தனிமை – ஒரு பக்க கதை






புதிதாகக் கட்டப்போகும் வீட்டின் பிளானைப்பற்றி, ஓய்வு பெற்ற கட்டிட இன்ஜினியர் சபேசனோடு விவாதித்துக் கொண்டிருந்தான் வேணு.
”எனக்கும் மனைவிக்கும் தனி படுக்கை அறை, மகனுக்கு ஒன்று, வரவேற்பரை, பூஜையறை…” என்று வேணு தன் தேவைகளை விளக்கிக் கொண்டிருக்க, ”தாத்தா-பாட்டிக்கு தனியா ரூம்
வேண்டாமா..?” என 5 வயது மகன் இடைமறித்தான்.
‘குழந்தை சொல்றதில நியாயம் இருக்கு’ என்றார் சபேசன்
‘கண்வன்-மனைவிக்கு தனி அறை பிரைவேசிக்காக. பையனுக்குப் படிப்பதற்காக. வயசானவங்களுக்கு அந்த அவசியம் இல்லையே…சின்னப்பையன் தெரியாம சொல்றான்’ என்றான் வேணு.
‘பிரைவேசிங்கறது உடல் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. மனசு சம்பந்தப்பட்டதும்கூட. வயசான காலத்தில் மன அமைதிக்கு தனிமை நிச்சயம் தேவை. வெளியில் எங்கேயும் போக
முடியாத அவங்க, தனியா உட்கார்ந்து பேசுவாங்க. பழைய நிகழ்வுகளை அசைபோடுவாங்க…ஏன் சண்டை கூட போடுவாங்க! இதை நான் இன்ஜினியரா சொல்லலை. 60 வயசைத் தாண்டினதால உணர்ந்து சொல்றேன். இதைப்பற்றி நீங்க நிச்சயம் சிந்தக்கணும்” என்றார் சபேசன் ஆணித்தரமாக.
வீட்டு வரைபடத்தில், இன்னொரு அறைக்கான இடம் ஒதுக்கப்பட்டது.
– எஸ்.ராமன் (26-7-10)