சொல் பேச்சு!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 2,225
புவனைப்பார்த்தாலே ‘இவன் நல்லவனே கிடையாது, பேராசைக்காரன், கெட்டவன், கம்பெனிக்கு விசுவாசமில்லாதவன், இவனை வேலையை விட்டுத்தூக்க வேண்டும்’ என நிகனுக்கு சமீபகாலமாக மனதில் தோன்றி அவன் மீது வெறுப்பை உண்டாக்கியிருந்தது.
இருவரும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேறு, வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். துறை ரீதியான தலைமைப்பொறுப்புகளில் வேறு, வேறு பக்கம் பணியாற்றுவதால் மாதம் ஒரு முறை முதலாளியைப்பார்க்க வரும் போது மட்டும் தலைமை அலுவலகத்தில் சந்திக்கும் சந்தர்ப்பம்.
இன்று முதலாளி வருவது தாமதமானதால் பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு நிகனை புவன் சாப்பிட அழைத்த போது மனம் சற்று தயங்கினாலும் அறிவு ‘போ’ என கூற புவனது காரிலேயே ஏறிக்கொண்டான்.
புவன் டிபன் ஆர்டர் செய்த போது “உங்களுக்கு சொன்னதே எனக்கும் சொல்லிடுங்க. இரண்டு பேரோட விருப்பமும் ஒன்னா இருக்கே.…?” வியந்தான் நிகன்.
“ஆமாம். எனக்கு இந்த ஹோட்டல் நெய் ரோஸ்ட்னா அலாதி பிரியம். அப்படியே ஒரு மெது வடை, பில்டர் காபி திருப்தியா இருக்கும்” சொல்லி முடித்த புவன் சர்வர் கொண்டு வந்து வைத்த வடையை முதலில் தேங்காய் சட்னியில் தொட்டு சுவைத்தான். நிகனும் அவ்வாறே செய்தான்.
அலுவலகம் மற்றும் வேலை சம்மந்தமாக இருவரும் வெகு நேரம் பேசினர். “கம்பெனி முதலாளிக்கு நாம லாபம் கொடுத்தால் தானே நமக்கு மாதமானா சம்பளமும், வருசமானா போனசும் கிடைக்கும். அதுக்காக நான் நேரம் பார்க்காம உழைக்கிறேன். கம்பெனி தேவைக்காக வாங்குகிற எந்த பொருளுக்கும் கமிஷன் வாங்கிற பழக்கமில்லை. அதனால மனசுக்கு நிம்மதி இருக்கு. கமிஷன் வாங்கியிருந்தா கொஞ்சம் காஸ்லியான டிரஸ், பிரீமியம் லெவல் கார் வாங்கியிருப்பேன், இதே ரோஸ்ட்ட ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டிருப்போம். ஆனா கண்டு பிடிச்சிட்டா என்ன பண்ணறதுன்னு மனசு நிறைய பயத்தோடயே வாழனம். இப்ப மடில கனமில்லை, வழில பயமில்லை” என்ற புவனை ஆச்சர்யமாகப்பார்த்தான் நிகன்.
புவனினின் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் கரண், ‘புவன் கமிஷன் வாங்கி குவிக்கிறார். சம அந்தஸ்தில் இருக்கும் நிகன் ஏன் வாங்காமல் இருக்கிறார்?’ என தன் உதவியாளர் தருணிடம் கேட்டதாக சொன்னதை வைத்து தானே புவன் மீது நிகனுக்கு வெறுப்பு வந்ததோடு, முதலாளியிடமும் ஜாடை மாடையாக எடுத்துச்சொல்லியிருந்தான். நல்ல வேலை நாம் சொன்னது இவனுக்கு தெரிந்திருந்தால் இப்போது சகஜமாக பேசுவானா? விசாரிக்காமல் தப்பு பண்ணி விட்டோமே….?’ சாப்பிடுவதை மறந்து வருந்தினான் நிகன்.
“ஏன் சாப்பிடறத விட்டிட்டு ஒரு மாதிரியா இருக்கீங்க? நீங்க முதலாளி கிட்ட என்னப்பத்தி சொன்னது எனக்குத்தெரியும். அதனால நான் கேட்காமலேயே இன்கிரிமெண்ட் போன மாசத்துல இருந்து எனக்கு அதிகமா போட்டுட்டாரு”
“எப்படி….?” அதிர்ச்சியுடன் வியர்வை வெளிப்படக்கேட்டான் நிகன்.
“நீங்க அவரு கிட்ட புவனுக்கு பணத்தோட தேவை கூட இருக்கும் போலிருக்குன்னு ஜாடை மாடையா சொன்னதா முதலாளி சொன்னார். அப்புறம் என்னோட குடும்ப நிலவரத்த ஆள் வெச்சு விசாரிச்சிருக்கார். என் பையனோட ஸ்கூல் பீஸ், என்னோட அம்மாவோட மெடிக்கல் பில், வீட்டு வாடகை கூடிப்போனத தெரிஞ்சிட்டு திடீர்னு சம்பளத்தக்கூட்டிக்கொடுத்து என்னை திக்கு முக்காட வெச்சுட்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நம்ம கஷ்டத்த யாரு மூலமா நிகன் தெரிஞ்சிருப்பாருன்னு யோசிச்சுப்பார்த்தேன். பிடி படல. உங்களை மனசார வாழ்த்திட்டேன். உங்களை போன்றவங்க நட்பு கிடைக்க நான் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கனம்” என புவன் கூறிய போது நிம்மதிப்பெரு மூச்சு விட்டான் நிகன்.
இவர்களிருவரும் பேசியதை பக்கத்து டேபிளில் அமர்ந்து கொண்டு கேட்ட நிகனின் உதவியாளர் தருணுக்கு பக்கென்றது. ‘தனது பெயர் கெட்டு விடுமோ? வேலை போய்விடுமோ?’ என பயந்தான்.
‘புவன் கமிஷன் வாங்குவதாகச்சொன்னால் தன் சொல் பேச்சை நம்பி நிகனும் கமிஷன் வாங்குவார். நிகன் வாங்கினால் உதவியாளர் எனும் வகையில் தனக்கும் பங்கு கிடைக்கும் என கற்பனையாக சொல்லப்போக, அதை அப்படியே நம்பி கம்பெனி முதலாளியிடம் நிகன் சொல்ல, அவரோ ‘கமிஷன் வாங்கியதாகச்சொல்லி வேலையைப்பிடுங்கினால் புவனைப்போல ஒரு நல்ல திறமையான நிர்வாகி வேறு ஒருவன் நமக்கு கிடைக்கமாட்டான்’ என நினைத்து, கமிஷன் வாங்கிடாமல் தடுக்க மாற்று வழி சம்பள உயர்வுதான் எனக்கருதி, சம்பளத்தை அதிகரித்ததால் நிகனுக்கும் புவனிடம் பெயர் கெடாமல் போனது. உண்மையை முதலாளி கூறி வேலையை பறித்திருந்தால் முதலில் நிகன் தன் வேலையைத்தூக்கியிருப்பார். முதலாளியின் சாணக்யத்தனம் தன்னைக்காப்பாற்றியதாக நினைத்து முதலாளிக்கு மானசீகமாக நன்றி சொன்னான் தருண்.