டது. இராஜேந்திரனுக்கு மகனின் நிலைமை புரிந்தது. காரணம் ஏறக்குறைய இரண்டு மூன்று வயது வித்தியாசமே மகனுக்கும் மருமகளுக்கும்.இவன் மனைவியிடம் சமாதானமாய் இரு என்று சொன்னால் அந்த பெண் எதிர்த்து பேசலாம், அதனால் இவனுக்கு கோபம் அதிகமாகி வாக்குவாதம் வரும். அதனால் அவன் அம்மாவையே சமாதானமாக போக சொல்கிறான். அம்மா வயதானவள், புரிந்து கொள்வாள் என்று. ஆனால் எத்தனை காலம்தான் அவளும் பொறுமையாய் போவாள். மகன் மீது வரும் கோபத்தை இயலாமையால் அழுகையாய் காட்டுகிறாள்.
கனகு அப்படியே மலைத்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். மகன் அவள் தலையில் பெரிய கல்லை தூக்கி போடுவது போல நாங்கள் தனி குடித்தனம் போவதாய் சொல்லி விட்டான்.இதை அவள் எதிர் பார்க்கவே இல்லை. எங்கே தனியாக போய் விடுவார்களோ என்று தனக்குத் தானேவும், அல்லது தன் கணவனிடமும், புலம்புவாளே தவிர மகனிடம் எதிர்த்து பேச மாட்டாள். ஆனால் அப்படி இருந்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது. மகன் தனிக்குடித்தனம் போவதாக சொல்லி விட்டான்.அம்மாவின் மன நிலை அவனுக்கு புரிந்திருக்குமோ என்னமோ, மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். உள்ளறையில் உட்கார்ந்து இருந்த ராஜேந்திரனுக்கு அவன் சொன்னது காதில் கேட்டு கொண்டுதான் இருந்தது.
அவரை பொருத்தவரை இந்த குடும்பத்தில் வெறும் பார்வையாளனாக இருந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. இதற்கும் அவருக்கு வயது ஐம்பத்தைந்து தான் ஆகிறது. நல்ல வேலையிலும் இருக்கிறார். கல்யாணம் ஆனதும் மனைவியின் அன்பில் மயங்கியவர், இது வரை மீள் முடியாமல், எதிர் வார்த்தை பேசாமல் இருக்கிறார். மகனும் அப்படித்தான் இருந்தான் கல்யாணம் ஆகும் வரை. அதன் பின் கொஞ்சம் மாறினான். இப்பொழுது நிறைய மாறி விட்டான். தனிக்குடித்தனத்துக்கு அடி போட்டு விட்டான்.
மகனுடன் பேச வேண்டும் என்று முடிவு செய்தார். தன் மனைவி இதனால் மனம் உடைந்து விடுவாள் என்று அவருக்கு தெரியும். மகனை சமாதானப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
மகனிடம் ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவர் இப்பொழுது எதுவும் பேசாமல் சர்வர் கொண்டு வந்த காப்பி டம்ளரை தலை குனிந்து பார்த்து கொண்டிருந்தார்.
சொல்லுங்கப்பா, ஏதோ பேசணும்னு ஆபிசுக்கு போன் போட்டு இந்த ரெஸ்டாரெண்டுக்கு வர சொன்னீங்க, வந்து பத்து நிமிசமா வந்த காபிய கூட குடிக்காம ஒண்ணும் பேசாம உட்கார்ந்திருக்கீங்க. எதுவுமின்னாலும் மனசு விட்டு பேசுங்கப்பா அவன் பேச பேச ஆச்சர்யத்துடன் அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இவனுக்கு இருபத்து ஐந்து வயது இருக்குமா? இவன் வயதில் நாம் இவ்வளவு தெளிவாக இருந்தோமா? மனைவியின் பேச்சு மட்டும்தான் அப்பொழுது நமக்கு முக்கியமாய் இருந்தது. ஆனால் இவனும் என்னதான் அறிவாய் பேசினாலும் தன் மனைவியின் பேச்சை கேட்டுத்தானே தனிக்குடித்தனம் போகிறான்.இதை நினைக்கும்போது அவருக்கு மகனின் மீது இருந்த மதிப்பு குறைந்தது.
தொண்டையை கணைத்துக்கொண்டு அம்மா ரொம்ப வருத்தப்படுறா, இப்படி திடீருன்னு நீ தனிக்குடித்தனம் போறேன்னு சொல்லிட்டே. இதை நாங்க இரண்டு பேரும் எதிர்பார்க்கலை.
எங்களோட இருக்கறதுல உங்களுக்கு என்ன குறை? நாங்க உங்க இரண்டு பேருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு தானே இருக்கோம்.நீங்க இரண்டு பேரும் வேலைக்கு போறீங்க, உங்களுக்குன்னு வீட்டுல பெரியவங்க நாங்க இருந்தா உங்களுக்கு பாதுகாப்புதானே. நாளைக்கு உங்களுக்கு குழந்தை பிறந்தா, அந்த குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி கூட இருந்தா சந்தோசம்தானே.
நாங்க தனிக்குடித்தனம் போறோமுன்னு சொன்னேனே தவிர தனியா போறோமுன்னு சொல்லையே. பெரியவங்க பக்கத்துல போய் இருக்கப்போறோம்.
எனக்கு சட்டென புரிந்து விட்டது. அதாவது நீ வீட்டோட மாப்பிள்ளையா போகப்போறே? அப்படித்தானே. உன் மாமானார் வீட்டு பக்கத்துல போறதுன்னு முடிவு பண்ணிட்டே. கோபத்துடன் குரலை உயர்த்தினேன்.பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், எங்களை திரும்பி பார்ப்பதாக தோன்றியது.
கூல் கூல் அப்பா, எதுக்கு இவ்வளவு கோபப்படறீங்க. நானே என் மாமனார் வீட்டு பக்கத்துல போறேன்னு சொன்னாலும் அவ ஒத்துக்க மாட்டா. சொன்னவன், இந்த யோசனையை நாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே பேசி வச்சதுதான்.
பேஷ், பேஷ், அப்ப இதெல்லாம் முதலிலேயே திட்டம் போட்டதுதான்னு சொல்லு, குரலில் மீண்டும் கோபம் கொப்பளித்தது.
யெஸ் டாட், அவன் குரலில் உற்சாகம், நீங்க செஞ்ச தப்பை நாங்க சரி செய்யறதுக்குத்தான் இந்த ஐடியாவே, சொல்லிவிட்டு சிரித்தான். என்னப்பா புரியலையா?
உங்கப்பா, அம்மா உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? இந்த எழுபத்தி ஐந்து வயசுலயும், வைராக்கியமா தனியா இருக்காங்க. உங்களுக்குத்தான் உங்க மனைவி மட்டும்தான் கண்ணுக்கு தெரியும். உங்கப்பா, அம்மாவும் நீங்க தனிக்குடித்தனம் வரும்போது அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்..
ராஜேந்திரனுக்கு ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்தார்.
நாங்க உங்க அப்பா, அம்மா, குடியிருக்கற ஏரியாவுல, அவங்க பக்கத்துல குடி போறோம். அவங்களை தொந்தரவு பண்ண மாட்டோம். அதே நேரத்துல எங்களுக்கு நேரம் கிடைக்குபோது எல்லாம் தாத்தா பாட்டி கூட இரண்டு பேரும் இருக்கணும்னு ஆசைப்படறோம்.
என்னைய விட அவளுக்கு அவங்களோட கூட இருக்கணும்னு ஆசைப்படறா. ஒத்தை பையனா உங்களை பெத்து, வளர்த்து கல்யாணம் பண்ணிக்கொடுத்து ஆனா நீங்க தனிக்குடித்தனம் வந்து வருசத்துக்கு ஒரு தரம்,அவங்களை பாக்கற மாதிரி நான் இருக்க மாட்டேன். தாத்தா பாட்டி பக்கத்துல இருந்தா, கண்டிப்பா நீங்க எங்களை பாக்க வரும்போதாவது உங்க அப்பா, அம்மாவை பாப்பீங்க.
இப்பொழுது மகன் சொல்ல சொல்ல அவருக்கு என்னோட அப்பா, அம்மாவும் நான் தனிக்குடித்தனம் போறேன்னு சொன்னதும் இந்த சூழ்நிலையிலதான் இருந்திருப்பார்கள் என்று புரிய ஆரம்பித்தது. .