ஜீரணம்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 4,871
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓய்ந்து போன போர்க்களத்தில் ஓரமாக ஒதுங்கிக் கிடக்கிற ஓர் உணர்வு அன்னமாறனுக்கு. கண்ணைச் சொக்கிக் கொண்டு வருகிற உறக்கம். அடித்துப் போட்ட மாதிரி உடம்பு முழுக்க அசதி. ஒரு வாரமாக ஓய்வில்லாத அலைச்சல். பேய்த்தனமான அலைச்சல்.
ஒரு கல்யாணம் நடந்து முடிந்த இன்பக் களைப்பில் துவண்டு கிடக்கிற வீடு. பட்டு வேட்டிக்கு மேல் முண்டா பனியன்… விரலில் புதிய மோதிர ஸ்பரிசம். அழுத்துகிறது. பந்தலுக்கடியில் சும்மா கிடந்த பெஞ்சில் கட்டையை நீட்டி நிமிர்த்தினான்.
உடன் பணியாற்றுகிற சிமிண்ட்டாலைத் தொழிலாளர் களும் தொழிற்சங்கத் தோழர்களும் இந்நேரம் வரைக்கும் சுற்றிநின்று கோட்டா பண்ணிக் கும்மியடித்துவிட்டு, இப்போதுதான் போய்த் தொலைந்திருக்கிறார்கள்.
வெளியூர் சொந்தக்காரர்கள் மொய் செய்து விட்ட திருப்தியில் பந்திச் சாப்பாட்டு ஏப்பத்தோடு மதிய பஸ்ஸில் போய் விட்டார்கள். மிச்சமிருக்கிற நாலைந்து பேரும் மூன்று மணி வண்டிக்குப் போய் விடுவார்கள்.
கல்யாணத்துக்காகப் போட்ட வேஷம் இன்னும் கலையாமல் வீடு வெறிச்சோடிக் கிடக்கிற பந்தல். காற்றின் தீண்டலில் கிளுகிளுக்கிற மாவிலைத் தோரணங்கள்… பந்தல் முகப்பில் நடப்பட்ட வாழை மரங்கள்… இரு மரங்களின் தார்களும் மணமக்களைப் போல ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து…
நீளம் நீளமாகக் கிடக்கிற வெறும் பெஞ்சுகள்… அப்படியப்படியே கிடக்கிற நாற்காலிகள்.
இன்னும் காதுக்குள் இரைகிற மைக் செட்டின் ஓங்கார இரைச்சல்… கொட்டு மேளத்தின் மத்தள அதிர்வுகள்… மதியம் வரைக்கும் வீடும் பந்தலும் ‘ஜே ஜே’ என்று ததும்பி வழிந்த ஜனக்கூட்டம். சிறுவர் பட்டாளத்தின் ஓட்டமும் கும்மாளமும்… குழந்தைகளின் கூச்சல்கள்… தளும்பித் தத்தளித்த மனிதச் சந்தடி… ஒருத்தர் மூச்சு ஒருத்தர் மூஞ்சியில்! அத்தனை கூட்டம்.
இப்போது-
வெள்ளம் வடிந்த ஆற்று மணலின் வெறுமை. சந்தடிச் சுவடுகளை மனகள் பிரம்மாண்டப் படுத்துகிற சூன்யம்.
அந்நிய வீட்டில் ஒற்றை மனிதனாக… இவன் மட்டும். அம்மா அய்யா மற்றும் சொந்த வீட்டு உறவினர்கள் எல்லோரும் மணமகளுடன் மறுவீடு செல்கிற சடங்கின்போது, வேனில் ஏறி நாற்பது கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற ஊரில் இறங்கிக் கொண்டனர். மணமகள் உறவினர்களுடன் இவன் மட்டும் தனித்து விடப்பட்டான்.
சுள்ளென்று சுடுகிற தனிமை உணர்வு. அந்தத் தனிமை உணர்வை விழுங்கி ஜீரணம் செய்கிற பெருமிதம். தான் செய்திருக்கிற பெரிய காரியம், சாதித்திருக்கிற விஷயம் சாதாரணமானதல்ல. பெரிய புரட்சிதான். தலைகீழ் மாற்றம்தான். சமகாலச் சமூகப் பழமைப் பாதையில் மனுஷத் தனமான புதிய பயணம். மனசறிந்து செய்த காரியம்… ஈரப் பெருந்தன்மையோடு, விசால மனதோடு செய்திருக்கிற மகத்தான சாதனை. இதற்காக, குடும்பத்து ஆட்களோடு ரொம்ப ரொம்பப் போராட வேண்டி டி யிருந்தது. பேராட்ட ரணத்தை மறக்கடிக்கக்கூடிய மகிழ்ச்சி… இப்போது.
மணப்பெண் திலகம் ஞாபகத்துக்குள் வந்தாள். தாலி கட்டுகிறபோதுகூட அவள் முகத்தில் அப்பியிருந்த பயம். பாய்ந்து வரும் அம்பைக் கண்ட மானின் பயம். ஜனக்கூட்டத்தின் பார்வையில், அந்நிய ஆடவன் பக்கத்தில் உட்கார்கிற லஜ்ஜையைத் தாண்டிய ஓர் உள்பயம். நிர்ப்பந்திக்கப்பட்டு நெருப்புக்குள் இறங்குகிற ஒரு பெண்ணின் பயம்.
அந்த உறக்கச்சடவிலும் அன்னமாறன் சிரித்துக் கொண்டான். ‘பயம் தெளிஞ்சிரும். இன்னிக்கு ராத்திரிக் குப் போடுற மந்திரத்துலே பயம் எல்லாம் பயந்தோடிரும்.’
மரபெஞ்சில் படுத்திருந்தவனுக்குப் பின்னந்தலை வலித்தது. கையை மடித்து தலைக்குக் கீழே தலையணை யாக்கிக் கொண்டான்.
வீட்டுக்கு வந்த புது மருமகன் நாதியற்றவனைப் போல் வெளியில் பெஞ்சில் படுத்திருக்கலாமா? உள்ளிருந்து மாறி மாறி வருகிற அழைப்புகள், பையன்கள் மூலமாக… “உள்ளே வருவீகளாம்… பாட்டி சொன்னாக.”
கடைசியில், திலகத்தின் அம்மாவே வந்து விட்டார்கள். ஒரு மரியாதைக்காக எழுந்தான்.
“என்ன… இங்ஙன படுத்துட்டீக?”
“சும்மாதான். காத்தாட படுத்திருக்கேன்.”
“உள்ளே போய்க் கட்டில்லே படுங்க.”
“இல்லே… ரொம்பக் களைப்பாயிருக்கு. சித்தே இங்கன படுத்துருக்கேன். யாரும் உசுப்ப வேண்டாம்.”
“ம்.”
“பொழுதடைய உசுப்பிவிட்டுருங்க.”
உள்ளிருந்து தலையணையும் விரிப்பும் வந்தன. விரித்து வசதியாகப் படுத்துக் கொண்டான். நீட்டி நிமிர்ந்து நெட்டி முறித்தபோது…. உள்ளுக்குள் எல்லா எலும்பு மூட்டுகளும் நெறுநெறுத்தன. உடம்புக்கே ஒரு சுகமாக இருந்தது. இமைகளை அழுந்த மூடியபோது, மனசுக்குள் ராசசேகரன்.
‘அந்த ராஸ்கல், கல்யாணத்துக்கே வரலியே… இருக்கட்டும்.’
வேறு ஜாதிக்காரன்தான். ஆனால், உயிர் நண்பன். மனசுக்குள் நெருக்கமானவன். சகல அந்தரங்கங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவுக்கு நம்பகமானவன். ஒன்பதாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்த நட்பு. இப்போதும் வளர்ந்த வண்ணமாகவே…
பக்கத்தூரில் பள்ளி ஆசிரியர்… தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர். அந்த ஊரிலேயே கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். இன்விடேஷன் கொடுக்கப்போனபோது, வீட்டில் ஆளைப் பார்க்க முடியவில்லை. பள்ளிக்குத்தான் போகவேண்டியிருந்தது. அங்கேயும் ஆற அமரப் பேச நேரமில்லை.
“கட்டாயம் வந்துருவேண்டா.”
“ரெண்டு நாளைக்கு முன்னாடியே வர முடியுமாடா?” “நியாயமா பாத்தா வரணும். ஆனா, மன்னிச்சிரு.”
“ஏண்டா?”
“ஸ்கூல்லே ஏகப்பட்ட ப்ராப்ளம். கரஸ் பாண்டட் வேற புதுப்புதுச் சட்டம் போடுறாரு. பயங்கர நெருக்கடி.”
“அப்படியா?”
“எது எப்படியிருந்தாலும் கல்யாணத்துக்கு ‘டாண்’னு வந்து நிப்பேன். அது மட்டும் நிச்சயம்.”
***
வந்து நிற்கவில்லை… பயல் ஏமாற்றி விட்டான். அவனுக்கு என்ன ப்ராப்ளமோ…
நஞ்சடித்த கெண்டை மீனாகச் சொக்கிப் போய் அப்படியே உறங்கிவிட்டான் அன்னமாறன்.
சாயங்காலம்… புது மாப்பிள்ளை உபசாரம்… வடை, பணியாரம், பழம், பால் என்று ஏகத்தடபுடல் திலகம் தான் இவனுக்குப் பரிமாறினாள். ஆனால், இயல்பாக வரவில்லை. முகத்தில் உயிர்க்களையேயில்லை. ‘போ… போ’ என்று தள்ளப்பட்டே வருகிறாள்.
“போய் வடையைக் குடு…”
“பணியாரம் வேணுமான்னு கேளு.”
“தண்ணி மோந்து வை.”
நிர்ப்பந்தமாகப் பொம்மைச் சலனமாய் வந்து போனாள். அன்னமாறனுக்குள் அதே மென்சிரிப்பு. சகலமும் புரிந்த மனநிலையில் முதிர்ந்த மலர்ச் சிரிப்பு.
உள்ளறையை ஒதுக்கியிருந்தார்கள். சாமான் சட்டுகளை யெல்லாம் ஒதுக்கி புதுப்பாய், புதுத்தலையணை, புது ஜமுக்காளம். பக்கத்தில் டேபிள் ஃபேன்.
பாயில் உட்கார்ந்திருந்த அன்னமாறனுக்குள் நமைச்சல்… சிகரெட் பிடிக்கவேண்டும் போல உள்தவிப்பு. காலையி லிருந்தே சிகரெட்டைத் தொடாமலிருப்பதில் பெரும் மனஉளைச்சல். சிகரெட் புகை வாடை அவளுக்கு ஒவ்வுமோ… ஒவ்வாதோ… பார்க்கலாம்.
பெண்களின் கிசுகிசுப்பான கண்டிப்புச் சத்தங்கள். அதைத் தொடர்ந்து உள்ளே வருகிற திலகம். ரொம்ப மிரள்கிறாள். கண்களில் பேயைக் கண்ட கிலி… திகில்… உதட்டின் மேலும், நாடியிலும் வியர்வைத் துளிகள்.
“உட்கார்.”
ரொம்பத் தயக்கமாக உட்கார்ந்தாள். சற்றுத் தள்ளி ஒதுங்கி உள்ளுக்குள் ஒடுங்கி…
“திலகம்.”
“…”
“ஏய்ய்… திலகம்”
“….ம்……”
“என்னைப் பிடிக்கலியா?”
“திலகம்.”
“…”
“இந்தா…”
“…”
அன்னமாறனுக்குள் பொறுமையின் சிதைவு. சலிப்பு தட்டியது.
இவன் காட்டியிருக்கிற பெருந்தன்மைக்கு அவள் ஆராதனையே செய்யலாம். வேண்டாம்… நன்றிகூட வேண்டாம். இயல்பாகவுமா இருக்கக்கூடாது? ச்சே!
இப்படியோர் மவுனமா? பாறைத்தனமாகவா? அடம்பிடிக்கிற இறுக்கமா? பயம்தான். அர்த்தமற்ற பயம்தான். பயத்தில் இந்த ஆழத்துக்குப் புதைய வேண்டுமா?
“ஏன், என்னைப் பார்த்து இப்படி மிரள்றே?”
“ம்.”
“நான் என்ன பேயா… பிசாசா?”
இன்னும் அவள் நிமிரவேயில்லை. இவன் முகத்தைப் பார்க்கவேயில்லை. குத்துக்காலாக மடக்கி உட்கார்ந்து, முழங்கால் மேல் முகம் புதைத்து… அவள்.
சலிப்பின் விளிம்பில் தலைகாட்டுகிற சிடுசிடுப்பு… சுருசுருவென்று வருகிற எரிச்சல். கோபம். இப்படிப்பட்ட நேரத்தில் சிகரெட் ரொம்ப தேவைப்படும். பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்தான். அவள் தலையைப் பார்த்தான்.
அலங்காரம். எண்ணெய்க் கூந்தலின் மின்னல்… வெள்ளிச் சிரிப்பாக விரித்த மல்லிகைக் கொத்து, உடுத்தியிக்கிற பட்டுச் சேலைக்கு மேட்ச்சான ஜாக்கெட், ஜாக்கெட்டின் தோள் பகுதி அதிர்கிற மாதிரியான தோற்றம். சடைப் பின்னலோடு சேர்ந்து முதுகின் குலுங்கல். அடக்கமுடியாத விசும்பலின் வெடிப்போசை.. அழுகிறாளா…
இவனது கோபம் சட்டென்று பதற்றமாக நிறம் மாற… மறுபடியும் அவன் அவனானான். மிருதுவான மனநிலைக்கு வந்தான்.
“என்னாச்சு…ஏய்.”
“எனக்குப் பிடிக்கலே…” கிணற்றுக்குள் சத்தமாக வந்த அவள் குரல்.
“என்னையா?”
“கல்யாணத்தை.”
“பெறகு… ஏன் சம்மதிச்சே?”
“யாருகிட்டே யாரு சம்மதம் கேட்டாக ஆளும் பேருமா சேர்ந்து என்னைக் கொன்னுப் போட்டாக.”
“மகளை வாழ்வெச்சுப் பார்க்கணும்ங்கிற நியாயமான ஆசை அவுகளுக்கு. அது கொலையா?”
“வெறுங்கழுதைக்கு என்ன வேண்டிக் கிடக்குது வாழ்க்கை?”
“நீயா… வெறுங்கழுதை?”
“யோகங்கெட்ட கழுதை.”
அவளுள் கிடந்து அழுத்திய முடிச்சு வெளிவந்து விட்டது. சுதந்திரமாக அழுதாள், வெளிப்படையான விசும்பலும் முதுகுக் குலுங்கலுமாக.
“திலகம், ஊர் உலகத்துக்குப் பயப்படுறே. உன்னைப் பத்தி நெனைக்க மாட்டேங்குறே. நீயாவே ஏதேதோ நெனைச்சுக்கிட்டு, உன்னோட எதிர்காலத்தையே புண்ணாக்கிக்கிடுறே…”
“இதை யாராச்சும் ஒத்துக்கிடுவாகளா?”
“வெட்டுப்பட்ட மரக்கன்னு அப்படியே பட்டுப் போறதில்லே. மறுபடியும் தளுக்குது. வளருது… பூப்பூத்துக் காய் காய்த்து… புது விதைகள் தருது. அதுதான் இயற்கை. இதை ஒப்புக்கிடாத மூடங்களை மனுசங்கன்னு ஒப்புக்கக்கூடாது.”
இப்போதுதான் முதன் முதலாக நிமிர்ந்து இவனைப் பார்க்கிறாள். பார்வையில் எல்லையற்ற சோகம். மனசைக் குழைத்துப் பாகாய்க் கரையவைக்கிற துயரம். அடிபட்டுச் சாகக் கிடக்கிற குருவியின் ரணம்.
டேபிள் ஃபேனின் காற்றில் அசைகிற முடிக்கற்றை முகத்தின் குறுக்காக ஆடுகிறது. முழங்கால் மேல் மடித்துக் கிடந்த கைகளில் நாடி பதிந்திருந்த அடையாளம்.
“எங்க அய்யா அம்மா உங்ககிட்டே என்னைப் பத்தின எல்லா உண்மைகளையும் சொன்னாகளா?”
“சொன்னாக… சொல்ல வேண்டியதைச் சொல்லலை… ஆனா, எனக்குத் தெரியும்.”
“என்ன தெரியும்?”
“எல்லாமே.”
“என்னைப் பத்தி முழுசாத் தெரியுமா?”
‘முழுசா’ என்பதில் அவள் தந்த அழுத்தம். அதில் தெரிந்த அவளது வெள்ளை மனம். மூடுமந்திரமற்ற கபடமற்ற நல்ல குணம். இவனுக்குள் அவளது வேர்கள், அழுத்தமாக.
“முழுசாகவே தெரியும்.”
“தெரிஞ்சுமா… சம்மதிக்சீக?”
“எங்க வீட்டு ஆளுகளையும் சம்மதிக்க வெச்சேன்.”
“எம்மேலே எரக்கப்பட்டா? ‘ஐயோ பாவம்’ னு பரிதாபப்பட்டா?”
“இல்லே… நிச்சயமா அப்படியில்லே. நான் மனுசத்தன்மையுள்ள மனுசன்தான்னு நானே நம்ப வேண்டாமா? எனக்கு நானே நிரூபிச்சுக்க வேண்டாமா? அதுக்காகத்தான்.”
பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களில் ஓர் இமைத் தட்டல்… மலர்ச்சி… புதிய உலகத்தைத் தொட்டுணர்ந்து கொண்ட மழலையின் மலர்ச்சி. விரித்த விழிகளில் படர்கிற ஈரத்திரை. நனைந்த இமை ரோமங்களில் சொட்டடிக்கிற மனத்துளி.
இவனை, இவனது விசால மனசை, மனசின் மிருதுவான இயல்பைப் புரிந்துகொண்ட மனநிலையின் வெளிச்சம். அவள் முகமெல்லாம் ஒரு பரவசமும் தவிப்பும்… துடித்து அதிரும் உதடுகள்… ததும்பல்… பொங்கி வழிய பாதை தேடி அலைபாய்கிற மனத் தளும்பல்.
இவன் கனிந்த புன்னகையோடு தோளில் கைவைத்து அழுத்தினான். மடைதிறந்த வேகத்தில் பாய்ந்து சரிந்தாள்… மடியில் விழாமல், அவன் பாதங்களில்.
அவன் பாதங்களில் அவளது ஆத்மக் கசிவின் ஈரச்சிலிர்ப்பு.
***
மறுநாளுக்கு மறுநாள்… திலகம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தாள். புகுந்த வீட்டுக்கு இன்று போக வேண்டும். அந்தப் பயணத்துக்கான மும்முரத்தில் இருந்தபோது, வெளியே நின்றான் அன்னமாறன்.
ராசசேகரன் வந்து சேர்ந்தான். அவனோடு சண்டை போட்டான் அன்னமாறன். காலில் விழாத குறையாக கெஞ்சி மன்னிப்பு கேட்டான் ராசசேகரன். ஆஸ்திரேலியா விலிருந்து ஐந்து வெள்ளைக்காரச்சிகள் பள்ளிக்கு ஆராய்ச்சிக்கு வந்து விட்டனராம். அவர்களை உபசரிக்கிற பொறுப்பை இவன் தலையில் போட்டுவிட்டாராம் கரஸ்பான்டண்ட்.
“சரி, சரி… வா வீட்டுக்குள்ளே… இன்னும் நீ திலகத்தைப் பார்க்கலேல்லே?”
“யாரு பொண்ணுங்குறதைக்கூட விசாரிக்கலை. இன்விடேஷன் குடுக்க வந்தன்னைக்குக்கூட நின்னு நிதானமா பேச முடியலை.”
உள்ளே வந்து உட்கார்ந்தனர். திலகம் காபியோடு வந்தாள். அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த ராசசேகரனுக்கு முகம் செத்துப் போய்விட்டது.
இவன் செய்து வைத்த அறிமுகத்தை அவன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. உணர்ச்சி யெல்லாம் வற்றிப்போனவனைப் போல அதிர்வோடு அன்னமாறனைப் பார்த்தான். பார்வையில் ஒரு பரிதாபம். ‘அடப்பாவி… நாசமாயிட்டீயே…’ என்கிற பச்சாதாபம்.
சட்டென்று வெளியேறினான் ராசசேகரன்.
“இங்க வாடா.”
வேறு வழியில்லை. ஆட்டுக்குட்டியாகப் பின் தொடர்ந்து வெளியே வந்தான் அன்னமாறன். ராசசேகரன் கொதித்துப் போயிருந்தான்.
“என்னடா… இதான் பொண்ணா?”
“ஆமா?”
“படுபாவி… ஏமாந்துட்டீயேடா… நல்லா விசாரிக்கலியா?”
“ஏண்டா?”
“இவளைப் பத்தித் தெரியுமா?”
“தெரியும்.”
“என்ன தெரியும் உனக்கு?”
“இவளுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆனது, ஒரு மாசம் அவனோட வாழ்ந்துட்டுப் பிடிக்காம வீடு வந்தது, அப்புறம் அவன் மருந்தைக் குடிச்சு செத்தது, இவள் ஒரு விதவைங்குறது எல்லாமே தெரியும்.”
“தெரிஞ்சுமா செஞ்சே? அறுத்துக் கட்டிக்கிற ஜாதியு மில்லியேடா நீ. ஒஞ்சாதிக்காரங்க ஒன்னை ரொம்ப இழிவாய்ப் பேசுவாங்களே…”
“இதை இழிவா நினைக்குறவன் மனுசனேயில்லை… கேவலமான மனுசப் பிறவிகளைப் பொருட்படுத்த வேண்டியதுல்லே.”
“எனக்கே டைஜஸ்ட்டாக மாட்டேங்குதுடா.”
“இப்பவும் நம்ம நாட்டுலே… பின் தங்குன மக்கள்கிட்டே அறுத்துக் கட்டுகிற (விவாகரத்து-மறுமணம்) பழக்கம் இருக்கா… இல்லியா?”
“இருக்கு!”
“பெரிய ஹை-சொஸைட்டிலேயும் டைவர்ஸும், விதவை வேற கல்யாணம் பண்ணிக்குறதும் சாதாரணமா நடக்குதா, இல்லியா?”
“நடக்கு.”
“அப்புறம்… நாம மட்டும் ஏண்டா மாற்ற மில்லாம பிற்போக்குத்தனமா இருக்கணும்? அது அசட்டுத்தனம் இல்லியா?”
“நம்மகிட்டே தானே ஜாதி ரொம்ப வலுவா வேர் விட்டுருக்கு… ஜாதியைத் தாண்டி நம்மாலே எதுவும் செய்ய முடியலியே…”
“ஜாதி… மதம்… தர்மம் எதுவா வேணுமினாலும் இருக்கட்டும்டா… அதெல்லாம் மனுசங்க வளர்ச்சிக்குப் பயன்பட்டாத்தான் அதுக்கு மதிப்பு. மனுச வளர்ச்சிக்குத் தடையாயிட்டா அது விலங்கு. அதை ஒடைச்சிரணும். நம்ம நட்பு, ஜாதியைப் பொருட்படுத்தியிருக்கா…? அப்படித் தான்.”
“ம்… அப்படீங்குறே?”
“டேய்…ஒருத்தனுக்குத் தலையெழுத்து சரியில்லாம சின்ன வயசுலே போய்ச் சேர்ந்தா அதுக்காக இன்னொரு சின்னப் பொண்ணோட ஆயுசு பூராவையும் சூன்யமும் கொடுமையுமாகத் தண்டிக்குறது என்னடா தர்மம்? இதைவிட மோசமான பாவம் வேற ஒண்ணு உண்டா?”
“ஆனா… நீ பெரிய துணிச்சல்காரன் தாண்டா…”
“ஒரு இழவுமில்லே… இதுலே என்னடா துணிச்சல் இருக்கு? கற்புங்குறது உடல் சம்பந்தப்பட்டதுல்லே… மனம், குணம் சம்பந்தப்பட்டதுன்னு புரிஞ்சுக்கிட்டா, இது ரொம்பச் சாதாரணமான காரியம் தாண்டா.”
“அப்ப சரி… வரட்டா?”
“படுவா… பல்லை ஒடைச்சிருவேண்டா… சாப்புடாமப் போயிருவியோ?”
“டேய்… ஆளை விடு.”
“ராசா, நான் செய்த காரியம் உனக்கு டைஜஸ்ட் ஆயிருச்சுன்னா உள்ளே வந்து சாப்பிட்டுட்டுப் போ… ஜீரணமாகலேன்னா… இப்படியே ஓடிப் போயிரு”
“சரி வாடா….சோத்தைப் போடச் சொல்லு.”
அன்னமாறனை இழுத்துக் கொண்டு ராசசேகரன் வீட்டுக்குள் நுழைகிறபோது…
அவன் மனசுக்குள்…
‘கல்லை வறுத்து சிமிண்ட்டாக்குற தொழிலாளி… முத்துன கலியையே முழுங்கி ஜீரணம் பண்ணிட்டானே… முன்னாடி நடந்து புதுத் தடமே போடுறானே…’ என்று நண்பனைக் குறித்த பெருமித உணர்வு ததும்பியது.
– ஆனந்தவிகடன், 2.10.1994.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
