தண்டனை
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 66
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மோகனா எப்போதும் கல்லூரிக்குக் காரில்தான் வருவாள், போவாள். அந்தக் காரை அவளுக்காகவே அவளுடைய அப்பா வாங்கி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல காரை ஓட்டவும் ஓர் ஓட்டுநரையும் அமர்த்தியுள்ளார். ஆடம்பரமான வீடு, அழைப்புக்குக் குரல் கொடுக்க பணியாள், ஆடை ஆபரணங்கள் எல்லாம் அவளுக்கு இருந்தும், ஏதோ அவள் மனதில் எப்போதும் ஒரு வேதனை இருப்பவளாகவே காணப்படுவாள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா?
அவள் செல்வச் சீமானின் ஒரே மகள் என்ற காரணத்தினால் அவளிடம், அவளுடன் படிக்கும் மாணவர்கள் யாரும் நெருங்கி பழக தயங்கினார்கள். மோகனாவும் யாரிடமாவது பழக நினைத்தாலும் முடியவில்லை.
அவள் பணக்காரியாக இருப்பதால் தனிமரமாகிவிட்டாள் என்று கூட கூறலாம்.
வீட்டில் அவளுக்கு என்று தனி அறை, அதில் அவளுக்கு ஆடம்பரமான படுக்கை அலமாரிகள். தொலைபேசி, தொலைக்காட்சி, வி.சி.ஆர் போன்ற ஆடம்பரமான பொருள்கள் எல்லாம் உண்டு. ஆனால் அவளிடம் பேசி பழக மட்டும் யாரும் கிடையாது.
அவளுடைய பெற்றோர்கள் கூட அவளுடன் பேசுவதில்லை. அவள் பிறந்தபோதுகூட தாயின் பக்கத்தில் கிடந்தாளா என்பதே சந்தேகம். அவள் பிறந்தது முதல், தனி அறையில், வேலைக்காரியின் அரவணைப்பில் தான் வளர்ந்தாள்.
”குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள். மழலைச் சொல் கேளாதவர் என்றார்” வள்ளுவர். அப்படிப்பட்ட மழலைச் சொல்லைக் கூட மோகனாவின் பெற்றோர்கள் கேட்கவில்லை. அவளின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்ந்தவள் அவளுடைய வளர்ப்பு தாய்தான்.
மோகனாவை அவளுடைய பெற்றோர்கள் வெறுக்க அப்படி என்ன காரணம்? மோகனாவை அவளுடைய பெற்றோர்கள் வெறுக்கவில்லை. பிள்ளையைக் கவனித்துக் கொள்ளத்தான் பணியாட்கள் இருக்கிறார்கள். வேண்டியதை வாங்கி தந்து விட்டால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள்.
மோகனாவின் தந்தை சோமசுந்தரம் ஒரு பெரிய துணி நெய்யும் தொழிற்சாலையை நடத்தி வந்தார். அதனால் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வர வேண்டியதாக இருந்தது. அதனால் அவர் வீட்டில் இருப்பது மிகக் குறைவான நாட்கள்தான். அப்போதுகூட அவர் தன் மகளைப் பார்த்து பேச அவர் கொஞ்ச நேரத்தைச் செலவழிக்க மாட்டார். தன் அறையைத் தாழிட்டுக் கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பார். அல்லது தன் மனைவியை அழைத்துக் கொண்டு, விருந்து, விழா என்று வெளியில் சென்றுவிடுவார்.
மோகனாவின் தாய் மீனாக்குமாரி பெற்ற குழந்தைக்குத் தன் பாலைக் கொடுத்தால், தனது உடற்கட்டு குலைந்துவிடும் என்ற எண்ணங்கொண்டவள். தன்னை ஒரு பூலோக ரம்பையாக எண்ணிக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்வதற்குச் செலவிடும் நேரத்தில் ஒரு பத்து நிமிடம் கூட தன் மகளிடம் பேசிட விரும்பாதவள். ஆனால், மகளிர் மன்றத் தலைவி என்ற பெயருடன், அடிக்கடி பெண்கள் மாநாட்டில் பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் மட்டும் சொற்பொழிவு ஆற்ற சென்றிடுவாள்.
மோகனா வளர்ந்து பள்ளிப் பருவத்தை அடைந்தவுடன் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக விளங்கினாள். ஆண்டுதோறும் பள்ளியில் அவள்தான் முதல் மாணவியாக வருவாள். அப்போது அவளுக்கு மகிழ்ச்சி ஏற்படாது. ஏனெனில் பள்ளியில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு, பரிசு பெற்றவர்களின் பெற்றோர்கள் அனைவரும் வந்து, தங்கள் பிள்ளைகளைப் பாராட்டுவார்கள். பரிசுகளும் வாங்கி அளிப்பார்கள். ஆனால் மோகனாவின் பெற்றோர்கள் மட்டும் வரமாட்டார்கள். அவர்களுக்குத் தான் நேரம் இருக்காதே.
மோகனா கெட்டிக்காரியாக இருந்ததால் அவளுடைய பெற்றோர்களைப் பள்ளி ஆசிரியர்கள் அழைக்கமாட்டார்கள். அப்படியே மோகனாவின் பெற்றோர்களும் பள்ளிக்குச் சென்று, தம் மகளின் படிப்பு பற்றி கேட்டறிய வேண்டிய அவசியமும் இல்லாமற் போய்விட்டது.
ஒவ்வொரு பெண் பிள்ளையின் வாழ்க்கையில் உண்டாகும் ஒரு முக்கிய நிகழ்ச்சி பருவமடையும் நிகழ்ச்சிதான். அந்நிகழ்ச்சி மோகனாவுக்கு ஏற்பட்டபோது, அவளுடைய பெற்றோர்களுக்குச் சந்தோசம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
மகளிர் மன்றத் தலைவி மீனாக்குமாரி மட்டும் தன் மகள் பருவமடைந்த செய்தியைத் தன் மன்றத்தில் சொல்லி இருந்தால் அந்த விழா மிகவும் சிறப்பாக நடந்தேறி இருக்கும். ஆனால் அவள் சொல்லவில்லை.
தன் மகள் பருவமடைந்த செய்தியைக் கேட்டால் தன்னை யாராவது. “நீ விரைவில் பாட்டியாகிவிடப் போகிறாய்” என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தால் வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டாள்.
அதைக் கண்டு மோகனா மிகவும் மன வேதனை அடைந்தாள். தன்னுடைய இன்ப துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகில் யாருமே இல்லை. தான் தனிமை ஆக்கப்பட்டுவிட்டதாக எண்ணினாள், மனம் குமறினாள்.
தான் பிறந்த நேரம் சரியில்லையோ அல்லது பிறந்த இடம் தான் சரியில்லையோ என்ற விவரம் புரியாமல் இருந்துவிட்டாள்.
காலச்சக்கரம் உருண்டோடின. மோகனா உடம்பில் ஏற்பட வேண்டிய நெளிவு சுழிவுகளும் ஏற்ற இறக்கங்களும் கச்சிதமாக அமைந்துவிட்டன. அவளைப் பார்த்தாலே காளையர் உள்ளம் கட்டுக்குள் அடங்காமல் அவளை நோக்கி ஓடும். ஆனால் அடுத்தக் கணமே அது பின்னோக்கி நகரும். அவள் பணக்காரி அல்லவா? நெருங்க பயம்.
ஆணுக்கு அகவை இருபத்தொன்றும், பெண்ணுக்கு அகவை பதினாறும் முக்கியமானவை அல்லவா? அதாவது இருபத்தொரு வயதில்தான் ஓர் ஆண் பொறுப்புள்ள மனிதனாக கருதப்படுகிறான். பதினாறு வயதில்தான் ஒரு பெண் முழுமையான வளர்ச்சி அடைகிறாள். அந்த முழுமையான வளர்ச்சி நாளை, கூழைக்குடித்து குடிசையில் வாழும் ஆண்டியாக இருந்தாலும் சரி, பாலும் தேனும் சாப்பிட்டுக் கொண்டு மாடமாளிகையில் வாழும் அரசனாக இருந்தாலும் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பதற்கொப்ப, தன்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
மோகனாவும் அந்த முழுமையான வளர்ச்சியை அடைந்தாள். அந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட, அவள் விரும்பினாள். ஆனால் அவளின் பெற்றோர்கள் அதற்காக எந்தவிதமான ஏற்பாடும் செய்வதாகத் தெரியவில்லை. அதை அறிந்து மோகனா அழுதாள். அப்படி ஒரு நாள் எனக்கு உண்டு என்பதை என் பெற்றோர்கள் அறியாமல் இருக்கிறார்களே’ என்று எண்ணினாள்.
தன்னுடைய பெற்றோர்கள் உண்மையிலேயே தூங்குகிறார்களா அல்லது தூங்குவதுபோல் நடிக்கிறார்களா? என்பதைக் கண்டறிய விரும்பினாள் மோகனா.
தன் தாயிடம் நேராகச் சென்றாள்.
“மம்மி.”
“என்ன?”
“நான் உங்களோடு கொஞ்ச நேரம் பேசலாமா?”
“மோகனா! எனக்கு உன்கிட்டே பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. எனக்காக என் தோழிகள் காத்துக்கிட்டிருப்பாங்க. அடுத்த வாரம் மாதர் சங்கத் தலைவிக்கான தேர்தல் வருகிறது. இந்த வருடமும் நானே மன்றத் தலைவியாக வர வேண்டும் என்று எண்ணுறாங்க. அதனாலே பிரச்சார வேலை நிறைய இருக்கு. நான் புறப்படனும்” என்றாள் மீனாக்குமாரி.
“ஐந்து நிமிடம் போதும்.”
“விட மாட்டீயே. என்ன வேணும்? சொல்லித் தொலை” என்று மகளைப் பார்த்து கோபமாகக் கத்தினாள் மீனாக்குமாரி.
“எனக்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள். அன்று பதினாறு வயதாகிறது. பெண்களுக்குப் பதினாறு வயது மிகவும் முக்கியமானது அல்லவா? அதனாலே என் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட நினைக்கிறேன்.”
“எப்போ உனக்குப் பிறந்த நாள்?”
“அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையா? அன்று தானே என் மன்றத்தின் தேர்தல். தலைவர் பதவிக்கு நான் போட்டி இடுகிறேன் என்று இப்பத்தானே உன்னிடம் சொன்னேன்? என்று சொல்லிக் கொண்டே மீனாக்குமாரி புறப்பட்டாள்.
“அம்மா… அம்மா…” என்று அழைத்துக் கொண்டே பின்னால் சென்றாள் மோகனா.
“ஏய் மோகனா! வாயை மூடு. பின்னாலே நின்னுக்கிட்டு கூப்பிடாதே. உன் அப்பா வருவார். அவரிடம் நீ என்ன செய்ய நினைக்கிறாயோ? அதைச் சொல்லி செய்து கொள்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
தன் தாயார் போவதைப் பார்த்துக் கொண்டே நின்றாள் மோகனா.
தன்னுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளாத தாயார் மீது அளவு கடந்த ஆத்திரம் கொண்டாள்.
அம்மா சொன்ன மாதிரி அப்பாவிடம் பிறந்த நாளைப் பற்றி சொல்வோம் என்று எண்ணியபடி மோகனா அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அப்பா வந்தார்.
”ஹலோ டாடி.’
“ஹலோ மோகனா.”
அவ்வளவுதான். வேறு எதுவும் பேசவில்லை. நேராக தன் அறைக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டார் சோமசுந்தரம்.
“ஹலோ டாடி” என்று கூப்பிட்டும் கொஞ்ச நேரம் நின்று தன்னுடன் பேசாமல், அறைக்குப் போய்விட்டாரே அப்பா, அவரிடம் எப்படி பேசுவது என்று எண்ணினாள் மோகனா.
அவள் தன்னுடைய பெற்றோர்களின் அறைக்குள் இது நாள் வரையில் சென்றதே இல்லை. அந்த அறை எப்படி இருக்கும் என்றுகூட அவளுக்குத் தெரியாது. நேரம் விரைவாக ஓடிக் கொண்டிருந்தது. அறைக்குள் சென்ற அப்பா வெளியில் வரவே இல்லே.
மோகனாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன் மனதில் தோன்றிய பலவிதமான எண்ண ஓட்டங்களோடு நின்றிருந்தாள்.
நடப்பது நடக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு, தன் அப்பாவின் அறைக்குச் சென்று கதவை டக், டக், டக் என்று மூன்று முறைகள் தட்டினாள்.
“எஸ், கம்மின்” என்ற அழைப்பு வந்தது. மெதுவாக கதவைத் திறந்து கொண்டு, உள்ளே எட்டிப் பார்த்தாள், மோகனா.
“நீயா? நான் உன் அம்மா என்றல்லவா? நினைத்தேன்”.
“நீ ஏன் இங்கு வந்தாய்? உனக்கு என்ன வேணும்?”
அவர் கேட்ட தோரணையே அவள் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தியது. அதனால் அவள் தடுமாற்றத்துடன் வந்து… வந்து…..
“அதுதான் வந்துட்டியே. என்ன வேணும்? அதைச் சொல்லு.”
”டாடி”
“டாடி தான் கேட்கிறேன். என்ன?”
“எனக்கு அடுத்த வாரம் பிறந்த நாள்.”
“அப்படியா!”
“ஆமாம் டாடி. எனக்குப் பதினாறாவது பிறந்த நாள். அதை நல்லவிதமாகக் கொண்டாட வேணும்!”
“கொண்டாடிட்டா போகுது” என்றார் சோமசுந்தரம். அதைக் கேட்டதும் மோகனாவுக்கு மனதில் ஒரு புது தெம்பு ஏற்பட்டது. பயம் கொஞ்சம் குறைந்தது.
“எப்போ உனக்குப் பிறந்த நாள்?”
ஒரு அப்பா தன் பிள்ளையிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது?” பிள்ளை, பிறந்த நாளை பிள்ளை பெற்றோரிடம் சொல்ல வேண்டியதாக இருக்கிறது” என்ற வாய்க்குள் முணுமுணுத்தாள் மோகனா.
“எப்போது பிறந்த நாள்?”
“அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை”
”அடுத்த ஞாயிற்றுக் கிழமையா?’
“ஆமாம்!”
உடனே மேசையின் மேல் கிடந்த டயரியை எடுத்து பிரித்துப் பார்த்தார்.
“அடுத்த ஞாயிற்றுக் கிழமை எனக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு மாநாடு இருக்கிறது மோகனா” என்றார்.
மோகனாவினால் எதுவும் பேச முடியவில்லை. கண்களில் நீர் துளிர்க்க நின்றாள்.
“நான் இல்லாட்டி என்ன? உன் அம்மா இருக்கிறாள். இந்தா ஆயிரம் வெள்ளி. இதை வைத்து கொண்டு உன்னுடைய பிறந்த நாளை நல்லா கொண்டாடு.” என்று கூறியபடி பணத்தை அவளிடம் நீட்டினார் சோமசுந்தரம்.
பணத்தை வாங்கி கொண்ட மோகனா, “டாடி அம்மாவுக்கும் அன்று ஓய்வு இல்லையாம்” என்றாள்.
”அப்படியா! அதனால் என்ன? நீ உன் தோழிகளுடன் எங்காவது ஒரு நல்ல உணவு விடுதியில் உன் பிறந்த நாளை ஜாம் ஜாம் என்று கொண்டாடிக் கொள்” என்றார்.
அதற்கு மேல் மோகனா எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு கிளம்பினாள்.
பிள்ளையைப் பெற்று, ஒரு வேலைக்காரியிடம் கொடுத்து. வளர்க்கச் சொல்லி, வேண்டியதை வாங்கி கொடுத்து. தேவைபடும்போது பணத்தை மட்டும் கொடுத்துவிட்டால், அப்பிள்ளைக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்று அர்த்தமா? அப்பிள்ளையின் புற வாழ்க்கையை மட்டும் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா? அப்பிள்ளையின் அக வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை இல்லையா?
பிள்ளைகளின் ஆசா பாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவற்றைப் பகிர்ந்து கொண்டு பாராட்டி மகிழ வேண்டாமா? துன்பத்தைப் போக்கிட வழி காட்டிட வேண்டாமா? பெறக்கூடாத பிள்ளையைப் பெற்றுவிட்டது போல் அல்லவா? என் பெற்றோர்கள் நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ண அலைகள் அவள் மனதில் எழுந்து மோதிக்கொண்டன.
இன்னும் நான் என்ன சின்ன பிள்ளையா? என்னுடைய எதிர்பார்ப்புகளை என் பெற்றோர்கள் நிறைவேற்றாமல் இருந்தால் அது எப்படி சரியாகும்? என் அப்பா எதற்காக யாருக்காகச் சம்பாதிக்கிறார். அவர் ஊருக்கும் உலகத்திற்கும் மட்டும் பெரிய மனிதராக இருந்துவிட்டால் போதுமா? தான் பெற்ற பிள்ளைக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க வேண்டாமா?
மகளிர் மன்றத் தலைவி, ஊராருக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருப்பவள், தன் வீட்டிற்கு மட்டும் அப்படி செய்யாமல் இருப்பது ஒரு தாய்க்கு அழகா? தன்னைப் போன்றுதானே தன் மகளும் ஒரு பெண். அவளுக்கு ஏற்படும் உடல் இடர்பாடுகளைக் கேட்டு அதற்கான தீர்வைக் காணாத தாய் ஒரு தாயா? இவ்வாறு எல்லாம் எண்ணியெண்ணி வருந்திய மோகனா, தன்னுடைய பெற்றோர்களுக்குத் தன் மீது அக்கறையோ, அன்போ, ஆசையோ இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.
இனிமேல் தன் பெற்றோர்கள் தன் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள். தனக்கு வேண்டியதை அவர்கள் சேர்ந்து செய்ய மாட்டார்கள். தன்னுடைய இன்ப துன்பங்களில் பங்குபெற மாட்டார்கள் என்று எண்ணினாள். தன் நிலையை நினைத்து நினைத்து மனதிற்குள்ளேயே தேம்பி தேம்பி அழுதாள். தன்னுடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காகக் குழியைத் தேடி ஓடும் நீரைப் போன்று மோகனா ஒருவரைத் தேடி ஓடினாள்.
பள்ளி முடிந்ததும் அவள் வகுப்பு மாணவ மாணவிகளில் சிலர் ஒன்று சேர்ந்து செல்வார்கள். அதை மோகனா பல முறை பார்த்து இருக்கிறாள். ஆனால் அவர்கள் எங்குப் போகிறார்கள்? எதற்கு போகிறார்கள்? என்பது மட்டும் அவளுக்குத் தெரியாது. ஏனென்றால், அவள் காரில் வீட்டிற்குப் போகிறவளாயிற்றே!
அன்று பள்ளி முடிந்ததும் காத்துக் கொண்டிருக்கும் காருக்குச் செல்லாமல், புத்தகங்களை மார்போடு அணைத்துக் கொண்டு, தன் வகுப்பு தோழிகள் நின்ற இடம் நோக்கிச் சென்றாள்.
என்றும் இல்லாத அதிசயமாக மோகனா தங்களை நோக்கி வருவதைக் கண்ட அவர்கள் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகில் சென்றதும் அனைவரும் மௌனமாக நின்றார்கள்.
“நான் உங்களுடன் வரலாமா?” என்று மோகனா நிலவிய மௌனத்தைக் கலைத்தாள்….
“நான் கேட்டது உங்களுக்குக் கேட்டதா?”
“நீ… எங்களுடன்….” என்றாள் கலா என்பவள்.
“ஆமாம்!”
“நான் உங்களுடன் வர விரும்புகிறேன்.”
“நாங்கள் போகும் இடத்திற்கா?’
“அங்கேயே தான்.”
“நீ அங்கே வரக்கூடாது.”
“ஏன்?”
“யாராவது பார்த்தால், உன் பெற்றோர்களுக்குத் தெரிந்தால் அவர்களுக்கும் உனக்கும் நல்லதாக இருக்காது.”
“அப்படிப்பட்ட இடமா? நீங்கள் செல்லும் இடம்?”
“அப்படித்தான் என்று வைத்துக் கொள்”
“அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி. நான் உங்களுடன் வரத்தான் போகிறேன்.”
“நீயே விரும்பி வரும்போது, நாங்கள் என்ன செய்ய முடியும்?”
மோகனா தன் புத்தகங்களைக் கார் டிரைவரிடம் கொடுத்து, அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தன் வகுப்பு மாணவர்களுடன் சென்றாள்.
அவரகள் அனைவரும் எம்.ஆர்.டி.ரயிலில் ஏறி ஆர்ச்சர்ட் சாலையை நோக்கிச் சென்றார்கள். அங்கே இருந்த ஒரு பிரபலமான ஓட்டலிலுள்ள ஓர் அறைக்குள் சென்றார்கள். அந்த அறை ஒரே இருட்டாக இருந்தது. ஆங்காங்கே சிறுசிறு மின் விளக்குகள் செந்நிறத்தில் ஒளி ஊட்டிக் கொண்டிருந்தன. அப்படி இருந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாத அளவுக்கு இருள் கவ்வியிருந்தது அந்த அறை. மெல்லிசை காற்றில் மிதந்து கொண்டிருந்தது. மோகனாவும் அவளுடன் சென்றவர்களும் சுவர் ஓரமாக இருந்த ஒரு வட்டமான மேசையைச் சுற்றி அமர்ந்தார்கள்.
கலா என்பவள் மோகனாவிடம், “நீ என்ன குடிக்கிறாய்?” என்று கேட்டாள்.
“எனக்கு ஏதாவது குளிர்ப்பானம் போதும்.” எல்லோருக்கும் வெவ்வேறான. குளிர்ப்பானங்கள் வந்தன. அவற்றுக்குரிய பணத்தை மோகனா தான் கொடுத்தாள். குளிர்ப்பானத்தைக் குடித்துக் கொண்டும், என்னென்னவோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
மோகனாவுக்கு இது புதிய அனுபவம். அதனால் அங்குமிங்கும் கண்ணோட்டமிட்டாள். அவள் கண்ணுக்கு அங்கிருந்தவர்கள் அனைவருமே பதின்மன் வயதினர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் புகைத்துக் கொண்டும். குடித்துக் கொண்டும் இருந்தார்கள்.
திடீரென்று பேரிரைச்சலுடன் ஆங்கில இசை எழுந்தது. உடனே அங்கிருந்த இணைகள் எழுந்தன. ஆடத் தொடங்கின. அவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி ஆடினார்கள்.அந்த ஆட்டத்தில் ஒரு முறையான நடனமைப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
மோகனாவின் வகுப்பு தோழர்களும் தோழிகளும் கூட நடனமாடினார்கள். ஆனால் மோகனாவை மட்டும் நடனமாட யாரும் அழைக்கவில்லை. அதனால் அவள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சரி மோகனா புறப்படலாமா?” என்று கலா கேட்டாள்.
மோகனா கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். இரவு மணி பத்தைக் காட்டியது. அவள் இவ்வளவு நேரம் இது நாள் வரையில் வெளியில் இருந்தது இல்லை.
ஒரு வாடகை வண்டியில் ஏறி வீட்டிற்குச் சென்றாள். அவளுக்காகப் பணிப்பெண் காத்திருந்தாள். அவள் மோகனாவை ஒரு மாதிரி பார்த்தாள். ஆனால் மோகனாவிடம் எதுவும் கேட்கவில்லை. உணவை உண்டு விட்டு, தன் அறைக்குள் சென்றாள்.
படுக்கையில் படுத்தாள். தூக்கம் வரவில்லை. தான் சென்ற இடமும் கண்ட காட்சிகளும் அவள் கண் முன்னே தோன்றிய வண்ணம் இருந்தன. மறுநாளும் அங்கே செல்ல வேண்டும் என்று எண்ணியவாறே எப்படியோ தூங்கிவிட்டாள்.
மறுநாளும் வகுப்பு நண்பர்களோடு சென்ற அதே ஆர்ச்சர்ட் சாலையில் வேறு ஓர் இடத்திற்குச் சென்றார்கள். இது மாதிரியான இடங்கள் இந்த வட்டாரத்தில் நிறைய உள்ளன. இங்கு வந்து எல்லோரும் இன்பமாக சிறிது நேரம் இருந்துவிட்டுச் செல்வார்கள் என்பதைத் தெரிந்து கொண்டாள் மோகனா.
மோகனாவிடம் குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று கலா கேட்கவில்லை. ஒரு பெரிய ‘ஜக்கில்’ ‘எங்கர் பீர்’ வந்தது.
ஆளுக்கொரு ‘கிளாஸ்’ வைக்கப்பட்டன. கலா பீரை எல்லா கிளாஸிலும் ஊற்றினாள். எல்லோரும் கையில் கிளாஸை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் மோகனா மட்டும் எடுக்காமல் உட்கார்ந்திருந்தாள்.
“மோகனா கிளாஸ்ை எடு” என்றாள் கலா.
“எனக்குப் பழக்கமில்லை.”
கலகலவென்று கலா சிரித்தாள்.
பரம ஏழையான எங்களுக்கே இந்தப் பழக்கம் இருக்கும்போது பணக்காரியான உனக்கு இந்தப் பழக்கம் இல்லை என்று சொன்னவுடன் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது மோகனா.
என் மாதிரி ஏழை வீட்டில் வரவேற்பரையிலுள்ள அலமாரியில், ஏதாவது எவர்சில்வர் பாத்திரங்கள் அல்லது கண்ணாடி கிளாஸ்கள் இருக்கும். ஆனால் உன் மாதிரி பணக்காரி வீட்டிலுள்ள அலமாரியில் பல மாதிரியான மது வகைகள்தான் வரிசையாக இருக்கும்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு நாங்கள், குடிக்க குளிர்ப்பானம் அல்லது காபி, டீ தான் கொடுப்போம். உன் மாதிரி பணக்காரர் வீட்டிற்கு வருபவர்களுக்கு, நீங்கள் மதுபானம் தானே கொடுப்பீர்கள். நிலைமை இப்படி இருக்கையில் நீ எனக்குப் பழக்கம் இல்லை என்று சொன்னால் சிரிப்பு வராம? வேறு என்னதான் வரும்?” என்றாள் கலா.
“கலா. நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் எனக்குப் பழக்கம் இல்லை…” என்றாள் மோகனா.
அதனால் என்ன? எங்களுடன் வர விரும்பிய நீ, எங்களுடைய பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் நீ எங்க ‘கம்பெனியில்’ உறுப்பினராக இருக்க முடியும்.”
மோகனாவினால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. அதனால் அவளும் கிளாஸை எடுத்துக் கொண்டாள்.
எல்லோரும் கிளாஸை ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டார்கள். பிறகு குடித்தார்கள். மோகனா வாயருகே கொண்டு சென்றபோதே நாற்றம் தாங்க முடியாமல் முகத்தைச் சுழித்தாள். அதைப்பார்த்த கலா, “கமான் மோகனா, முதலில் அப்படித்தான் இருக்கும். மூக்கைப் பிடித்துக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு மடக்கென்று குடித்துவிடு” என்றாள்.
கலா சொன்னபடியே மோகனா செய்தாள். அவளுக்குச் சிறிது நேரத்தில் குடல் எரிய ஆரம்பித்தது. தலையைச் சுற்றுவது போல் இருந்தது.
“என்ன செய்யுது?” – கலா.
“தலையைச் சுற்றுது.” -மோகனா
‘இந்தா இன்னொரு கிளாஸ் குடி” எல்லாம் சரியாக போய்விடும்.
மேலும் ஒரு கிளாஸ் குடித்தாள். அதன் பிறகு என்ன நடந்தது. என்று அவளுக்குத் தெரியாது. அப்படியே மேசையின் மீது சாய்ந்துவிட்டாள். நீண்ட நேரத்திற்குப் பிறகு தெளிவு அடைந்தாள். பிறகு எல்லோரும் வீட்டிற்குப் புறப்பட்டு விட்டார்கள்’ இவ்வாறு மோகனாவிடம் இப்பழக்கம் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டு வந்தது. மது குடித்ததோடு, வெண் சுருட்டு புகைக்கவும் கற்றுக் கொண்டாள். பிறகு தன்னைக் கூப்பிடுகின்ற ஆண்களுடன் சேர்ந்து ஆடவும் தொடங்கினாள்.
தன்னுடைய பிறந்த நாளைப் பற்றி கலாவிடம் சொன்னாள்.
பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாட்டை எல்லாம் கலாவும் அவளுடைய பாய் பிரண்டும் சேர்ந்து கவனித்தார்கள்.
மோகனா புத்தாடையும் புத்தாடையும் அணிகலன்களும் உடுத்தி, புதுப்பெண்ணாகக் காட்சி அளித்தாள். கலாவும் அவளுடைய தோழர்களும் தோழிகளும் பிறந்த நாள் பாட்டுப்பாட, மோகனா பிறந்த நாள் ‘கேக்’ வெட்டினாள். பலவகையான உணவுகள், மதுபானங்கள், ஆடல் பாடல்களுடன் மோகனா பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தாள். அன்று கலா பல புதிய நண்பர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள். மோகனா ஒரு பணக்காரி என்பதை அறிந்து கொண்ட அவர்கள், அவளிடம் துணியில் ஒட்டிக் கொள்ளும் புல்லின் விதைகளைப் போல ஒட்டிக் கொண்டார்கள்.
மோகனா இப்போது கஞ்சா போன்ற போதைப்பொருளை உபயோகிக்கவும் கற்றுக் கொண்டாள். இறுதியில் பள்ளிப் படிப்பைத் தொடராமல் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டாள். போதைப் பொருளைப் பெற அவள் எதையும் எங்கேயும் செய்யவும் அவள் தயாரானாள்.
இதைக் காரணமாகக் கொண்டு கலாவின் காதலனுக்கும் அவன் நண்பனுக்கும் இடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அதாவது மோகனாவைப் பட்டப் பகலில் அரை நிர்வாணமாக்கி காட்டிவிட்டாள் கலாவின் காதலன் எதைக் கேட்டாலும் தான் தருவதாக அவன் நண்பன் சொன்னான். அந்தப் போட்டியை நிறைவேற்ற, ஒரு சனிக்கிழமை எள் போட்டால் எள் கீழே விழாத அளவுக்கு ஆர்ச்சர்ட் சாலை மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. அங்கே ‘விஸ்மா அட்டாரியா’ என்ற கடைத்தொகுதியின் அருகே உள்ள விரைவு உணவுக் கடைக்குள்ளும் வெளியிலும் பதின்மன் வயதினர் பலர் கூடியிருந்தார்கள். அவர்கள் குளிர்ப்பானம் குடித்துக் கொண்டும் நின்றார்கள். அங்கே மோகனா விரைவாக வந்தாள்.
கலாவின் காதலன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் போய் போதைப்பொருள் கேட்டாள். அவன். தான் சொன்னபடி நடந்து கொண்டால்தான் தருவேன் என்றான்.
“என்ன செய்ய வேணும்?” என்று கேட்டாள்.
அவன் அவளை மேலாடைகளை அகற்றிவிட்டு அரை நிர்வாணமாக நிற்க வேண்டும் என்றான்.
அவள் கொஞ்சம் கூட தயங்கவில்லை. தன் மேலாடைகளை அகற்றிவிட்டு, அவனிடம் கையை நீட்டினாள். அதைப்பார்த்த பலர் அப்படியே ஆணி அடித்த மரம் போன்று நின்றார்கள். கலாவின் காதலனின் நண்பன் அப்படியே மலைத்துப் போய் மலைபோல் நின்றான். கலாவின் காதலன் பையிலிருந்த ஏதோ ஒரு விதமான போதைப்பொருள் பொட்டலத்தை எடுத்து மோகனாவிடம் நீண்டினான். அதை அவள் அரை நிர்வாணத்துடன் நின்றபடியே வாங்கினாள். அப்போது எங்கிருந்தோ வந்த காவலர்கள் இருவர் அவர்கள் இருவரையும் பிடித்து கைகளில் விலங்கிட்டனர்.
“பட்டப்பகலில், பலர் கூடி இருக்கும் ஓர் இடத்தில் இப்படி ஒரு பெண் செய்யலாமா?” என்றார் ஒருவர்.
“என்ன செய்வது? காலம் ரொம்பக் கெட்டுப் போயிட்டு” என்றார் இன்னொருவர்.
காவலர்கள் அவ்விருவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். காற்று அடித்து களைந்து விட்ட கார்மேகம் என மக்கள் கூட்டமும் கலைந்துவிட்டது.
காவலர் மோகனாவிடம் அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அவள் எதுவும் கூறாமல் தேம்பி தேம்பி அழுதாள்.
“நான் உன்னை இன்னும் கொஞ்ச நேரத்தில் கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதனாலே உன் பெயர், அப்பா அம்மா யார் என்ற விவரங்களைச் சொல்’ என்று காவலர் கேட்டார்.
“என் பெயர் மோகனா.”
“உன் அப்பா – அம்மா யார்?”
“எனக்கு அப்பா – அம்மா யாரென்று தெரியாதுங்க.”
“பொய் சொல்லக் கூடாது. அப்பா – அம்மா இல்லாவிட்டால் இது நாள் வரையில் உன்னை வளர்த்தவர்கள் யார்?
மெளனம்.
“உன்னைப் பற்றி உனக்கு வேண்டியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?”
“யாரும் என்னைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள வேண்டாம். என்னைக் கோர்ட்டுக்குக் கொண்டு போங்க. அங்கே எனக்குரிய தண்டனையை வாங்கி கொடுங்க. வேறு எதுவும் என்னிடம் இனிமேல் கேட்காதீங்க” என்றாள் மோகனா.
இனி என்ன கேட்டாலும், மோகனாவிடமிருந்து எந்தப் பதிலும் வராது என்பதைப் புரிந்து கொண்ட காவலர் மோகனாவையும் அவளுடன் சேர்ந்து பிடிபட்டவனையும் தக்க பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார் காவலர்.
காவலர் தான் கண்டவற்றையும் அறிந்தவற்றையும் அறிக்கையாக எழுதி நீதிபதியிடம் ஒப்படைத்தார்.
அறிக்கையைப் படித்த நீதிபதி, பிடிபட்டவர்களிடம் விசாரித்தார். அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்.
நீதிபதி, போதைப் பொருள் கொடுத்தவனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் பத்து பிரம்படிகளும் கொடுக்குமாறு தீர்ப்பளித்தார்.
மோகனாவைப் போதைப் பொருள் மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பி, அவளுக்கு வேண்டிய சிகிச்சையை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
தன் மகளின் நிலையை அறிந்த சோமசுந்தரமும் மீனாக்குமாரியும் அவளைக்காண ஓடி வந்தார்கள்.
ஆனால், தன்னுடைய வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய அவர்களைக் காண மோகனா மறுத்துவிட்டாள்.
தன் பிள்ளையை அன்போடு கவனித்து, அவளுடைய உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாத தங்களுக்கு இது ஒரு நல்ல தண்டனை என்று இப்போது வருந்துகிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து ஆவது என்ன?
– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உண்மைச் சுதந்திரம்
அல்போன்ஸ் மோசஸ்
August 25, 2026
கிழக்கின் வெளிச்சம்
தாட்சாயணி
August 25, 2026
அந்த நிமிடம்
சந்திரகௌரி சிவபாலன்
August 25, 2026
