சேர்ந்தோம் வாழ்ந்திடுவோம்





(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மே 1ஆம் திகதி

நேற்று பஸ் ‘சீசன் ரிக்சட்” எடுக்காதபடியால் இன்று காலை மினி பஸ்சில் போக வேண்டியதாயிற்று. ஒப்பீஸ்சில் அற்றென்டன் றியிஸ்ரரில் றெட்லைன் கீற முன்னர் சைன் பண்ண எத்தனை தடவை முயன்றும் பலன் இல்லை.
மினி பஸ்ஸில் சனத்துடன் நசிபட்டு… இடிபட்டு ஏறி ஒருமாதிரி நிற்க இடம் கிடைத்தது ஆச்சரியம் தான் சீ என்ன வாழ்க்கை… என்று நினைக்கத்தான் முடிகின்றது.
சலிப்புடன் பார்த்தாள் சுலோசனா. நான் அவளை எதிர்பார்க்கவில்லை… கனகாலத்திற்குப் பிறகு மலர்ந்த உடலும் உப்பிய கன்னங்களுமாக.
“என்னப்பா.” என்று அவள் என்கையைத் தொட்ட போது எவ்வளவு ஆனந்தம் மனத்தில் நீச்சலடிக்கும். ளமைக்கால நினைவுகள்…அட்வான்ஸ் லெவல் படிக்கும் போது ஏற்பட்ட கல்லூரிக்காலத்து கனவுகள் பசும் புற்தரையில் பதியும் பாதங்களாக.
“சுலோசனா” எனும் போதே…விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது ஆனந்தத்தினாலா? தெரியவில்லை.
“என்ன இப்பவும் அப்பிடியே இருக்கிறாய்”
“அப்பிடியே எண்டா…”
“என்னடியப்பா நீ…நான் கேட்கிறது விளங்கேல்லையே.’ நான் சிரித்தேன்.
”உனக்கென்ன குறை. முந்தி இருந்ததைவிட வடிவாய் இருக்கிறாய். அப்பவே எத்தினை பெடியள் -ம்… என மெதுவாக அவன் சொன்னாலும் அவளுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வயது போனவர் என்னைப் பார்த்துச் சிரித் தார். சுலோசனாவும் சிரிந்தாள்.
“எனக்கு இன்னும் காலம் வரேல்லை — அதைவிடு. நீ எப்ப இஞ்சை வந்தனி’,
“இப்ப மூண்டு மாதம்தான். உன்ரைவீட்டை வர நினைக்கிறனான்தான்”ஆனா நேரம் கிடைக்கேல்லை.’
“எத்தினை பிள்ளையள்.”
எனக்கோ. அளவோடை பெத்து வள மோடை என்று சொல்லிச் சிரித்து “இரண்டு” என்றாள்.
சுலோசனா நெடுக இப்பிடித்தான். ஒரேசிரிப்பு காரணம் இல்லாமல். காரணத்தோடும் சிரிப்பாள்.
ஒப்பீஸ்சில் ஆட்கள் இல்லை. சாப்பாட்டு நேரம் பழையபடி களைகட்ட எப்பிடியும் இரண்டு மணியாகும். ரெலிபோன் அலறியது.
அவள்தான் ரெலிபோனுக்கு கிட்ட நின்றாள். வழக்க மாக அவளுக்கு. ரெலிபோன் றிசீவரை எடுப்பது சங்கடம். கதைப்பது பெண்ணாக இருந்தால் ரெலிபோன் எடுத்த வன் தேவையில்லாத கதைகளைக்கதைத்து அறுத்துக் கொண்டிருப்பான்.
தொடர்ந்து மணி அடிக்க. தவிர்க்க முடியவில்லை என்ன செய்வது என்று எடுத்தாள்.
“ஹலோ.”
”ஹலோ…குட் ஐ ஸ்பீக் ரு நிர்மலா” என்றது போனில் ஆண்குரல்’ அவளுக்கு தெரிந்து விட்டது. அவர் தான்.
“ஸ்பீக்கிங்.”
“ஹலோ… என்ன சத்தம் ஒரு மாதிரியாய் இருக்கு…”
“ஒண்டுமில்லை…”
“பின்னேரம் என்ன புறோகிராம்.”
“பின்னேரமோ…அப்படி ஒண்டும் இல்லை…”
“அப்ப… நாலுமணிக்கு வரட்டே.. பிறகு நான் ஃபைவ் தேட்டிக்கு கூட்டிக் கொண்டு போய் விடுறன். என்ன மாதிரி..”
”ம்… நாலு மணிக்கோ”
“ஹலோ…ஏன் என்ன விசியம்…”
“வீட்டை சொல்லிப் போட்டு வரேல்லை னால் அம்மா தேடிக் கொண்டிருப்பா…”
போனின் ஊடாக அவரின் சிரிப்பு…
“நல்ல கதை கதைக்கிறீர் என்னோடை வந்தால் அம்மா என்னை கதைக்கிறது.”
“இல்லை…நாளைக்கு சொல்லிப் போட்டு வாறன்..”
“நாளைக்கு சனிக்கிழமை…”
“ஓம். நான் மறந்து போனன்…”
“அப்ப ஒண்டு செய்யலாம்.”
“என்ன…”
“இண்டைக்கு பின்னேரம் நான் வரேல்லை… நாளைக்கு மோணிங் வீட்டை வாறேன். பிறகு யோசிப்பம்.. என்ன..”
”ஓம்”
“அப்ப போன வைக்கட்டே”
”சரி”
மே 6ஆம் திகதி
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. மத்தியானம் சாப் பிட்டுவிட்டு ரேப்பில் கர்நாடக இசை கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதுஒரு இராக. மாலிகை கீர்த்தனை நெஞ்சத்தை இதமாக வருடியது. கூடவே சிலிர்பையயும் ஏற்படுத்தியது.
“வேடனைப் போல் வந்து வேங்கை மரமாய் நின்ற – வேலன் வரக்காணனே – சகியே” என்ற பல்லவியுடன் ஆரம்பித்து இதயத்தை நெகிழ்ச்சி செய்து நான் என்னிலை மறந்து…
“கலியாணம் முடிச்சால்…உந்த சுதந்திரம் வருமே…” என்று சொல்லிக் கொண்டு சுலோசனா வந்தாள்.
கோடையில் பெய்த மழைபோல அவளைக் கண்ட தும் மனம் குளிர்ந்தது. பல ஆண்டுகள் பின்னோக்கி ஓடி கனவு எது- நினைவு எது என்று தெரியாமல் நாங் களும் மயங்கி ஏனையவர்களையும் மயக்கவைத்த அந்த அற்புதமான காலத்தை நினைத்து குதிக்கத் தொடங்கியது.
அவள் என்னருகில் அமந்தாள். என்னதான் சொன்னாலும்… நெருங்கிய சினேகிதியை… அதுவும் வெகு நாட்களுக்குப் பிறகு காணுவதால் ஏற்படும் இன்பத்தை எதற்கு ஒப்பிடுவது.
“நீயும் என்னைப்போல காதலித்து கலியாணம் செய்திருந்தால் இப்ப என்னைப்போல…” மேலே சொல்லாமல் சிரித்தான்.
“நீ ஏனப்பா சிரிக்கிறாய்-நாட்சென்று கலியாணம் முடிக்கிறது இப்ப எங்கடை பொம்பிளையளுக்கு ஒண்டும் புதுசில்லையே”
“அதுக்கு நீ இன்னும் கனகாலம் இருக்கப் போறியே…”
“சீ… அப்படியில்லை… எதுக்கும் காலம் வரவேணும்… என்ரை தலைவிதி, அப்பிடி உனக்கு வேறை கதை இல்லையே… நெடுக கலியாணக்கதைதான் கதைக்கிறாய்…”
“என்ன செய்ய…இப்ப அதைத்தானே கதைக்கலாம். உன்னைப் பார்க்க எனக்கு ஆத்திரமாய் இருக்கு என்ன வடிவான பொம்பிளை
‘சுலோசனா அதுக்கு நான் என்ன செய்ய. எல்லாம் சரியாய் வருமே. ஏதோ ஒரு பிரச்சினை. இப்ப கிட்டடி யிலதானே சின்னக்காவுக்கும் நடந்தது. நான் வடிவு. வேலை செய்யிறன் எண்டா சீதனம் இல்லாமல் கலியா ணம் நடக்குமோ… நான் வடிவு எண்டா சாதகம் பாக்கா மல் செய்வினமே…”
”ஓமடியப்பா. எல்லா விதத்திலையும் சிக்கல்தான்.”
“ஐயா பேசாத இடம். இல்லை. இஞ்சை வராத புரோக்கர்களும் இல்லை.” என்று சொல்லும் போதே அம்மா தேனீருடன் வந்தாள்.
“பிள்ளை போன கிழமை வந்த புறோக்கர் வந் திருக்கிறார்” என்றாள் அவள்.
“அவர் வாறது என்று சொன்னனி. பிறகு ஏன் உப் பிடியே இருக்கிறாய். எழும்பி முகத்தைக் கழுவிக் கொண்டு நல்ல சாறியை எடுத்துக் கட்டன்- என்று நிர்மலாவை அவள் அம்மா பேச.
அவள் எழும்பி முகம் கழுவி அந்த புதிய சிவப்பு செக் சாறியை கட்டினாள். பின்னலில் நாலைந்து மல் லிகை மலர்களைச்’ செருகிரள்.
கால்களை, கைகளை அழுத்தித் துடைத்தாள். பளிச்சென்று இருந்தாள். கேற்றடியில் ஸ்கூட்டர் வத்து நிற்கும் சத்தம்… நிர்மலா ஓடாமல் நடந்தாள்.
ஒரு கையில் ஹெல்மெட் சகிதம் சிகரெட்புகை முன்னே வர அவர் வந்தார்.நிர்மலா ஹெல்மெட்டை வாங்கிக் கொண்டு நடந்தாள்.
அவர் நிர்மலாவைப் பார்த்து நன்றாகச் சிரித்தார். அவளோடு சேர்ந்து நடந்து ஹாலில் அமர்ந்தார்.
“இருமன்.” பக்கத்தில் இடம் ஒதுக்கினார். நிர்மலா இருக்கவில்லை.
“இஞ்சை வாரும். என்ன வெட்கம். அதுவும் ஒரு வேக் பண்ணுகிறலேடி- இப்பிடி வெட்கப்படலாமே வாரும்.”
“சா…அப்பிடி. ஒண்டும் இல்லை -”
”நான் இண்டைக்கு ஓவர்ரைம் இருந்தும் வேலைக்கு போகேல்லை,
“ம்…’
“இஞ்சை வாறது எண்டு நேற்று சொன்னனான் தானே”
“ஓமோம்.”
”வாருமன். பக்கத்தில் இரும்.”
“வாறன்.” என்று சொல்லி குசினிக்குள் போய் அம்மா போட்டு வைத்த ‘ரீ’ ஐ கொண்டு வந்து கொடுத்தாள் நிர்மலா.
அவர் கையைப் பிடித்து பக்கத்தில் இருக்கச் செய் தார். அப்போது வீட்டில் அதிகம் ஆட்களில்லை. இருந்த வர்களும் ஹாலின் பக்கம் வரவில்லை.
அவர் கையை விடவில்லை
மே 20ஆம் திகதி
இரண்டு கிழமைக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக்கிழ மையும் சுலோசனாவும் நானும் கூட்டுச் சேர்ந்தோம். யாழ்ப்பாண ரவுணின் பரபரப்புக்களுக்கு இடையில் சொப்பிங் செய்தோம்.
என்னதான் நடந்தாலும்… ரவுணிலும் நியூமார்க்கட் டிலும் பெண்களும் ஆண்களுமாக சனங்கள் குறைந்த பாடில்லை.
“என்னடியப்பா…நான் வந்த அண்டைக்கு புரோக் கர் வந்தாரே பிறகு என்ன மாதிரி?”
என்னவோ சாதகம் பொருந்தியிட்டுதாம்…என் னையும் பார்த்து ஓமெண்டு சொல்லிப்போட்டாராம்…”
“சரியான ஆளப்பா… இவ்வளவு புதினத்தையும் இவ்வளவு நேரமும் சொல்லாமல்…’
“பொறடியப்பா… எனக்கும் நேற்றுத்தான் தெரியும். போன திங்கட்கிழமை ஒவ்பீசில வந்து பார்த்தவராம்…”
“அப்ப இனி என்ன… கையைப்பிடிக்க ஆள் ரெடி, அப்படித்தானே”
“நான் சிரித்தேன்…”
“ஏன்டி சிரிக்கிறாய்…”
“இன்னும் முக்கியமான விசயத்தில் உடன்பாடு வரேல்லை”
“என்ன சீதனமோ வீடு, வளவு, நகை, காசு எல் லாம் இருக்குதானே…”
“காசு மட்டமாய் ஒண்டு கேட்கினம்…” எங்களிட்டை ஐம்பது கொடுக்கிறதே பிரச்சினை’
“அது எல்லாம் சரிவரும்…உனக்கு அவனைத் தெரி யுமே. பேர் என்னவாம்…”
“எனக்கு ஆளைத் தெரியாது…பாங் ஒவ் சிலோனில் வேலை செய்யிறாராம்… தந்தகுமார் பெயராம்…”
”ஓ அவரே…” என்று சொல்லும் போதே சுலோசனா வின் முகத்தில் எத்தினை மாற்றங்கள்.
“அவன் இன்னும் கலியாணம் செய்யேல்லையே…’ ‘“ஏன்டியப்பா…உனக்கு ஆளைத் தெரியுமே.’
“நல்லாய் தெரியும். நாலைஞ்சு மாதத்துக்கு முதலும் அவருக்கு கலியாணம் ஒன்று பேசி முற்றாகிப் போய் பிறகு குழம்பிப் போச்சு…’
”ஏன்”
“சீதனம்தான்…”
என் நெஞ்சத்தில் என்னவோ ஒரு நெருடல்… அதன் தன்மையை விளங்கப்படுத்தவில்லை. வேதனையின் ஆரம்பமா?
‘ஆனால் ஆள் நல்ல ஹான்ட்சம்… உனக்கு நல்லாய் மச் பண்ணுவார்…’ என்று சுலோசனா சொன்னது இத யத்தில் ஒட்டவில்லை.
அவர் ‘ரீ’ குடித்துவிட்டு நிர்மலாவை வடிவாகப் பார்த்தார்.
“நீர் நல்ல வடிவாய் இருக்கிறீர்-அது சரி நான் நெடுக. கதைக்கிறன் நீர் ஏன் பேசாமல் இருக்கிறீர்”
“சொல்லுங்கோ-”
“உப்பிடி உம்மாண்டியாய் இருந்தால் எனக்குச் சரி வராது. நான் நல்லாய் கதைப்பன். என்னோடையும் மனம் விட்டுக் கதைக்க வேணும்.
மனம் விட்டு என்பதைக் கேட்க நிர்மலாவுக்குச் சிரிப் பாக இருந்தது. ஆனால் சிரிக்கவில்லை.
“ஒப்பீஸ் வேக் எல்லாம் எப்பிடி இருக்கு. நல்ல வேலையோ”
“பரவாயில்லை”
“முந்தி ஒரு ஆள் வேலை செய்தார் தெரியுமே- கந்தவனம் எண்டு. இப்ப மன்னாருக்கு றான்ஸ்பரிலபோயி ருக்க வேணும்.
“ஓ…”
”அவர் எனக்கு கசின் பிறதர்”
“ம்…”
“ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்? சந்தோஷமாய் கதையு மன். உமக்கு என்ன கலர் சாறி பிடிக்கும்.”
“கலரோ, எதெண்டு இல்லை. எல்லாக் கலரும் பிடிக்கும்”
“சீ…அப்பிடி இருக்காது. ஏதோ ஒன்று இருக்கும் தானே”
“இல்லை…”
“எங்கை கையைக் காட்டும் பாப்பம். எனக்குக் கொஞ்சம் சாத்திரம் தெரியும்…” என்று சொல்லிக் கொண்டு நிர்மலாவின் கையைப் பிடித்தார்.
”உமக்கு ஆறு, ஏழு பிள்ளைகளுக்குப் பலன் இருக்கு” என்று சொல்லி அவர் பெரிதாகச் சிரிக்க நிர்மலா மெது வாகச் சிரிக்க, அவருக்குச் சப்பென்றிருந்தது.
மே 29ஆம் திகதி
ஒவ்பீஸ்சால் வந்து தேத்தண்ணி குடித்துவிட்டு வீட்டின் பின்பக்கத்தில் இருந்த மாமரத்தின் கீழ் சாய் மனைக் கதிரையைப் போட்டுவிட்டுப்படுத்தாள். சிந்தனை கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கத் தொடங்கின.
நேரம் ஆறு மணியாகி விட்டது. நாலு மணிக்கு பஸ் எடுத்தாலும் இப்பிடித்தான் ஒவ்வொரு நாளும் மாமரத் தின் குளிர்மையும், பவ்வியமான மாலை நேரத்து சூழ்நிலையும் மனதுக்கு வழக்கம் போல இனிமையைத் தரவில்லை.
அன்றைக்கு யாழ்ப்பாணம் சொப்பிங் செய்யப்போன போது சுலோசனா நந்தகுமாரைப் பற்றிச் சொன்னவைகள்…
மொரமொரப்பான துணி அணிந்தபோது உடம்பு படும் கஸ்டம் போல மனத்தைக் கஸ்டப்படுத்தின.
சாதகம் பொருந்தி எல்லாம் முற்றாகி, பிறகு சீதனப் பிரச்சினையால் கலியாணத்தைக் குழப்பிய அவரை எனக்கு முற்றாக்கி இருக்கினம். முதல் குழப்பின மாதிரி எனக்கும் செய்தால்…
இதயத்தின் அடித்தளத்தில் எழுந்த இந்த கேள்விக்கு யாரிடம் பதில் கேட்பது பெண்களின் மன உணர்வுகளை இலகுவாக வெளிக்காட்ட முடியுமா?
“பிள்ளை” என்று சொல்லிக் கொண்டு அம்மா வந்து வழக்கமாகத்தான் இருக்கும் அந்த மரக்குற்றியின் மேல் இருந்தாள்.
“என்னம்மா?”
“ஏதோ நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடேல்லை”
“ஏனம்மா…”
“உனக்குப் பேசின அந்தக் கலியாணம் முற்றாய்ப் போச்சு”
“ம்…”
“ஓம் பிள்ளை. ஏதோ எல்லாம் அம்பாள துணைதான் றிஜிஸ்ரேசனுக்கும் நாள் வைச்சாச்சு.”
”ஏனம்மா, சீதனப் பிரச்சினை என்ன மாதிரி?”
“அதெல்லாம் சரி. அவை கேட்டபடி ஐம்பதை காசாய் கொடுக்கிறம். மிகுதி ஐம்பதுக்கும் கொக்கா ளின்ரை காணியைப் பொறுப்புக் கொடுக்கப்போறம். வாற வருஷம் காசைக் கொடுப்பம்.”
“அதுக்கு அவை சம்மதமோ?”
“ஓமோம். அது சரி நீ ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்”
“ஒண்டுமில்லையம்மா.”
“வாற பத்தாம் திகதி பகல் பதினொரு மணிக்கு நாளாம். இண்டைக்குப் பகல்தான் எல்லாம் முற்றாச்சு. கொய்யா உந்த அலுவலாய்த்தான் வெளியில் போட் டார்.” என்று அம்மா சொல்லிக் கொண்டு போனாள்.
“நான்தான் நெடுகக் கதைக்கிறன். நீர் வடிவாய்க் கதைக்கிறீர் இல்லை-ஏன்?”
கூல்பாரில் ஐஸ் கிறீம் குடிக்கும்போது அவர் கேட் டார். அவரின் முன்னால் ப்ளூ செக் சாறியில் நிர்மலா மினுமினுத்தாள். தலையில் இருந்த மல்லிகை கும்மென்ற வாசனையைத் தர அவள் மெதுவாகப் புன்னகைத்தாள்.
“ஏன்… எதுவும் பிடிக்கேல்லையோ… ஐஸ்கிறீம் சரியில்லையோ”
“சா…அப்பிடி ஒன்டும் இல்லை.”
”நான் எனக்குள்ளே சில வரையறைகள் வச்சிருந்த னான். இன்ன மாதிரி இருக்க வேண்டும் எண்டு நினைச்ச னான். உம்மை முதல் கண்டவுடனேயே பிடிச்சுப்போச்சு’ என்று அவர் சொன்னார்.
நிர்மலாவின் விழிகள் பளபளத்தன. எதையோ கேட்க நினைத்தவள் போல முகத்தில் சில தீவிரங்கள் ஏற்பட்டன. ஆனால் பிறகு அவை அடங்கிப் போயின.
‘உண்மையாத்தான் சொல்லுறன். என்னவோ தெரி யேல்லே. உம்மைக் கண்டவுடனேயே எனக்கு நல்லாய் பிடிச்சுக் கொண்டுது. எப்பிடியும் உம்மைத்தான் மறி பண்ண வேணும் எண்டு மனதில் உறுதி செய்திட்டன்
பழையபடி நிர்மலாவின் முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வெளிவரவில்லை.
“என்ன நிர்மலா நான் இவ்வளவும் சொல்லுறன்.நீர் பேசாமல் இருக்கிறீர். என்னென்டு சொல்லுமன்.”
“சா…அப்பிடி ஒன்றும் இல்லை.”
“மனத்தில் ஏதாவது குறையள்…’
“சீ…ச்சி”
”சந்தோஷமாகத்தானே இருக்கிறீர்.”
“ஓமோம்…” என்றாள் நிர்மலா.
யூன் 8ம்ஆம் திகதி
நாளைக்கு மறுநாள் றிஜீஸ்ரேஷன் … கொஞ்ச நா களாய் வீட்டில் ஒரே பரபரப்பு. நானும் அந்த பரபரப் பில் ஆழ்ந்துபோய் விட்டேன். ஐயா, அம்மா, பெரியக்கா, சின்னக்கா, அத்தான்மார், பெரிய அண்ணை எல்லாரும் ஏதோ வேலை செய்கின்றார்கள்.
என்னதான் பரப்ரப்பில இருந்தாலும் மனத்தில் மகிழ்ச்சி நிலைக்க மறுக்கிறது. பாங்கில் வேலை செய்யும் ஹான்சமான மாப்பிள்ளை…எல்லாவற்றையும் மிஞ்சி நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகள் சிறிய ரம்பமாக மனத்தை அறுக்கின்றது.
நந்தகுமாரின் தாய் தகப்பன் சகோதரங்கள் ஏன் அவர்கூட சீதனப் பிசாசுகள் என்று ஐயா இரகசியமாய் பேசினது. என் காதில் விழுந்ததாக நான் காட்டிக் கொள்ளவில்லை. “என்ன செய்யிறது. எங்கடை பிள்ளைக்கு நல்லதொரு வாழ்வு வேண்டும். ஒவ்வொரு முறையும் பேசின கலியாணங்கள் சரிவராமல் போச்சு. சீதனம்தானே கூடக் கேட்கினம். என்ன கஸ்டப்பட்டும் செய்வம். பிறகு அவள் சந்தோஷமாய் இருந்தால் காணும்.” என்று அவர் கதைத்ததையும் கேட்டேன். அம்மா கண்ணீர் விட்டதையும் பார்த்தேன்.
இப்பிடியான ஆட்களே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? மனத்தில் தோன்றுவதை என்னைப் போன்ற பெண்களால் வெளியே கதைக்க முடியுமா?
இரவு ஒன்பது மணி இருக்கும். கார் ஒன்று வந்து நின்றது. மாப்பிள்ளை வீட்டுக்காரர் தான். ஐயா அம்மா என்று எங்கள் வீட்டுக்காரர் எல்லாருமே வரவேற்றார்கள்.
ஐயாவோடு அவர்கள் குசுகுசுத்தார்கள். பிறகு கொஞ்சம் உரத்த குரலில் கதைத்தார்கள். பிறகு அப்பிடியே சத்தம் கூடிக் குறைந்து… போய் விட்டார்கள்
அம்மாவின் கண்ணீரைப் பார்த்த பின்னர்தான் எனக்குச் சர்வமும் விளங்கியது. ஐயா தலையில் கை வைத்தபடி இருந்தார். அவர் விழியோரங்களிலும் ஈரக் கசிவு.
“காசு ஒரு லட்சத்தையும் ஒருமிக்க தரட்டாம். முன்னர் ஒப்புக் கொண்ட மாதிரி ஐம்பது காசும் மிகுதிக்கு பொறுப்பாய் காணியும் வேண்டாமாம்.”
நாளைக்கு ஒரு நாள்தான். அதற்கிடையில் ஐம்பதை எங்கை புரட்டுறது. முதலில் சம்மதிச்சவை. பிறகு ஏன் இப்பிடி கதையை மாற்றினம். என்று வீட்டில் எல்லோரும் கதிகலங்கினார்கள்.
“காசு சரி வராவிட்டால் றிஜிஸ்ரேசனுக்கு வைச்ச நாளை மாத்துங்கோ… வாற மாதம் வைக்கலாம்…”
ஒரு மாதத்திற்கு இடையில் சரிவந்தால் சரி…இல்லா விட்டால் கலியாணப் பேச்சை விட வேண்டியதுதான்’ என்று அவர்கள் சொன்னார்களாம்.
தியேட்டரில் சனமில்லை. கடைசி வரிசையில் ஓரமாக அமர்ந்திருந்தார்கள். பழைய காலத்துப் படம். சனங்கள் இல்லை. நிர்மலாவுக்குப் படம் பார்ப்பது சிம்ம சொர்ப் பனம். தலையிடிக்கும். ஆனால் மறுக்க முடியவில்லை. பிடிக்காவிட்டாலும்…
அவர் சிகரெட் புகைத்து…புகைத்து… புகையை விழுங்கிக் கொண்டிருந்தார். ஆனால் புகையால் பிரச்சினைப்படவில்லை.
நிர்மலா கிறீன் கலர் சாறியில் பசுமையாக இருந் தாள். மெல்லிய இருளில் விழிகள் பிரகாசித்தன. ‘அப்பாடா’ என்றார் அவர்.
நிர்மலா திரும்பிப் பார்த்தாள்.
‘ஏனெண்டு கேக்கேல்லை…’ மீண்டும் அவரே கேள்விக் கணை தொடுத்தார்.
அவர் மெல்லியதாகப் புன்னகைத்தது அந்த மெல்லிய இருளிலும் ஒளி வெள்ளமாகப் பாய்ந்தது.
“ஏன் அப்பாடா எண்டு சொன்னனான் தெரியுமே. பாருமன் தாங்கள் இருக்கிற பக்கம் சனங்கள் ல்லை. நாங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்…’ என்று அவர் முகத்திற்குக்கிட்ட வந்து சொன்னார்.
”ம்…’
“நீர் எப்பவும் சந்தோஷமாய் இருக்க வேணும்”
‘என்ன மனவேதனை எண்டாலும் என்னட்டைச் சொல்ல வேணும் சரியே…’
‘ஓ’
‘எனக்கு மனத்தில ஒண்ட வைச்சுக் கொண்டு வெளி யில ஒண்டைக் கதைக்கேலாது. அப்பிடிக் கதைக்கிறவையையும் பிடிக்காது. அதேமாதிரி சொல்லுற சொல்லை மாத்திறவையை ஏமாத்திறவையை கண்டாலே பிடிக்காது.’
நிர்மலா திரையைப் பார்க்காமல் அவரைத் திரும்பி பார்த்தாள். மனதுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் முளைவிட்டன். பிறகு அவை அப்பிடியே கருகிப் போயின. அவள் எதையும் கேட்கவில்லை.
‘நீர் இண்டைக்கு வழக்கத்தைவிட நல்லாய் இருக் கிறீர்” என்று சொல்லிக் கொண்டு முகத்தை அவள் பக்கம் திருப்பினார். அவர்.
யூன் 10ஆம் தேதி
இன்றைக்கு றிஜிஸ்ரேசன் என்று இருந்தபடியால் நான் முன்னரே லீவு எடுத்து விட்டேன். எடுத்த லீவை கான்சல் பண்ணிவிட்டுத் திரும்ப ஒப்பீசுக்குப் போக மனம் வரவில்லை.
எனக்கு வேதனை வரவில்லை. ஆனால் வெறுமை. அந்த வெறுமையில் மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. எல்லாமே ஒழுங்காக இருந்திருந்தால் எனக்கு இன்றைக்கு றிஜிஸரேசன் நடந்திருக்கும்.
ஆனால்.
நேற்றைக்கு இடையில் ஐம்பதினாயிரம் புரட்டுவது என்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயலா? ஏங்கனவே கொடுக்க ஒப்புக்கொண்ட காசையும் கடன் பட்டுத்தான் சேர்த்திருந்தார்கள். பிறகு மீண்டும் காசு கடன்படுவது என்றால்…
எனக்கு இந்த மாப்பிள்ளையே வேண்டாம் என்று சொல்லி விடலாமா? கதைகளிலும் சினிமாக்களிலும் தான் அப்படிப் பெண்களால் சொல்லிவிட முடிகிறது… வாழ்க்கையில்…
அப்படியிருந்தும் ஐயா நேற்றுப்போய் வாற மாதம் வரையும் பொறுத்துக் கொள்ளும்படியும் மன்றாடிக் கேட்டுவிட்டுத்தான் வந்திருக்கின்றார். அவர்களும் வாற சீமாதம் நாள் இருக்கு.அதற்கு இடையில் ஒரு லட்சத்தை சேர்த்துப் போடுங்கோ. ஒரு மாத தவணைதான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஐயாவும் அண்ணைமாரும் ஓடித் திரியினம். எவரா லும் மாப்பிள்ளை வீட்டுக்காரரை எதிர்க்க முடிய வில்லை. எங்கள் சமுதாயத்தின் நிலைமை அப்படி.
பெண்கள் சமுதாயத்திற்குப் பயப்பட வேண்டி இருக் கிறது. தெருவில், வெளியில் குறை கேட்காமல் – வாழத் தெரிந்தவர்களைக் கூடப் பார்த்துச் சிரிக்காமல்-கதைக் காமல் ஐயாவுக்குப் பயந்து, அம்மாவுக்குப் பணிந்து, அண்ணை தம்பிக்குத் தலை குனிந்து, வெளியுலக பூனை களை, ரதிகளை ஒத்த பெண்களை வம்புகள் செய்யும் ஆண் களுக்கு இடையில் தப்பி – நல்ல பெயர் காவி – கடைசியில் இப்பிடி எந்த நேரம் கலியாணம் குழம்பும் என்று கதி கலங்கி…
இப்படி காசுக்குச் சண்டை பிடிப்பவர்களுடன் நாளை எப்படி வாழ்க்கை நடத்துவது? உடம்புதான் பலவந்தத்தால் அவர்களுடன் சேரும்… மனம் சேருமா?
வாழ்க்கைப் பயணத்தில் நன்மையிலும் தீமையிலும் எது நடந்தாலும் துணைக்கு வரும் பெண்ணை இப்படி வேதனைப்படுத்தி விட்டு, பிறகு எந்த முகத்தோடு சிரித்து கதைத்து-கட்டியணைக்க நினைக்கிறார்கள்.
சேட் கொலரைப் பற்றிப் பிடித்து நேருக்கு நேர் கேட்க வேணும் போல… ஆனால் கேட்கலாமா? எங்க ளால் கேட்க முடியுமா?
பின்னேரம் போல சுலோசனா வந்தாள். என் மனநிலை தெரிந்தவள். என்னை சமாதானம் செய்தாள்.
வாழ்க்கைப் பயணத்தில் சில வேளை கண்ணை மூடி சில வேளை காதை மூடி – சிலவேளை வாயை மூடி-வாழ வேண்டியிருக்கு என்றாள்.
கோயிலுக்குப் போய்விட்டு ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள் நிர்மலாவும் அவரும். ‘வடிவாய் சாய்ந்து இரும்” என்று சொன்னதை நிர்மலா காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
“என்ன…இன்னமும் சாயேல்லை…”
அவள் சாய்ந்தாள்.
“இன்னும் கொஞ்சம்… நெருங்கலாம்.”
நெருங்கினாள்.
“கோயிலிலை என்னத்தை நினைத்துக் கும்பிட்டனீர்” அவள் பதில் சொல்லவில்லை.
”சொல்லுமன்…”
“பிறகு சொல்லுறன்…”
“உமக்கு இந்த பிறவுண் கலர் சாறி நல்லாய் இருக்கு எல்லாக்கலரும் நல்லாய் மச்பண்ணுது.”
“ம்…”
“உப்பிடி எல்லாக் கலரும் எல்லாருக்கும் மச் பண்ணாது…என்ன”
“ஓமோம்…”
“ஏன் எப்பவும் சுருக்கமாகவே பதில் சொல்லுறீர்… வடிவாய் கதையுமன்..”
“ம்…”
“இப்பிடியே உங்கடை வீட்டை போவமோ அல்லது வேறை எங்கையாவது போவமோ…”
”ஏன்…”
“இல்லை…வேறை எங்கையாவது போய் கொஞ்ச நேரம் சந்தோஷமாய் இருக்கலாம் எண்டுதான். வாழ்க் கையில் நிம்மதி… சந்தோஷம்தான் முக்கியம்…”
“ம்….’
“அப்ப இப்பிடியே ரவுணுக்குப் போய் பிறகு வீட்டை போவம்; உம்மை விட்டிட்டு போக மனம் வரேல்லை…’
“போவம்…”
“எங்கை… “
“நீங்கள் சொன்னபடி ரவுணுக்கு…”
“என்ன… பழையபடி பின்னுக்குப் போறீர்…நீர் பின் னுக்குப் போனால் நானும் பின்னால் சரிவன்…” என்று அவர் சொல்லி சிரித்துக் கொண்டு.
“வடிவாய் நெருங்கி இரும்…” என்றார்
யூலை 11ஆம் திகதி
விபரிக்க முடியாத வேதனைகள், கண்ணீர் சகிதம் ஐயாவும் ஏனையவர்களும் கடந்த ஒரு மாதமாக எத்தனை ஓட்டம் ஓடினார்கள். வெளியில் இருக்கிற தம்பிக்கும் கடிதம் எழுதினார்கள். பாவம் அவன் என்ன செய்வான் சின்னக்காவுக்கு கலியாண வீட்டுச் செலவுக் கும்… பிறகு எனக்கு வீடுகட்டவும் அவன்தானே தன் முழு உழைப்பையும் தந்தவன்.
அவனும் அங்கு தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் பட்டு முப்பதினாரயிரம் அனுப்பினான். வீட்டில் மிச்ச மாய் ஒன்றும் இல்லை. அம்மாவின் நகை அத்தனையை யும் அழிச்சு புதிசாய் எனக்கு நகை செய்தாகி விட்டது.
ஐயா என்ன கஸ்டப்பட்டாரோ…யாரின்ரை காலில் விழுந்தாரோ…இந்த ஒரு மாதத்துக்கு இடையில் மிகுதி இருபதினாயிரத்தையும் சேர்த்து முதல் வைத்திருந்த ஐம்பதினாயிரம்… தம்பி அனுப்பிய முப்பதினாயிரம்… எல்லாம் ஒன்றாகிவிட்டன.
இன்றைக்கு றிஜிஸ்ரேசன்.
எல்லா வேதனைகளையும் கஸ்டங்களையும் மறந்து ஐயாவும்…அம்மாவும் ஏனையவர்களும் பம்பரமாக செயல்பட சுலோசனாவும் ஏனைய சினேகிதர்களும் என்னை அலங்சரிக்க ஏற்கனவே அழகான என் உடம்பு மேலும் அலங்காரமானது.
மனம்…அதை எதனைக் கொண்டு அலங்கரிப்பது… நந்தகுமார் என்னும் நாகரீகமான- ஹான்சமான ஆணுக்கு என் உடம்புதான் தனியச் சேரப் போகின் றதா? என் உடம்பை அவர் ஆக்கிரமிக்கலாம். முற்று கையிடலாம் மனத்தை அடைய அவரால் முடியுமா?
அகலமான ஹாலின் அலங்காரப் பின்னணியில் அழகான நந்தகுமாரையும்… என்னையும் விதம் விதமான போஸ்களில் தனித்தும், உறவினர்கள், நண்பர்களுடனும் படங்களும் எடுத்தார்கள்.
எழுத்து முடித்து தனித்து விடப்பட்ட போது ஸ்ரைலாக புகைப் பிடித்துக் கொண்டு அவர் சிரித்துக் கதைத்த போது நானும் சிரித்தேன்.
ரவுணுக்குப் போய்விட்டு நிர்மலாவை அவர் வீட்டை கொண்டுவந்து விட்டபோது இரவு ஏழரைமணியாகி விட்டது. பௌர்ணமி தினமாகையால் நிலவு இலவச மாக உலகத்தை பொன் முலாம் பூசிக்கொண்டிருந்தது.
வீட்டுவாசலில் ஸ்கூட்டர் நின்றதும் வெளி விறாந்தை யில் அவளுக்காகக் காத்திருந்த அவள் அம்மா எழுந்து உள்ளே போய் விட்டாள்.
“வாங்கோவன்…” என்றாள் நிர்மலா.
“இல்லை. லேட்டாய் போச்சு.நான் போறன்,இப்ப கிட்ட ஒருக்கா வாருமன்…”
அவள் போனாள்…
“இப்பிடியான நிலவு நேரத்தில் கடற்கரையில இருக்க வேணும்”
“ம்…”
“கிட்ட வாருமன்…”
அவள் போனாள். நெருங்கியவளை அப்படியே இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அவள் விரை வாக விலகிக் கொண்டாள்.
“நான் வரட்டே. நாளைக்கு ஒப்பீஸ்சுக்கு போன் பண்ணுறன்” என்று சொல்லி பழையபடி ஸ்கூட்டரை ஸ்ராட் செய்து கொண்டு போய்விட்டார்.
நிர்மலா வீட்டுக்குள் போய் உடுப்பை மாற்றிக் கொண்டு வந்தபோது…
“வந்து சாப்பிடன் பிள்ளை” என்றா அம்மா…
“பிறகு சாப்பிடறன்…” என்று சொல்லிவிட்டு
வீட்டின் பின்பக்கம் போய் தான் வழக்கமாக இருக்கும் அந்த மாமரத்தின் கீழ் இருந்த சாய்மனைக் கதிரை யில் இருந்தாள்.
நிலவின் ஒளி பொன் கம்பிகளாக… மாமர இலைகளுக்காக எட்டிப் பார்த்தன. சில அவள் முகத்திலும் வீழ்ந்தன.
அம்மா வந்தாள்…
“பிள்ளை…நான் சொல்லுறதைக் கேள், றிஜிஸ் ரேசன் முடிஞ்சபிறகு நீ வழக்கம் போல சந்தோஷமில்லை…உன்ரை மனத்தில இருக்கிறது எனக்குத் தெரியும். உன்ரை சினேகிதி சுலோசனாவும் சொன்னவள்… ஏதோ வாழ்க்கையைக் குழப்பிப் போடாதே…சந்தோஷமாய் இரு…” என்று சொல்லும் போதே அம்மாவின் குரல் சிதறுவதையும் அவள் விம்முவதையும் நிர்மலா உணர்ந்தாள்.
பிறகு…
“நான் வாறன் பிள்ளை” என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.
நிர்மலாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. தன் மடியில் இருந்த டயறியை எடுத்தாள். ஒவ்வொரு நாளும் டையறி எழுதும் அவள் றிஜிஸ்ரேசன் நடந்த பின்னர் ஒருநாளும் எழுதவில்லை.
சமீப காலமாக தான் எழுதியவைகளை நினைத் துப் பார்த்தாள். தனது அம்மாவையும் நினைத்தாள். மனத்தில் வேதனை அதிகமானது. கண்ணீரும் பெருகியது.
தான் எழுதிய டயறியின் பக்கங்களை ஒவ்வொன் றாகக் கிழித்துப் போடத் தொடங்கினாள்.
– வீரகேசரி, 30-9-1984.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.