தங்க ஆப்பிள்
(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை)

அரசருக்கு சலிப்பாக இருந்தது. அதனால் ஒரு வேடிக்கையான போட்டியை நடத்தலாம் என்ற யோசனை அவரது தலையில் உதித்தது. முரசு அடிப்பவர்களை அனுப்பி, தேசம் முழுவதும் பொதுமக்களிடம் அந்த அறிவிப்பைச் செய்யப் பணித்தார்.
மிகச் சிறந்த பொய்யைச் சொல்பவர்களுக்கு தங்க ஆப்பிள் பரிசு என்பதுதான் அந்தப் போட்டி.
அதைக் கேட்டு தேசத்தின் பல்வேறு மூலைகளிலும் இருந்து அறிஞர்கள், கல்வியாளர்கள், புலவர்கள், மாணவர்கள் என ஏராளமான அறிவாளிகள் வந்து போட்டியில் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் பல் வேறு விதமான பொய்களை மன்னரிடம் கூறினர். எதுவுமே அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.
இறுதியாக ஓர் ஏழை மனிதர் பெரிய கூஜாவைக் கையில் எடுத்துக்கொண்டு அரசரிடம் வந்தார்.
“உனக்கு என்ன வேண்டும்?” அரசர் கேட்டார்.
“உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டாகட்டும், மாட்சிமை பொருந்திய மன்னரே!” என வாழ்த்திவிட்டு அந்த ஏழை மனிதர், “நீங்கள் என்னிடம் இந்தக் கூஜா நிறைய கடன் பெற்ற தங்கக் காசுகளைத் திரும்பிப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்!” என்றார்.
அதைக் கேட்டு அரசர் திகைத்தார். “என்னது? நான் உன்னிடம் கடன் வாங்கினேனா? அதுவும் இந்தக் கூஜா நிறையத் தங்கக் காசுகளையா? பொய் சொல்வதற்கும் ஒரு அளவில்லையா? உலக மகாப் பொய்யாக இருக்கிறதே!”
“அப்படியானால் நான் சொன்னது மிகப் பெரிய பொய் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டீர்கள். எனவே, எனக்குச் சேர வேண்டிய தங்க ஆப்பிளைக் கொடுங்கள்!”
அந்த ஏழை மனிதர் தந்திரமாக தன்னிடம் பேசி போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார் என்பது மன்னருக்குப் புரிந்தது. உடனே அவர் கதையைத் திருப்பினார். “இல்லை, நீ பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொன்னாய்!” என்றார்.
“சரி, நான் சொன்னது நிஜம் எனில், என்னிடம் வாங்கிய ஒரு கூஜா நிறைய தங்கக் காசுகளைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்!”
தங்க ஆப்பிள் – கூஜா நிறையத் தங்கக் காசுகள்; இந்த இரண்டில் எது குறைந்தபட்ச நஷ்டத்தைத் தரக்கூடியது என்று ஒப்பிட்டுப் பார்த்த அரசர் அந்த ஏழை சொன்னது சிறந்த பொய்தான் என ஒத்துக்கொண்டு அவருக்குத் தங்க ஆப்பிளைப் பரிசாக அளித்தார்.
அந்தத் தங்க ஆப்பிளோடு சேர்ந்து, சொர்க்கத்திலிருந்து விழுகிற மூன்று ஆப்பிள்களில் ஒன்றும் அந்த ஏழைக்குக் கிடைத்தது.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |