சொல்லோடு என் உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2025
பார்வையிட்டோர்: 375 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் கட்டுரையில் நீங்கள் காணப்போவது என்னுடைய அனுபவத்தின் மூலம் (கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேல்) சொற்களுக்கும் எனக்கும் கண்ட சொந்த உறவு பற்றிய விஷயங்கள், அவைகளை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறேன். இந்த உறவில் என் கண்டுபிடிப்புக் கள், நான் தேர்ந்த, தெளிந்த முடிவுகள், அனுமானங்கள் அனைத்தும் என்னுடைய சொந்த முடிவுகள் அனுமானங் கள், அவைகளிலிருந்து பொதுத்தன்மையை (Generalisation) இழை பிரிக்கவோ, இது இது இப்படித்தான் என்று விதி களையோ ஏற்ப்படுத்த எவ்வளவோ முயன்று பார்த்தும் இயலாதவனாக இருக்கிறேன் என முன்னாடி தெரிவித்துக் கொள்கிறேன். ஏதேனும் ஒரு இலக்கணத்துள் இவை அடங்கித்தான் இருக்கும். அல்லது இனிமேல் அடங்கலாம். அல்லது இலக்கணம் கண்டுபிடிக்கப்படலாம். அதற்குரிய இலக்கணம் இலாது எதுவும் வெளிப்படமுடியாது. ஆனால் ந்த இலக்கணத்தின் பெயர் எனக்குத் தெரியாது. என் அனுபவத்தை உங்கள் முன்னால் வைக்கிறேன். பிறகு அவரவர் பாதிப்பு, மனப்போக்கு, சாமர்த்தியத்துக்கு ஏற்றவாறு இதை இழுத்துக்கொள்ளட்டும். அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி. 

சொற்கள் என்று சொல்லும் இந்த சந்தர்ப்பத்தில் என்னால் சொற்களை வெறும் சொற்களாக நோக்க முடியவில்லை. சொற்கள் பாஷையின் ஆக்கம், கருவி என்கிற கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன். பாஷையின் தாரம் Communication. எண்ணமாக இருக்கும் விஷயம், எதிராளியின் மனதில் போய்க் கவ்வவேண்டும். அதுதானே! கண்ணோடு கண்ணோக்கின் வாய்ச் சொல் எப்பயனுமில என்கிற அந்த கடாக்ஷத்தை Communication இன் உன்னதக் கட்டத்தை நோக்கிச் சொற்கள் செல்லவேண்டும் என்கிற அந்த நிலையையும் உள் அடக்கித்தான் என் சொற்களைப் பார்க்கிறேன். இதுவும் கவனத்தில் இருத்தல் வேண்டும். 

சொற்களை அவைகளின் நன்னூல் இலக்கணம் பிறழாத படி அவைகளின் ‘க்’ அன்னா ‘ச் அன்னா ரவன்னா பிசகாமல் அகராதியில் அவைகளின் தனித்தனிக் கொள்ளை அர்த்த ஜாபிதாவுடன் பார்க்கையில் எனக்கு அவை “சப் பென்று இருக்கின்றன. ஒரு dictionaryயில் அதாவது Thesaurus இலிருந்தோ சந்தர்ப்பத்துக்கேற்ற சொல்லையோ வாக்கியத்தையோ எடுத்துக் கோர்த்துக்கொள்வது எனக்குப் பொருந்தவில்லை. ரொம்பவும் செயற்கையாக இருக்கிறது. ஆனால் சந்தர்ப்பத்தில் அது அது அதனதன் இடத்தில் அமர்ந்ததும் உயிர் பெறுகையில், அப்பப்பா! 

தமிழ் மட்டும் அல்ல. communicationகாக நான் பயன் படுத்தும் பாஷையில் தூயதாகவோ, கலப்படமாகவோ, இறக்குமதியாகவோ சேர்ந்த பிறமொழிச் சொற்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். 

குந்துமணிகள் பூமியில் பொடிக் கற்களுடன் சேர்ந்து றைந்து கிடக்கின்றன. ஒருபக்கம் சிவப்பு, ஒருபக்கம் கறுப்பு, இரண்டையெடுத்து மண் பிள்ளையார் விழிகளில் பதித்ததும், பிள்ளையார் பார்வையில் என்ன உயிர்! என்ன உக்கிரம்! சிவந்த விளிம்பில் கறுவிழியாக குந்துமணி மாறி விடுகிறது. என்ன தத்ரூபம்! அப்போது தோன்றுகிறது. அந்தக் குந்துமணி இல்லாமல் பிள்ளையார் இல்லை ஆனால் பிள்ளையாரில்லாவிடில் குந்து மணிக்குப் பலனுமில்லை பயனுமில்லை. பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள உறவு இதுபோல்தான் என்று சொல்லலாம். ஆகவே சொற்கள் வெறும் உமியாகிவிடுவதோ, கத்தியை இட்ட உறையாக மாறுவதோ, சொற்களைப் பயன்படுத்துவதை – இல்லை மாற்றிக்கொள்கிறேன். ப்ரயோகம் செய்வதைப் பொறுத்தது. உல்மேல் சதைபோலும், பொருள்மேல் படர்ந்து கொண்டு பொருளை அடக்கிய சொல்: பொருளில் அடக்கிய சொல், அழகு கொடுத்துக்கொண்டு, அர்த்தம் கொடுத்துக் கொண்டு வளர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கும் சொல்… (‘என் சொற்கள்’ என்கிறேன். சொற்கள் என் ப்ரத்யேக சொத்து இல்லை என்று அறியேனா?) அப்படியும் நான் சொல்வதில் உண்மை உண்டு. என் பரம்பரையில் தமிழ்மணம் உண்டு. என் பாட்டனார் தமிழ்ப் பண்டிதர். வரகவி. அவருக்குப் பதினாறு வயதில் பிள்ளையார் அவர் வாயில் கற்கண்டு போட்ட மாதிரி கனவு கண்டாராம். விழித்ததும் பாட ஆரம்பித்துவிட்டார். அவருடைய தங்கை. அவளே என் தாயைப் பெற்ற பாட்டி; நன்னூல், நைடதம் பாடம் பண்ணியவள். தன் பாட்டுக்கள் அமைந்திருக்கும் இலக்கணம் பற்றி அண்ணன் தங்கையிடம் கேட்டுத் தெளிந்து கொள் வாராம். என் பாட்டனாரின் உடன் பிறந்தோர் எழுவரும் கம்பராமாயனத்தை அலசு அலசு என்று அலசி, மேற் கோள்கள் அதிலிருந்த எடுத்துக்காட்டி விபரீதமான எதிர் வாதங்கள் பேசுவார்களாம். 

அவர்களுக்கும் முன்னால் என் கொள்ளுப்பாட்டி – என் பாட்டனாரின் தாயாரிடம் ஒரு மண்டலம் எங்கள் குல் தெய்வம் அம்பாள் விளையாடினாளாம்.எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியின் வாயினின்று திடீரென வேதம், வியாகர்ணம், தர்க்கம். மீமாம்ஸம், தத்துவம் புறப்பட்டனவாம். கற்றறிந்த பண்டிதர்கள் வீட்டுக்கு வந்து வியப்புறுவதுடன் விளக்கங்களைக் கேட்டு அறிந்து போவார் களாம். அறுபது வருடங்கள் அவளும் அவள் கணவரும் ஒருநாள் தவறாது கோயிலுக்குப் போய் அர்த்தஜாம தரிஸனம் கண்ட பின்னரே உண்டனர் எனும் பழக்கத்தின் விளைவு! 

அவர்கள் வழியில் வந்த பிரசாதம் நான். ஆகையால் என் சொற்கள், என் சொற்களுடன் என் சொந்தத்தின் நியாயத்தைச் சொல்கிறேன். தவிர, Words in creative process எனும் தலைப்பின் அடிப்படையில் இந்தப் பீடிகை தேவைப்படுகிறது. இந்தக் கட்டுரையின் விஷயமும் இந்த ரீதியில் சற்று தனிப்பட்ட முறையில் அமைந்திருப்பின், அதற்கேற்றபடி உங்கள் நோக்கையும் Condition பண்ணு கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்தே அதாவது 1937/38- எனக்கு வயது 19/20 இருக்கும்– எனக்குச் சுபாவ மாகவே என்னை அறியாமலே சொற்களைத் தேடும் ஆர்வம் இருந்தது என்று இப்போது உணர்கிறேன். தேடுவது என்றால் Dictionary இல் அல்ல. பொதுவாக என் உட்புலன், ஓசைகளை, என்னுடைய அவ்வப்போதைய சூழ்நிலையின் சைகளைப் பிறர் வாயினின்று வரும் வார்த்தைகளின் தனித்தன்மையை – ஒட்டுக் கேட்க, ஒட்டுப் பார்க்க ஆரம் பித்துவிட்டது. அதை வெட்கம்விட்டே சொல்கிறேன். Creative Processஇல் புலன் மாறாட்டம் எனக்கு ஆச்சரிய மில்லை. செவி பார்க்கும். கண் கேட்கும். 

பாதங்களடியில் மனியாங்கற்களின் சரக் சரக்- 

மரங்களில் இலைகளினூடே காற்றின் பெருமூச்சு- 

அந்திவேளையில், 

இருள் படுதாவின் 

நக்ஷத்திரங்கள் ஜரிகைக் கட்டிய இருள் படுதாவின் படபடப்பு – 

கடற்கரையில், ஓடத்தினடியில், அலைமோதிப் பின் வாங்குகையில்-

கரையில் விட்டுச் சென்று கண்சிமிட்டும் அற்புதமான நீலநுரைக் கொப்புள் ஒளிமின்கள்- 

சில சமயங்களில் கிராமத்தில் ஒளியினாலேயே செண்டு கட்டினாற்போல் கருவேல மரத்தின்மேல் நெருக்கமாய்ப் படர்ந்த மின்மினிப் பூச்சுக் கூட்டங்கள், கிசுகிசுவென்று ஏதோ ரஹஸ்யங்கள், சப்தங்கள் – 

செம்பருத்திச் செடியடியில் சலசலப்பு- 

நள்ளிரவில் தாம்புக்கயிறு சரிந்து கிணற்றுள் விழும் 

வாளியின் ‘தடால்’ 

திடுதிடுவென்று யாரோ ஓடும் சப்தம், அல்லது 

அதுபோன்ற பிரமை, 

என்னைப் பொறுத்தவரை, (கேட்பது மட்டுமல்ல, புலன்கள் உணர்வது அனைத்தும் சொற்கள்தான் Communi cation -இன் அத்தனை விதங்கள். உருவங்கள்) 

இதுதவிர, அல்லது இதுவே காரணமாக, திடீர் திடீரென என்னில் காரணம் தெரியா ஒரு மட்டற்ற மகிழ்ச்சி; அடுத்து இனம்தெரியா துக்கம், சோகம், ஒரு ஏக்கம். 

அல்லது 

உற்சாகத்தின் துளும்பல் தாங்காமல் ஒரு கத்தல் கத்தினாலென்ன? என்று தோன்றும் வெறி… இவைகளும் சொற்களே. 

சொல் எனும் வடிகால் 

இப்போது தெரிகிறது- The Creative Process is Working நான் இயற்கையின் சிருஷ்டி. என் ரத்த ஒட்டம் நரம்பு பூர்வமாக, என்னுள் உயிர் சக்தி தன் வியாபகத்துக்குத் தவிக்கும் தவிப்பை உணர்கிறது. இந்த அவஸ்தையைப் பெரியவர்கள் வயதுக்கோளாறு என்று புத்திமதி சொல்லி அடக்குவார்கள் அதட்டுவார்கள். அவர்கள் குறிப்பது கண்டிப்பது பால் உணர்வின் விழிப்பு. இதை அறவே மறுப் பதற்கும் இல்லை. இந்த விவாத ரீதியில் சொற்களுக்குப் பால்தன்மை உண்டு என்ற கருத்தை உங்கள் முன் வைக் கிறேன். words in creative process என் கையில் இந்தக் கூற்று தகும் அல்லவா? 

மனோத்தத்துவ ஆராய்ச்சியின் ஆரம்பம், முடிவு எல்லாமே,நானாக அறிந்தவரை, பிற நிபுணர்கள் டாக்டர் கள் சொல்லக் கேட்டவரை – Egoவின் expression என்கிற சூத்திரத்தின் விரிவுதான். வெள்ளைக் காகிதத்தைக் கறுப்புக் காகிதமாக ஆக்குவது உள்பட முக்கியமாக அதுவாக. 

லா.ச. ரா நிறைய வடமொழிச் சொற்களை உபயோகப் படுத்துகிறார் என்று என்மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு அதிலும் பாண்டித்யமான சொற்கள்-! 

படு உண்மையாகச் சொல்கிறேன் – சத்யம் விடுவதற்கு அஞ்சுகிறேன் – வடமொழியென்று ஒரு பதம்கூட படித்து அறியேன். ஒரு எழுத்து எழுதினதில்லை தமிழ் எழுத்தில் தமிழ் உச்சரிப்பில் எல்லோரிடமும் சகஜமாக நடமாடும் பிரயோகங்கள் தான் என்னிடமும் உண்டு. அஸாதாரண வார்த்தைகள் இருப்பின், பேச்சுமுறையில் புராணிகர் கதை சொல்லுகையில் அவரிடமிருந்து உதிர்ந்து மனதில் வைத்துக்கொண்ட வார்த்தைகள் – இம்மட்டுத்தான் என் வடமொழி ஞானம். அப்படியும் கதை கேட்டு 25,30 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. எல்லாம் பழைய ஞாபகத்தில் ஊறிப்போய், இடம், பொருளுக்கு ஏற்ற இடத்தில் தாமாக வந்துவிடுவதை நான் பதறி ரப்பர் போட்டு அழிப்ப தில்லை. இருந்துவிட்டுப் போகட்டுமே!அதனுடைய இடம் அது இல்லாது அங்கு அது விழவில்லை. என்னுடைய சொற் களில் என் குறிக்கோள் பாஷை Communicationதான்- மொழி அல்ல. 

இந்த Communication ஜாதி, இனம், இடம் யாவருக்கும் அப்பாற்பட்டது. சிருஷ்டியின் மூலமூர்க்கத்தில் உண்டானது ஓசை பிறந்ததும் அதனின்று பிரிந்தது வார்த்தைகள் அல்ல. சொல்தான் பிறந்தது. சொல் வேறு, வார்த்தை வேறு. சொல் என்பது நான், என் தன்மை, என் பொருள், என் தேடல், என் ஆரம்பம், என் முடிவு, அதற்கும் அப்பால் என் மறுபிறப்பு, எண்ணற்ற பிறவிகள் மூலம் புதுப்பிப்பு. ஆதிமகனும் ஆதிமகளும் ஒருவரையொருவர் கண்டு, ஒருவரோடொருவர் பேசமுயன்ற அந்தப் புனித நிலையில் அவர்கள் கண்ட முதல் சொல்லின் தரிசனத்தை. அனுமானத்தில் கண்டு அஞ்சுகிறேன். இந்த சமயத்தில், எப்பவோ ¢ இலக்கியத்தில் கொச்சை” என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில், ஒரு சிறு பகுதி- சில வார்த்தை. கள் அப்பட்டமாக அவைகளே அல்ல – அவைகளின் சாராம்சம் நினைவிற்கு வந்தபடி: 

குழந்தை பூமியில் விழுகையில், தாயின் வலியில் அவள் வீறல் கொச்சை குழந்தையின் அழுகை கொச்சை 

குழந்தை பாலின் டம் தேடிக் கண்டு சுவைக்கும் சமயம் அதனின்று வெளிப்படும் சப்தங்கள் கொச்சை. 

தாய் தன் பிரிவு தாங்காமல் குழந்தையைக் கொஞ்சும் சமயம் அவளிடமிருந்தும் வெளிப்படும் குழறல்கள் கொச்சை. ஆணும் பெண்ணும் தழுவுகையில் அவர்கள் முத்தத்தின் எச்சலில் கொழ கொழத்து வரும் சொற்கள் கொச்சை. 

பூமியே பட்டை உரிவது போன்ற கணவனையோ மகளையோ பறிகொடுத்த தாயின் தொப்புள் வீறல் கொச்சை. 

கோப கர்ஜ்ஜனை கொச்சை. 

தரிசனப் பரவசத்தின் பாஷை கொச்சை. 

கொச்சையே சொல்தான். 

சொல்லின் மூலத்தை இவ்வாறு சொல்கையில் என் மகிழ்ச்சி, புல்லரிப்பு இன்னும் புத்தம் புதியதாகத்தான் திகழ்கின்றன. ஓம். 

ஆகவே, பாஷையின் முதல் அல்ல மூலமூர்க்கத்தின் சக்தியைத் தாங்கிக்கொண்டு கொச்சையாகத்தான் இருந் திருக்க முடியும். அந்தக் கொச்சையினின்று பூமியின் அந்தந்த இடத்தின் நில, சீதோஷ்ண தாவர இத்யாதி சூழ்நிலைக்கேற்ப மொழிகள் பிரிந்திருக்கும். நாளடை சரித்ர ரீதியில் வந்துபோகும் நாகரீகங்களிலும் மனிதர்களின் குண வேறுபாடுகளினாலும் சுயநலம் முற்றமுற்ற இதயத் தினின்று வராது. நாக்கு நுனி பேச்சிலும் மொழி தேய்ந் திடினும் திரும்பவும் வளம் பெறினும் இத்தனை மாறுதல் களினிடையே சொல் தன் வேரின் சக்தியை சமயங்களில் வெளிப்படுத்துகையில் உயிர் வேறு சொல் வேறு என்று என்னால் பிரிக்க முடியவில்லையே! 

சமஸ்கிருதம், தேவநாகரி Dead Languages ஆகப் போய்விட்டன. அதாவது பழக்கம் குன்றிவிட்டன. என்பது உளப்பாடு எனினும் நான் பார்க்கும் கோணத்தில் அவைகள் மொழிகளே. இந்த இடத்தில் மொழிகளின் சொற்களைக் குறிக்கவில்லை. நான் சொல் எனும் சக்தியைக் குறிக் கிறேன். Creative process. 

— எனக்குக் கொடுத்திருக்கும் தலைப்பில் இந்த வரக்கியத் தொடரிலேயே சொல் ஒரு சக்தி என்கிற உண்மை வெளிப்படவில்லையா? சொற்கள் அவைகள வெட்கமற்றவை. எத்தனை மொழிகளிலிருந்து திருப்பிக் கொடுக்காத கடன் களாக எத்தனை வார்த்தைகள், வாக்கியப் ப்ரயோகங்கள், ஒரு மொழியினின்று இன்னொரு மொழியில் கலந்து- அம்மாடி, பாஷையைவிடப் பெரிய ஜீவந்தி எது? – சப்தங்கள் மாறி, அர்த்தங்களுக்கு எத்தனை சாயைகள், சாயல்கள், சாயங்கள், அழகுகள் 

சிருஷ்டிக்கு அர்ச்சனை மலர்கள்! இந்த முறையில் மனிதப் பரம்பரையின் பண்பின் பிம்பங்களாக சொற்களை ஏன் பார்க்கக்கூடாது? 

அன்றொரு நாள், வெகுவெகு நாட்களுக்கு முன்னர் 10 15 வருடங்களுக்குக் குறைவில்லை,தெருவில் போய்க்கொண் டிருக்கையில், மாலை இருளில் யாரோ ஒரு ஸ்திரி இன்னொரு ஆளிடம் பேசும் குரல் பிரிந்து வருகிறது. 

‘அந்த ஆசாமியா, நீ சொல்றதை நம்பமுடியலியே. அவன் முதுகைத் தட்டினால் வயித்திலிருக்கிறதைக் கக்கிக் கொடுத்துடுவானே!” ஸ்தம்பித்துப் போனேன்! இந்த நாட்டுப்புறத்தாளிடம் இத்துணை கவிதையா? 

போனவாரம் விறகு மண்டியில் அடுப்புக்கரி வாங்கப் போனேன். நாடார், ”போன வாரம் கிலோ விலை ரூ 1.50 இன்னிக்கு 1.60 கிஷ்ணாயில் தட்டுப்பாடு ஆனவுடனே கரி மேலும் மார்க்கட் பிரியமாயிட்டுது. பிரியமா யிருக்கிறதாம்! விலை உயர்வை எவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார்! 

அண்டை வீட்டுக்காரர் பெண்ணின் கலியானத்துக்குப் போயிருந்தேன். மணப்பெண்ணின் தம்பி, சின்னப் பையன், பதினாலு வயதிருந்தால் அதிகம் – என்னை நன்கு விசாரித்து சாப்பாட்டுக்கு உட்கார வைத்து, பேச்சோடு பேச்சாக ஸர்வ ஸாதாரணமாகச் சொல்கிறான். மாமா வந்தவாளை உபசாரம் பண்ணி. திருப்திப்படுத்தி, இந்த சமயத்தைப் பரிமளிக்கச் செய்வதைவிட எங்களுக்கு என்ன வேலை? 

சமயத்தைப் பரிமளிக்க சொல் இவ்வளவு ஓசையின்பத் துடனும், மணத்துடனும், சொல்லிக் கொடுத்த வார்த்தை யாக இல்லாமல், Spontaneous ஆக இந்த வாண்டிடமிருந்து எப்படி வெளிப்படுகிறது. முற்றின வயதுக்காரன் எனக்கு இப்படிப் பேச வருமா? குழந்தை அம்மாவைக் கேட்கிறது அம்மா. இந்த மூக்கை (முறுக்கை ) நேக்கு தேந்து (திறந்து) தாம்மா!”திறந்து — அது கேட்பது பிட்டுத்தா. 

இவைகள் என் எழுத்துப் பிரயாசையில் நான் உற்பத்தி பண்ணின வார்த்தைகளல்ல. தற்செயலில் செவியில் பட்டு, நினைவில் தைத்து. தைத்த இடத்தில் தங்கி வளர்ந்து காண்டு விண்விண் என என் உயிரைத் தெறித்துக் கொண்டிருக்கும் ஜீவ முத்துக்கள். 

வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு, எழுத் தைப் பயில்பவனுக்கு கேட்கச் செவியையும், காணக் கண் களையும் பழக்கிக்கொள்ளுதல் – வெறுமெனப் பழக்கிக் கொள்ளுதல் அல்ல-discipline செய்துகொள்ளல் முதல் அவசியம் அப்பொழுதுதான் இதுபோல் மொழி முத்துக்கள் கிடைக்கும். கிடைத்துக்கொண்டேயிருக்கும். முதல் இன்பம் கண்டவனுக்கு, அடுத்து எழுத்து என்னும் Communication யான் பெற்ற இன்பம் வையகத்துக்கு, வையகத்திலும், அடையாளம் கண்டுபிடித்துக் கொள்பவர்களுக்குத்தான் என்று சொல்லத் தேவையில்லை. சொற்களும் ஆத்ம பந்துக்களும் ஒன்றில் ஒன்று நிறைவு காண்கின்றன. 

வாய்ச் சொல்லாகக் கேட்டுப் பிறகுதான் வார்த்தை களை எழுத்தில் வடித்தாகிறது. வாய்ச்சொல்லுக்கும் முன்னைய உள்ளத்தின் எழுச்சி உக்கிரத்தை, மழுப்பாமல் அதை எழுத்திலும் காப்பாற்றுவது எப்படி? பாஷையில் ஓரளவு அக்கறை உள்ள எந்த எழுத்தாளனுக்கும் இதுவே அவன் தன்னைக் கேட்டுக்கொள்ளும் கேள்வியாக இருத்தல் வேண்டும். கேள்வியாகவே இருத்தல் வேண்டும். 

எழுத்துப் பத்திரிக்கையில் எப்பவோ நான், ‘நான்” என்று ஒரு கட்டுரை எழுதினேன். எழுத்தின்மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தைச் சொல்கையில் ஒரு சொற்றொடர் “நெருப்பு என்றால் வாய் வெந்துபோக வேண்டும்’ அதை கேலியாகவோ பாராட்டாகவோ இன்னமும் நேயர்கள் அவ்வப்பொழுது ஏற்படும் புது – வாசகர்கள் எனக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கும் சொல்லிக் கொள்கிறார்கள். 

சொற்களை அவைகளின் Creative Process உடன் இணைத்துப் பார்க்கத் தேவைப்படுவதால் மேற்கண்டதை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

இதில் எதை அடக்குவேன். எதை விடுவேன். Creative Process எனும் பெயரெச்சத்தின் வேர்ச்சொல் Creation- அல்லவா? ஸர்வ கபளீகரி அது, பிறப்பு, வாழ்வு, தாழ்வு ஓங்கல், மங்கல்,பொலிவு, நலிவு ஓய்வு, மாய்வு – எல்லாமே Creative Processதான். பெரிது பெரிது புவனம் பெரிது அதனினும் பெரிது சிந்தனை. ஏனெனில் சிந்தனையில் புவனத்தையே சிருஷ்டிக்கிறேன். ஆம் காலையில் கண் திறக்கிறேன். சிந்தனையின் ஓவியம் இதோ என் பூமி. இரவு கண் மூடுகிறேன். அப்பவே மாய்ந்தேனோ என்னவோ? என் புவனமும் அழிந்தது. அன்றன்று ஒன்றொன்று அவனவன் பூமி; இதைத் தானே இலக்கியம் பின்னியாகிறது? Cycle of evolution ஏ Creative Process இன் மறுபெயர்தான். ராமன் கிருஷ்ணன், ரிஷிகள், புத்தர், சங்கரர், நபிகள் நாயகம் சாக்ரடிஸ். Confucius இன்னும் இதர Supermen எல்லோரும் இந்த Creativs processஇல் தோன்றி. இயங்கி அவரவர்,அவரவர் சொல்லைச் சொல்லி, சொல்லி யானதும் அதிலேயே மறைந்தவர்கள் தான். சிந்தனைக் கென்றே ஒரு தட்சிணாமூர்த்தியைப் படைத்தேன். அவனே  சிவன்; அவனே தவன் இன்னமும் உயிரின் மர்மம் என்ன? எங்கே போகிறோம்? என்னுடைய பொருள் என்ன? எனும் சிந்தனையில் ஆழ்ந்து கிடக்கிறான். சிந்தனையே Creative Process எழுத்தில் முடக்கிய சிந்தனை இலக்கியம். எழுத்தறி வித்தவன் இறைவனாகும். சிந்தனையை எழுத்தில் சொல் லாகப் பார்க்கிறேன். 

மானுடத்தின் மாண்பைச் சொல்லிக்கொண்டு, அதை மரபுக்குச் சாஸனமாக்கி மரபுக்கு மறக்கும் இயல்பு ஏற்படும் போதெல்லாம் நினைவு மூட்டுவது, நினைவு மூட்டுவதற்குத் தான் இலக்கியம், இந்த லக்ஷியத்தில் இந்த ஆணவத்தில், இந்த அர்ப்பணத்தில் அந்த இலக்கியத்தை உருவாக்கும் சொற்கள் என்ன வலுவுள்ளதாக அமைந்திருத்தல் வேண்டும்! 

இங்கே ஒரு இடைமறிப்பு – 

கட்டுரையில் இப்போது உபன்யாச வாடை அடிக்கிறது என்று தோன்றுபவர்களுக்கு நான்  சொல்லக்கூடியத இதுதான்:- 

வாழ்க்கையின் பந்தாட்டத்தில் என் நம்பிக்கைகள் ஏதேதோ கலைந்து குலைந்து மறுத்து மறைந்து அதற்கேற்றவாறு என் சிந்தனையும் எங்கெங்கோ ஓடி ஆடித் திரிந்து கடைசியில் தெளிந்தது. நமக்குகந்தது, நமக்குரியது, நாம் வந்த மரபில் நான் வந்த வழி எனும் உண்மைக்குத் திரும்புவதே. 

நம்நாடு ஆத்மீக நாடு. அயோத்தியினின்று லங்கைவரை ராமன். அவனையொட்டிப் பல சீலர்கள் திரிந்து அவர்கள் பாதம் பதிந்த மண்ணில் பிறந்தவர் நாம். 

எது நியாயம் என்று தெரிவதற்கே குருக்ஷேத்திர யுத்தம் நிகழ்ந்த பூமி இது. 

அந்த யுத்த களத்திலேயேதான் கீதை பிறந்தது. 

என்னுடைய இந்த வயசில் ஊசிக்காதின் வழி மறு வாசற்படி தாண்டக் காத்திருக்கும் இந்தக் கட்டத்தில் – கடைசி மூச்சின் இழைக்கு ஊசிக்காதுகூட சொர்க்கவாசல் தான் – இந்தக் கட்டத்தில் இலக்கியத்தைப் பற்றி, நான் மேல் சொன்னவாறுதான் சிந்திக்கத் தோன்றுகிறது. இன்னும் பத்துவருடங்களுக்கு முன்னால் இந்தக்கட்டுரையை நான் எழுதும்படி நேர்ந்திருப்பின் அதன் முகமே வேறு மாதிரியாக இருந்திருக்குமோ என்னவோ? ஆனால் அதற்கும் பதில் இருக்கிறது. Creative process — அப்போதைய என்னுடைய அந்தக் கட்டம் அப்படி நேர்ந்திருக்கும். 

இது சமயத்தில் ஒன்று சொல்வது சொல்லிவிடுதல் பொருத்தம். என் குடும்பத்தின் பின்னணிப்படி,வாழ்க்கை யில் என் பங்குக்கு எனக்கு நேர்ந்த நல்லது, பொல்லாது, சோதனைகளின்படி, அவைகளும்: அவைகள் மூலம் என்னு டைய இலக்கிய அனுபவங்கள் என்னை உருவாக்கியபடி நான் ஒரு ஐதீகவாதி. என் எழுத்தும் என்னைப் போலத்தான் ஐதீகம் என்றால் என்ன? உடனே பஞ்சக்கச்சமும் குடுமியும் தான் மனதில் தோன்ற வேண்டுமா? அப்படி இருந்தாலும் தான் என்ன? எழுத்துமட்டில் யான் அறிந்த ஐதீகம் வழிவழி யாக வந்து அந்த அந்த காலத்தின் தீயிலோ கங்கையிலோ குளித்து உரமேறி பிறர்க்கும் தனக்கும் தன்னை நிருபித்துக் கொண்டிருக்கும் சொல். 

இது நான் படித்து உங்களுக்கு வழங்கும் சொல் அல்ல. என் னுடைய Creative processஇல் நான் கண்ட சொல். ஆனால் இன்னும் அறிந்த சொல் அல்ல. 

மேலே:- 

Creative process பற்றிச் சொல்கையில் உடனே அதில் Inspiration (உள்ளெழுச்சி) உடைய இடம் என்ன என்பதைச் சொல்லத் தோன்றுகிறது. என்னுடைய கதைகளில் பெரும் பாலும் ஏதோ ஒரு Inspiration Direct or Indirect-இல் அவைகளின் கருவூலம் ஊன்றியவை. உங்கள் எதிரே வைக்கும்படி இந்தக் கட்டுரையை எனக்கு எழுதிக் கொடுத்த என் பிள்ளை உடனே சொன்னான், Inspiration என்பது உங்கள் சொந்த அனுபவம். கட்டுரையின் தலைப்பு Words in Creative Process அதாவது உங்களுடைய Inspiration கட்டத்தைதாண்டி, உங்கள் விஷயம்: அது சிறுகதையோ, நாவலோ காகிதத்துக்கு இறங்கும் கட்டத்துக்குத் தியாரான பின், அதன் எழுத்தாக்கத்தில் சொற்களைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டும். இல்லையேல் தடம் மாறி கட்டுரையின் திக்கே மாறிவிடும் என்று என்னை உஷார்ப் படுத்தினான். 

சேகருடைய எச்சரிக்கை சமயத்துக்குக் கிடைத்த புத்திமதி என்பதை மறுக்கமுடியாது எனினும் Inspiration இல்லாமல், எழுத்து சொல்லாக்கம் இருக்கவே முடியாது என்பது என் திடமான கருத்து. அதனுடைய பங்கு அங்கங்கு வேறுபடலாம். அவ்வளவே தவிர creative work இல் அதனுடைய இடம் இன்றியமையாதது. எந்த எழுத் தாளனும் ஒரு சமயமேனும் அதன் தோள் தொடலை, அது தரும் Thrillஐ உணராமல் இருக்கமாட்டான். அதன் ரைகிரியைத் தேடித் தொடர்ந்து அவனை எழுதவைப்பதோ ஊக்குவிப்பதோ Inspiration தான். அது எந்த சமயத்தில் எப்படி நேருகிறது. எத்தன்மைத்து என்று சொல்ல முடியாது. 

ஒரு உதாரணம்: 38/39 வருடங்களாகியிருக்கும் என் தங்கை மகள்,குழந்தை,4,5 வயது ஒருநாள் மாலை பள்ளி யிலிருந்து திரும்பி வந்ததும் மாமா, பள்ளிக்கூடத்தில் மாமரம், கிளி மாம்பழத்தைக் கொத்தி, கொட்டை என் தலைமேல் விழந்தது, அசிங்கம் என்று உடம்பைச் சிலிர்த்துக்கொண்டாள். அவள் துணுக்கு மழலை வார்த்தை களில் விவரித்த அந்தத் துணுக்குச் சம்பவத்தினின்று மஹாபலி என்ற ஒரு கதை தோன்றி உருவாயிற்று. இத்தனை வருடங்களுக்குப் பின்னர், ஒரு வாரப் பத்திரிக்கை யில் ஸ்ரீ இரா. தண்டாயுதம் அந்தக் கதையினின்று பெரும் பகுதிகள் தந்து அதுபற்றி எழுதியிருப்பதை சமீபத்தில் படிக்க நேர்ந்தமையால் அதுபற்றி இங்கு சொல்லத் துணிந்தேன். இத்தனை வருடங்கள் கழித்து — என் கதை தான். அவர் தந்திருக்கும் பகுதிகளைப் படிக்கையில் எனக்கு பாதிப்பு இப்பவும் ஏற்படுகின்றது – என் மருமகள் தலைமீது விழுந்த மாங்கொட்டை எனக்குத் தந்த கதையின் சுருக்கம் – 

சாலையோரம் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒருவன் இறந்து கிடக்கிறான். அவன் இறந்த மர்மம் என்ன? அந்த மாமரம் அறியும்.மாமரம் அதில் காய்ந்து கனிந்து அந்தந்த பருவத்துடன் கழிந்த பல தலைமுறைகளின் பாட்டி. 

அப்படி அந்த மரத்தில், ஒருசமயம், பூ வைத்து, பிஞ்சாகி, காயாகிய ஒரு புது உயிரை அதன் சோதரர் எனும் இலைகள் பட்சிப் பார்வை, சிறுவர்களின் கல்லடி, பெரியவர்களின் கொம்படியிலிருந்து மறைத்துக் காத்து, படிப்படியாக வளர்ந்த ஒரு பழத்தின் பருவங்கள் விஸ்தரிக்கப் படுகின்றன. மாங்கணியாள் பருவமடைகிறாள். அடுத்து அவள் பருவ வேதனை. மாமரத்தில் வேர்களின் பழத் துக்கு சேதி பறக்கிறது. மகளே! உனக்கு வரும் மணாளனே உனக்கு யமன் அவனுக்காக காத்திருக்கையில் உன் மரணத் துக்குக் காத்திருக்கிறாய், உன் நிலைக்கு ஆறுதலோ அதினின்று காப்பாற்ற வழியோ என்னிடம் இல்லை. மாங்கனியாள் அப்படியே தன் விதிப்பயனுக்காகக் காத்துத் தவமிருக்கிறாள். 

மாங்கனியாளுக்கு வேளை வந்துவிட்டது. ஒருநாள் அதன் பார்வைக்கு, ஆகாயத்தினின்று புறப்பட்டதோர் புள்ளி கீழே நெருங்க நெருங்கப் பெரிதாகி, பஞ்சவர்ணக் கிளியாக மாறி, கிளி, பழமிருக்கும் கிளையிலேயே அமர்ந்ததும். பழம் பட்சியின் கண்ணுக்குப் பட்டுவிடுகிறது. அவ்வளவுதான். கிளி மாம்பழத்தைப் பறித்து, தன் கால் களுக்கிடையில் தள்ளி இடுக்கி, தன் மார்பின் மெத் தில் கனியை முதலில் அழுத்தியதும், கனியின் அந்த ஆலிங்கன மூர்ச்சையில் கிளி, அதைக் கொத்திக் கிழித்துத் தின்கையிவே அந்த மரணாவஸ்தையில், உயிர் ஊசலாடுகையிலேயே மாங்கனியாள் அறிகிறாள். அவள் பயனேதான் அவள் பிறவியின் பலன். அந்தப் பலனேதான் அவள் முடிவு. அந்த முடிவேதான் அவள் நிறைவு. 

மாங்கொட்டை கீழே விழுகிறது. கிளி பறந்துவிடுகிறது. அவ்வழி வந்த ஆள், அதை மிதித்து வழுக்கி விழுந்து இ கேடாய் மண்டையில் அடிப்பட்டதாலோ, ஏற்கனவே இதய பலவீனம் காரணமோ இறந்துவிடுகிறான். இது சமுதாயத்தின் முடிவு. 

ஆனால் உண்மையான காரணம், அவன் ஒரு மஹாபலியை மிதித்துவிட்டான் – அந்தப் பாபம் அவனைக் கொன்றுவிட்டது. இயற்கை சக்திகளின் தீர்ப்பின் நிறை வேற்றம் – Inspiration பற்றி இதில் இச்சமயம் இம்மட்டில் போதும். 

Inspiration எப்படி நேர்கிறது. என்று தெரியாது என்று சொன்னேன். இந்த Creative process மட்டும், அது நிகழ்ந்து காண்டேயிருக்கையில், அதன் கதி, முறை இப்படித்தான் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடிகிறதா என்ன?கண்டிப் யாக இல்லை என்றுதான் சொல்வேன். அதுபற்றி அலசுவதெல்லாம் பின்னோக்கில்தான். சேஷ ஹோமம் ஆனபிறகு கல்யாணச் செலவைக் கணக்கு பார்க்க உட்காருகிற சமாக் சாரம்தான். வீட்டைக் கட்டின பிறகு சுவரில் சொற்களை எண்ணுகிற சமாசாரம்தான். 

விஷயமும், மீடியமும், திடீர் என்று கடிவாளத்தை அறுத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஓடாமல் அடக்குமுறையில் இருக்கிறபடி எழுத்தாளன், தன் சிந்தனை ஓட்டத்தையும் சொல்லும் முறையையும் பழக்க வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதில் எழுதும் எழுத்தும் அடங்கியது. இதற்கு உதவுவது படைப்பாளிக்கு இயல்பாக உள்ள Character, சொல் நேர்மை, திடசித்தம். இத்யாதி, இத்யாதி. 

இதென்ன இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கு கிறான் இந்த மனுஷன்? கிட்ட கிட்ட வந்து சொந்த விஷயத் தில் தலையிடுகிறான்? Characterக்கும் எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? என வெகுண்டெழும் நேயர்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றுதான். இதுவரை நான் சொல்லி வந்திருக்கும் Contextஇல் சொல் என்பது ஒரு தவம். தவத்தில் இறங்குவதற்குரிய தகுதிகளைச் சொல்லாமல் என்னால் இருக்க முடியாது. இந்தத் தகுதிகளும் நான் உளற வில்லை, Creative processல் சேர்ந்தவைதான். படைப்பாஸி தன் எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கையிலேயே அவனே இந்தக் Creative precessஇல் Evolve ஆகிக்கொண்டிருக் கிறான் என்பதையும் நினைவு மூட்டுகிறேன். 

விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தின் ஒரு சில படிகளில் ஏறியபின் எழுத்தாளனுக்கும் சொற்களுக்கும் இடையே தோன்றி படிப்படியாக விருத்தியாகும் உறவு விசித்திர மானது,உயிருள்ளது. இதை என் அனுபவத்தினின்று வேதனையினின்று திடமாகக் கூறுகிறேன். நினைவின் அடி வாரத்தினின்று உணர்ச்சிப் பிழம்பாகி, பிழம்பு எண்ணம் (Idea) ஆகி. பிறகு அதன் முதல் வார்படத்தில் முரட்டுத்தன மாக, அதாவது அதன் Theme இன் சட்டத்துள் மாட்டிக் கொண்டபின் சிந்தனையில் ஊறி, கர்ப்பவாஸம் கண்டு, இருந்து, சூடேறி, எழுத்து வடிவுக்குத் தயாராகி – இந்த Creative processஇல் ஆக்கப்பொழுது ரிஷிகர்ப்பமாகவும் இருக்கலாம். கஜகர்ப்பமாகவும் இருக்கலாம், விஷயம் காயிதத்துக்கு ஏறாமலேகூட இருக்கலாம். கடைசியாகச் சொல்லப்பட்ட காயிதக் கட்டம் அவ்வளவு முக்கியமல்ல. நடந்தால் நடக்கட்டும். நேராவிடில் போகட்டும். ஆனால் அந்தக் குறிப்பிட்ட படைப்பு நேர்ந்தாகிவிட்டது. 

பஞ்சபூதக் கதைகள் என்கிற வரிசையில், – புனல் அனல், மண் வாயு – இந்த இயல்புகளை மனிதன் உருவாக்கி அவை களை நடுநாயகமாகக் கொண்டு, கதைகள் உருவாகி இரண்டு வருடங்களில் வெளியாயின. ஆகாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, தலைப்பு ‘ஏகாவித்து கண்டு சூளையி லிருந்து முழுமை பெற்று அச்சிலே ஏறும்பொழுது பத்து வருடங்கள் கடந்துவிட்டன. 

இந்த வரிசைதானே முடிவு பெறும் எனும் திண்ணம் என் உள் உணர்வு அறிந்திருந்த போதிலும் எப்பொழுது என்பது என் வசத்திலில்லை. நிற்க. 

படைப்பு சொல் ஆகிக்கொண்டேயிருக்கையில் எழுதப் படும் விஷய பலத்துக்கு ஏற்றவாறு, அதில் படைப்பாளியில் ஈடுபாட்டைப் பொறுத்தவாறு ஏதோ ஒரு கட்டத்தில் சிந்தனை அருவி கதை சொல்லும் முறையைத்தான் எடுத்துக்கொண்டு (take ever) விடுகிறது. இதனால் எழுத்தாளன் மீடியத்தின் அடக்குமுறையை இழந்துவிட் டான் என்று அர்த்தமல்ல. ஓடத்தை கரை நோக்கி, சுழல் கொண்டுபோய்க் கொண்டிருக்கிறது என்பதை உணரமுடியும். மிகவும் சுவாரஸ்யமான நிலை. அந்த இடத்தில்தான் திசை மாறாமலோ, வேறு அலைகளிலோ, சுறாமீனிலோ மாட்டிக்கொள்ளாமல் ஓடத்தின் திக்கின்மேல் உஷாரா யிருக்க வேண்டிய பொறுப்பு தவிர, மற்ற கவலைகள் குறை யும். ஸ்வாரஸ்யமான நிலை. 

சொற்களும் விட்டிற்பூச்சி போன்றவை. சிந்தனை அருவியில் மாட்டிக்கொண்ட பின் அவைகளுக்கு, மூலப் பொருளின் ஈர்ப்பிலிருந்து தப்பவும் வழியில்லை. உடனே மாட்டிக்கொள்ளவும் மனமில்லை. தவிக்கின்றன. கன்னா பின்னாவென்று று பெருகுகின்றன. அணி அணியாக வகுக்கின்றன எங்களில் பொருத்தமானதை எடுத்துக்கொள் என்று சவால் விடுவதுபோல் இது Creative processஇல் ஒரு வெகு சங்கடமான நிலை. 

(சில சமயங்களில் பவழ மாலையில் ஒரு Outsize பிதுங்கு வதுபோலும், தேவர்கள் பந்தியில் ராகு, கேது திருட்டுத் தனமாக உட்கார்ந்தது போலும். ஏதேனும் ஒரு சொல் (இந்த இடத்தில் சொல் எனும் பிரயோகம், ஒரு வார்த் தையையோ சொற்றொடரையோ வாக்கியத்தையோ குறிக்கும்) தனக்கென்று தனி உருவம் எடுத்து விளையாட்டு காட்டும்) அதன் தனி உருவில் அதற்குள்ள மேனகைத் தனத்தில் மயங்கிவிடாமல் தன் தவத்தை இழக்காமல் குறி யில் முறுக்கேறிக் கொண்டேயிருக்கும் கவனமுனைப்பு தவறாமல் இது மாயா சீதையா, வேதவதியா, இந்தப் படைப்பில் இந்த சொல்லுக்கு என்ன இடம்? உண்டா இல்லையா என்று தெரிய வேண்டும். Creative processஇல் தோன்றிய இந்த வேறான சொல்லுக்கு உருவாகிக்கொண் டிருக்கும் படைப்பில் உண்மையில் இடமில்லையேல் மாயா சீதையை வெட்டி வீழ்த்தல் வேண்டும். கலைஞனின் கலை உணர்வு இரக்கமற்றதாக இருத்தல் வேண்டும். (Artistry should be ruthless) சத்தியத்தின் எடை இரக்கமற்றது. சொல்லின் வழி சத்தியத்தை நோக்கிச் செல்கிறேன் என்கிற நினைப்பு இருத்தல் வேண்டும். 

சத்யம் சிவம் சுந்தரம் மூன்று கோட்பாடுகளும் ஒன்றுக் கொன்று இணைந்தவை. சத்யம் = காலவரையின்றி இந்தப் புவனம் அதன் தோற்றத்தினின்று இன்று வரை, இனிமேலும் அந்தரத்தில் அதன் இடமும் இயக்கத்தின் சீர்பாடும் பிசகாத தத்துவம் அரூபமான கொள்கை. சத்யத்தின் defination அடங்கவில்லை. இது என் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்ளவுமல்ல. இந்த சமயத்துக்கும் உளப்பாடுக்கும் ஒவ்வியதாக, என்னுடைய அர்ச்சனைச் சொல் என்று கொள்ளும்படி மிகப் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். 

சிவம் = அன்பு
சுந்தரம் = அழகு 

எழுத்தின் Creative process-ல் இந்த வார்த்தைகளை சிவம் சுந்தரம்,சத்யம் என்கிற வரிசையில் அடுக்குவேன். 

சிவம்:- எழுத்தின் Contextஇல் சமயத்தின், உள்ள நெகிழ்ச்சி – அதன் வேகம் பின்பு அறிவின் வேகமானியில் வேறுபடலாம் – உள்ள நெகிழ்ச்சி சிறிதேனும் இலாது ஒரு படைப்புக் கருவூலம் காணமுடியாது என்பது என் துணிபு. இந்த உள்ள நெகிழ்ச்சியை சிவம் என்று கொள்ளலாமா? 

சுந்தரம்:- அந்தப் படைப்பின் வெளியீடு, வெளியீட்டு முறை, சொற்கள் உத்திகள் வைகளுக்கெல்லாம் அடிப் படையான ஊக்கம், சிரத்தை வையெல்லாம் அடங்கும். 

சத்யம்:- இந்தப் படைப்பு ஒருவாறு தன் முடிவு கண்ட பின், எழுத்தாளனோ, வாசகனோ அவனவன் வாழ்க்கைப் பிரயாணத்தில் குறிப்பிட்ட எழுத்தின்மூலம், தான் அடைந்திருக்கும் இடத்தை தன் உள்ளிலும் புறத்திலும் சுற்றுமுற்றும் பார்த்துத் தெரிந்துகொள்வதை சத்யம் என்று சொல்லிக்கொள்ளலாம். வந்து சேர்ந்திருக்கும் இடத்தை அடையாளம் கண்டுபிடித்துக்கொள்ள முடிந்த தெனில் அது அவனவன் பாக்கியம். இதற்குமேல் சத்யத்தின் விசுவரூபத்தை நம்மால் சொல்ல இயலாது. 

சரி, எனக்கு உள்ள நெகிழ்ச்சி நேரும் காரணம், சமயம், விளைவு இவைகளின் அடிப்படையை நான் அறியேன். 

சத்யம்: அதேபோல் என் ஆயுசையே கஜக்கோலாகக் கொண்டு நான் அளக்க முயன்றாலும் சத்யத்தின் அடி முடி காண வல்லேன். 

சௌந்தர்யம்:-இது இந்த ஆயுசிலேயே ஓரளவேனும் எட்டாத தூரத்தில் இல்லை. சிருஷ்டி மனிதனுக்கு வழங்கி யிருக்கும் பல கொடைகளில் மகத்தானது. பிரக்ஞை. இந்தப் பிரக்ஞையின் முறையான உபயோகத்தையே பரவ லான முறையில் சௌந்தர்யம் என்று சொல்வேன். இது மனிதத் தன்மைக்குப் பொதுவாகப் பொருந்தும் Defination எழுத்துக்கு இந்த Defination- பொருத்தி அதனால் எழும் விஸ்தாரத்தைக் காண்கையில், அதன் விவரிப்பில் எனக்குத் தனி உற்சாகம். 

நான் அர்ப்பணித்துக்கொண்ட எழுத்தாளன் அல்ல. அதாவது என் ஆவி, உடல் இன்பம் யாவுமே எழுத்துக்குத் தியாகம் என்கிற எண்ணம் எனக்கில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய் என்பதில் எனக்கு ஊக்கம், நம்பிக்கை குன்றாதனவை. நான் இந்தத் துறையில் கடினமான உழைப்பாளி என்பதை நான் நன்கு உணர்வேன். என் எழுத்தில் அழகு காண்பதில் என் ஆர்வம் இன்பம் மட்டுப்பட வில்லை. கூடியே இருக்கிறது. கூடிக்கொண்டே வருகிறது. லா.ச.ரா ஒரு சௌந்தர்ய உபாசகன், நானே தைரியமாக விட்டுச் சொல்கிறேன் உடல் அழகு அது பிறவி வினை ஆனால் அதுமட்டும் உண்மையில் அழகு ஆகிவிடாது. என் மனம், வாக்கு, செயலில் அழகு, நேர்த்தி Elegance இந்த ஆசையின் நிரூபணை மனிதப் பிரயத்தனத்தில் எட்ட முடியாத சாதனை அல்ல. சத்யத்தின் தரிசனம் கிடைத்தால் கிடைக்கட்டும் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது மறுபிறவி. Creative process – காலவரையேது? கண்ணி மைக்கும் நேரமும் பிறவியின் முழுப்பொழுதும் அதற்கு ஒன்றுதான். அதற்கு தனிப்பிரக்ஞை கிடையாது. அதில் விழுந்து அதன் கடையலில் மசியும் பண்டங்களுக்கும் பாத்திரங்களுக்கும்தான் பிரக்ஞை உண்டு. கடை! கடை! அமுதம் நேரும்வரை கடைந்துகொண்டேயிரு! அமுதம் நேர்வதெப்போ! கடையல் நிற்பதெப்போ ! 

சொல்லின் இறக்கையடிப்பு கன்னத்தில் உராய்ந்து காண்டு விரைவது காத்திருப்பவனுக்குத் தெரியும். ஒரு சமயம், ஒரு கதையில் ஒரு பாத்திரத்தின் பேச்சின் நாஸுக் கிற்கு உவமை தேடிக்கொண்டிருந்து, அந்த நினைப்பில், மடியில் pad உடன் ஈஸிசேரில் ஒரு கோழித் தூக்கமும் போட்டுவிட்டேன். அப்போது ஒரு கனவு-அல்லது தோற்றம். ஒரு பாழும் சுவற்றில் ஒரு கரித்துண்டு தானே எழுதிக்கொண்டு நகர்ந்தது. 

“மாம்பூவைக் காம்பு ஆய்வது போல்” 

எனக்கு நான் தேடிய சொல் கிடைத்துவிட்டது. Stevanson Treasure Island கதையைப் பூராகக் கனவாகவே கண்டதாக ஒரு கதையின் கதை வழங்கி வருகிறது. ஆகையால் எனக்கு நேர்ந்தது பெரிய விஷயம், அசாதாரணம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் சொல்லின் ஊடலுக்கு இது ஒரு உதாரணம். 

புதுச்சொற்கள்? இத்தனை வருட சாதகத்தில் தற்செய லாக ஒன்றிரண்டு நேர்ந்திருக்கலாமோ என்னவோ? சொற் களையே சிருஷ்டிக்குமளவுக்குப் பெரிய படைப்பாளியாக என்னை நான் கருதவில்லை. பிரயோகங்களில் அபூர்வமான பொருள் ஏற்றம் அல்லது ஒரு தனிச்சொல் தான் பதிந் திருக்கும் விதத்தில் ஒரு இடப்புதுமை – இவை நிகழ்ந்திருக் கின்றன. ஸாதகம், ஸாதகம், அலுப்புக் காணாத ஸாதகம்? சித்திரமும் கைப்பழக்கம் – ஏற்கனவே சொல்லிவிட்டேனோ. 

இருக்கிற சொற்களை அவைகளின் இடமும் சமயமும் தேடித் தேர்ந்து, அங்கு அவைகளைப் பதித்தாலே போதும். அதற்கே உண்மையான செளந்தர்ய உபாசனைக்கு ஆயுசு பற்றாது. இந்த சமயத்தில் ஒன்று சொல்லுதல் அவசியம். இந்த சூரிய சாக்ஷியில் புதிது, அதாவது ஏற்கனவே இல்லாதது, இப்போது நான் உண்டாக்கினேன் என்று எதுவுமில்லை. அவன் படைத்து, அவனுடைய ரஸமி படாததை நாம் எதையும் உத்தாரணம் செய்துவிடவில்லை. அவனுடையது Creation. மனிதனுடையது உண்டாக்கல் கண்டுபிடிப்புக்கள். Invention/discovery இந்த Invention களின் அடிப்படைத் தத்துவங்களும் இயற்கைக்குச் சொந்த மானவையே. உலகம். உயிர் பிறந்ததற்கு முதற் காரணமாம் அணுத்திரள் ஒலியிலிருந்தது. ஆக்கசக்தியின் ஓயாத இயக்கம் எங்கு கொண்டு போய் விடப்போகிறதோ அதுவரை அவனுடையதே. ஆகவே சொற்களும் அந்த ரகத்தைச் சேர்ந்தவையே. ஆகையால் இதில் என் படைப்பு என்ன தனி? இடமறிந்து: சமயமறிந்து அதிர்ஷ்டமும் சேர்ந்து சொற்களின் சேர்க்கையில் நேரும் உள்ளுணர்வின் கூச்சம், நரம்புகளில் ஒரு விழிப்பு, இரத்த அணுக்களில் ஒரு மலர்ச்சி, அதன்மூலம் ஒரு திரைவிழுதல், அதனால் வெளிப்படும் சக்தி தரிசனம் – அடேயப்பா-lam Prometheus என்பதை அவ்வப் பொழுது உணர்ந்துகொண்டேயிருக்கிற பிரக்ஞை விரிவுக்கு ஈடு எது? 

சொல்வேட்டை, புலி வேட்டை போன்றது. 

பரஸ்பர வேட்டை, 

புலிமுகம் 

புதர் மறைவில் 

நிலாவில் 

பூமியில் விழுந்திருக்கும் இலைக்கோல நீழலில் தெரிந்தும் தெரியாத அநிச்சியத்தில் 

ஒன்றன்மேல் ஒன்று பாயக்காத்திருக்கும் எது முன் எது பின்?

எதை எது வேட்டை? 

எனும் தருண நெருக்கடியில் 

வேட்டைக்கும், வேட்டையாடுபவனுக்கும் 

இடையேகாணும் உறவு – இந்த உறவின் த்ரில்- 

சொல்லுக்கும் எழுத்தாளனுக்கும் இடை உறவு பற்றிச் சொல்கிறேன். The hunter & the hunted நீயே நான். நானே நீ. உன்னில் நான் என்னில் நீ. இந்த ஐக்கிய பாவத்தை இதன் அகண்ட இனங்காணாத சோகத்தை, அதேசமயத் தில் உவகையை, காதல் உணர்வை அனுபவித்தவர்தான் அடையாளம் கண்டுகொள்ள முடியும். சொல்லைத் தேடுகிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் தொடர்கிறேன் என்பதே பொருந்தும். 

வாய்ச்சொல்லுக்கும் எழுத்துக்கும் ஒரு வித்யாசம். எழுதிக்கொண்டே போகையில் எழுத்தாளனின் உள் ளிருக்கும் மோன சக்தி, கூடவே அவன் எழுதும் எழுத் துக்குத் துணைவருகிறது. மோனத்தின் தவத்தனிமையின் பலம் சொல்லுக்கு ஊறுகிறது. சொல்லின் யோகதண்ட தின்மேல் சாய்ந்தபடி, மனம் தவப்படுகையில் அதோ சொல் ஜபிக்கும் விஷயத்தின் கோபுர முனைப்பு – அதோ அவ்வம் போது தெரிகிறது! 

திரும்பத் திரும்பக் கதையென்றும் கவிதையென்றும் கட் டுரையென்றும் ஞானம், விஞ்ஞானம், சாஸ்திரங்கள் என்றும் அடிப்படையாகவோ, நுட்பமாகவோ நமக்குக் கிடைக்கும் இலக்கிய தரிசனங்கள் Images & Imageries ஆகத்தான். வாழ்க்கையிலேயே ஒரு வாழ்வு மற்றொன்றுக்குச் சின்னம். creative processஇல் நேரும் இந்த அமுதத் திவலைகளை சொற்கள் சௌந்தர்யத்தின் மரபுக்குச் சேமிக்கின்றன. சொற்களே மரபின் சேமிப்பு. 

நாளடைவில் எழுத்து சாதகத்தில் எனக்கு ஒன்று புலனாயிற்று – புலனானபோது புதிது: சொற்களுள், சொற் களிடையில் மறைந்திருக்கும் இசை. மேலெழுந்தவாரியாகத் தெரியும் வெறும் ஓசையின்பம் மட்டுமல்ல — இதை விளக்குவதே எனக்கு மிகவும் கடினமாயிருக்கிறது. ஆனால் சந்தோஷமாயிருக்கிறது. கட்செவியெனும் உட்செவிக்கு மட்டும் எட்டும் ஒரு இழைபாடு algebraவில் homogeneous expression என்ற உண்டு. அதுபோன்றும் சொற்களி னிடையே ஓசை வெளிப்படாத ஒரு இசைக்கோர்வை. அந்தர இசை – இனிமேல் வார்த்தைகளுக்குத் திணறுகிறேன். 

அண்மையில் வானொலியில் பாலமுரளி கிருஷ்ணா ஒரு மாணவிக்குப் பாட்டு சொல்லிக் கொடுப்பதாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.’மாமவ பட்டாபிராம” எனும் மனிரங்கு ராகக் கீர்த்தனை. ஸாஹித்யத்தில் ஏதோ ஒருஇடத்தில் ஒரு பதத்தை ஸ்வரப்படுத்திக் காட்டினார் அது ஒன்றும் புதிதல்லவாயினும் அந்த சமயத்தில் என் மனோநிலையில் வித்வானின் கன சாரீரத்தில் அந்த இடம் வெகு அற்புதமாக இருந்தது. 

சொற்களும் ஸ்வரங்கள் தானே! ஸ்வரம் என்பது என்ன? ஓசையின் வெவ்வேறு உச்சங்கள். சொற்கள், அந்த ஓசை உச்சங்களின் விதவிதமான ஏற்பாடான சேர்க்கைகள் இந்த முறையில்) சொற்களைக் காண, அனுசரிக்க எனக்கு இந்தப் பாகுபாடு என்னை அறியாமலே ஏற்கனவே சொன்ன மாதிரி, நாளடைவில் ஊறிவிட்டது. 

ஒலியின் உருவே எழுத்தாகும். சொற்களை எழுத்தில் பிடிக்கும் போது அவைகளின் ஒலிச்சக்தியுடன் பிடிக்க 

வேண்டாமா? 

-த்வனி 

ஒரு சிருஷ்டி உருவாகிக் கொண்டிருக்கையில் இந்தச் சொல்லை இப்படி அமைக்கலாமா? வாக்கியத்தில் ஆரம்பத் தில் வைக்கலாமா? அல்லது இடையில் பதிக்கலாமா அல்லது கடையில் அதற்கு இடங்காணலாமா? அந்தந்த இடத்தில் ஓசை எப்படிப் ப்ரதிபலிக்கிறது, இதனால் பொருள் எந்த அளவுக்கு நலுங்குகிறது, அல்லது அறவே மாறுகிறது,அல்ல, மிகைப்படுகிறது. இவைகளின் எதிரொலி, எதிரொலிகள் எவ்வளவு தூரம்- 

கம்ஸனின் ஸதா ஸர்வதா கிருஷ்ணத்தியானம் போல் இதே நினைப்பு. இதே ஸ்மரிப்பு இதே பயம் என்கிற முறையில் இதே ஒரு பலமுமாகி,சொல்லுக்கு ஒரு மந்தர உச்சாடன சக்தி ஏற்படுகிறது என்பது என் அனுபவம். ஒன்றும் வேண்டாம். நினைத்ததையே நினைத்துக் கொண்டிருந்தாலேயே ஒரு உருவேற்றம். சொல்லே மந்திர மடா என்று பாரதி சும்மாவா சொன்னான்? 

ஊஞ்சல் சங்கிலியின் தனித்தனி கொக்கிகள் போலும், ஒரு வாக்கியத்தின் அமைப்புக்குக் காரணமாயிருக்கும் அதன் பதங்கள் அடுத்தடுத்து ஒன்றிலொன்று புதைந்து இறுக்கம் கண்டு அதன் பொருள் முகத்திலேயே வெடிப்பது போன்ற ஒரு effect உண்டாக்க முடியும். 

“நெருப்பு என்றால் வாய் வெந்து போக வேண்டும்”. வெறும் அடுக்குத் தொடர் மட்டில் நான் கூறும் சொல் ஆகாது. அது கொஞ்சநாழியின் கிச்சுக் கிச்சு. அத்தோடு சரி. சொற்களின் மூலம் அமைதி – எளிய முறையில், நேருக்கு நேர் – கழைக் கூத்தாடித்தனம் ஒன்றுமிலாது, நாணயம் மட்டும் தூக்கி நின்று, இரைச்சல் அனைத்தும் அடங்கி, சொல்லின் அதிகாரம் (அதட்டல் அல்ல) மட்டும் மிஞ்சி, எழுத்து இதை அடைய முடிந்ததெனில் இதனினும் பேறு உண்டோ? 

பொருளுக்கு முடிவில்லை. ஓசைக்கு முடிவில்லை. இவைகளை மொழிபெயர்த்துக் கொண்டேயிருக்கும் சொல் லுக்கும் முடிவில்லை. வாழ்க்கையின் லக்ஷியமாய மோனம் கூட ஒரு சொல்தான். மகத்தான சொல். 

யாவற்றிற்கும் ஒரே சொல். 

சிவம்! சுந்தரம்! சத்யம்! 

ஸரிதானய்யா. இந்த சக்கர வட்டமெல்லாம் இருக்கட்டும் படைப்பு முறைமையில் சொற்கள் எப்படி வருகின்றன? நேருக்கு நேர் பதில்! 

என்று கேட்டால், 

உயிரின் மர்மம்போல்தான் சொல்லும். 

என் பதில்- 

தெரியாது. 

ஓம். 

(தஞ்சைப் பல்கலைக் கழகம் நடத்திய இலக்கியப் பட்டறையில் நிகழ்த்திய உரை) 

– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *