ஜெயித்தது காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 7,013 
 
 

இரவு ஒன்பது மணி. மொட்டை மாடி திண்ணையில் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டிருந்தனர் அகிலாவும் ராஜூவும்.

“மொட்டை மாடிக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க. இப்போ வாயை மூடிண்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” நீண்டநேரம் நிலவிய மெளனத்தை கலைத்தாள் அகிலா.

“அகிலா ! எங்க வீட்டில இருக்கறவங்களப் பத்தி என்ன நினைக்கிறே?”

திடீரென புருஷன் இப்படி கேட்டதும் அகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.  திரு திரு வென விழித்தவள், பிறகு “எதற்கு இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்க?” என்றாள்.

“இல்ல, நீ எங்க வீட்டில காலடி எடுத்து வச்சு ரெண்டுமாசமாகிறது. இந்த ரெண்டு மாசத்தில எங்க வீட்டைப் பற்றி நீ புரிஞ்சிக்கிட்டது என்ன ? உன் மனசு திறந்து சொல்லு!”

தன் முகத்தை இரண்டு முழங்கால்களுக்கிடையில் வைத்தபடி அகிலா குறு குறுவென்று
ராஜூவைப் பார்த்தாள்.

“சொல்லட்டுமா..” என்றவள் “முதலில் உங்களைப் பற்றி சொல்கிறேன். நீங்கள் நல்லவர், வல்லவர். அடுத்தது உங்கள் தந்தையும் மிக மிக நல்லவர். சிடுமூஞ்சி இல்லை. சிரி மூஞ்சி. பெற்ற பெண்ணைப் போல் என் கிட்டே பாசமும் அன்பும் கலந்து பழகுகிறார். அதற்குமேல் உங்கள் அம்மா!  மாமியார் என்கிற கர்வம் கொண்ட ஆதிக்கம் கொஞ்சம் கூட கிடையாது. என் அம்மாவைக் காட்டிலும் பல மடங்கு பாசத்தைக் கொட்டுகிறார். இதுவரை என்னை எந்த வேலையும் செய்ய விடவில்லை. காலை காஃபி போடுவது முதல் இரவு சமையலறையை அலம்புவது வரை எல்லா வேலைகளையும் தான் ஒரு ஆளாக இழுத்துப் போட்டுண்டு செய்கிறார். கேட்டால் ‘ கொஞ்ச நாள் லைஃப எஞ்சாய் பண்ணு’. அப்படிங்குறார். இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்ங்க!..ஸோ, நல்ல குடும்பத்தில் நான் வாக்கப்பட்டது என்னோட அதிர்ஷ்டம்! அந்த ஆண்டவனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்,”

மனைவி நெகிழ்ச்சியுடன் கூறியதை  பெருமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் ராஜூ.

உண்மையில்  ராஜூவின் அம்மா ராஜூவுக்கு ஐந்து  வயது ஆகியிருக்கும் பொழுது விஷக் காய்ச்சலில் மரித்துப் போனாள். தன்னைப் பெற்ற தாய் செத்துப் போனது நன்றாகவே தெரியும். அதனால் துக்கம் பீறிட்டு அழுதான் ராஜூ.தன்னையும் கட்டுப்படுத்திக் கொண்டு தன் மகனையும் தேற்ற ரொம்பவே கஷ்டப்பட்டார் ராஜூவின் தந்தை. இது மட்டுமல்ல. ராஜூவை வளர்ப்பதில் பெரும்பாடாய் இருந்தது. சில மாதங்கள் கழித்து வேறு ஒருவளை மணம் புரிந்தார்.  சித்தி சாந்தமாகவும் அன்பும் பாசமும் பொழிபவளாகவும் இருப்பது கண்டு மகிழ்ச்சியுற்றான் ராஜூ. ஆக சித்தி எல்லா விஷயங்களிலும் பெற்ற அம்மாவைப் போல் இருப்பதால் ராஜூ ‘ அம்மா ‘ என்றே சித்தியை அழைக்க ஆரம்பித்தான்.

தான் பெறாமலே தன்னை ராஜூ ‘ அம்மா ‘ என்று அழைப்பது சித்தியின் மனதை நெகிழ்ச்சி யில் விரிவடையச் செய்தது. 

வழக்கமாக சில வீடுகளில் மாமியார்களின் ஆளுமையால் மருமகள்கள் பெரும் சிரமப்
படுவதுண்டு. ஆனால் இங்கு உள்ள மாற்றாந்தாய் அப்படி நடந்துகொள்ளவில்லை. ஒரு நல்ல முன்னுதாரணமாக  இருப்பது கண்டு ராஜூவுக்கு திருப்தி கலந்த சந்தோஷத்தை தந்தது.

“ரெண்டுபேரும் ராத்திரி பனியில எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கீங்க ? பனி ஆகாது. இறங்குங்க !” சித்தி மாடிக்கு வந்து அன்புடன் கடிந்து கொள்ள,  ராஜு “அம்மா! சும்மா காத்து வாங்க வந்தோம். இறங்க வேண்டியதுதான். நீங்க போங்க ! பின்னாடியே வரோம்!”  ராஜூ மனைவி அகிலாவுடன் தன் சித்தியைப் பின் தொடர்ந்தான்.

சித்தியாக வந்தவள் வேறு யாருமல்ல. ராஜூ தந்தை ராமனாதனின் மாஜி காதலி ராகினி தான்.  ராகினிக்கு அப்பா சுந்தரம் மட்டுமே. அம்மா கிடையாது.   படிப்பு முடிந்து சில நாட்களில் ராகினிக்கு மணம் செய்ய முயற்சி எடுத்தார் சுந்தரம்.  இதை  அறிந்த ராகினி திடுக்கிட்டாள். தான் ராமநாதனை உயிருக்குயிராக நேசிப்பதால் அவருக்கே தன்னைக் கட்டி வைக்கும்படி மன்றாடினாள்.  காதல் கத்தரிக்காய் இதிலெல்லாம் தனக்கு துளிக்கூட நாட்டமில்லை.

அதனால் ஜாதகம் பார்த்து முடிவாகும் வரனைத்தான் மகள் கட்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் சுந்தரம்.   அதையே கண்டிப்புடன் ராகினியிடம் கூறினார்.

ராகினி மறுத்தாள்.  கல்யாணம் என்ற ஒன்று  நடந்தால் அது ராமனாதனோடு மட்டுமே; மற்றவர் யாருக்கும் கழுத்தை நீட்ட மாட்டேனென்று உறுதியாக இருந்தாள்.  அதனால் ராகினி  வெளியேச் செல்ல தடை விதிக்கப்பட்டது.  செல்ஃபோன் தொடர்பும்  துண்டிக்கப்பட்டது. நாட்கள் உருண்டோடியது.

நாள் கணக்கில் ராகினியின் தொடர்பு இல்லாது போகவே தத்தளித்தார் ராமனாதன்.
பொறுமை இழந்தார். கடைசியில் தன் அத்தைப் பெண் கல்யாணியை  திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே ராஜூ பிறந்தான்.  ஆனால் மொத்தமாக ஐந்து வருடமே கல்யாணி உயிரோடிருந்தாள்.

இதனிடையில்,  ராகினியின் தந்தை நோயில் படுத்து கண் மூடினார். அநாதையானாள்
ராகினி.  கல்யாணி இறந்து போய் சில நாள் கழித்து ராமனாதனை தொடர்பு கொண்டு
பேசினாள் ராகினி.  அவள் குரல் கேட்டதும் கண்ணீர் விட்டார் ராமனாதன்.  இத்தனை
வருடங்கள் அவள் குரல் கேட்காததின் ஏக்கம் நிறையவே இருந்தது. ஏறக்குறைய ராகி
னிக்கும் இதே நிலைமைதான்!

பிறகு, ஒருநாள் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.  அப்போது தனக்கு ஏற்பட்டிருக்கும்
கஷ்டங்களை கண்ணீருடன் சொன்னாள் ராகினி. கேட்ட ராமனாதனுக்கு மனசு வலித்தது.

“ராகினி, நீ இது வரை கல்யாணமே செய்து கொள்ளாதது உன் மன உறுதியைக் காட்டறது. நானும்  மனைவியை இழந்தவன். எனக்கொரு பிள்ளை இருக்கான்.  வந்து…” அதற்கு மேல் வார்த்தைகள் வெளி வரவில்லை.  தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டன. கூச்சம் கலந்த தயக்கத்துடன் தலை கவிழ்ந்தார் ராமனாதன். 

அவர் என்ன சொல்லத் துடிக்கிறார் என்பதை ராகினி புரிந்து கொண்டாள். புன்னகை யுடன் அவரின்  வலது உள்ளங்கையைப் பற்றி மென்மையாக அழுத்தினாள். அந்த அழுத்தம் உணர்த்திய ராணியின் எண்ண ஓட்டம் புரிந்தது ராமநாதனுக்கு.  மனதில் உவகை ஏற்பட்டது.

நேரம் போவது தெரியாமல் இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தனர்.

அதன் பிறகு நல்ல நாள் பார்த்து ராகினியை இரண்டாம் தாரமாக ஏற்றுக்கொண்டார்
ராமனாதன்.  ராகினி தனிமையில் சொன்ன வார்த்தைகள் ராமனாதனை சிலிர்க்க
வைத்தன.  காரணம் அந்த வார்த்தைகளயே தன் மனதிலும் வைத்திருந்தார் ராமனாதன்.

“இதோ பாருங்க! நம் மகன் ராஜூவை நன்றாக வளர்த்து அவனை கரை சேர்க்க வேண்டும் . இது ஒன்றே நம் குறிக்கோள். நமக்கென்று குழந்தை பிறந்தால், அது ராஜூ
மேல் நாம் வைத்திருக்கும் பாசத்தையும் அன்பையும் முறித்து விடும்.  அதனால் நான்
யோசித்துப் பார்த்தேன்.முடிவு எடுத்தேன், நாம் மனதோடு மட்டுமே இணைவது என்று !
உங்களுக்கும் சம்மதம்தானே?” 

புன்முறுவலுடன் கேட்ட ராகினியைப் பார்த்து சட்டென ராமனாதன் இரு கரம் குவித்து வணங்கிட, அதே புன் முறுவலுடன் அருகில் வந்த ராகினி அவர் கைகளைப் பற்றி கீழிறக்கினாள். 

அன்று முதல் இன்று வரை இருவரும் அப்படியே இருக்கின்றனர். அசைக்க முடியாத மனோ பலமும் கட்டுப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *