ஜானகி அம்மா




தெருவில் எல்லோரும்,அவரவர் வீட்டு வாசலில் நின்றபடி, ஒருவருக்கொருவர் சோகமாய் பேசிக்கொண்டனர். மாடியில் குடியிருப்போர் என்ன ஆச்சு… ஒன்னும் புரியலையே… என்ன பேசிக்கிறாங்க என குழம்பினார்கள். கடைக்கு வந்த கவிதாவுக்கு, ஒன்றுமே புரியவில்லை.
என்னப்பா தம்பி …என்ன எல்லாரும் ஏதோ பேசிக்கிறாங்களே. என்ன விஷயம்….? கவிதா கடைக்கார பையனிடம் கேட்டாள்.
ஒன்னும் இல்லக்கா.. அந்த ஜானகி அம்மாவுக்கு கொரானாவாம். மூச்சுத் திணறல் கொஞ்சம் அதிகம் ஆயிடுச்சாம். அதான் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.

ஐய்யய்யோ அப்படியா…. முருகா …நல்லபடியாக குணமாகி வீடு திரும்பி வரணும் தம்பி. ரொம்ப நல்லவங்க.
கேள்விப்பட்டவுடன்… கவிதாவிற்கு மனம் கனத்துப் போயிற்று.
வீட்டுக்கு வந்த கவிதா, தன் கணவரிடம் ,அந்த ஜானகி அம்மாவுக்கு கொரானாவாம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்களாம்.
ஓ…அப்படியா… அதான் , நான் வீட்டுக்கு வரும்போது , தெருவே வித்தியாசமா பட்டது. எல்லாரும் சோகமா வாசல்ல நின்டாங்களா…?
சரியாயிடும் . அவர்களுக்கு ஒன்னும் ஆகாது . அவர்களுக்கு வில் பவர் அதிகம். நமக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணி இருக்காங்க… அவ்வளவு பெரிய பதவியை விட்டுட்டு , விருப்ப ஓய்வு வாங்கிட்டு, எல்லாருக்கும் சேவை செய்வதை விரும்புறாங்க.
அவங்க இல்லன்னா…. நம்ம பையன் இந்த ஸ்கூல்ல சேர்ந்து இருக்கவே முடியாது.. உணர்ச்சிவசப்பட்டார் கவிதாவின் கணவர்.
ஜானகி, ஐ.ஏ.எஸ் என ஃபோர்டு கூட வீட்டிற்கு முன் இல்ல. அவங்க நம்ம தெருவில் குடிவந்தது….நாம செய்த அதிஷ்டம்.
ரஞ்சித் ஓடிவந்தான்… அம்மா… அம்மா… அந்த ஜானகி அம்மாவுக்கு கொரானாவாம். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்களாம். எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா.. நான் போயி முருகர் கிட்ட பிரார்த்தனை பண்ணப் போறேம்மா…!! அவங்களுக்கு சீக்கிரம் உடம்பு சரியாகனும்னு.
ஆமாமா… போ..ராஜா… போ… நல்ல வேண்டிக்க …ரஞ்சித்.
பெருமாளே…! அந்த அம்மா பத்திரமா வீடு திரும்பணும். அந்த அம்மாவால தான் இந்த தெருவே ,இவ்வளவு அழகா இருக்கு . மழை பெய்தா குண்டும் குழியுமாக ….நடக்கவே முடியாம இருந்தது.
அவங்களே பெட்டிஷன் ரெடி பண்ணி, எல்லார்கிட்டையும், கையெழுத்து வாங்கி மேயரைப் பார்த்து…. யாரு செய்வா …? இப்படி… அவங்க முயற்சியால்தான் புது ரோடு போட்டாங்க. என கவிதா பெருமிதம் கொண்டாள்.
அது மட்டுமா…! வாரத்துல ஒரு நாள் எல்லா பெண்களையும் ,ஒரு மணி நேரம் தெருவில் இறங்க வச்சாங்லே. எல்லாரும் சேர்ந்து வீட்டை கிளீன் பண்றது, மாதிரி தெருவ சுத்தப்படுத்திணோமே….! நம்ம தெருவே அண்ணாநகரில் ஒரு ரோல் மாடல் ஆயிருச்சு. இது அந்த அம்மாவால் தான் சாத்தியப்பட்டது. பூரித்துப் போனாள், பக்கத்து வீட்டு விமலா.
எல்லாக் கடைகளிலும், போய் நோட்டீஸ் ஒட்டினாங்களே. கடைக்கு வரும்போது துணிப்பை எடுத்துட்டு வரணும் என்று. பிளாஸ்டிக் குப்பையே இல்லாத ஒரே தெரு, நம்ம தெருவாத்தான் இருந்தது. கண்ணீருடன் கமலா.
விமலா… இத மறந்துட்ட… ஒரு நாள் நல்ல மழை பெய்து ஓய்ந்த உடன், அத்தனை மரக்கன்றுகளை அவர்களே வாங்கி, ஆள் விட்டு, குழிதோண்டி, நம்ம எல்லாரையும், மரம் நட வச்சாங்களே…! அன்னைக்கி நம்ம தெருவே திருவிழாக் கோலமாய் இருந்தது. கண்களை அகல விரித்தாள், அடுத்த வீட்டு ருக்மணி.
கவிதா என்னங்க, ஜானகி அம்மா பையனுக்கு போன் போடுங்க. நாம ஏதும் ஆஸ்பத்திரிக்கு போய், ஏதாவது உதவி செய்ய முடியுமானு கேட்போம். உடனே போன் பண்ணுங்க.. கவிதா கணவரை அவசரப்படுத்தினாள்.
நாலு நாளா… அந்த தெருவில் உள்ள எல்லா வீட்டிலேயும் இதே பேச்சு. தினமும் பூஜை அறையில் ,அரை மணி நேரமாவது ஜானகி அம்மா நலமோடு திரும்பிவர வேண்டிக்கொண்டார்கள்.
இந்த கொரானா ரெண்டாவது அலை… ரொம்ப மோசமா இருக்கு. முதல் அலைல யு.எஸ்ல நடந்ததை தொலைகாட்சியில் பார்த்தபோது, இப்படிமும் நடக்குமா..!? என திகிலா இருந்தது. இப்போ. இங்கேயே….! அப்படி.
அசோக் நகர்ல, காலேஜ் படிக்கிற தன் மகளை விட்டுட்டு, அம்மா அப்பா ரெண்டு பேரும் கொரானாவால் இறந்துட்டாங்களாம். மனசு என்னவோ செய்யுது. நினைத்து பார்க்கவே முடியல. எப்பதான் இந்த கொரானா போய் பழைய நிலைக்கு வருவோம். புலம்பி தீர்த்தாள் கவிதா.
அந்த தெருவில் உள்ள அனைவரும், ஒருநாள் பிளான் பண்ணி ஆன்லைனில், ஜானகி அம்மா நலம் பெற, கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
தினம் ஒரு குடும்பத்திலிருந்து, ஜானகி அம்மாவிற்கும், அவர் மகனிற்கும், சாப்பாடு சென்றது.
ஐந்தாவது நாள் மூச்சுத்திணறல் சரியாகி வெண்டிலேட்டர் எடுத்து, நார்மல் வார்டுக்கு ஜானகி அம்மா வந்துட்டதாக தகவல்.
அந்த தெரு முழுவதும் விசயம் பரவியது. எல்லோர் முகத்திலும் நிம்மதி பெருமூச்சு… மவராசி… நல்ல வேலை. கடவுள் கைவிடல. இன்னும் நமக்கு எவ்வளவு உதவி செய்யணும் அவுங்க…!
அவுங்க நல்ல மனசுக்கு…எதுவும் ஆகாது. கொரானாவே கால்ல விழுந்து கும்பிடும். ஆகாயத்தை பார்த்து வணங்கினாள் வசந்தி.
அந்த அம்மா…என்ன அமைதியான பேச்சு… 60 வயதில் என்ன கம்பிரம்… எப்போதும் சிரித்த முகம். அவங்க தெருவுல நடந்தாலே…அத்தனை பேரும் நலம் விசாரிப்பாங்க.
வணக்கம் சொல்கிறவர்களுக்கு, திருப்பி வணக்கம் சொல்லி அவங்களுக்கு மாளாது. எதிர் பிளாட், ராணியின் அங்கலாய்ப்பு.
ஏழாவது நாள், ஜானகி அம்மா….டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்கு வருவதாக தகவல். செய்தி காட்டுத்தீயாய்…தெரு முழுவதும் பரவியது. அனைவருக்கும் மகிழ்ச்சி.
அந்த மகிழ்ச்சி ஒரு மணிநேரம் மட்டுமே. சாப்பாடு கொடுத்து, திரும்பிய விமலாவின் கணவர், ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.
ஜானகிம்மாவின் மகனுக்கு கொரானாவாம்..வென்டிலேட்டர் கிடைக்கலையாம். மூச்சு தினறலால் ரொம்ப கஷ்டப்படுகிறானாம்.
இது கேள்விப்பட்டு….தெருவே மறுபடியும் சோகத்தில் மூழ்கியது.
வென்டிலேட்டர் கிடைக்குமா என பலரும் பலவாறு முயற்சி செய்தனர். ஆனால் பலன் இல்லை. அன்று மாலையே அந்த சோக செய்தி.
ஜீரணிக்க முடியாத சோகம். செய்வது அறியாது விக்கித்து நின்றனர்.
ஜானகி அம்மா பிழைத்தது நினைத்து முழுவதும் மகிழ முடியவில்லை..அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என அனைவரும் புலம்பினர்.
என்ன விமலா…இப்படி ஆயிற்றே..! என புலம்பினாள் கவிதா. கொரானா ஒரு சாபக்கேடு. யாரை விட்டு வைத்தது. விவேக் எப்படி நல்ல மனுஷன். பாடகர் பாலசந்தர் எப்படி பட்டவர்… இன்னும் நம்க்கு தெரியாத எத்தனை நல்ல மனிதர்கள். போய் சேர்ந்து விட்டார்களே…! என்ன செய்ய முடியும். விதி என ஆறுதல் படுத்தி கொள்வதை தவிர.
ஜானகி அம்மா வீடு திரும்பும் போது தெருமுனையிலேயே, காரை நிறுத்தி, அனைவரும் சேர்ந்து ஆரத்தி எடுக்க வேண்டும்…, என நினைத்த அனைவரும், செய்வதறியாது, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.