கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 6,435 
 
 

(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30

அத்தியாயம்-25

பிரவேச ஹோமத்துக்காகத் தன் வீட்டுக்கு மனைவியை அழைத்துச் செல்லு முன், வண்டியின் இடது வலது சக்கரங்களுக்கு முன்னால் சிவப்பு, நீல நிற நூல்களைப் போடவேண்டும். இதன் பிறகு கூறப்படும் மந்திரத்தின் அர்த்தம்:

‘நம்முடைய அன்னியோன்னியம் வளரக் கூடாது என்று பகைவர்கள் ஏதேனும் சூன்யம் வைத்திருந்தால் அதை இந்த நூல்கள் நாசம் செய்யட்டும்.’ – சம்ஸ்காரம்.


வசு நிலை கொள்ளாமல் தவித்தாள். படிக்க உட்கார்ந்தால், புத்தகத்தின் எழுத்துக்கள் கண்முன் மங்கி மங்கி உருத் தெரியாமல் குலைந்துபோயின. ரேடியோவைத் திருப்பினால் அவளுக்குப் பிடித்த ஐரோப்பிய சங்கீதம் நாராசமாக அலறியது. படுத்தால் தூக்கம் வரவில்லை, உட்கார்ந்து கொண்டே இருந்தால் மனம் அவளையே சாப்பிட ஆரம்பித்தது.

அவள் மாடிக்கும் கீழுக்கும் ஆயிரம் தடவை ஏறி இறங்கி இருப்பாள். தாகம் இல்லாதபோதே தண்ணீரைக் குடித்தாள். பசித்தபோது சாப்பிடப் பிடிக்கவில்லை.

வக்கீல் வேதராமனுக்கு இதுவரை இரண்டு தடவை போன் செய்தாகி விட்டது. பாழாய்ப் போகிற குமாஸ்தாதான் போனை எடுத்தார். அவளுடைய மேட்டரைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாதாம். இரவு எட்டு மணிக்கு மேல் மீண்டும் போன் செய்யச் சொன்னார்.

திடீரென்று, “ஹாய், வசு!” என்ற குரல் கேட் டது.

வசு மெல்ல ஏறிட்டுப் பார்த்தாள்.

நித்யா.

“ஏண் டி, என்னடி குனியத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கே… கம் ஆன், சரியா ஜோரா உட்காரு!” என்றாள் அவள்.

‘நான் குனிய உலகத்தில் தான் இருக்கிறேன்,’ என்று சொல்ல நினைத்த வசு எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். நித்யாவுக்கும் வேதாந்த சித்தாந்தங்களுக்கும் ரொம்ப தூரம். யதார்த்த உலகம் தான் நித்யாவின் உலகம்.

“ஏண்டி நித்யா, நீ இந்த உலகத்தில்தான் இருக்கிறாயா?”

“இந்தக் கேள்வியை நான் உன்கிட்டே கேட்கணும். நேத்து கூட போன் செய்தேன்… அது பாட்டுக்கு அடித்துக் கொண்டே இருந்தது. அது சரி, இப்ப என்ன செய்யறே?”

“நீதான் பார்க்கிறாயே?”

“பாவம், காலங்கார்த்தாலே எழுந்து, கோலம் போட்டு, அடுப்பு மூட்டி, பாலைக் காய்ச்சி, காப்பி கொடுத்து, அதுக்கப்புறம் சமையல் செய்து போட்டு, மத்தியானத்துக்கு டிபனையும் பண்ணி கோபியை ஒரு வழியாய் ஆபிசுக்கு அனுப்பி விட்டு, சாயந்தரத்துக்கு என்ன டிபன் செய்யலாம்னு யோசிச்சுக் கொண்டிருக்கிறாயா!”

வசு சிரிக்கவில்லை. ஒரு சாதாரண தாம்பத்தியத்தில் நடக்கக் கூடிய இந்த நிகழ்ச்சிகள் தனக்கு என்றுமே இல்லை என்ற தாபம் உள்ளே அவளையும் மீறி எழ, “ஏண்டி அறுக்கறே!” என்று கேட்டாள்.

“சரி சரி, இன்னிக்குச் சாயங்காலம் என் வீட்டுக்கு வர்றே. ஒரு சின்னப் பார்ட்டி.. சரியா அஞ்சு மணிக்கு. ஆறரை மணிக்கு அமெரிக்கன் எம்பஸியிலே ஒரு ஒண்டர்ஃபுல் பிக்சர்… அப்புறம் எட்டேகால் மணிக்கு டாஜ்லே டின்னர்..என்னுடைய மிஸ்டர் முரளி,உன்னுடைய மிஸ்டர் கோபியையும் அழைக்கலாம்னு சொன்னார். நான் கூடாது என்று சொல்லிட்டேன். நீதான் இன்னிக்கு சீஃப் கெஸ்ட்!”

“என்ன விசேஷம்?”

“புது வீடு போயிருக்கிறோம். கொண்டாட வேண்டாம்? தவிரவும், கல்யாணம் ஆனப்புறம் நீயும் நானும் எங்கேடீ உட்கார்ந்து பேசியிருக்கோம்? தாலியைக் கட்டிய நிமிஷத்திலிருந்து, என்னையே அவர் சுத்திச் சுத்தி வறார்…”

“ஆமாம், நீ பெரிய ரம்பை.”

“அவருக்கு நான் ரம்பை தானேடி…”

“சரி சரி, வரேன். எங்கே புது வீடு..?”

“எல்லாம் உனக்கு ரொம்ப தெரிஞ்ச இடம்தான். ஒரு மாதத்துக்கு வேணும்னு அவர் கேட்டார். கோபி உடனே சாவியைக் கொடுத்து விட்டார்.”

வசு திகைத்தாள்.

“அந்த எலிப் பொந்தா?”

“ஆனால் பொந்துக்குள்ளே இரண்டு பேர், அதுவும் நாங்க ரெண்டே பேர். ஒருத்தருக்கொருத்தர் ஒண்டி ஒதுங்கிக் கொள்றது எவ்வளவு ஜோரா இருக்கு தெரியுமா? நீ மட்டும் அன்னிக்கு சரின்னு குடி போயிருந்தே, இப்போ நீ பாடற ராகமே வேறாக இருந்திருக்கும்!”

“நான் வரணும் என்கிறாயா?”

“கண்டிப்பாக ஐந்து மணிக்கு வந்து விடு, வரவில்லையோ, உன் வீட்டுப் படியிலே கால் வைக்கிறது இதுதான் கடைசித் தடவை!”

“பயமுறுத்தாதே… நீ கால் வைக்கலையேன்னு எங்க வீட்டு வாசல்படி ஒண்ணும் அழலை… வரேன்.'”

“சரியா ஃபைவ் ஓ கிளாக்!”

“அதான் தமிழிலே சொன்னாயே?”


அவள் பார்த்து, காலால் உதைத்து உதறிய அந்த போர்ஷனுக்குள் பிரவேசித்ததுமே வசு பிரமித்துப் போனாள். ஓர் இடத்தின் ரம்யமும் அழகும் அதன் நீள அகலத்தைப் பொறுத்தது அல்ல என்பதை முரளியும் நித்யாவும் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். கூடத்தின் சுவர்கள் இள நீல நிறத்தில் மின்னின. ஓரிரு ஓவியங்கள் அதை அலங்கரித்தன. ஒரு சுவாமி படம். கீழே ஒரு சிறு ஸ்டாண்டு. அதில் ஒரு குத்துவிளக்கு.

சமையலறை துப்புரவாக இருந்தது. பாத்திரங்களும் தட்டுக்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன.

கூடத்தின் நடுவே இருந்த டீப்பாயின் மேல் வைத்திருக்கும் ஒரு நவீன பொம்மையைப் பார்த்துக் கொண்டே வசு சொன்னாள்? “நித்யா, ரொம்ப ஜோரா வைச்சிட்டிருக்கியே!”

“நீ வந்திருந்தால், கீழே ரத்னக் கம்பளத்தை விரிச்சிருப்பே. சுவரெல்லாம் பிகாஸோவின் ஓவியமாக வழிஞ்சிருக்கும்” என்று கேலி செய்தாள் நித்யா.

“முரளி எங்கே?”

“உனக்குப் பிஸ்தா ஐஸ்க்ரீம் வாங்கி வர பிளாஸ்க்கைத் தூக்கிட்டுப் போயிருக்கிறார். இப்ப வந்து விடுவார்”

“ஓ! எனக்குப் பிடிச்சதை வாங்கி வரச் சொல்லியிருக்கியா!”

“ஏன், எனக்கு மட்டும் பிடிக்காதா.. வசு, இவர்கிட்டே ஒரு பெரியவீக்னெஸ்.”

“என்னடி வீக்னெஸ்? பயமுறுத்தறே…”

“நீ நினைக்கிற வீக்னெஸ் இல்லே.. தன்னைப் பத்தி மறந்தே போய் விடுகிறார். எப்பப் பார்த்தாலும் எனக்கு என்ன பிடிக்கும், எதைச் சொன்னால் எனக்குத் திருப்தியா இருக்கும், மகிழ்ச்சியா யிருக்கும்னு மனசை ரொம்ப அலட்டிக்கறார்!”

“இது வீக்னெஸா?” சொல்லும்போதே, கோபி அவள் கண்முன் தோன்றினான்.

“பின் என்ன? அவருக்கு எது பிடிக்கும், நான் என்ன செய்தால் அவர் மனசு குளிரும்னு தான் மண்டையை உடைச்சுக்கறேன். தெரிய மாட்டேங்கறது. அவருக்குப் பிடிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்கணும்னு நான் பார்க்கிறேன். அவர் என்னடான்னா…”


சினிமா தியேட்டரில் கடைசி வரிசையில், ஓரமாக மூன்று ஸீட்டுகளில் அவர்கள் உட்கார்ந்தார்கள். நித்யா நடுவே உட்கார்ந்து, முரளியிடமும் வசுவிடமும் மாறி மாறிக் கையால் அடித்தும் கிள்ளியும் பேசிக்கொண்டே இருந்தாள்.

நிழலாட்டத்தில் வசுவின் மனம் லயிக்கவேயில்லை. ஒரு காதல் கதை, இளம் ஜோடிகளின் வாழ்க்கை. காட்சிக்குக் காட்சி காதல்தான்.

இடையிடையே வசு ஓரக் கண்ணால் நித்யாவைக் கவனித்தாள். திரையில் காணும் காட்சிக்கு அவள் முரளியுடன் ஒத்திசை நடத்துவது போல இருந்தது. அவர்களுடைய லேசான சிரிப்பு ஓலி அவளுடைய நெஞ்சைக் கிளறியது.

அவளுக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. கோபி, தன்னுடைய பிடிவாதத்தால், போலி சுய கௌரவத்தால் – ஏன், முட்டாள்தனத்தால் – அவளுடைய வாழ்க்கையையே நாசம் பண்ணி விட்டான்.

சே, அவளுடைய பருவ ஆசைகளும் உணர்ச்சிகளும் சமுத்திரத்தில் விழும் மழையாகி விட்டன. பூக்களின் மென்மையை உணராத, உணரச் சக்தி அற்ற, ஒரு அரக்கனிடம் அவள் அகப்பட்டுக் கொண்டு விட்டாள். இனி, அவள் யாரோ. அவன் யாரோ.

திடீரென்று அவளுடைய கையை நித்யா வருடுவதை உணர்ந்தாள். காதலியைக் காதலன் அணைத்துத் தழுவிக் கொண்டிருந்தான். மெய் மறந்து போன நிலையில் நித்யா வசுவை முரளி என நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது.

நித்யாவின் கையை மெதுவாக விலக்கின வசு, “கையை அங்கே கொண்டு போ, நான் வசு”, என்றாள். சிரிக்க வேண்டும் என்று தோன்றிய போதிலும், தகிக்கும் நெஞ்சிலிருந்து சிரிப்பு வரவில்லை.

எட்டே கால் மணிக்கு வெளியே வந்த போது வசு ஆத்திரத்தில் அலுத்துப் போனாள்.

“நித்யா! நான் வீட்டுக்குப் போறேன்!” என்றாள்.

“என்னடி இது? டின்னர்?”

“நீங்க ரெண்டு பேரும் போய்ச் சாப்பிடுங்கள்.”

“அதுக்கு உன் உத்தரவு தேவை இல்லை. சும்மா வாடி!”

“இல்லே நித்யா.. நான் போறேன்.”

முரளியிடம் மன்னிப்புக் கேட்கக்கூட வசுவுக்குத் தோன்றவில்லை. அவளுடைய மனமெல்லாம் வக்கில் வீட்டில் நிலைத்திருந்தது.

கார், அவளுடைய ஆத்திரத்திலும் கோபத்திலும் பறந்தது.

“வா அம்மா வசு.. என்ன இந்த நேரத்தில்?” என்று வரவேற்றார் வேதராமன்.

“மற்ற நேரத்தில் தான் உங்களை பார்க்க முடியலையே, ராத்திரி எட்டு மணிக்கு மேல் தான் நீங்க ஃப்ரீயா இருப்பீங்கன்னு உங்க கிளார்க் சொன்னார்!”

“இப்ப என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பதட்டப்படறே?’

“என் மேட்டரை நீங்க சரியாகவே கவனிக்கலை. அதுக்கு பதிலா என் அப்பாகிட்டே போய் என்னென்னவோ உளறியிருக்கிங்க… நான் உங்க கிளையண்ட். நான் சொன்னதை எப்படி நீங்க மத்தவங்க கிட்டே அறிவிக்கலாம்?”

“தப்புதாம்மா.. உன் அப்பா மத்தவங்களோட சேர்த்தின்னு இப்பத்தான் தெரிந்தது. சரி, நான் இனிமே வக்கீலாவே இருக்கேன். நீ என் கட்சிக்காரியாகவே இரு.. என்ன வேணும்?”

“டிவோர்ஸ் லீகல் ஸெபரேஷன்.. ரிலீஸ் ஃப்ரம் காஞ்ஜுகல் ரைட்ஸ்!”

“எல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளா இருக்கு. எனக்கு ஒண்ணும் புரியலை,” என்றார் வேதராமன் சிரித்துக் கொண்டே.

“விளையாடாதீங்க… ஒருடம்ளர் தண்ணியை இப்போ என் நெஞ்சு மேலே வைச்சா அது கொதிக்க ஆரம்பிச்சுவிடும்.”

“அதே தண்ணியை கோபி நெஞ்சு மேலே வைச்சா அது ஐஸாகி விடும்… நீ ஐஸ்க்ரீம் கூடப் பண்ணிச் சாப்பிடலாம்!”

“என்ன உளர்றீங்க ஸார்?”

“ஆமாம் வசு.. நான் உன்கிட்டே அப்ப சொன்னபடி, கோபியை வரச் சொன்னேன். பேசினேன். அவனுக்கு இதிலே சம்மதமேயில்லைன்னு பட்டது. உன்னைப் பத்தி குறைவா, குற்றம் சாட்டிப் பேசினேன். அவன் என்னை எச்சரிக்கறது போலப் பேசிவிட்டான். தன்னுடைய மனைவியைப் பிறர் தூஷிக்கறதை அவன் பொறுக்க மாட்டானாம்! எப்படிப் போகிறது கதை!”

“அது நான் நினைக்கிறபடி தான் போகணும்.. ஐ வாண்ட் எ டிவோர்ஸ், நதிங் பட் எ டிவோர்ஸ்.”

“அவன் ஒப்புக்கலேன்னா?”

“கேஸ்.”

“அதுக்கு இன்னும் காத்துக் கொண்டிருக்கணும். மூணு வருஷம் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கக் கூடாது…”

“இதோ பாருங்க, ஐ டோண்ட் கேர் அபவுட் யுவர் லீகல் பாயிண்ட்ஸ்.. நான் ஏதானும் டிக்ளேர் பண்ணணுமா? பண்றேன். கையெழுத்துப் போடணுமா? போடறேன்…”

“நீ ரொம்பப் பிடிவாதமா இருக்கே வசு…”

“அது என் சுபாவம், யு காண்ட் சேஞ்ச் இட்…”

வக்கீல் வேதராமன் ஒரு ஸ்டாம்பு பேப்பரை எடுத்தார்.

“இந்தா, இதன் கீழ் உள் கையெழுத்தைப் போட்டுக் கொடு. என்ன எழுதணுமோ அதை எழுதி வைக்கிறேன். நாளைக்குக் கார்த்தாலே வந்து படிச்சுப் பார்… அப்புறம் மேலே ப்ரொஸீட் பண்ணலாம்.”

வசு கையெழுத்துப் போட, மேஜை மேலிருந்த பேனாவை எடுத்தாள். அதே சமயம், உள்ளேயிருந்து வந்த சமையற்காரன் ஒரு டம்ளரில் பாலைக் கொண்டு வந்து வைத்தான்.

அவள் கையெழுத்துப் போட்டு முடிந்ததும், ”வசு, நல்ல பசும்பால் சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார் வேதராமன்.

“நோ, தாங்க்ஸ்! நான் பால் சாப்பிடுகிற நிலையிலே இல்லை.”

“விஷம் சாப்பிடற நிலைக்கு வந்து விட்டதாக நினைக்கிறது முட்டாள்தனம்!”

“நான் விஷம் குடிச்சு என்னையே மாய்ச்சுக்கறதுக்கு, அப்படி ஒண்ணும் முட்டாள் இல்லை.”


வசு வீட்டை அடைந்த போது மணி ஒன்பதரை. ராஜலட்சுமி ஹாலில் உட்கார்ந்து பக்த விஜயம் படித்துக் கொண்டிருந்தாள்.

வசுவை அவள் கவனிக்க வில்லை. ஆனால் அதே சமயம் ஹாலினுள் பிரவேசித்த சிவராமன், “என்ன வசு, ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டார்.

“நேரமாகி விட்டது.”

“அதான் கேட்டேன் ஏன் என்று. போய்ச் சாப்பிடு.”

“எனக்குப் பசிக்கலை”

“இன்னிக்குக் க ம்பெனியிலிருந்து வரபோது தற்செயலா கோபியைப் பார்த்தேன். காரிலே அவனை ட்ரிப்ளிகேன்லே டிராப் பண்ணிட்டு வந்தேன்.”

வசு எகத்தாளமாகச் சிரித்தாள்.

“நீங்க அவருக்கு லிஃப்ட் கொடுத்தீங்க… நான் அவரை டிராப் பண்ணப் போறேன்… இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா அப்பா!”

“தெரியும் வசு! உனக்கும் அவனுக்குமிடையே இருக்கிற வித்தியாசம்!”

ராஜலட்சுமி பக்த விஜயத்தை விட்டு வெளியே வரவில்லை.

அத்தியாயம்-26

நீ ரிக், நான் சாமம்: நான் சாமம், நீ ரிக். ரிக்கும் சாமமும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது இருப்பது போல நாம் இருவரும் இருக்க வேண்டும். – மாப்பிள்ளை, விவாகத்தின் போது கூறும் ஒரு மந்திரத்தின் அர்த்தம்.


அப்பாவிடம் எகத்தாளமாகப் பேசிவிட்டோம் என்ற திருப்தியில், தடதட வென்று மாடி ஏறித் தன்னுடைய அறைக்குள் பிரவேசித்த வசுவின் மனத்தில் வீசிய புயல் மெல்ல மெல்ல அடங்கியது. இனி அவளுக்கும் கோபிக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. என்றாவது ஒரு நாள் எங்கேயாவது தெருவிலோ பீச்சிலோ அவன் எதிர்ப்பட்டாலுங்கூட அவள் புன்னகை பூக்கவோ, ‘குட் மார்னிங்’ சொல்லவோ தேவையில்லை.

கல்யாணமான நாளிலிருந்து இன்றுவரை நடந்ததெல்லாம் ஒரு சரித்திரம். ஏன், ஒரு சகாப்தமே கூட. இந்தச் சரித்திரமும் சகாப்தமும் அவளுக்கு மெள்ள மெள்ள மறந்துபோய் விடும். எல்லாமே ஒரு துர்ச் சொப்பனம் போல மறைந்துவிடும்.

திடீரென்று போன் அலறியது.

எடுத்தாள். ஒரு திகைப்புடன் கேட்டாள். ஒரு நடுக்கத்துடன், “இதோ… புறப்பட்டுவிட்டேன்,” என்றாள்.

அவள் தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கி ஓடியபோது கூடத்தில் ராஜலட்சுமி இன்னும் பக்த விஜயத்திலிருந்து வெளியே வர வில்லை. சிவராமன் சோபாவில் உட்கார்ந்து ஏதோ ஒரு பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந்தார்.

வசு காரை நோக்கி ஒடினாள். அது இரண்டடி நகர்ந்த பிறகு தான், இடது முன் சக்கரம் ஜீவனற்றுப் போய் இருப்பதை உணர்ந்தாள் வேதராமன் வீட்டிலிருந்து திரும்புகையில் எங்கேயோ ஓர் ஆணி ஏறி இருக்கிறது. அப்பாவின் காரை எடுக்கலாமா என்ற கேள்வி எழுந்த மறுகணமே அதை மறந்தாள். அவரிடம் போய் சாவிக்காக நிற்க, அவளுடைய ரோஷம் மறுத்தது.

டாக்ஸியைத் தேடிக்கொண்டு ஓடினாள்.

வசு தடதடவென்று இறங்கி வெளியே ஓடுவதைக் கண்ட சிவராமனுக்கு ஆச்சரியத்தைவிடக் கோபமே மேலிட்டது.

“ராஜி!” என்றார்.

ராஜலட்சுமி காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

”ராஜி!” என்று அவர் இரைந்தார்.

இப்போது ராஜலட்சுமி ஏறிட்டுப் பார்த்தாள்.

“பார்த்தாயா? வசு இப்பத் தான் வந்தாள். மறுபடியும் எங்கேயோ போய் விட்டாள்… மணி ஒன்பதரை!”

“தடுத்து நிறுத்தியிருக்கலாமே?” ராஜலட்சுமி, பக்த விஜயத்தில் விட்ட பகுதியைத் தேடலானாள்.

“ராஜி!” என்ற அவர், அவள் தம்மைப் பார்க்கிறாளா இல்லையா என்பதையும் கவனிக்காமல், “இவள் போகிற போக்கு எனக்குப் பிடிக்கவே யில்லை!” என்றார்.

“எல்லாருக்கும் பிடிக்கிற படிதான் எல்லாரும் போகிறார்களா?”

“என்ன சொல்றே நீ?”

“அவள் என் வயிற்றிலே பிறந்த பெண்ணானாலும் தைரியமும் துணிச்சலும் இருக்கு.”

“அப்படீன்னா?”

“எனக்கு இல்லைன்னு அர்த்தம்.”

சிவராமனுக்குத் திகைப்பாக இருந்தது. ”என்ன ராஜி. உன் பேச்சே இன்னிக்குப் புதிசா இருக்கு!”

“பேசாமலே இருந்து இருந்து உள்ளுக்குள்ளே புழுங்கிப் புழுங்கிச் சாகிறதைவிட, பேசித் தீர்த்துட்டா மனசுக்குக் கொஞ்சம் சமாதானம் இருக்கும் போலிருக்கு.”

“நான் என்ன கேட்டேன்? நம்ம பெண் வசுவின் போக்கைப் பார்த்தாயா என்றேன்.”

“நீங்கள் அவளுடைய போக்கைப் பார்த்தாயான்னு என்னைக் கேட்கிறீர்கள். இந்த வீட்டிலே மத்தவர்கள் போகிற போக்கைப் பார்த்தீர்களான்னு நான் யாரைக் கேட்கிறதாம்?”

“எனக்குப் புரியலே, ராஜி.”

“புரிஞ்சாலும் புரிஞ்சுதுன்னு சொல்வீர்களா?”

அவர் எழுந்து அவவிடம் வந்து நின்றார்.

“சரி, சரி. கண்டிப்பாக உனக்கு ஏதோ ஆகியிருக்கு… பொம்மனாட்டிகளுக்கு நாற்பது நாற்பத்தஞ்சு வயசு ஆனாலே, மனசு கொஞ்ச நாளுக்குக் குதர்க்கமா ஓடும்னு சொல்லுவார்கள். நீ எதையோ அசை போட்டுக் கொண்டிருக்கே, ராஜி! என்கிட்டே கூடச் சொல்லமாட்டேன் என்கிறே?”

ராஜலட்சுமி துணிந்துவிட்டாள்.

“சொன்னா என்ன செய்வீர்கள்… கொஞ்சம் கண்ணீர் வடிப்பீர்கள்… அப்புறம் நெகிழ்வீர்கள்… அப்புறம், பிஸினஸ் இருக்கு ரெயில் ஏற ணும்னு ரெயில் ஏறுவீர்கள்… நீங்க ஏறுகிற ரெயில் எங்கே போகிறது. அந்த இடத்திலே என்ன பிஸினஸ்னு இன்னும் எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதீர்கள்…”

ஒரு நிமிடம் சிவராமன் சிலையாகிப் போனார்.

“எந்த இடம் என்ன பிஸினஸ்ணு நீ கற்பனை பண்ணிவைச்சிருக்கே ராஜி!”

“நான் பண்ணி வைச்சிருக்கிறது கற்பனையா இருந்தா என்னைவிட அதிருஷ்டசாலி யாருமே இருக்க முடியாது!”

“ராஜி, இன்று வரை உனக்கும் எனக்கும் இடையில் எந்த ரகசியமும் கிடையாது. ஆனா இப்போ நீ பேசற பேச்சைப் பார்க்கிறபோது உன்கிட்டேயிருந்து நான் எதையோ மறைச்சு வைச்சிருக்கிற மாதிரிப் படுகிறது. நான் எதை உன்னிடமிருந்து மறைத்து வைக்க முடியும்?”

“ஏன் கேவலம் ஒரு வைர நெக்லஸை ஏன் அலமாரியில் மறைத்து வைத்தீர்கள்?”

ஒரு கணம் சிவராமன் முகம் மாறிற்று. மறுவினாடி சமாளித்துக் கொண்டு கலகலவென்று சிரித்தார்.

மனசிலே

“பூ. இவ்வளவுதானா! நான் என்னமோன்னு நினைச்சேன். அப்பப்பா, இந்தப் பொம்மனாட்டிகள் சந்தேகம் ஒரு அணுவா ஆரம்பிச்சுப் பேயா வெளியே வருகிறது…ராஜி. இதைக் கேளு.. இந்த வருஷம் உன் பர்த்டேக்கு அந்த நெக்லஸை வாங்கிட்டு வந்தேன்… பதினாலாயிரம் ரூபாய். அதிலே மயில் பதக்கம் இருந்தது. வீட்டுக்குக் கொண்டு வர்ற வழியிலே, என் ஃபிரண்டு ஒருத்தர் வீட்டுக்குப் போனேன். அவருக்கு வைரம் பார்க்கத் தெரியும். நெக்லஸ்லே மூன்று கல் சுகமில்லை என்றார். ஒன்றிலே ரத்தபிந்து இருக்கு, இன்னொண்ணிலே காக்காப்புள்ளி இருக்குன்னார். பச்சைக் கல்லிலே மயில் பதக்கம் உன் நட்சத்திரத்துக்கு ஏத்தது இல்லைன்னார். சரி, அப்புறம் இன்னொண்ணு வாங்கிக்கலாம்னு இருந்தேன்.”

புத்தகத்தை விட்டுக் கண்ணை எடுக்காமல் அவள் குத்தலாகக் கேட்டாள். “என்னுடைய நட்சத்திரத்துக்கு ஒத்துவராத நெக்லஸ் அங்கலக்குறிச்சி அம்மாளுக்கு ஏத்ததாக இருந்ததாக்கும்?”

மின்சாரத்தால் தாக்குண்டவரைப்போல சிவராமன் துள்ளினார். “என்ன பேத்தறே?”

“நான் இன்னிக்குப் பேசறது எல்லாமே உங்களுக்குப் பேத்தலாகக் கேட்கிறது, இல்லியா? உங்க நெக்லஸுக்கான பில்லை மறுநாளே கடையிலிருந்து ஒரு சிப்பந்தி கொண்டு வந்தான். அதைத் தபாலில் அனுப்பும்படி நான் தான் சொன்னேன்!”

அவர் மௌனம் சாதித்தார்.

“இதுவும் பேத்தலா?”

அவள் கேட்ட தோரணை அவருக்குக் கோபமூட்டிவிட்டது.

“ராஜி, மூடு வாயை! நீ என்னை வேவு பார்க்கிற அளவுக்கு உயர்த்துட்டே இல்லே? அந்த அங்கலக்குறிச்சி அம்மான்னு எகத்தாளமாய்ப் பேசினாயே, அவள் யார் தெரியுமா?”

“அமிர்தம்மா!”

“பெயரைக் கரெக்டாச் சொல்லிட்டே. ஆனா அவள் யார்னு தெரியுமா?”

“தெரியும். ஆனா சொல்ல நா கூசுகிறது. ஏன் தெரியுமா, நான் உங்களுடைய தாலி கட்டிய பெண்டாட்டி. நல்லது, பொல்லாதது எல்லாவற்றிலும் கூட இருக்க வேண்டியவள்.”

“உனக்கு இன்னும் என்னென்ன தெரியும்?”

*இதுக்கு மேலே தெரியறத்துக்கு ஓண்ணும் இல்லை.”

“எல்லாம் உன் அண்ணன் ராஜாமணி உளறிக் கொட்டியிருக்கிறான்!”

“அவர் உளறியிருந்தால் தேவலையே… நான் நம்பியே இருக்க மாட்டேன். ஏன் ஏன் தெரியுமா, மணையிலே உட்கார்ந்த நாளிலிருந்து நான் உங்களை ஒரு ராமராக நினைச்சு வணங்கியிருக்கேன். ஆனா நான் நினைச்ச ராமர் இங்கே இல்லை என்று எனக்கே தெளிவாயிட்டுது…”

“கேவலம் ஒரு நெக்லஸை வைச்சுட்டு நீயே ஒரு ஆரம்பம் முடிவு என்று எல்லாம் கோலம் போட்டாயாக்கும்?”

“இல்லை.. நான் நேரே வந்து அங்கலக்குறிச்சியிலே… அவள் வீட்டிலேயே பார்த்தாயிற்று.”

அவள் தொடரவில்லை. அவருடைய ரத்தம் கொதித்தது.

“பூனை மாதிரி இருந்து கொண்டு என்னென்ன துப்பு எல்லாம் துலக்கி இருக்கே..? அப்புறம் இங்கே வீட்லே பூஜை, தீர்த்தம்னு வேஷம் போடறே?”

“ஆமாம், நான் போட்ட வேஷம் யாரையும் பாதிக்கலே. நான் வேஷம் போட்டு உங்களை ஏமாத்தலே. நான் செய்யற பூஜை என்னை ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநான் காப்பாற்றதாண்ணுதான் அழுதுட்டிருக்கேன். ஆனா நீங்க போட்டுக் கொண்டு வருகிற வேஷம்?.. சே!”

“ஆல்ரைட்! நான் இது வரையில் வேஷம் போட்டேன், ஆனா இனிமே அதுக்கு அவசியமில்லை. கலைச்சு விடறேன்.. நீ மணையிலே உட்காருவதற்கு முன்னேயே அவள், அந்த அமிர்தம் மணையிலே உட்கார்ந்திருக்க வேண்டும்.. அதுக்கு ஊரே எதிர்த்து வந்தது. அதிகாரம் மட்டும் இருந்திருந்தால் அமிர்தத்தை நாட்டை விட்டே ஏன், துரத்தியிருப்பார்கள்.. ஏன், உன் அண்ணன்தான் அவள் மண்டையில் கடைசி அடி அடித்தான்.. பணத்தால் எதையும் தீர்த்து விடலாம்னு என்கிட்டேயிருந்த பத்தாயிரத்தை வாங்கி அமிர்தம்மாவின் அப்பாவிடம் கொடுத்தான்…”

அவருக்கு மூச்சு வாங்கியது.

“என் அண்ணா கொடுத்த அடியுடன் கதை முடியவில்லையே!” என்றாள் அவள்.

“நான் முடிய விடவில்லை. சமூகம் அவளை என்னுடைய மனைவியாகப் பார்க்கத் தடை போட்டது. ஆனால், அவள் என்னுடைய தாலி கட்டாத மனைவியாக வாழ்வதை லட்சியமே செய்யவில்லை. அப்புறம்.. அப்புறம் எனக்குப் பணமும் காசும் குவிந்தபோது, என்னைத் தியாகின்னு கூட வாழ்த்தினார்கள்.”

“கட்டின பெண்டாட்டியைப் பிணமா மதிச்சு, அதுக்குச் சந்தனம் பூசி அலங்காரம் செய்து விட்டு, கட்டாத ஒருத்திக்கு வாழ்வு கொடுக்கிறதுக்குப் பெயர் தியாகம்னா நீங்க பெரிய தியாகி தான்!”

“இவ்வளவுக்கும், அவள் என்னை மறந்து போயிருந்தாள். நான் உன்னுடன் சந்தோஷமாக வாழணும்னு வாயார வாழ்த்தினாள். என்னென்னிக்கும் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன்னு கூடச் சபதமெடுத்தாள்.”

“அதைக் காப்பாத்தத்தான் நீங்கள் சமய சஞ்சீவியாக வாய்த்தீர்களே!”

சிவராமனால் பொறுக்க முடியவில்லை. “ஆல் ரைட், ஆல் ரைட்… இதுதான் என் கதை… இனிமே நீ என்ன வேணும்னாலும் செய்து கொள்… இப்போது என் நெஞ்சிலிருந்து ஒரு பாரம் இறங்கி விட்டது, உன்னை ஏமாத்திக் கொண்டிருக்கிறேன் என்கிற நெஞ்சுறுத்தல் இருக்காது.”

“இனிமே நான் என்ன செய்ய முடியும்?”

“வசு தன் ஹஸ்பெண்டை டிராப் பண்றதாகச் சொன்னாள். நீயும் உன் பெண் வழியிலே செல்லலாம் … நான் குறுக்கே நிற்க மாட்டேன்.”

“போவேன். ஆனா என் வயசு? அவளுடைய யுகமும் என்னுடைய யுகமும் ஒண்ணா? பாம்பை மிதிக்கிற வயசிலே அவள் இருக்கிறாள். பழுதையை மிதிக்கவும் பயப்படற நிலையிலே நான் இருக்கேன். சொத்து சுகம் வேண்டாம். புருஷனுடைய அன்பு தான் வேணும் எனக்கு. இப்போ அது இல்லைன்னு தீர்மானமாகத் தெரிந்து விட்டதனாலே….”

“அதனாலே என்ன செய்யப் போறே? இந்த வீட்டிலே நீ மட்டும்… நீ மட்டும் இருந்து கொள். வக்கீலைக் கொண்டு, நாம் நமக்குள் எல்லாவற்றையும் பிரித்துக் கொள்ளுவோம்.”

“பிரிக்க முடியாததுன்னு ஒண்ணு இருக்கே… தாம்பத்தியத்தைப் பிரிக்க வேதங்களில் கூட இடமில்லே…”

“அப்போ?”

“இனிமே நீங்கள் நீலகண்டரா இருங்கள்…. நான் நீலாயதாட்சியாகவே இருந்து கொள்றேன்.. இனிமே நான் வாழா வெட்டிங்கறது நம்ம ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச ஒரு ரகசியமாக இருக்கட்டும்.”

சிவராமன் அயர்ந்து போனார். ராஜலட்சுமி தொடர்ந்தாள்.

“இப்போ நடந்த தெல்லாம் நம்முடைய நாடகத்தின் கடைசிக் காட்சி. அதை நாளைக்கே நாம் மறந்து விடவேண்டும். நான் பூஜை செய்வேன். நீங்கள் இருக்க வேண்டும். தீர்த்தம் தருவேன், தலை குனிந்து வாங்கிக் கொள்ள வேண்டும். தயை செய்து ஒத்துழைக்கணும். வசுவும் மற்றவர்களும் நம்மை லட்சிய தம்பதின்னு எடை போடறாங்க. அந்த எடை அதிகம். குறைவு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!”

அத்தியாயம்-27

மணப்பெண் மணமகனைத் தொட்டுக் கொண்டிருக்க, அவன் பதினாறு ஓமங்களைச் செய்கிறான். நான்காவது ஓமத்தின் அர்த்தம்: “இவள் பிறந்த வீட்டை விட்டுப் பதியின் வீட்டுக்கு வருகிறாள். கன்னிகைக்குரிய நியமங்களை விட்டுவிட்டாள். அதனால் யாதொரு தோஷமும் இல்லாமலிருக்க, ஆத்ம சொரூபத்துக்கு ஆஜ்யத்தைத் தருகிறேன்.” – சம்ஸ்காரம்.


நித்யாவின் கணவன் முரளிக்கு விபத்து!

டாக்ஸி அவன் இருக்கும் தெருவைக் கடத்து நெடுஞ்சாலையை அடைந்து நிதானமாக ஓட ஆரம்பித்த பிறகுதான், வசு நிலைமையை எண்ணிப் பார்க்கலானாள். டெலிபோனில் வந்த செய்தி அவளைத் திடுக்கிட வைத்துவிட்டது.

அவளும் நித்யாவும் முரளியும் சினிமா பார்த்துவிட்டுச் சரியாக எட்டேகால் மணிக்கு அமெரிக்கன் எம்பஸியை விட்டு வெளியே வந்தார்கள். குழம்பிய மனநிலையிலிருந்த வசு சாப்பாடு வேண்டாமென்று சொல்லிவிட்டுக் காரில் புறப்பட்டு வந்துவிட்டாள். நித்யாவும் முரளியும் ஏமாற்றத்தோடு டாஜ் கொரமாண்டல் ஓட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெமினியை த் தாண்டுகையில் ஓர் ஆட்டோ ரிக்ஷா அவன் மீது மோதியிருக்கிறது. அவனை உடனே நித்யா டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறாள். பலத்த காயம் ஏதும் இல்லை என்றும் உடனடியாகத் திரும்பிவிடலாம் என்றும் ஒரு டாக்டர் சொன்னாராம்.

எப்படியும் நித்யாவும் முரளியும் மேற்கு மாம்பலம் வீட்டுக்குத் தான் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் வசு டாக்ஸியை மேற்கு மாம்பலம் வீட்டுக்குப் போகச் சொன்னாள். ‘பாவம் நித்யா’ என்று அவள் உள்ளம் முணுமுணுத்தது.

இரவு பத்து மணிக்கு மேற்கு மாம்பலம் வீட்டை நெருங்கியபோது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. டாக்ஸிக்காரனிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டை வீசி எறிந்துவிட்டு மீதிச் சில்லறையை எதிர்பார்க்காமலேயே அவள் அவசர அவசரமாக மாடி ஏறினாள்.

நாகராஜனும் சீதாவும் ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் எங்கே?..

வசு மனத்தில் உதித்த கேள்விக்கு நாகராஜன் பதில் சொன்னான். விபத்து பற்றிக் கோபிக்குச் செய்தி போயிருக்கிறது. நாகராஜனுடன் புறப்பட்டிருக்கிறான். சீதாவும் அவர்களுடன் கிளம்பியிருக்கிறாள். நித்யா அவளுக்குப் பழக்கமில்லை என்றாலும், இந்த மாதிரி சமயத்தில் பெண்ணுக்குப் பெண் ஒத்தாசையாக வேண்டியிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியிருக்கிறது.

“முரளிக்கு எப்படி இருக்கிறது?” என்று வசு கேட்டாள்.

“ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு மாற்றியிருக்கிறார்கள்,” என்றான் நாகராஜன்.

“உட்கார் வசு,” என்றாள் சீதா.

“ஜெனரல் ஆஸ்பத்திரிக்கா? அடி ஒன்றும் பலமாக இல்லை என்றார்களே!” என்றாள் வசு. அவளுக்கு நாகராஜன் கொடுத்த செய்தி அதிர்ச்சியை அளித்தது.

“நாங்கள் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலிருந்துதான் வருகிறோம். ஆட்டோ மோதினதில் கீழே விழுந்த முரளிக்கு மண்டையில் அடி. ரத்தம் கசிகிறது. எதற்கும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிப் பார்க்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள். நீங்க வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி போன் பண்ணினேன். பயப்படும்படியா ஒண்ணும் இல்லை என்றார்கள்.”

வசு பெருமூச்சு விட்டாள்.

“நாங்கள் மூன்று பேருமா சினிமா பார்த்து விட்டு வெளியே வந்திருக்கிறோம். எட்டேகால் மணிக்கு தான் இப்படி வந்திருக்கிறேன். அவர்கள் அப்படிப் போயிருக்கிறார்கள். சே! இதைத்தான் விதின்னு சொல்லுகிறார்கள் போலிருக்கு!” என்றாள் அவள். “நானும் டாஜ் ஓட்டலுக்குப் போவதென்று முடிவு செய்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. பாவம் நித்யா, எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் தெரியுமா?”

“நாளைக்கே அவள் பழைய படி ஆகிவிடுவாள். நீ கவலைப்படாதே,” என்றாள் சீதா. அவள் சொற்கள் தனக்கு மிகுந்த ஆறுதலைத் தருவதை வசு உணர்ந்தாள்,

“முரளியைப் பற்றிப் பயப்படவே வேண்டாம். அவன் பிழைத்து எழுந்து வந்தபின் நாங்கள் எல்லோரும் திருப்பதிக்குப் போய் தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று இருக்கிறோம்” என்றான் நாகராஜன், “சீதா, பேசிக் கொண்டே இருந்தால் எப்படி. வசு சாப்பிடவில்லையோ என்னமோ. ஏதானும் உள்ளே இருக்கா?”

“பிரெட், ஜாம் எல்லாம் இருக்கு. நித்யா பாலைக் காய்ச்சி வைத்திருக்கிறாள்.” என்றாள் சீதா.

“நான் போய்க் கொஞ்சம் பழம் வாங்கிக் கொண்டு வருகிறேன்.”

‘எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்ல நினைத்த வசு மனத்தை மாற்றிக் கொண்டாள். உண்மையிலேயே அவளுக்குப் பசி காதை அடைத்தது. சினிமா பார்த்த போது மனத்தில் கொழுந்து விட்டு எரிந்த ஏமாற்றத்திலும் வெறுப்பிலும் அவளுக்கு டாஜ் ஓட்டலில் சாப்பிடப் பிடிக்கவில்லை. அதன் பின் வக்கில் வேதராமனுடன் பேசி விட்டு வீட்டுக்குத் திரும்பியவளுக்குச் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. விபத்தைப் பற்றிக் கேட்ட அதிர்ச்சியில் அவள் பசியைச் சிறிது நேரம் மறந்து போயிருந்தாள். ஆனால் இப்போது முரளியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று டாக்டர்களே கூறியதில் மனத்துக்கு ஒரு சமாதானம் கிடைத்தது. பசியும் ஞாபகத்துக்கு வந்தது.

நாகராஜன் போவதையே ஒரு நிமிடம் பார்த்து நின்ற வசுவின் நெஞ்சில் நன்றி பெருக்கெடுத்தது. ‘அவனும் அவனுடைய மனைவியும் எப்படி இவ்வளவு வாஞ்சையுடன் இருக்கிறார்கள்? அவர்களுடைய பண்பும் மனிதாபிமானமும் ஏன் அவளைச் சிலிர்க்க வைக்கிறது? அவள் சீதாவை மதிக்காமல் இருந்திருக்கிறாள். சீதா பட்ட அவமானம், கோபிக்கே தெரிந்திருக்கிற போது கணவன் நாகராஜனுக்கா தெரியாமலிருக்கப் போகிறது? ஆனால் அவர்கள் இருவரும் எந்த விதமான விரோதமும் பாராட்டாமல் அவளைக் கவனிக்கிறார்கள்…’

“என்ன வசு யோசிக்கிறே?”

சீதாவின் குரல் கேட்டு வசு திடுக்கிட்டாள்.

“ஒன்றுமில்லை.'”

“ரொட்டியைத் தரட்டுமா?”

“நானே எடுத்துக்கறேன் சீதா.”

“நீ பேசாம இரு… ஜாடியில் நெய் இருக்கு… டோஸ்ட் பண்ணித் தறேன்.”

“நீ ஏன் எனக்காகச் சிரமப்படனும்…”

“ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டை டோஸ்ட் பண்றதில் என்ன சிரமம் இருக்கு? பாவம், நித்யா உன்னுடைய டியரஸ்ட் ஃபிரண்ட். இப்போ உன் மனம் எப்படிக் கலங்கியிருக்கும்னு எனக்குப் புரிகிறது!”

“இப்போ உனக்கு உடம்பு எப்படி இருக்கு? சீமந்தம் எப்போ?”

“அடுத்த மாசம். நான் கூட என் அம்மா கிட்டே போய்க் கொஞ்ச நாள் இருக்கலாம்னு பார்க்கிறேன்.”

“பிரசவத்துக்கு அங்கே தானே போகணும்?”

“ஹும். இவர் வேண்டாம் என்கிறார். மெட்ராஸில் நல்ல நல்ல நர்ஸிங் ஹோமெல்லாம் இருக்கிறப்போ, பட்டிக்காட்டுக்குப் போவானேன் என்கிறார்.”

வசு ஒரு கணம் மெய் மறந்தாள். இப்படிக் கணவன் – மனைவிகளுக்கிடையே பரஸ்பர அன்பும் அரவணைப்பும் இருந்தால், குடிசையில் இருந்து கொண்டு கஞ்சியைக் குடித்தே வாழ்ந்து விடலாமே!

வசு ரொட்டியைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மாடிப்படியில் குரல்கள் கேட்டன.

‘கோபி’ என்று வசு தன்னுள் முணுமுணுக்க, சீதா, “வசு, கோபியே வந்து விட்டார். அவர் நேரே ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து தான் வருகிறார்!” என்றாள்.

வசு பதில் கூறுவதற்குள் ஒரு சீப்பு பழத்துடன் நாகராஜன் பிரவேசித்தான். கோபியும் பின் தொடர்ந்து வந்தான். வசுவைப் பார்த்ததும் ஒரு வினாடி நின்றான். பிறகு, “ஹலோ வசு! நீ இங்கேயா இருக்கிறாய்!” என்றான். “ஏண்டா. இவள் இங்கே வந்திருக்கிறாள் என்று நீ சொல்லவில்லை?”

“அப்புறம் இந்த ஸர்ப்ரைஸ் இருக்காதே!” என்று சொல்லிச் சிரித்தான் நாகராஜன்.

“எனக்கும் ஏதானும் தாருங்கள். ரொம்பப் பசிக்கிறது.” என்றான் கோபி.

“ஐயய்யோ. இப்பத்தான் தீர்ந்தது. நான் ரெண்டு ஸ்லைஸ் சாப்பிட்டேன்,” என்று சீதா தன்னையே நொந்து கொண்டு கூறினாள்.

“பழம் இருக்குடா.” என்றான் நாகராஜன்.

வசு எழுந்தாள். கோபியின் அருகே வந்து தட்டை நீட்டினாள். இரண்டு ஸ்லைஸ் ரொட்டி இன்னும் அதில் இருந்தது.

அவன் அவளை நிமிர்த்து பார்த்தான்.

“பரவாயில்லை. வசு, நீ சாப்பிடு.”

“நான் மூன்று சாப்பிட்டாச்சு.”

“நாகராஜா, இரண்டு பழத்தை உரிச்சுத் தட்டிலே போடு,” என்றான் கோபி.

“சரியான சோம்பேறி!” என்ற நாகராஜன், “முரளி எப்படி யிருக்கிறான்னு உன் மனைவிகிட்டே சொல்லேண்டா,” என்றான்.

“ஏண்டா. அவனுக்கு ஏதானும் ஆபத்துன்னு தோனினா, நான் இங்கே வந்திருப்போன? இல்லே இந்த ரொட்டியும் பழமும் தொண்டையில் இறங்குமா?” என்ற கோபி, “வசு, உன் ஃபிரண்ட் நித்யா ஊரையே ஒரு கலக்குக் கலக்கி விட்டாள். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலேயே அவனை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு இருந்தார்கள். ஆனா நித்யா, பிடிவாதமா தலைக்குள் அடிபட்டிருந்தாலும் பட்டிருக்கும், சோதனை செய்யணும்னு ஒரு கால்லே நின்றாள்,” என்றான்.

“சோதனை முடிஞ்சிட்டதா?” என்று கேட்டாள் வசு.

“முடிஞ்சுட்டுது. அடி ஒண்ணுமில்லை… ஐ மீன், ஒரு கோளாறும் இல்லை.”

“முரளி ஏதானும் சொன்னாரா? நித்யா இப்போ என்ன செய்கிறாள்?”

“டாஜ் ஓட்டல் சாப்பாடு இப்படி அநியாயமாய்ப் போயிட்டுதேன்னு என்கிட்டே அங்கலாய்ச்சான். நீயும் அவர்களுடன் சாப்பிடுவதாக இருந்ததாமே.. கடைசி நிமிஷத்திலே வரலேன்னு போய் விட்டாயாம்!”

“ஆமாம். நான் அவர்களுடன் என் காரில் போயிருந்தால் இந்த ஆக்ஸிடண்ட் ஆகியிருக்காதோ என்னமோ!”

“அவன் தலையில் அடிபடணும்னு இருக்கிறப்போ நீ எப்படி அவர்களுடன் போயிருக்க் முடியும்? நாகராஜா, நீ என்ன சொல்கிறாய்?”

பதில் வராமற் போகவே அவன் திரும்பிப் பார்த்தான். வாசற் கதவண்டை நின்று கொண்டிருந்த நாகராஜனைக் காணவில்லை. கோபி சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“எங்கே ரெண்டு பேரும்?”

“இங்கேதானே இருந்தார்கள்!”

“ஒரு வேளை மறுபடியும் கடைக்குப் போயிருப்பானோ, எனக்கும் சாப்பிட ஏதானும் வாங்கலாம்னு?” வசுவுக்கும் புதிராக இருந்தது.

“அப்படி இருந்தாலும் இந்த சீதாவைக் காணோமே,” என்றாள்.

“சீதா எனக்குத் தெரிஞ்சு ஒண்ணுமே சாப்பிடவில்லை. எட்டே முக்காலுக்குக் கம்பெனிக்கு போன் வந்தது. வாட்ச்மென் என் வீட்டுக்கு ஓடி வந்தான். அப்போ மணி ஒன்பது. அப்பத்தான் சீதா சாப்பிட உட்கார்ந்திருந்த சமயம். செய்தியைக் கேட்டதும் பதறிக் கொண்டு எங்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டாள்.”

“அப்போ அவளுக்கும் இன்னும் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு அழைத்துக் கொண்டு போயிருப்பார் நாகராஜன்.”

“இருக்கலாம். இரு, நான் உனக்குப் பால் கொண்டுவந்து தருகிறேன்.”

“வேண்டாம். நானே எடுத்துக் கொள்கிறேன்.”

“பரவாயில்லை. நீ பழத்தைச் சாப்பிடு. சீதாவும் நாகராஜனும் வந்து விடுவார்கள்.”

“அவர்கள் திரும்பிப் போகும் போது நான் அவர்களுடன் போய் விடுகிறேன்,” என்றாள் வசு.

“ஏன், கார் இல்லியா?”

“ஃப்ரண்ட் வீல் பங்ச்சர்.”

கோபி டம்ளரை நீட்டினான். அதை வாங்கிக் கொண்ட வசு, “உங்களுக்கு?” என்று கேட்டாள்.

“எனக்கு இப்போ தேவை மோர்தான். நெஞ்சைக் கரிக்கிறது.”

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

“ஏன் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று போனார்கள்?. . மணி பதினொன்றாகி விட்டதே!” என்றாள் வசு.

“நாம் ரெண்டு பேரும் பேசிக் கொண்டிருக்றப்போ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நாகராஜன் நினைத்திருப்பான். சீதாவைத்தான் உனக்குத் தெரியுமே. அவனுக்கு அவள் நிழல்.”

அந்த இருவரையும் பற்றி நினைக்கும்போது வசுவுக்கு மனத்தில் ஒருவித நெகிழ்ச்சி உண்டாயிற்று. “என்கிட்டே ரெண்டுபேரும் ரொம்பப் பரிவா இருந்தார்கள்… ஆமாம், நித்யா என்ன சொன்னாள்? இங்கே எப்போ வருகிறாளாம்?”

“இன்னிக்கு ராத்திரி பூரா முரளியை ஆஸ்பத்திரியிலேயே வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கிறார்கள். அதுக்கு அவசியம் இல்லை தான். ஆனா எதற்கும் இருக்கட்டும்னு டாக்டர் சொன்னார். நித்யா முரளி பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறாள்.”

“அப்போ இப்போதைக்கு வரமாட்டாளா?”

“மாட்டாள்.”

வசுவிடத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருப்பதைக் கோபி உணர்ந்தான். ஆனால் அது நிலையான மாறுதலாக இருக்குமா? அவனால் நிச்சயமான முடிவுக்கு வரமுடியவில்லை.

திடீரென்று ஒரு ஜன்னல் கதவு அடித்துக் கொண்டது. லேசான தூறல்களின் ஒலி கேட்க ஆரம்பித்தது.

“மழை வரும் போலிருக்கு,” என்றாள் வசு.

“மழை வந்தே விட்டது. சாரல் அடிக்காமலிருக்க ஜன்னலை எல்லாம் சாத்தணும்.” கோபி கதவுகளைச் சாத்த எழுந்தான்.

லேசாகத் தொடங்கிய மழை இப்போது கொட்ட ஆரம்பித்தது.

“மணி பதினொன்றரை” என்றாள் வசு.

“அவர்கள் இனிமேல் திரும்புவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. வசு, இனி இந்த இருட்டிலும் மழையிலும் உன்னால் வீட்டுக்குப் போக முடியாது. இந்த வட்டாரத்தில் இந்த வேளையில் ஒரு டாக்ஸியும் கிடைக்காது.”

“அப்போ என்ன செய்கிறது?” என்று கேட்ட வசு, திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

இந்த எலிப் பொந்தில் இரவைக் கழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா?

– தொடரும்…

– பெப்ரவரி 1975

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *