சொல்ல மறந்த கதை!
“இன்னிக்கு காக்கா கதை சொல்வோமா?
“ஒ சொல்லு”
“நா சொல்ல மாட்டேன்”
“நாந்தான் சொல்லணுமா?”
“ஆமா”
“ஒரு காக்கா வந்து…”
“ஊஹூம், முதலேந்து சொல்லணும்”
“முதல்ல வந்து …”
“ஆரம்பம் மறந்து போச்சா?”
“ஆமா”
“ஒரு ஊர்ல ஒரு பாட்டி வட பண்ணி கூடல வச்சிருந்தாளாம்”. அப்புறம்?
“காக்கா வந்து வடய எடுத்ததாம்”
“Very good!”
“Correct ஆ”
“ம்ம் …அப்புறம்?”
“வடய எடுத்து கீழ போட்டுது…சரியா. . .?”
“முதல்ல எங்க உக்காந்தது..? அத சொல்ல வேண்டாமா ..?”
“மரத்துலதான்!”
வடய சாப்பிட்டுதா?”
“ஆமா!…இல்ல…இல்ல…!”
“ஆமாமா….இல்லயா?”
“இல்ல…! ஒரு குரங்கு வந்ததோ?”
“குரங்கா? நல்லா யோசிச்சு சொல்லணும்”
“நரின்னு நினைக்கிறேன்”
“Excellent!”
“நரி வடய தூக்கிண்டு ஓடியே போச்சு”
“அதுக்கு முன்னாடி என்ன நடந்தது? ”
“இரு யோசிச்சு பாக்கறேன்…”
“எப்படி வட கீழ விழுந்தது?”
“ஓ அத சொல்லலியா?
…
“காக்கா தான் பாடித்தே!”
“அத சரியா சொல்ல வேண்டாமா?”
“Sorry… மறந்து, மறந்து போறதும்மா!?”
…..
இதற்கு மேல் என்னால் அம்மாவிடம் பேச முடியல. கண்ணில நீர் மறைக்க அம்மா கையை கெட்டியாக பிடிச்சுக்கறேன்…
மனசு ரொம்ப பாரமா இருக்கு. நீயும் ஒரு குழந்தையாய்ட்டயா?
அம்மா எவ்வளவு கதைகள் எங்களுக்கு சொல்லியிருப்ப! ஒரு நாள் கூட கத கேக்காம தூங்கியிருப்போமா? ராமாயணம், மகாபாரதம், பிரகலாதன், துருவன், தெனாலிராமன்…
இன்னும் எத்தனை கதைகள்? இந்த அம்மாக்கு மட்டும் எப்படி இத்தனை கதை தெரியும்? இத்தனைக்கும் அம்மா அதிகம் படித்து நான் பார்த்தில்லை! ஒரு காக்கா..நரி..கதை சொல்ல இவ்வளவு தவிக்கிறாயே..!
எங்கிருந்து வந்தது இந்த மறதி? ஒரு நண்டு மாதிரி மூளையில் புகுந்து கொண்டு ஞாபக சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து எடுக்கிறதே! ஒரு நாள் என்னையும் மறந்து விடுவாயா? இதற்கு மேல் நினைக்க தைரியமில்லை!