ஜானகி
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகல் பொழுது.
பாடசாலை விட்டதும் ஓடோடி வந்து தெருவோரமாக நின்றாள் ஜானகி.
“ஏய்! சின்ன பிசாசே, தள்ளிப்போ!” இஞ்சின் சாரதியின் அலறல்.
பேய்க் கூச்சலில் அரண்டுபோன ஜானகி ஓடோடிச் சென்று பாடசாலைக்குள் நுழைந்து கொண்டாள்.
‘ரோட்டைத் தாண்டித்தான் வீட்டுக்குப் போகணும். அங்கேதான் தார் போடுறாங்களே.’
ஜானகி யோசனையோடு வீதியைப் பார்க்கிறாள், ‘கொஞ்ச தூரம் நடந்துபோனால் பெரிய ஸ்கூல் வரும். அங்கே கிராசிங் லைன் இருக்கு. லேசா ரோட்டைத் தாண்டி ஊட்டுக்குப் போவலாம்’ என எண்ணிய போதும் கால்கள் தயங்குகின்றன.
நேரம் ஓடுகிறது.
வீதியின் ஓரமாக மெதுவாகப் பாய்ந்து பயந்து நடக்கிறாள். அந்த ராட்சத இஞ்சின், அதை செலுத்துகின்ற பிசாசு டிரைவர், நினைக்கவே பயமாக இருக்கிறது.
சன நெரிசலும் வாகன போக்குவரத்துமாக ‘ஜே ஜே? வென வீதியெங்கும் பேரிரைச்சல். ஒரு பக்கம் தார் போடும் வேலையில் தொழிலாளர்கள் மும்முரம். இரு பெரும் இரும்பு உருளைகளை உருட்டிக்கொண்டு ‘கடகட’வென் வீதி பெருத்த சப்தமுடன் எஞ்சின் மேலும் கீழும் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அனற் பிழம்பென தகிக்கும் கோடை வெயில்.
வெறும் கால்களை பூமியில் வைக்க முடியவில்லை. சதையைப் பொசுக்குவது போல தகிப்பு. ஓடியும் பாய்ந்தும் குதித்தும் நடக்கிறாள்.
‘ஆ! என்ன சூடு! என்ன சூடு!’
பெரிய பள்ளிக்கூடம் தெரிகிறது. வெள்ளைப் புறாக்களென சிறுமிகள் குதித்துக் கும்மாளமடித்துக் கொண்டு குதூகலமாக ஓடி வருகிறார்கள்.
பஸ் நிலையத்திலும், வீதியோரமெங்கும் வெள்ளைப் புறாக்களின் கூட்டம். வெள்ளை வெளேரென்ற சீருடை, பச்சை வர்ண கழுத்துப் பட்டி, சப்பாத்து, அட்டா! எவ்வளவு அழகு.
தன்னைப் பார்த்துக் கொண்டாள். அழுக்கான உடை. வெள்ளை உடைதான் என்ற பொழுதும் பலமுறை துவைத்துத் துவைத்து உருவழிந்து, நிறமிழந்து சாம்பல் பூத்த நிறம். கால்களில் சப்பத்து இல்லை.
அவள் படிக்கும். பாடசாலையில் அதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. என்றாலுமென்ன வெறும் கால்களை வீதியில் வைக்க முடியவில்லையே. அப்படியல்லவா தகிக்கிறது.
பெரிய பாடசாலைச் சிறுமியரிடையே சலசலப்பு.
“ஏண்டி ரமணா, ஆப்ரிக்கா கொரங்கு பார்த்திருக்கியா நீ?”
“இல்லையே?”
“அதோ பார் ரோட்டோரத்துலே!”
பார்வைகள் ஜானகி மேல் ஈக்களென மொய்த்திட,
“அட! செருப்பு இல்லாம என்ன அழகா மார்ச் பண்றா!”
‘கொல்’லென்ற சிரிப்பொலி.
தலை சுற்றுகிறது. அவமானத்தால் உடல் கூனிக் குறுகிய பொழுதும் உதடுகளை அழுத்தமாகக் கடித்து பொறுத்துக் கொள்கிறாள்.
அனைத்துமே பாதையைக் கடக்கும்வரைதான். அப்புறம் அந்தக் குறுகலான பாதை வழியாக ‘குடுகுடுவென் ஓடிவிட்டால் நதிக்கரை வரும். அங்கேதான் அவள் குடிசை.
பாதையைக் கடக்க கடும் முயற்சி. ‘ஆ! ஆ…!’ தார் உருகிக் கிடக்கும் ஓரிடத்தில் கால் வைத்து விட்டாள். அட்டையென ஒட்டிக்கொண்டது. கொதிக்கும் தார் ‘சுர்ர்ர்ர்’ரென சதையை தீய்த்துக்கொண்டு ஊடுருவுகின்றது.
நெளிகின்ற புழுவான ஜானகி, சட்டென தாவிச் சென்று வீதியின் ஓரமாகக் குவிக்கப்பட்டுள்ள கடல் மணலில் குந்த, சூடேறிக் கிடக்கும் அது பிருஷ்ட பாகத்தை எரிக்கின்றது.
ஓ?…! எத்தகைய தமாஷான நாடகம். ‘கொல்’லென்ற பெரும் ஓசையுடன் கான்வென்ட் சிறுமியர் கைகொட்டி நகைக்கின்றார்கள்.
நதிக்கரை.
கடின இருள். மின்மினிகளின் ஒளித் துகள்களும், நுளம்புகளின் ரீங்கரிப்பும் கனகத்திற்கு வழித்துணைகள்.
ஜானகியின் அம்மா வேகமாக நடந்து கொண்டிருக்கிறாள்.
தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே கவனித்தாள். குடிசையில் குப்பிலாம்பின் மினுமினுப்பைக் காணவில்லை. ‘காத்துக்கு அணைஞ்சிருக்குமா? இல்லே மவளுக்கு என்னமாச்சும்…?’
பதட்ட அலைகள் நெஞ்சில் சுருட்டியடிக்க வேகமாக நடக்கிறாள்.
குடிசையை நெருங்க நெருங்க உயிர்த்துடிப்பு ‘திக் திக்’கென படபடப்புடன் அதிகரிக்கிறது.
குடிசை வாசலிலிருக்கும் சட்டி விளக்கின் சுடரலை காற்றில் படபடக்கும். அதன் மினுமினுப்பு கூட தெரியவில்லை. என்ன நடந்துவிட்டது?
திகிலடைந்த பட்சியின் கண்களாக கனகத்திடம் மிரட்சியின் நெளிவுகள்.
குடிசைக்குள்ளும் முகத்திலிடிக்கும் கனத்த இருள்.
‘ஜானு’
நடுங்கும் குரலில் அழைக்கிறாள்.
‘அம்மா’ என்ற பதில் இல்லை.
இருளிலிருந்து வேதனையின் முனகல்.
‘மகளே!’
வியர்வை முத்துக்கள் உடலெங்கும் முகிழ்த்து ‘மளமள’வென உதிர, நடுங்கும் கைகளும், கால்களுமாக அங்குமிங்கும் ஓடி நெருப்பெட்டியைத் தேடி குப்பி லாம்பை பற்ற வைத்துப் பார்க்கின்றபொழுது குழந்தை சுருண்டு படுத்துக் கிடப்பது தெரிகிறது.
ஜானகி சமர்த்துப் பெண். படிப்பில் ஆர்வமும் வீட்டு வேலைகளில் கவனமும் உள்ளவள். சோறு கூடச் சமைப்பாள். அதனைப் பாட்டிக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடம் போய்விடுவாள்.
மத்தியானப் பொழுதில் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய பின்னரும் வீட்டு வேலைகளைச் செய்வாள்.
இருட்டிய பின் குப்பிலாம்பையும் பற்ற வைத்து, தன் பாடப் புத்தகங்களில் மனம் லயிப்பாள்.
இன்று ஒரு வேலையும் செய்யாமல் அறுந்த வாழையாக அசந்து கிடக்கிறாளே!
வெயிலின் கொடூர வெம்மை வீதித் தாரை கொதிக்கச் செய்ய, தார் துணிக்கை பிஞ்சுப் பாதங்களில் ஒட்டிக்கொள்ள நீர்க் கொப்புளங்கள் பாம்புப் புற்றென எழுந்து நிற்கின்றன.
சுருண்டு கிடக்கும் மகளை கனகம் அணைத்துக் கொண்டபோது ஸ்கூலுக்குப் போவ மாட்டாளாம். சப்பாத்து வாங்க வேண்டுமாம். வெள்ள உடுப்பு வேண்டுமாம். என்னென்னவோ உளறல்களின் அணிவகுப்பு தொடர்கிறது. அவள் விழித்துக் கொண்டதும் ஓவென அலறி காலைத் தூக்கி அம்மாவுக்குக் காட்டுகிறாள். பிஞ்சுப் பாதங்களில் நீர்க்கொப்புளங்கள்.
கனகத்தின் கண்களில் நீர்மணிகள் திரள்கின்றன. பிள்ளைக்கு இனிமேல் ஸ்கூல் வேண்டாமென மனம் கலக்கத்துடன் தீர்மானிக்கின்றது. ‘கொதிக்கிற தார் கொழந்தை கால்களை எப்படி வேக வெச்சிருச்சி…’
அம்மா குழந்தையை அணைத்துக்கொண்டு ‘இனிமே ஸ்கூல் வேணாம்’ என்று சொன்னபொழுது ஜானகியின் மனத்தில் ஆனந்த வெள்ளம் பீறிடுகிறது.
குளிரடிக்கும் கருக்கல் பொழுது. கனகம் எழுந்து விட்டாள். நதிக்கரையோரமாக நடந்து சுள்ளிகளைப் பொறுக்கினாள்.
ஜானகியும் எழுந்துவந்து குந்திக் கொண்டாள். “ஏன்மா, இவ்வளவு சுருக்கா எழும்பிட்டே?”
“என்னம்மா செய்ய? நீ ஸ்கூலுக்குப் போகமாட்டே என்டதுக்காக நான் சும்மா ஊட்டுலே குந்திக் கொள்ள ஏலுமா? கட்டுடத்தை சுருக்கா கட்டி முடிக்கணுமாம். அதனாலே இனிமே காலம்பரையே வேலைக்குப் போய் ராவு வரைக்கும் வேலை செய்யணும்.’
ஜானகி அசையாமல் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சடசடவென எரியும் நெருப்பொளியில் அம்மாவின் முகம் தகதகக்கிறது. அந்த முகம் நடுங்குகின்றது.
“ஜானு, அந்தி நேரத்துலே சோத்தை கொஞ்சம் சுத்தி வேலை செய்யுற இடத்திக்கு கொண்டாந்திரம்மா.”
ஜானகி உற்சாகமாகத் தலையாட்டினாள். நண்பகல். வெயில் கொளுத்துகின்றது. சோற்றுப் பார்சலை சுற்றிக்கொண்டு அம்மாவுக்கு எடுத்துப் போனாள்.
அடேங்கப்பா, என்னா பெரிய கட்டிடம். குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியுள்ள மூங்கில்களில் வௌவால்களைப் போன்று தொங்கியவண்ணம் தொழிலாளர்கள் வேலை செய்வதை பிரமிப்புடன் பார்த்தாள்.
ஜானகி தலை நிமிர்ந்து கண்கள் உயரப் பார்க்கின்றன. சூரிய பிரகாசத்தில் அவை கூசுகின்றன.
சிமெந்து தாச்சியொன்றை சுமந்து செல்லும் அம்மாவை கண்கள் காண்கின்றன.
செருப்பில்லாத கால்களில் பழம் துணிகளைச் சுற்றி, கந்தலான புடவை அணிந்து, சுமக்க முடியாமல் நடந்து கொண்டிருக்கும் கனகம் மகளைக் கண்டாள். தாச்சிச்சட்டியை கீழிறக்கி மடமடவென ஓடி வருகிறாள்.
ஆ…!
அலறியவண்ணம் நிலத்தில் குந்துகிறாள். மணலில் நீட்டிக் கொண்டிருந்த ஆணியொன்று நறுக்கென காலினுள் புதைந்துவிட்டது.
ஜானகி அழுதுகொண்டே ஓடிவந்து அம்மா அருகில் குந்திக் கொண்டாள். கனகம் காலைச் சுற்றியுள்ள பழம் துணியை விருவிருவென கழற்றிவிட காலின் அடிபாகத்தைக் கண்டு குழந்தை விக்கித்துப் போனாள். சுண்ணாம்பையும் சிமிந்தியையும் மிதித்து மிதித்து பாளம் பாளமாக வெடித்துப் புண்ணாகிக் கிடக்கும் கால் சதை, கிழிந்து ஊடுருவித் தொங்கிக் கெண்டிருக்கும் ஆணி…
குழந்தை விக்கித்துப் போனாள்.
‘ஒரு பிடி சோற்றை எனக்குக் கொடுப்பதற்காக இந்த அம்மா எத்தகைய துன்பங்களை அநுபவிக்கிறாள்…’ ஜானுவின் கண்கள் வண்ணத்திப் பூச்சிகளென படபடக்க, கண்மணிகள் நீர்ப் புஷ்பங்களைச் சொரிகின்றன.
இப்பொழுதெல்லாம் ஜானகி வெள்ளை உடுப்புக்களுக்காகவோ, சப்பாத்துகளுக்காகவோ கண்கள் கலங்குவதில்லை. பாடசாலை போகிறாள்.
வெயில் சூடோ, கொதிக்கும் தாரோ அவளை ஒன்றும் செய்வதில்லை.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |