சேவல்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வான்வெளியின் பரந்த மார்பினடியில் வெண் துகிலென மழைத்தூறலின் வருஷிப்பு.
நிலம் பார்த்து, குடையாக விரிந்து மணலைத் தொடுவதற்கு நெம்பும், வாழை இலையின் பசுமையான மேனியில் ‘சரவர’ வென மெலிதான சந்தடியுடன் மோதல் கொடுத்து நீர்க் கோடுகள் என மழைத்துளிகள் வழிகின்றன.
கறுவல் மேனி, நதி மீது தெப்பமாக ஈரத்துடன் பளபளக்கச் சூரிய வெளிச்சத்தில் கண்மணி கூசி, இமைகள் சுருங்கி, தவக்கோலச் சாமி போல் கல்லாகிவிட்டிருக்கிறான் பழனி.
வாழை மரம் அருகாக சண்முகம், தட தடவென ஓடினான். காமாட்சிப் பாட்டியின் பேரன். தோட்டத்திலே பொல்லாத வாண்டுப் பயல் அவன்.
‘நரிக்கும் மழைக்கும் கல்யாணம்
நரிக்கும் மழைக்கும் கல்யாணம்.’
ஆட்டமும் பாட்டமுமாய் கும்மாளித்து ஆடி ‘பட பட’வென பேரிரைச்சலுடன் நிலம் அதிர ஓடுகிறான். ஆனாலும் பழனியின் தவக்கோலம் கலையவில்லை.
சூரிய சக்கரப் பிழம்பு நடுப்பகலைத் தாண்டி கண் மூடித்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறது – அசுர வேகம்.
கல்லும் முள்ளும் பற்றையுமான மணற்தரையில் அமர்ந்து, முதுகை வாழைத் தருவில் சாய்த்து, நிமிர்ந்த முகத்தில் சூரிய கதிரும், மழை வருஷிப்பும் போட்டியிட கடும் யோசனைக் கடலில் ஆழ்ந்து போயுள்ளான் பழனி.
அவன் காலடிக்குள் ஒடுங்கிக் கிடக்கும் கோழி, கக் கக் கக், கென கொக்கரிக்கிறது.
இந்த அணைப்பிற்காகவே இவ்வளவு காலம் காத்திருந்தேன் என உளக் கிளர்ச்சியிலிருந்து பீறிடும் பாசத்தின் செல்ல முனகலாக கோழியின் கொக்கரிப்பு சப்த அலைகள்.
முட்டையிட்டு, பலமுறை அடைகாத்து குஞ்சு பொரித்து, பழனியின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் சொந்தமாகிப் போன கோழி அவன் வாழ்வினோடு உறைந்து போனதோர் இரண்டறக் கலப்பான ஜீவன்.
இந்தக் காட்சியை –
நெஞ்சு படபடக்க உடல் முழுவதும் பதற கதவின் இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் தெய்வானை-பழனியின் அம்மா.
“மவன – பொலிஸ் பயலுவ நல்லாகவே மொந்திட்டாங்க போல. வலி தாங்க முடியலியாக்கும்…” அவள் மனதிற்குள் வேதனையின் நெருடல்.
‘ஊட்லேயிருந்து தரதரவென்று இழுத்துக்கிட்டு போவக்குள்ளேயே ஒடம்புச் சதையை கன்னா பின்னான்னு செதைச்சுட்டாங்கள்லே’ நெஞ்சு வேதனையுடன் கதறுகிறது.
வழக்கமாக இரவுதான் வீடு வந்தான். அகோர பசியோடிருந்தான். தெய்வானை கொடுத்த இரண்டு ரொட்டிகளுக்கும் பசி அடங்கவில்லை.
பிளேன் டீயை நமுக் நமுக் கென தொண்டைக் குழாய்க்குள் இறக்கிவிட்டு சாய்ந்தவன்தான். ஒரு நொடிக்குள்…
‘யப்பா, என்ன தூக்கம் தூங்குகிறான்’ என்று தெய்வானை அசந்து நின்ற வேளையில் பொலிஸ் ஜீப் உறுமலுடன் வந்து வாசலில் நிற்கிறது.
குப்பி லாம்புடன் தெய்வானையின் கழுத்து வெளியில் எட்டிப் பார்க்கிறது.
நான்கு கிங்கரர்கள் ஜீப்பிலிருந்து தாவிக்குதித்து இறங்குகிறார்கள்.
“ஹோ யக்கோவ் அர பல்லா!”
“எங்கே பிசாசே அந்த நாய்!”
தடித்த பருப்பமான சப்பை முகத்தையுடைய கன்னங்கறேலான பொலிஸ்காரன் கடித்துக் குதறுவதுபோல கர்ஜித்தான்.
“மகன் மறுபடியும் ஏதாச்சும் பொல்லாப்பு பண்ணிப்பிட்டு வந்துட்டானோ?’
மனத்தில் பதற்றம் கப்பென ஒட்டிக் கொள்கிறது.
கரும்புகை கக்கிக் கொண்டிருக்கும் குப்பிலாம்பு நடுங்குகிறது.
லயக்காம்பராவின் சுவர்களில் அவன் துவம்சம் செய்யப்படுவதன் நிழலாட்டம் போடுகிறது.
குடலே அறுந்து விழுந்தாற் போல் அலறுகிறாள்.
லயக் காம்பராக் கதவுகள் அறுபடும் சேவல்களாக முழு லயனே துடித்தெழுந்து பீதியுடன் பார்க்கத் திறபடுகின்றன. பழனியைக் குண்டுக் கட்டாகத் தூக்கி ஜீப்பினுள் எறிவது தரிசனமாகிறது. தனியொருவனை பந்தாடுவதில் இந்த பொலிசார்தான் எவ்வளவு மூர்க்கமாகப் பாய்ந்து குதிக்கிறார்கள்.
ஒரே மகன். வளர்ந்து ஆளாகும் வயதில் தகப்பன் முருகண்ணன் கசிப்புக்கு உடலைத் தாரை வார்த்துவிட்ட தியாகசீலனாக குடல் நாறி, வயிறு வீங்கி தேயிலைச் செடிகளுக்குப் பசளையாகிப் போனான்.
அப்பனுக்குத் தப்பாமல் பிறந்தவன் பழனி. வீட்டிற்கும், ஊருக்கும் அடங்காப் பிடாறி. சண்டை, குத்துவெட்டு, பெண்பித்து, போதைப் பொருள் இப்படியே சேற்றெருமையாகக் காலத்தை உழக்கி கரைசலாக்குபவன்.
தேயிலை பிடுங்கல் மட்டுமல்ல மந்திரி ஐயா வீட்டிலும் தெய்வானை எடுபிடி வேலைகள் செய்வாள். அவர் உதவியால் ஸ்டேசன் போய் மகனைப் பிணையில் விடுவித்து வந்தாள்.
மணல் வீதியில் நடந்து வந்தபோது அவமானம் பிடுங்கித் தின்கிறது. வாரம் ஒன்று ஓடிவிட்ட போதும் வீதியில் எதிர்கொண்ட கண்கள், ‘அடப்பாவி என்ன காரியம் பண்ணிப்பிட்டடா
என அங்கலாய்ப்புடன் அசிங்கப்படுத்தின.
‘சே, என்ன கேடு கெட்ட காரியம் செஞ்சுட்டான்.’
அம்மாவின் மனம் ஓவென அழுகை ஒப்பாரி வைக்கிறது.
ராஜநடை பழனிக்குச் சொந்தமானது. இன்று மெல்ல மெல்ல நொண்டி, நொண்டி அவன் நடக்கிறான். செமத்தடியின் வேதனை முறிவுகள் இன்னும் தீரலையோ?
லயக்காம்பராக்களிலிருந்து எட்டிப் பார்த்தப் பெண்களின் கண்கள் பிரலாபிக்கின்றன.
வாழை மரத்தின் நிழலிலுள்ள கோழிக் கூட்டின் மீது பழனியின் கண்கள் பதிகின்றன.
அடைக்கோழி அவனைக் கண்டு விடுகிறது. உயிரே போனாற்போல படபட வென சிறகை அடித்துக்கொண்டு பாய்ந்தும் பறந்தும் பழனியின் கைகளுக்குள் வந்து அடக்கமாகிறது.
பழனிக்கும் பாசம் உண்டா என்ன? அட்டா எதுவித பாச உணர்வுகளும் இல்லாத அவன் கண்களில் பிரிவின் துயர நீர்த்துளிகள் பிரவாகமெடுக்கின்றனவே!
ஒரு குழந்தையை அணைத்துக் கொள்வதுபோல கோழியைத் தழுவிக் கொள்கிறான்.
ஆ! என்ன இது. ஒடம்பெல்லாம் பூச்சு ஓடுறமாதிரி இருக்கே? மனம் பதறியபோதும் கோழியை உதறி யெறியாமல் நெஞ்சிலிருந்து தூக்கிப் பார்க்கிறான். மணலென கோழிப்பேன்கள் குவியலாக அப்பிக் கிடக்கின்றன. பொல பொலவென நெருப்பின் மீது விழுந்து கருகச் செய்தான்.
கோழிக்கு சுகமாகவிருக்கிறது.
ஆனந்தமாகச் சிறகடிக்கும் அது செல்லமாகக் கொக்கரிக்கிறது.
இருண்டு கிடக்கும் கோழிக் கூட்டின் மூலை முடுக்கெல்லாம் தீப்பிடித்துத் துப்புரவப்படுத்திப் புதுமணல் கொட்டி அடை முட்டைகளை ஆடாமல் அசையாமல்…
கடினமாக வேலை செய்வதில் பழனி அசகாய சூரன்.
இவ்வளவு வேலைகளை மனம் ஒண்டி முடித்து மணற் தரையில் குந்தி வாழைக்கருகில் முதுகைச் சாய்த்தவன்தான். ஏதேதோ நினைவுகளில் சமாதிநிலை அடைகிறான்.
இவனையா ஊரும் உலகமும் கெட்டவன் என்கிறது? தெய்வானையால் ஜீரணிக்க முடியவில்லை.
அன்னையின் நினைப்புபோல் அவன் மனத்தில் பொலிஸ் அடிப்பின் வேதனைகள் இல்லை.
மலைக் காற்றின் ஈரலிப்பு உடலைத் தழுவி விதிர் விதிர்க்கச் செய்ய, கஞ்சாப் புகையின் ஸ்பரிசக் கிறக்கத்தில் அவன் உடல் வேட்கை தணித்த வேகத்தில் சுமணா என்ற பிச்சைக்காரி துடிதுடித்தாளே அந்த இன்ப நினைப்பின் மயக்கத்தில் பழனி நிஷ்டையாகி விட்டிருந்தான்.
பொல்லாத ரசனை மனம் அவனுக்கு. மீண்டும் மீண்டும் அந்த இரவுச் சம்பவத்தை அசை போடுவதில்தான் எத்தனை இன்பம். இடியும், மின்னலும் கைகலப்பில் கலந்துவிட்டிருந்த அந்த இரவு காலம்.
மனத்திரையில் மீண்டும் நினைவுக் கோலங்கள் கருக்கட்டத் தொடங்கியபோது…
“ஏலே! பழனி மழ நின்னிருச்சி உள்ளே வந்து ரொட்டி சுட்டிருக்கேன் சாப்பிடு…” தெய்வானையின் குரல் அழைக்கிறது. நினைவு மேகம் சிதறிட, கண்ணிமைகள் மயில் சிறகென சட்டென விரிகின்றன.
அப்பொழுது…!
முட்டைகளின் மீது சயனித்துக் கொண்டிருந்த அடைக்கோழி மெல்ல எழுந்து, சிறகுகளை சடசடத்து மெதுவாக அவனைச் சுற்றி வந்தது.
சிறகுகள் புடைத்து விரிந்து, முகம் பாரித்து, உடலெங்கும் வேதனை பூரிப்பில் பச்சை உடம்புக்காரியாக அதன் கொள்ளை அழகு அவனை கிறங்கச் செய்துவிட, பழனி பூரிப்பில் ஆழ்ந்து விழி பிதுங்கி அதற்கு செல்லமாக முத்தமிடுகிறான்.
பழனியின் உதடுகளில் புன்னகையொன்று மலர்ந்து விரிகிறது. தெய்வானையின் மனத்தில் நிம்மதிப் பெருமூச்சு வெளியாகிறது. தெய்வீகமான சிரிப்பு. இவனையா? கெட்டவன் என்கிறார்கள்! அவளால் நம்ப முடியவில்லை.
சட்டென ஒரு சம்பவம் நடக்கிறது.
‘கொக்கரக்கோ’
சேவலொன்றின் ராஜகம்பீரக் கூவல். கழுகுபோல் சிறகுகளை அடித்து விரித்துக் கொய்யா மரத்திலிருந்து தாவிக் குதித்து ‘குடுகுடு’வென வேகமாக ஓடி வந்து, கோழியின் மீது தாவி அமர்ந்து, அதன் தலையை சளுக்கெனக் கௌவி, ஓர் அசுரப்போர் தொடுக்கிறது.
வெட வெடக்கும் கோழி ஹெக் கென விக்கித்தாற்போல கொக்கரித்தது. சடக் கென தாவி பழனியின் காலடியில் விழுந்து துடித்தது. அவ்வளவுதான் அதன் பின்னர் கோழி எழும்பவில்லை. கண்கள், கால்கள், உடல் விறைத்து சடலமாகிவிட்டது.
“அம்மா”
பழனி அலறினான். கோழியின் சடலத்தை நடுக்கமுடன் பார்க்கும் அவனுடைய கண்மணிகளினூடே துடிதுடிக்கும் அவன் இதயம் தெரிகிறது.
பழனியின் ‘அம்மா’வென்ற அழைப்போசை தெய்வானையின் கண்களிலிருந்து ஆனந்த பிரவாகத்தை அணையுடைக்கிறது. அப்படி அவன் கூப்பிட்டு எவ்வளவு காலமாகிறது.
“மகனே!”
தாயுள்ளத்தின் பாச ஓலம், நெஞ்சின் துடிதுடிப்பாகிறது.
“எலெ பிச்சு ஒனக்கு வெவரம் தெரியுமா? இந்த பய பழனி புள்ள பெத்து ஒருநாள் கூட ஆவாத பிச்சக்காரி சுமணாவ வெறித்தனமா கெடுத்துப்புட்டான். பாவம் பச்ச ஒடம்புக்காரி மரக்கட்டையாயிட்டா…”
“அடப்பாவி”
தேயிலைக் கூடைகளுடன் இரு பெண்கள் இவ்வாறு பேசிக்கொண்டு மலை இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
மலை முகடுகளில் பதுங்க முனையும் சிவப்புச் சூரியனை நோக்கிப் பெண்களின் கருத்த நிழல்கள் விரைந்து கொண்டிருக்கின்றன.
“ஐயய்யோ! படுபாவி என்ன காரியம் பண்ணிப்புட்டான்…”
மலையடிவாரத்திலிருந்து ஒரு கதறல் அசுர கானமாக மேலெழும்பி வருகிறது.
செல்லாயி கிழவிதான் அழுது புலம்பிக்கொண்டு ஓடி வருகிறாள்.
“என்னாத்தா, ஏன் இப்படி கத்திக்கிட்டு ஓடி வார…”
“என்னா சொல்வேன். எப்படி சொல்வேன்.”
“என் சேவல அடிச்சி கொன்னுட்டானே!”
“யாரு?”
“அந்தப் படுபாவி பழனி”
“அவன் எழவு புடிக்க. இப்ப சேவல் அடிச்சித் தின்ன வாரம்பிச்சிட்டானா?”
“இல்ல அவனுடைய அடைக் கோழியே என் சேவல் மிதிச்சிட்டாம்”.
“அட கொல்லயிலே போவ” பெண் நிழல்கள் நாடியில் கை வைக்கின்றன.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |