ஜம்பரும் வேஷ்டியும்




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை வேளையில் தையற் கடையில் பொழுதை ஓட்டுவது என் வழக்கமென்று தெரிந்திருக்கலாம். அன்றைத் தினமும் அப்படித்தான் செய்தேன். ஆனால் ஒரு வித்தியாசம். கச்சேரிகளுக்குப் போகும் நேரத்திலேயே கடைக்குப் போய்விட்டேன். வழக் கம்போல் தெருவிலே சட்டைகளும் முண்டாசுகளும் சேலைகளும் குடங்களும், சாமான்களும் மூட்டைகளும் சாரி வைத்தாற்போல் நகர்ந்துகொண்டிருந்தன, தையற்காரன் கடை சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து காலை நீட்டினேன். மனசு மனிதப் பிரவாகத்தையும் அதனுடைய கதியையும் பற்றி இரண்டு விதமான கதியையும் பற்றித்தான் அசை போட்டுக்கொண்டிருந்தது.
அதுவும் கொஞ்ச நேரந்தான். பிறகு எதிர்ப் புறத்து மாடியில் நடந்த நாடகத்தைக் காணச் சென்றுவிட்டது.
தையற்கடை கிழக்குப் பார்த்தது; மாடிவீடு மேற்குப் பார்த்தது. ஒட்டுக்கட்டடம் சொன்னேன். கொஞ்சம் நவீன மோஸ்தர்தான். என்று மாடியில் வடபுறத்துக் கோடியில் ஓர் அறை; தென்புறத்துக் கோடியில் ஓர் அறை. இரண்டுக்கும் தாழ்வாரம் உண்டு. தாழ்வாரத்திற்குத் தாழ்வாரம் ஒரு வரிசை கயிறு கட்டியிருந்தது. அதிலே இந்த வரிசைக் கிரமத்தில் துணிகள் காய்ந்துக், கொண்டிருந்தன; ட்ரௌஸர், பட்டுப் புடவை, பட்டுப் பாடி, பட்டு ஜம்பர். ஜம்பருக்கு அடுத்த தென்னண்டை முதற்கொண்டு இந்த வரிசைக் கிர மத்தில் காய்ந்துகொண்டிருந்தன: நாலு முழக் கதர், கதர்ப் புடைவை, கதர் ரவிக்கை. கதர் பாடி.
இரண்டு அறையிலும் இரண்டு பெண்கள் உட்கார்ந்து ஜன்னலண்டை நூல் பின்னிக்கொண்டிருந்தார்கள். கதர்ப் புடைவைக்குச் சொந்தக் காரி பின்னிக் கொண்டிருந்த நூல்கூடக் கதரா என்று சொல்ல முடியாது. ஒருத்தி இரண்டு வரிசை பின்னிவிட்டு ஜன்னல் கம்பிகளின் இடுக்கில் மூக்குத் தெரியும்படி வடவண்டை அறையைப் பார்ப்பாள். பிறகு பின்னத்தொடங்குவாள். உடனே சொல்லிவைத்தாற் போல் வடவண்டை அறையிலிருக்கும் பெண் ஜன்னல் கம்பிகளின் இடுக்கில் மூக்குத் தெரியும்படி தென்புறம் பார்ப்பாள். பிறகு அவள் பின்னத்தொடங்குவாள். இப்படியே சிறிது நேரத்திற்கு ஒரு தரம் நடந்தது. இரு பெண்களும் ஒருவருக்கொருவரைப்பார்த்துகொண்ட மாதிரி அவர்களிடையே நேசம் இருக்க முடியு மென்று காட்டவில்லை.
தென்றல் ஒன்று லேசாக அடித்தது. கொடியில் துணிகள் மெதுவாக ஊஞ்சலாடின. பட்டுப் புடவைக்காரி பின்னல் வேலையை வைத்துவிட்டுக் கொடிக் கயிற்றைப் பார்த்தாள். மறு கணத்தில் காற்று வலுத்தது. ஸர்க்கஸில் டிரெபீஸியம் ஆடுவது போல் துணிகள் கிழக்கும் மேற்கும் ஏறின. இரண்டு உருப்படிகளுக்கு மட்டும் ஏனோ வெறி யாட்டம். பட்டு ஐம்பர் வெறி முதிர்ந்து ஆடி ஓய்ந்தது போலக் கொடியிலிருந்து கீழே விழுந்தது. அடுத்த விநாடியில் கதர் வேஷ்டியும் ஆடிய பம்பரம் போல் ஓய்ந்து கீழே விழுந்தது. விழுந்த விதத்திலே பட்டு ஜம்பரில் பாதியும், ஸிமெண்டுத் தரையில் பாதியுமாக பரவி விழுந்தது.
பட்டுப் புடவைக்காரி எழுந்துவந்தாள். கொடியண்டை வந்து இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு துணிகளையெல்லாம் வெறிக்க வெறிக்கப் பார்த்தாள். எதிர் அறையை முறைத் துப் பார்த்தாள். கடைசியாக, கீழே விழுந்திருந்த ஜம்பர், கதர் வேஷ்டிமேல் கண்ணை நட்டாள், ஐந்து நிமிஷம் வைத்த கண்ணை எடுக்கவில்லை. பிறகு எழுந்து சுவரோரம் போய் ஒரு நாற்காலி யில் உட்கார்ந்து, தலையைக் கைகளில் சாய்த்துக் கொண்டாள். வெளிச்சமில்லாமல் இருட்டாக இருந் திருந்ததால் திருவிடைமருதூர் சோழப் பிரம்ம ஹத்திதான் அங்கே உட்கார்ந்திருக்கிறதோ என்ற தட்டுக்கெடல் இயற்கையாய் உண்டாகிவிடும்.
பட்டுப் புடைவைக்காரியை ஜன்னலண்டை காணாமையால், கதர்ப் புடைவைக்காரி நூலை வைத்து விட்டு அறைக்கு வெளியே வந்து பார்த்தாள். அவள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருப்பதையும், தரையில் ஐம்பரும் கதர்வேஷ்டியும் விழுந்திருப்பதையும் கண்டாள். உடனே தன் அறைக்குள் திரும்பிப் போய்விட்டாள்.
இப்படியே நேரம் சென்றது. மணி நாலரை ஆயிற்று.ட்ரௌஸரும் கோட்டும் போட்டுக் கொண்ட ஓர் இளைஞர், வரும்பொழுதே கழுத்துப் பட்டியை அவிழ்த்துக்கொண்டு மாடிக்குள் நுழைந்தார். சுவரருகில் உட்கார்ந்திருந்த பதுமை எழுந்திருக்கவில்லை. முகமும் உம்மென்றே இருந்தது.
‘என்ன, இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?’ கேள்விக்குப் பதில் வரவில்லை. ஆனால் வந்தது வேறு கேள்வி.
‘என்னை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’
எதிர்புறத்து அறையிலிருந்த ஸ்திரீ தன் கையில் இருந்த தையல் வேலையை ஜன்னலிலேயே வைத்துவிட்டு அறைக்கு உட்புறம் நகர்ந்தாள். அறைக்கு வெளியேயும் வரவில்லை. இது என்ன செப்பிடு வித்தைக்காரன் பிரம்புப் பெட்டியில் மறைந்துபோகும் பெண்ணைப் போல் காணோமே என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, கதவுக்குப் பின்னாலே புடைவைத் தலைப்பு ஆடிற்று. சரிதான்; கதர்ப் புடைவைக்காரி சுவர்க்கோழி ஆகி விட்டாள். சுவர்க்கோழி ஆகி இருக்க வேண்டியதில்லை என்று பிறகு தானே தெரிந்தது.
‘என்னை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’
‘சந்தேகம் என்ன? அன்பார்ந்த பத்தினி என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.’
‘ரொம்ப நல்ல காரியம். இந்த வீட்டைவிட்டு இப்பொழுதே ஜாகை மாற்றுகிறீர்களா? இல்லாவிட்டால் நான் போய்விடட்டுமா?’
மின்சாரம் தாக்கினாற் போல் அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியைச் சமாளிப்பதற்காகக் கைகள் கழுத்துப் பட்டியை ஒழுங்காக மடிக்கத் தொடங்கின.
‘என்ன? நான் போகட்டுமா?’
‘இதென்ன,தி டீரென்று தலையும் காலும் இல்லாமல் பேசினால் நான் புரிந்து கொள்வது எப்படி? எனக்கு ஜோஸியம் தெரியுமென்று நினைக்கிறாயா?’
‘அந்த மழுப்பல் எல்லாம் இப்பொழுது ஓன்றும் செல்லாது. கொண்டுவந்து குடிவைத்தீர்களே, அவர் யார்?’
‘ஏன், என் சிநேகிதன்தான். காலேஜில் சேர்ந்து படித்தோம். அவன் ஸம்ஸ்கிருதப் பகுதி; நான் வேதாந்தப் பகுதி.’
‘ரொம்ப அழகு! படிப்பு நன்றாக வந்திருக்கிறது! ஸம்ஸ்கிருதமும் வேதாந்தமும் சேர்ந்தால் கிடைக்கிறது இதுதானாக்கும்.’
‘இப்பொழுது என்ன கெட்டுவிட்டது?’
‘உங்கள் சிநேகிதர் ரொம்ப நல்லவராக இருக்கிறார்: ஜபம், தபம், விபூதி.’
‘ஆமாம், இருக்கவேண்டியது தானே?’
‘இருக்கட்டும், ஜபத்து ஊதுவத்தி வேண்டுமா என்ன?’
‘சில பேர் வைத்துக் கொள்வார்கள்.’
‘இந்தமாதிரி ஜபம், ஆபீஸுக்கு லீவ் எழுதிப் போட்டுவிட்டு, வேறு புருஷர்கள் வீட்டில் இல்லாத பொழுதுதான் செய்ய வேண்டுமென்று சாஸ்திர விதியோ?”
சுகமாக ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்பொழுது, ரயில் தண்டவாளத்தை விட்டு நிச்சயமாய் இறங்கிவிட்டதென்ற உணர்ச்சி ஏற்பட்டால் ரயில் பிரயாணிக்கு எப்படி இருக்கும்? அதைப் போன்ற தவிப்பு அவருக்கு ஏற்பட்டது.
‘நீ கேட்பது புரியவே இல்லை. சிநேகிதனைப் பற்றிக் கோணலாய் ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் அவனைப்பற்றி அப்பழுக்குச் சொல்ல முடியாது. லக்ஷ்மணர் என்றே சொல்லிவிடலாம். பெண்களென்றால் கால்களைத் தவிர அவன் கண்ணில் படவே படாதே?’
‘லக்ஷ்மணரா? அப்படியேதான். சீதையை வைத்திருந்த பர்ணசாலையை லக்ஷ்மணர் சுற்றிச் சுற்றி வந்தார் என்று கேட்டிருக்கிறோமே, அதே மாதிரி சுற்றிச் சுற்றி வருகிறார், நம் அறையை.’
‘அறை என்றால் சுற்ற முடியாதே?’
‘முடியும். ஒருவரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு மூடியிருந்த கதவை மெதுவாகத் தள்ளி ஒட்டகை மாதிரி கழுத்தை உள்ளே நீட்டிக் கண்களைச் சுற்றவிடுவது பிரதக்ஷிணத்திற்கு அதிகந்தானே!’
‘நான் உள்ளே இருக்கிறேனா என்று பார்த்திருப்பான்,’
‘கதவு மூடியிருந்தால் ஆள் உள்ளே இருக்க மாட்டார்கள் என்றுகூடத் தெரியாத குழந்தை! அது போகட்டும். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?’
‘எதற்கு?’
‘நான் இரண்டாங்கட்டில் வெந்நீர் அறையில் குளித்துக் கொண்டிருந்தேன். இவர் குறுக்கும் நெடுக்குமாக ரேழியில் போனார். கடைசியில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார் .நான் துண்டு கட்டிக் கொண்டிருந்தேன்.’
‘குளித்தால் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று எத்தனை தரம் சொல் லியிருக்கிறேன்?’
‘உங்கள் சிநேகிதர்தானே வீட்டில் இருக்கிறார், ஒன்றும் பிசகாய் இருக்காது என்ற நினைப்பிலே மனசு முன் ஜாக்கிரதையாக இருக்க மறந்து விடுகிறது. இவர் என் நிலைமையைப் பார்த்து விட்டுத் திரும்பிப் போயிருக்க வேண்டியது தானே? அப்படிச் செய்ய வில்லை. திறந்த வாசலண்டையே இரண்டு நிமிஷம் தயங்கித் தயங்கி நின்றார். அப்புறம் உள்ளே வந்து அவர் வீட்டு வெந்நீர்ப் பானையிலிருந்து ஒரு சொம்பு வெந்நீர் எடுத்துக் கொண்டு போனார். அது ஒரு பாசாங்கு, திருடன் போக்குக் காட்டுகிறாப்போல.’
‘தண்ணீருக்காக வந்திருப்பான். உன்னையும் பார்த்திருக்காமல் இருந்திருக்க முடியாது. வெந்நீர் எடுக்கலாமா கூடாதா என்று யோசித்திருப்பான். எடுத்துக் கொள்ளாமல் போனால் விபரீதமான அர்த்தம் உண்டாகிவிடுமே என்று பயந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். அவ்வளவுதான். இது தெரியாமல் காகூ என்று இட்டுக்கட்டுகிறாயே?’
‘இன்னும் நம்பிக்கை வரவில்லையா? இங்கே வாருங்கள்.’
அவர் கூடவே சென்றார். கயிற்றுக் கொடியண்டை அழைத்துப் போய்க் கீழே சுட்டிக் காட்டிவிட்டு, ‘இது என்ன?’ என்றாள்.
‘நீ என்ன கண்டாக்டரா? எனக்கு ஒன்றும் கண் இன்னும் கெடவில்லை. இது உன் ஐம்பர்?’
‘அது?’
‘கதர் வேஷ்டி.’
‘யாருடையது?’
‘சிநேகிதனுடையது தான்.’
‘இவ்வளவு பெரிய கொடியிலே அவருக்கு வேஷ்டி காயப்போட என் ஜம்பருக்கு அடுத்தாற் போலத்தான் இடம் கிடைக்கிறது. வேறு எங்கேயும் கொடியில் இடம் அகப்படவில்லை. அப்படித் தானே?’
‘அதனாலே குடி முழுகிப் போனதென்ன, தெரியவில்லையே’
‘சரிதான். இயற்பகை நாயனார் மாதிரி உங்கள் சிநேகிதரிடம் என்னை ஒப்படைக்கக் கூட நீங்கள் தயங்க மாட்டீர்கள் போல் இருக்கிறது. உங்களுக் கெல்லாம் சூக்ஷ்மம் தெரியாது.’
டிரௌஸர் போட்டிருந்தவருக்கு மேலே பேச முடியவில்லை. இளமையின் மின்சாரத்தை விழித் தெழச் செய்வதுதான் இதற்கு மாற்று என்று நினைத்து, கடகம் பூண்ட மனைவியின் கையைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே சொன்னார்.
‘அதெல்லாம் தெரியாமல் போகவில்லை. நாளைக்கே ஜாகை மாற்றி விடுவோம். நொந்து கொள்ளாமல் சமத்தாய்ப் போய்க் காபி கொண்டு வா. நீ இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாயே. இரண்டு பேரும் சாப்பிடலாம்.’
விவரிக்க முடியாத ஆழ்ந்த இன்ப உணர்ச்சியை உண்டாக்குவதில் ஸ்பரிசத்தைப் போன்ற புலன் வேறொன்றும் இல்லை. பெரியா நங்கையைக் கண்டு படம் ஒடுக்கும் நல்ல பாம்பு போல் அவள் சினம் தணிந்தது. வேகமாக தடதடவென்று மாடிப்படிகள் வழியே இறங்கினாள்.
மாடிப்படி கொஞ்சம் அகலக்குறைவு. தாராளமாக இருவர் போக முடியாது. மாடிப்படியில் பாதி தூரத்துக்குமேல் வழக்கம்போல் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, கதர் வேஷ்டிக்காரர் ஏறிவந்துகொண்டிருந்தார். தடதடவென்ற கால் சப்தம் கேட்டுத் தலைநிமிர்வதற்கும் பட்டுப் புடைவைக்காரி அவர் மீது ஓரளவு மோதிக்கொண்டு கடப்பதற்கும் சரியாக இருந்தது. அவரைக் கடந்த பிறகு பட்டுப் புடைவைக்காரி திரும்பிப் பார்த்து விட்டுக் கீழே இறங்கிப் போனாள். கதர் வேஷ்டிக்காரர் தலையைத் திருப்பவில்லை.
பழையபடி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பாக்கிப்படிகளில் ஏறினார். படிகளுக்கு முடிவிலுள்ள சதுரத்தில் கால் வைத்த பொழுது தான் தம் மனைவி அங்கே நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தார். அவளுடைய கண்களில் சந்தேகம் குடிகொண்டிருந்தது. கணவனைப் பார்த்ததும்கூட உள்ளம் மலர்ந்ததாக முகத்தில் தெரியவில்லை. கதர் வேஷ்டிக்காரர் ஆச்சர்யப்பட்டுக்கொண்டே மாடியில் தம் அறைக்குள் நுழைந்தார். கூடவே அவருடைய மற்றொரு நிழலைப்போல் அவள் பின் தொடர்ந்தாள். அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம்.
‘ஆமாம். நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ‘
‘ஆபீஸில் ஒரு தகராறு; அதைப்பற்றித்தான்.’
‘அந்தக் கதையைக் கேட்கவில்லை. இந்த வீட்டில் எதற்காகக் குடி வந்தீர்கள்?’
‘குடி இருப்பதற்காகத்தான்.’
‘யாரோ சிநேகிதர் இங்கே இருக்கிறார் என்றீர்களே, அவர் யார்?’
‘ஏன் அவன் தான்.’
‘அவனா, அவளா?’
கதர் வேஷ்டிக்காரர் திணறிப் போய்விட்டார். மிகவும் கோணலான கேள்வி! இருந்தாலும் எதிர்பாராத தாக்குதலை அமைதியாகச் சமாளிக்காவிட்டால் வேறு வழி ஏது?
‘இதென்ன அசட்டுக் கேள்வி? அவனும் நானும் காலேஜில் சேர்ந்தே வாசித்தோம். சேர்ந்தே பரீக்ஷை தேறினோம். எங்களை இரட்டையர்கள் என்றுகூடச் சொல்லுவார்கள்.’
‘அவராக இருக்க முடியாது. நேற்று நடந்தது என்ன தெரியுமா? மாடியில் நம்முடைய அறை வாசலில் ஒரு பொட்டலம் கதம்பம் வைத்திருந்தது. அதை யார் வைத்திருப்பார்கள்?’
‘உன் சிநேகிதி.’
‘அவள் வைக்கமாட்டாள். அவள் ரொம்ப ராங்கிக்காரி. ஒரு சின்னக் காரியம் செய்தால் கூட உலகறியத் தமுக்கடிக்கும் சுபாவம். புஷ்பம் கொடுக்க வந்தால் ரொம்பப் பெருமையாக அவளேகொண்டு வந்து கொடுத்திருப்பாள்.’
‘பின்?’
‘உங்கள் சினேகிதராய்த்தான் இருக்கும்.’
‘இருந்தாலும் என்ன?’
‘என்னவா? அது கதம்பம் அல்ல. கெட்ட எண்ணத்தின் பொட்டலம். ஒருவர். வீட்டுப் பெண் பிள்ளைக்கு மற்றொருவர் புஷ்பம் வாங்கிக் கொடுக்கலாமா’
‘சேச்சே! அப்படி அவனை நினைக்கக் கூடாது.’
‘பின் ஏன், நீங்கள் இங்கே இல்லை, நான் இருக்கிறேன் என்று தெரிந்தபோதிலும் தன் அறையிலிருந்து சீட்டி அடிக்கிறார்? அதனால்தான் அவனா அவளா என்றேன். இந்த மாதிரி ஆள் உங்கள் சினேகிதராக இருக்கமுடியாது. அவள் வந்து…என் கூட வாருங்கள் காட்டுகிறேன்.’
மனைவி அறையைவிட்டு வெளியே வந்தாள். இப்பொழுது தூக்கு மேடைக்குச் செல்லும் கைதி போல் கணவன் சென்றான். கொடியண்டைவந்து நின்றுகொண்டு, ‘இதைப் பார்த்தீர்களா?’ என்றாள்.
‘எதை?’
‘கண்ணை வைத்து இங்கே பாருங்கள்.’
குறிப்பிட்ட இடத்தைப்பார்த்தார். பட்டு ஜம்பரும் கதர் வேஷ்டியும் தரையில் கலந்து விழுந்திருந்தன.
‘காற்றில் விழுந்திருக்கும் இதில் என்ன அதிசயம்?’
‘கதர் வேஷ்டி யாருடையது?’
‘என்னுடையது.’
‘ஜம்பர்?’
‘அந்தப் பெண்ணுடையது.’
‘உங்கள் வேஷ்டிக்கு அருகில் அந்த ஜம்பரை ஏன் காயப்போடவேண்டும்?’
மாடிப்படி சதுரத்தில் அவள் பார்த்த பார்வை யின் பொருள் அப்பொழுது தான் தெரிந்தது.
‘நீ விபரீதமாக நினைத்துக்கொண்டிருக்கிறாய்.’
நானா? விபரீதமாகவா?
‘உங்களுக்கு ஆபீஸிலிருந்துவந்த களைப்பு. ஆபீஸ் சண்டை வேறு ஞாபகம். தர்மாஸ் பிளாஸ்கில் காபி வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டுச் சாவாதானமாய் யோசித்துச் சொல்லுங்கள்.’
இருவரும் தங்கள் அறைக்குள் சென்றார்கள். கதர் வேஷ்டிக்காரர் தர்மாஸ்பிளாஸ்கிலிருந்த காபியைச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து சாவதானமாகக் குடிக்க ஆரம்பித்தார். இரண்டு தம்ளர் ஆயின.
‘உங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு கீழே இறங்கினால் என்ன அர்த்தம்?’ என்றாள் விட்ட இடத்தில் ஆரம்பித்து.
பதில் சொல்லாமல் மற்றோரு கிண்ணத்தை வாய்க்கருகில் எடுத்துச் சென்றார்.
அப்பொழுதுதான் பட்டுப் புடவைக்காரி புகைகிற காபியுடன் தன் அறைக்குள் நுழைந்தாள். ட்ரௌஸர் போட்டவர் காபியை ஆற்றிச் சாப்பிட்டார்.
‘உங்கள் சினேகிதருக்காகச் சப்பைக் கட்டு கட்டிப் பேசினீர்களே, இப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?’
‘எனக்கு எப்படித் தெரியும்? நான் இங்கே இருக்கிறேன்.’
‘நான் மாடிப்படியில் இறங்கிப் போனேனா? அவர் மேலே வந்தார். என்மேல் இடித்துக் கொண்டே போனார். எப்படி இருக்கிறது சினேகிதம்?
‘நீ வருவதைப் பார்த்திருக்கமாட்டான்.’
‘சரி. கிட்ட வந்த பிறகு?’
‘வழிதான் அவ்வளவு குறுகலாச்சே.’
‘கீழே இறங்கக் கூடாதோ?’
‘இறங்கியிருக்கலாம். நீயாவது அவர் போகட்டும் என்று மேலே வந்திருக்கலாமே.’
‘எனக்குத் தோன்றவில்லை.’
‘அவனுக்கும் தோன்றி இருக்காது.’
‘இதோ எவ்வளவு ருஜுக் கொடுத்தும் உங்களுக்குப் புரியவில்லை. ஜாகை மாற்றுகிறீர்களா நான் அம்மா வீட்டுக்குப் போகட்டுமா?’
இந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்த பொழுது தான் கதர் வேஷ்டிக்காரர் மூன்றாவது கிண்ணத்தைக் குடித்துவிட்டுக் கீழே வைத்தார். மற்ற அறையில் நடந்த பேச்சு இவர்கள் காதில் விழாம லில்லை.
‘பார்த்தீர்களா பேச்சை?’
‘அந்தப் பெண் சொல்வது நியாயந்தானே? நான் கொஞ்சம் கீழே இறங்கி வழிவிட்டிருக்கலாம். தோன்றவில்லை.’
‘தோன்றுமா? தோன்றாமல் ஏதோ ஒன்று மனசை மறைத்துவிட்டது, அதுவே தான் வேஷ்டி கிட்ட ஜம்பரை காயப் போடும்படி சொல்லியிருக்கிறது. இதோ எனக்கு ஏற்கனவே காது குத்தியாகி விட்டது. மறுபடியும் தேவையில்லை. இவ்வளவு காட்சிகளை நான் கண்ட பிறகு உங்களால் குத்தவும் முடியாது. ஜாகை மாற்றுகிறீர்களா நான் அம்மா வீட்டுக்குப் போகட்டுமா?’
‘இது என்ன ரஸாபாஸம்! உன் இஷ்டப்படியே ஜாகை மாற்றிவிடுவோம்’ என்று இரு கணவர்களும் அவரவர் மனைவிகளிடம் சொல்லிக்கொண்டே அறைகளைவிட்டு வெளியேறினார்கள்.
இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கித் தெருத் திண்ணைக்கு வந்தார்கள். ஒரு நிமிஷம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் முகத்திலும் களங்கம் இல்லை.
‘என் மனைவி சொன்னது காதில் விழுந்ததா?’ என்றார் ட்ரௌஸர்காரர்.
‘விழுந்தது.’
‘என் மனைவி சொன்னது காதில் விழுந்ததா?’ என்றார் கதர் வேஷ்டிக்காரர்.
‘விழுந்தது’ என்றார் மற்றவர்.
‘என்ன செய்வோம்?”
‘ஜாகை மாற்றிவிடவேண்டியதுதான்.’
‘காரணம்?’
‘அவர்கள் சொல்வதற்காக அல்ல. காரணம் வேறு: நாம் சினேகிதர்கள் என்றால் நம் மனைவிகளும் சிநேகிதமாயிருந்தால்தானே?’
‘நானும் அதுதான் நினைத்தேன்.’
அதற்குள் கதர் வேஷ்டிக்காரருக்கு ஒரு நினைவு வந்தது. மாடிக்குப் போய்த் திரும்பினார்.
‘எங்கே போய் வந்தாய்?’
‘கலகத்துக்குக் காரணத்தை உள்ளே எடுத்து வைத்தேன்.’
‘நானுந்தான் மறந்துவிட்டேன்’ என்று ட்ரௌ ஸர்காரர் மாடிக்குப் போய், பட்டு ஜம்பரை மனைவியிடம் எடுத்துக் கொடுத்துவீட்டுத் திரும்பக் கீழே வந்தார்.
நண்பர்கள் சேர்ந்து கிளம்பினார்கள் அவரவர்களுக்கு வீடு பார்க்க.
அப்பொழுது அடித்த அலைகாற்றில் வெறும் கொடி ஊசலாடிற்று. இரண்டு பெண்களும் பழைய படி பின்னத் தொடங்கினார்கள்.
‘நல்ல வேஷ்டி! நல்ல ஜம்பர்!’ என்று முணு முணுத்தேன்.
பன்னிரண்டு மணிக்குப் படுத்த ஆளு மணி அஞ்சாச்சு. எழுந்திரு என்று புரட்டினான் தையற்காரன்.
– ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு: 1947, கஸ்தூரிப் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி.