ஜடம்




கிறீச்… கிறீச்…
எண்ணெய் காணாத ஊஞ்சல் சங்கிலி ஈனஸ்வரத்தில் முனகியது. மெல்ல ஆடிய ஊஞ்சல் சங்கிலியில் தலை சாய்த்து அமர்ந்து இருந்த சாரதா ஊஞ்சல் கொக்கிகளையே வெறித்தாள். இரண்டு கொக்கிகளிலும் பிணைக்கப்பட்ட நான்கு சங்கிலிகள். ஊஞ்சலோடு இணைக்கப்பட்ட விலங்குகளாக. எவ்வளவு நேரம் ஆடினாலும், எத்தனை வேகத்தில் ஆடினாலும் கூடத்தை விட்டு நகராத ஊஞ்சல். அந்தக்காலத் தேக்குப் பலகை. நான்கு புறமும் பித்தளைப் பூண்களும், குமிழ்களும் தங்கம் போல் தகதகக்கும் ஊஞ்சல். மெல்ல அசை போட்டாள்.

இந்த ஊஞ்சல் போலவே குடும்பம், குழந்தைகள், கடமை, சமூகம் என்று நான்கு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுத் தாலி என்ற தளையில் மாட்டப்பட்டதுதான் என் வாழ்வும். குடும்பத்தை விட்டு நகராத வாழ்க்கை ஓட்டம். புது மணப்பெண்ணாகக் கணவனுடன் ஊஞ்சலில் அமர்ந்த போது எத்தனை பரவசம். அப்போது வயது பதினெட்டு.
அந்தக்கால காதல் மன்னன் போல உருவம், சொந்த வீடு, ஒரே பிள்ளை, அரசு உத்தியோகம், யாரையும் வசியப்படுத்தும் பேச்சுத்திறன், தாயினும் மேலான மாமியார். தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்ற கர்வம் அவளுள்.
அவள் அதிர்ஷ்டசாலி இல்லை, துரதிருஷ்டசாலி என்பதை மணமான ஐந்து ஆண்டுகளிலேயே உணர்ந்ததும் அதிர்ச்சி. அதற்குள் கையிலும், வயிற்றிலுமாக இரண்டு பிள்ளைகள். சரவணன் தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் காதல் மன்னன் என்பதை அறிந்தது இரண்டாவது பிள்ளையை சுமக்கும் போதுதான். உறவு, உடன் பணியாற்றுபவள் என்று ஏராளமான பெண்களுடன் சகவாசம், குடும்ப செலவுக்கு பாதிப்பணம், மீதிப் பணம் அவனுடைய லீலைகளுக்கு. பிறந்த வீட்டில் ஓரளவு கொடுத்துத் தாங்கியதுடன் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து ஆளாக்கியும் விட்டனர். சமூக அந்தஸ்திற்காக மட்டுமே மனைவி குழந்தைகள். மற்றபடி அவர்கள் கொத்தடிமைகள் என்ற எதேச்சதிகார மனப்பான்மை அவனுள்.
எல்லாவற்றையும் மௌனமாக ஜீரணித்துத் கொண்டாள் குழந்தைகளுக்காக. மாமியாரும் போய்ச்சேர சரவணனுக்கு மிகவும் குளிர் விட்டுப் போயிற்று. கணவனது லீலைகளை அவள் காதுபடவே விமரிசிக்கும் உறவுகள், நட்புகள். அதற்கு பயந்தே வீட்டோடு முடங்க ஆரம்பித்தாள் சாரதா. இது எதற்காகவும் கவலைப்படாத சரவணன். ஒன்று விட்ட அத்தை பெண் சங்கரியுடன் அடிக்கும் கொட்டம். அப்பப்பா!
அவள் புருஷனுக்கு வெளிநாட்டில் வேலை. அது இருவருக்குமே வசதியாக போய் விட்டது. அவளைத் தேடி இவர் போவதும், இவரைத் தேடி அவள் வருவதும், நாள் கணக்கில் டேரா போட்டு சினிமா, பூங்கா, ஹோட்டல் என்று ஊர் சுற்றுவது. வக்கணையாக சாரதாவை ஆக்கிப் போடச் சொல்லி நொட்டை சொல்லிக் கொண்டே சாப்பிடுவது, கண்டித்த சாரதாவை ‘இஷ்டம் இருந்தால் இரு இல்லாவிட்டால் என் பிள்ளைகளை என்னிடம் விட்டு விட்டு, ஒப்பன் வீட்டுக்கு ஓடு’ என்ற பிரம்மாஸ்திரம் மூலம் மிரட்ட மௌனியாகி விட்டாள்.
ஆச்சு, ஆண்டுகள் ரெக்கைக் கட்டிக் கொண்டு ஓட, பிள்ளைகள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்று கை நிறையச் சம்பாதிக்க, பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர தனி மரமானாள் சாரதா. இதற்குள் சங்கரியின் ஒரே மகள் வேலை பார்த்த இடத்திலேயே காதல், ஊதல் என்று திசை மாறி விலக சங்கரி காட்டில் அடைமழை.
பெரியவனுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தை. சின்னவனுக்குப் போன வாரம் திருமணம். ஒரு வாரமாக விருந்து, வைபவம் எல்லாம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் நேற்று சென்னைக்கு மறுவீடு சென்று விட்டனர். அங்கிருந்த படியே சிங்கப்பூர் செல்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்கும் உத்யோகம், திருமணம் என்று எல்லாக் கடமைகளையும் கௌரவமாகச் செய்து முடித்தாகிவிட்டது. இனிமேல்…
நேற்று விருந்து முடிந்து அனைவரும் ஊர் சென்றபின் மிஞ்சியவள் சங்கரி மட்டுமே. கூடத்தில் அட்டகாசமாக சரவணனுடன் அரட்டைக் கச்சேரி. பக்க மேளமாக நொறுக்குத் தீனி, வெற்றிலை, பாக்கு. சாரதா சாமான்களை ஒழித்துப் போட்டு அடுப்பங்கரையைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
ஆரம்பித்தது சங்கரிதான். ‘ஏன் அத்தான் உனக்கு அடுத்த மாசம் அறுபது வயது முடியப் போவுதே, மணிவிழாவை திருக்கடையூரில் வை. அதுதான் விசேஷம்’ என முன்மொழிய, வழி மொழிந்தார் சரவணன். ‘சாரதா கிட்ட சொல்லிட்டியா’ என்று அவளே நக்கலாகக் கேட்டுச் சிரித்தாள் அட்டகாசமாக.
‘அந்த ஜடத்தை என்ன கேட்பது. தாலி கட்டக் கழுத்தை நீட்டுறது மட்டும் தான் அவள் வேலை’, என்று அலட்சியமாக சரவணன் கூற, கைதட்டி வரவேற்றாள் சங்கரி. எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டே பாத்திரங்களை வேலைக்காரியிடம் ஒழித்துப் போட்டுக் கொண்டு இருந்தாள். வேலைக்காரியின் கண்களில் தெரிவது அனுதாபமா? இல்லை அலட்சியமா? அனுமானிக்க இயலாமல் தடுமாறினாள். எல்லோருமே புறப்பட்டும் சங்கரி மட்டும் தங்கி விட்டாள்.
காலையில் அவளை பஸ் ஏற்றி விடச் சென்றவர் ஒன்பது மணி தாண்டியும் வரவில்லை. திருமண வேலையின் களைப்பு,. சங்கரியின் எக்களிப்பு எல்லாம் சேர்ந்து உடலும், உள்ளமும் சோர்ந்தது. எப்படா தலையைச் சாய்க்கலாம் என்று தவிப்பு.
ட்ரிங்ங்ங்…
அழைப்பு மணியின் அசுர அலறல். அவர்தான் இப்படி அழுத்தமாக மணியை இயக்குவது, அதிகாரத் தோரணையுடன். கதவைத் திறந்தாள்.
‘ஒன்பது மணிக்கே என்ன தூக்கம்? போனவன் அப்படியேவா போயிடுவேன்.’
அமிலமாக வந்து விழுந்த வார்த்தைகள். மௌனமாக டிபனை எடுத்து வைத்தாள்.
‘எனக்கு ஒரு இழவும் வேண்டாம். நீயே கொட்டிக் கொள். நாளைக்கு திருக்கடையூர் போகணும். எட்டு மணிக்கேப் புறப்படணும். சாப்பாடு வேண்டாம். வெந்நீர் போட்டு வெச்சாப் போதும்’ என்றார் உறுமலுடன்.
‘எதுக்குத் திருக்கடையூர்?’
‘என்ன நக்கலா? அறுபதாம் கல்யாணத்திற்கு அட்வான்ஸ் குடுக்கத்தான்?’
‘யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?’
‘ஏய் என்ன ஆச்சு உனக்கு? உனக்கும் எனக்கும் தான் கல்யாணம்’ என்று குரலை உயர்த்தினார்.
‘முதல் கல்யாணத்தின் அன்னியோன்னியத்தையும் புனிதத்தையும் புதுப்பிக்கத்தான் இரண்டாவதா அறுபதாம் கல்யாணம். அந்நியமாய் வாழற, இல்லறம் என்ற புனிதத்தைப் போற்றாது ஊருக்காக வாழற நமக்கு எதற்கு அறுபதாம் கல்யாணம்? உங்க சந்தோஷத்திற்காகவும் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கத்தானே இந்த ஏற்பாடு.
பார்க்கப் போனால் என்னிலும் உங்களுக்கு மேலானவள் சங்கரிதான்! அவள் கழுத்துல தாலி கட்டுங்க. சந்தோஷமா நானே முன்னே நின்று எல்லா வேலையும் செய்யுறேன். அவளும் எத்தனை நாள்தான் துணைவியாவே இருப்பா?’ என்று அமைதியாக அதேசமயம் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் சங்கரி.
கையை ஓங்கிப் பாய்ந்த சரவணன் மௌனியாய் உறைந்து நின்றார் ஜடமாக.