ஜின்னின் மணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கசடதபற
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 123 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறைக்குள் நிறைந்து நின்ற விளக்கொளியின் மஞ்சள் நிறம் மங்கிக் கொண்டே வந்தது.

புட்டியில் மீதியிருந்த ஜின்னைத் தம்ளரில் ஊற்றி ஐஸ் பெட்டியிலிருந்து ஐஸ் துகள்களை இட்டு, சோடாவும் கலந்து என் நேர் நீட்டிய இளைஞனான வெயிற்றர் ஜெயிம்ஸை உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நான்.

வெண்மை நிறச்சட்டையும் சிவப்புக்கால் சாராயும் அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

சிகரட்டை இழுத்தவாறு தம்ளரைக் கையிலெடுத்தேன்.

‘ஜெயிம்ஸ்… நீ சொல்வதைக் கேட்க எனக்கு வேடிக்கையா இருக்குது… இது எவ்வளவு பிரம்மாண்ட ஹோட்டல்… கீழே பெரிய ஹாலில் எத்தனையோ பேருங்க வயிறு புடைக்கச் சாப்பிட்டவாறு கும்மாளம் போடுருங்க… எத்தனையோ பேருங்க என்னைப் போல் இப்படித் தனியறைக்குள் தனிமையில் அடைபட்டிருந்து கொண்டு திண்ணுத் தீக்கிருங்க. எல்லோருக்கும் எடுத்துக் கொண்டு வந்து விளம்பும் நீயும் உன் கூட்டாளிகளும் இங்கிருந்து ஒன்றும் சாப்பிடக்கூடாது, வெளியில் வேறெங்காவது போய்த் தான் சாப்பிடலாமுண்ணு இங்கே ஒரு விதியா? இதென்ன பைத்தியக்காரத்தனம்! நானும் எவ்வளவோ நாளாக இங்கே வந்துகிட்டிருக்கேன்… இதுவரை எனக்குத் தெரியாதே…!’

நிறுத்தாமல் அப்படியே பேசிக்கொண்டே போக வேண்டுமென்று ஒரு உந்துதல் என் அகத்தில் பீறிட்டுக் கொண்டே இருந்ததே ஆயினும், கையிலிருந்த தம்ளரில் நுரை ததும்பிக் கொண்டிருந்த பானத்தில் சங்கமிக்கச் சிறிது நிறுத்தினேன்.

‘இந்தக் கண்டிஷனுக்குக் கட்டுப்படாவிட்டால் இந்த வேலையும் இல்லையே சார்…விதியை மீறினா பெனலட்டி உண்டு சார்…’

‘அசல் கடைஞ்செடுத்தக் கஞ்சன்தான் உங்க முதலாளி,’

சற்றுக்கழிந்து நானே கேட்டேன். ‘சரி…அதிருக்கட்டும். உனக்குச் சம்பளம் எவ்வளவு?’

அவன் இப்போது தடுமாறினான். மொழு மொழு வென்று ரோஸ் நிறத்தில் கவர்ச்சியாக இருந்த அவன் முகத்தில் இப்போது ஒரு தத்தளிப்பு தெரிகிறது.

‘ஜெயிம்ஸ்… இந்த ஹோட்டலில் நீ வேலைக்கு வந்து சேருவதற்கெல்லாம் எவ்வளவோ முந்தியே வந்து கொண்டிருக்கும் கஸ்டமர் நாண்ணு உனக்குத் தெரியுமில்லே?’

‘தெரியும் சார்…’

‘பிறகென்ன! இங்கே நடக்கிற இதைவிட பெரிய பெரிய சங்கதிகளெல்லாம் எனக்குத் தெரியும். நான் வருமான வரி அதிகாரியோ, லேபர் ஆபீஸரோ ஒண்ணும் இல்லே… சும்மா சொல்லு.’

‘சொன்னா சார் நம்ப மாட்டீங்க’.

‘அதெல்லாம் நம்புவேன்… சொல்லு கேட்போம்.’

‘மாசம் வெறும் அம்பது ரூபாதான் சார் சம்பளம்… இங்கேயிருந்து வீட்டுக்குப் போய் சாப்பிட்டு கிட்டு வர நேரம் கிடைக்காது. அதனாலே வெளியில் பக்கத்து ஹோட்டலுக்கு எங்காவது போய் ஏதாவது வாங்கித் திங்க தினசரி ஒரு ரூபா படி தருவாங்க….பிறகு இப்படி உங்க மாதிரி வருகிறவங்க தருகிற டிப்ஸ்…’

‘உங்க முதலாளி சரியான ஆளுதான்… ஆமா… படிச்சிருக்கையா?’

‘ஆமா… பி.எ. யில் சேர்ந்து ஒரு வருஷம் போனேன்.’

கடைசிச் சொட்டை அருந்திவிட்டுத் தம்ளரை மேஜை மீது வைத்தேன்.

சிக்கனும், மட்டனும், ரொட்டியும் எல்லாம் வெறிக்க வெறிக்கப் பார்த்தவாறு என் முன்னே காத்திருந்தன.

‘சரி..சரி…நீ போய் அந்த வெளிக்கதவைச் சாத்தி தாள் போட்டுகிட்டுவா…’

அவன் ஒன்றும் புரியாதவனாய் என்னைப்பார்த்து விட்டு, மெல்லக் கதவருகில் போய்க் கதவைச் சாத்தி விட்டு வந்தான்.

‘அப்படி உட்காரு’ என்று என் எதிரில் கிடந்த நாற்காலியை அவன் நேராகத் தள்ளினேன். அவன் கேள்விக்குறியாய் என்னைப் பார்த்தபோது, ‘சும்மா உட்காரு ஜெயிம்ஸ். மணி இப்பவே பதினொன்று இருக்கும்… இனி எப்போ வீட்டுக்குப் போய் நீ சாப்பிடப்போறே? இன்னைக்கு ராத்திரி என் கூடத்தான் நீ சாப்பிடணும். அந்தக் கழுதைப்பயல் உன் முதலாளி ஏதாவது கேட்டா நான் சொல்லிக்கிறேன். நீ தைரியமா உட்காரு. உம்…’ என்று நான் சத்தம் போட்டேன். நாணிக் கோணியவாறு அவன் உட்கார்ந்தான்.

இரண்டொரு பிளேட்டுகளை அவன் முன்னே நீக்கி வைத்து விட்டு நான் சாப்பாட்டில் ஐக்கியமானேன்.

‘உம்… சங்கோஜப்படாமெ சும்மா சாப்பிடு ஜெயிம்ஸ்… இப்போ நீயும் நானும் சரிசமானம். நமக்குள் எந்த வர்க்க வேற்றுமையும் கிடையாது…’ என்று நான் ஊக்குவித்தபோது அங்கே இங்கே பார்த்தவாறு அவனும் சாப்பிடத் தொடங்கினான்.

அவன் கன்னத்தில் அப்போதுதான் அஞம்பிக் கொண்டிருந்த சிவந்த முகப்பருவையும், மூக்கில் துளிர்த்துக் கொண்டிருந்த வியர்வை முத்துக்களையும் பார்த்தவாறு நான் கேட்டேன்,

‘உன் சொந்த் ஊர் எங்கே?’

‘மாவேலிக்கரை’

‘இங்கே எங்கே வசிக்கிறே?’

‘குன்னுகுழியில்’

‘கூட?’

‘வயசான அம்மா மட்டும்தான். அப்பா செத்துப் போனாரு’

‘கல்யாணம்?’

‘இன்னும் ஆகவில்லை சார்… எங்க ரெண்டு பேரு வயிற்றுப்பாடே பெரும்பாடா இருக்கு அதுக்கக்கூடெ இன்னொரு ஜீவனையும் கூட்டிகிட்டுக் வந்து எதுக்கு சார் கஷ்டப்படுத்தணும்?’

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு அகோரப் பசி, எனவே சாப்பாட்டில் முழுகினேன். இருந்தும் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சதைப் பாங்கான அவன் வலது கைப் புஜத்தின் இயக்கம் என் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது.

தட்டுகள் காலியான பின் அவன் எழுந்து நின்றான். ‘சார்… உங்க கூட இப்படி நான் சரிசமதையா உட்கார்ந்து சாப்பிட்டதை எங்க முதலாளிகிட்டே சொல்லிடாதீங்க. அவரு இதை அறிஞ்சா என் சீட்டுக் கிழிஞ்சு விடும்.’

‘அந்த அற்பன் கிடக்கிறான்… விட்டுத்தள்ளு… முதலாளி… பெரிய முதலாளி…’

கைகழுவிவிட்டு வந்து நான் சிகரெட்டைப் பற்ற வைத்தபோது அவன் காலித்தட்டுக்களையும், தம்ளர்களையும், புட்டிகளையும் எல்லாம் ட்ரேயில் எடுத்துக் கொண்டு திரும்பியவாறு, ‘சார்…இனி ஏதாவது…’ என்று கேட்டான்.

‘ஒரு பாட்டில் ஜின் கூட…’

என்னை ஒருமாதிரி பார்த்தவாறு, ‘இன்னும் ஜின் தானா…?’ என்று இழுத்தான்.

‘ஆமா…’

‘ஸோடாவும் வேணுமில்லே?’

‘ஆமா…’

அவன் கீழிறங்கிச் சென்றான்.

எனக்கு இப்போ பரமானந்தமா இருக்கிறது. இந்த உலகில் நானே ராஜா என்ற மாதிரி ஒரு உவகைப் பரவசம்.

ரிக்கார்டு பிளேயரை இயக்கியதும், முப்பத்தி மூன்று ஆர்.பி.எம். வேகத்தில் சுழலத் தொடங்கிய இசைத்தட்டிலிருந்து ஸ்பானிஷ் ஜிப்ஸி டான்ஸின் ஆர்ச்சஸ்ட்ரா ஒலி வினோதங்கள் சொரு சொரு வென்று என் நரம்பு மூட்டங்களில் புகுந்து கொள்ளத் தொடங்கின.

சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் காற்றில் அறையில் நடுநாயகமாகக் கிடந்த இரட்டைக் கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த கொசுவலை படபடத்து என்னை அழைத்தது. காலில் கிடந்த ஷூஸைக்கூட கழற்ற மினக் கெடாமல் நான் எழுந்து போய் அந்தக் கட்டிலில் நீண்டு நிமிர்ந்து சாய்ந்தேன்.

சிகரட் புகை சிதறிக் கொண்டிருந்தது, கொசு வலையின் வெளியில் மங்கலாய்த் தெரிந்த அறைச் சுவர்களின் இளம் நீல நிறம் ஒரு சொப்பன லோகமாய் என்னை என்னவோ செய்துகொண்டிருந்தது. இதயத்தின் அகக் கோடியில் இன்னதென்று தெரியாத ஒரு மதிமயக்கம்.

‘சார்…’

நான் கண் திறந்து பார்த்தபோது நுரை ததும்பும் கோப்பை இருக்கும் ட்ரேயை என் முன்னே நீட்டியவாறு வலைக்குள் அவன் நிற்கிறான். அவன் உதட்டுக்குள் ஒரு குறுநகை.

தம்ளரைக் கையில் வாங்கிவிட்டு, ‘பாட்டிலையும் ஸோடாவையும் எல்லாம் இங்கேயே எடுத்துகிட்டு வா’ என்றேன் நான்.

அவன் எடுத்துக்கொண்டு வந்தான்.

‘இப்படி உட்காரு ஜெயிம்ஸ்…’

‘இல்லை சார்… இப்படியே நிக்கிறேன்…’

‘சும்மா உட்காரு…’

அவன் கையைப் பிடிச்சு என் அருகில் கட்டிலில் உட்கார வைக்கிறேன். அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க விடாமல் என் இமைகள் என் அனுமதியின்றி அடைந்து அடைந்து போய்க் கொண்டிருந்தன. என் கழுத்துக்குத் தலை ஒரு பாரமாகத் தோன்றியது.

‘சார்… உங்களை இந்த ஹோட்டலில் பாத்த அண்ணையிலிருந்தே ஒரு விஷயம் உங்ககிட்டெ கேக்கணுமுண்ணு இருக்கேன். கேக்கட்டுமா சார்?’

‘சும்மா கேளு…’

‘தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே…’

‘எதுக்கு நான் தப்பா நினைச்சுக்கணும்… நீ சும்மா கேளு ஜெயிம்ஸ்…’

சற்று நேரம் கூட தயங்கி விட்டு ஒருவித தடுமாற்றத்துடன் கேட்டான் அவன்.

‘இல்லை சார்… இங்கே வருகிறவங்க யாருமே இப்படி எப்போதும் ஒசேயடியாய் ஒரே பானத்தையே குடிச்சுக்கிட்டிருப்பதை நான் பாத்ததில்லை. ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொன்றை மாற்றி மாற்றி வாங்கிக் குடிக்கிறாங்க… நீங்க மட்டும் எப்பப்பார்த்தாலும் ஜின்னை மட்டுமே குடிச்சுகிட்டிருக்கீங்களே… இதுக்கு விசேஷக் காரணம் ஏதாவது உண்டுமா?’

எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டேயிருந்த எனக்கு அதை எப்படி நிறுத்துவது என்பது மறந்து போய்விட்டது போலிருந்தது. ஒருவாறு நிறுத்தி விட்டு. ‘அது உனக்குத் தெரிஞ்சுதான் தீரணுமா?’ என்று அவனிடம் கேட்டபோது அவன் முகத்தில் ஆவல் இன்னும் அதிகரிப்பது தெரிந்தது சிறிது சங்கோஜத்துடன், ‘சொல்லுங்களேன் சார்… நானும் அறிஞ்சுக்கிறேனே.’ என்றான் அவன். ‘சரி… சொல்லுதேன்… அதுக்கு முந்தி உங்கிட்டெ நான் ஒண்ணு கேட்கட்டுமா?’

அவன் விழிகள் என் விழிகளுடன் ஊடுருவின. ‘கேளுங்கள் சார்’ என்று அவன் கூறவில்லை. ஆனாலும் நானே கேட்டேன்.

‘ஆமா..நீ இந்த ஹோட்டலில் உள்ள லிக்கர்ஸில் எதையாவது ருசி பாத்திருக்கையா?’

‘இல்லை சார்…’

‘ஏன்?’

‘எனக்குப் பழக்கமில்லை சார்… அதோடு…’

‘அதோடு…?’

‘வேறெண்ணுமில்லே நான் முதல்லேயே சொன்னேனல்லவா சார்.. இங்கேயிருந்து நாங்க யாருமே எதையும் ஓசியில் சாப்பிடக்கூடாது… காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட எனக்கு வசதியும் இல்லை…’

என் கையிலிருந்த தம்ளரை நான் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதும் அடிக்கடி கீழிருந்து ஒரு சில நுரைகள் மேலேழும்பிக் கொண்டிருந்தன.

‘சரி … முதல்ல நீ இதைக் குடிச்சுப்பாரு…’ அவன் முகத்தில் இப்போது ஒரு கிலி படர்ந்தது.

‘இல்லை சார்… வேண்டாம்…எனக்கு ஒத்துக்காது’

‘ஜெயிம்ஸ் இதுதான் எனக்குப் பிடிக்காதது. நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்ல வேண்டாமா? அதுக்க முந்தி இதுக்க ருசி என்னாண்ணு நீ அறிஞ்சுக்க வேண்டாமா?’

‘இல்லை சார்… சார் பதில் சொல்லாவிட்டாலும் வேண்டாம். இதைக் குடிச்சா எனக்கு வாந்தி வந்து விடும்…’

‘யாரு சொன்ன! நானல்லவா இங்கே உன் பக்கத்தில் இருக்கேன். சும்மா குடி…’ என்று தம்ளரை அவன் உதட்டருகில் கொண்டு சென்றேன்.

‘சார்… ஆராவது…’

‘இது என் அறை. இப்போ இந்த அறைக்குள் என் அனுமதி இல்லாமல் சாட்சாத் உன் முதலாளி கூட வர முடியாது. கதவைச் சாற்றி தாப்பாள் போட்டிருக்கேயில்லே…?’

‘போட்டிருக்கேன் சார்…’

‘பிறகென்ன…!’

சிறிது நேரம் கூட பிகு பண்ணிவிட்டு முகத்தை அஷ்டகோணத்தில் கோணியவாறு அவன் தம்ளரைக் காலி பண்ணுவதைப் பார்க்க எனக்கு வேடிக்கையாக இருந்தது.

‘சரி… அடுத்தது எனக்குத் தா…’

உதட்டைத் துடைத்துவிட்டு, ‘கப்பைக் கழுவி விட்டு வாறேன் சார்…’ என்றவாறு எழுந்த அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தபின், ‘அதொண்ணும் வேண்டாம். இதிலேயே ஊற்று… இந்த ஜின்னைவிட உன் எச்சில் என்னை ஒண்ணும் செஞ்சுவிடாது..’ என்று நான் சொன்னபோது, மனதில்லா மனதுடன் அதே தம்ளரில் ஜின்னும், ஐஸ் துகள்களும், சோடாவும் கலந்து என்னிடம் நீட்டினான் அவன்.

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அதை அவன் கையிலிருந்து வாங்கி அருந்தியவாறு கேட்டேன். ‘சரி ஜின்னின் குசி எப்படியிருக்கு?’

‘எனக்கு ஒண்ணும் தெரியவில்லை சார்… மருந்து குடிப்பது போல் மடமடன்னு குடிச்சுட்டேன்.’

‘மணம்?’

‘எனக்குச் சொல்லத் தெரியவில்லை.’

‘சரி…கொஞ்சம் கூட குடிச்சுப் பாத்துவிட்டுச் சொல்லு பாப்போம்…’ என்றுவிட்டு என் கையிலிருந்த தம்ளரைக் காலிபண்ணி அவன் கையில் கொடுத்தேன்.

‘சார்…அதிகமா சாப்பிட்டா உடம்புக்கு..’ நான் சிரித்தேன்.

‘என்ன ஜெயிம்ஸ்… இப்படி அசட்டுத்தனமா கேக்கிறே… நீதானே இண்ணைக்கும் எண்ணைக்கும் எனக்கு இதை உன் கையாலெ தந்துகிட்டிருக்கே… எனக்கு இப்போ என்ன ஆயிட்டது?’

‘ஆனாலும்…’ என்றவாறு தம்ளரை நிரப்பினான். இப்போது அது நான் எச்சிலாக்கின தம்ளர் என்று அவன் சொல்லவில்லை என்பதை நான் கவனித்தேன்.

அது மட்டுமல்ல, இப்போது அதன் சுவையையும், மணத்தையும் அனுபவித்தவாறு அவன் குடிப்பது போலிருந்தது.

‘சரி…இப்போ சொல்லு பாப்போம்…’

சிறிது நேரம் குழம்பிவிட்டுத் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் ஒரு தொனியில் ‘எனக்குச் சொல்ல தெரியமாட்டேங்குது சார்…’ என்று ஒரு வித தடுமாற்றத்துடன் சொன்னான்.

‘சரி…அப்படீன்னா நானே சொல்லுதேன்… இந்த ஜின்னின் ஸ்வீட் ஸ்மெல் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்குமுண்ணு என் நண்பன் ஒரு மடையன் எங்கிட்ட முன்பொரு தடவை சொன்னான். அதைச் கேட்டுத்தான் எப்போ பாத்தாலும் இதை மட்டுமே குடிச்சு என்னை நான் ஏமாற்றிக்கிட்டிருக்கேன்…’

ஜெயிம்ஸ் இப்போது வாய்விட்டுச் சிரித்தான். நல்ல ஒரு டூத் பேஸ்ட் விளம்பரச் சிரிப்பு…

‘அப்படியா சார்… அது வாஸ்தவம் தானா?’ அவன் கேள்வியில் அபரிமிதமான ஒரு ஆவல் தொக்கி நின்றது.

‘அதுதான் எனக்கும் இதுவரை விளங்கவில்லை.’

என்னவோ நினைத்துக் கொண்டதுபோல அவன் திடீரென்று கேட்டான் ‘சார் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லையா?’

‘எண்ணைக்கோ ஆயிட்டுதே’

‘பிறகென்ன! அவுங்ககிட்டெயிருந்துமா தெரிஞ்சுக்க முடியல்லை?’

‘முடியல்லையே…’

‘ஏன் சார்?’

‘இந்த ஸ்மெல் எங்கிட்டெ இருந்து வராத காலத்திலிருந்தே அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்குண்ணு எனக்குத் தெரியும். பிறகு இதை அவகிட்டெப்போய் எப்படி டெஸ்ட் பண்ணிப்பாப்பது?’

தம்ளரை நாங்களிருவரும் பரஸ்பரம் கைமாற்றிக் கொண்டிருந்தோம். பாட்டில் தீர்ந்து கொண்டே. இருந்தது.

இப்போது அவன் கழுத்துக்கும் தலை ஒரு பாரமாய்ப் போய்விட்டது போலிருந்தது. இமைகளை ஒரே சீராய்த் திறந்து வைக்க முடியாமல் அவனும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான்.

‘சரி…சரி…அதெல்லாம் இருக்கட்டும் ஜெயிம்ஸ். உனக்கு இந்த ஸ்மெல் பிடிச்சிருக்கா?’

‘சார்…இந்த ஹோட்டலில் எல்லோருக்கும் இதை செர்வ் பண்ணிகிட்டிருப்பவன் நான். எனக்குப் பிடிச்சிருக்காம இருக்க முடியுமா?’

‘அதில்லை… இதைக் குடிச்ச என் ஸ்மெல்லோடு சேந்து வருகிற இதன் ஸ்மெல் உனக்குப் பிடிச்சிருக்கா?’

சிறிது நேரம் என்னவோ ஆலோசிக்கும் தோரணையில் என்னைப் பார்த்தவாறு மௌனமாக இருந்தான் அவன், பிறகு சரிவர தெளிவில்லாத வார்த்தைகளால் என்னிடம் கேட்டான்.

‘இதைக் குடிச்ச என் மணத்தோடுச் சேந்து வருகிற இதுக்க மணம் சாருக்குப் பிடிச்சிருக்கா சார்?’

‘பிடிச்சிருக்கு’

‘அப்போ சரி.. எனக்கும் பிடிச்சிருக்கு..’ என்றவாறு உட்கார்ந்திருக்க முடியாத ஒருவித தடுமாற்றத்துடன் கட்டிலில் என் அருகில் சாடிந்தான் அவன்.

– கசடதபற, செப்டம்பர் 1971.

நீல பத்மநாபன் நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *