சேந்தாங்குளம்

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டு வருடங்களின் முன்பு இலங்கையின் வடக்கே ஏதோ ஒரு பிரதேசத்தில் வேலையை ஏற்கும் படி எனக்கு அழைப்பு வந்தது. சீமேந்துத் தொழிற் சாலையிலே ‘இரசாயன எஞ்சினியர்’ உத்தியோகம்.
ஆறாயிரம் மைல்களைக் கடந்து சென்று இந்த உத்தி யோகத்தை ஏற்கத் தயக்கமாகத்தான் இருந்தது. பொதுவாகக் கிழக்கு நாடுகள் பற்றி நான் அறிந்திருந் தவை, அவ்வளவு உற்சாகம் ஊட்டுவனவாய் இல்லை. அதிலும், ஆசியாவின் காலடியிலே மாங்கனி வடிவிலே அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவாகிய இலங்கை பற்றி, தேவதைக் கதைகள் போல என்னவெல்லாமோ சொன் னார்கள். கேட்கக் கேட்க வியப்பாகவும், அச்சமாகவுங் கூட இருந்தது.
ஆனாலும் நான் அங்குப் போய்த்தானாக வேண்டும். எனது சிதைந்துபோன மனத்திற்கு ஓரளவு நிம்மதி கிடைக்கவேண்டுமானால் இதைவிட வேறு வழியே இல்லை. மரணத்தின் பயங்கர நிழல் படிந்திருந்த அந்த வேளையில் எங்காவது ஓடித் தொலைவதுதான் சாந்தி கிடைக்கும் ஒரேஒரு மார்க்கமாக எனக்குப் புலப்பட்டது.
ஆந்தரீகமான இதயச் சிதைவுகள், கண்ணாடித் துண்டுகள் போல, எனது உயிரையே குத்திக் குதறிக் கொண்டிருந்த நாள்கள் அவை. அந்தகாரச் சூனிய நினைவுகளிலே கருகிப் போவதிலும் சாவதே மேலென்றும், அவ்வாறு சாவது கோழைத்தனம் என்று தள்ளிவிட வேண்டுமானால், என்போரைக் எனது உற்றார், உறவினர், இனசனம் காணமுடியாத எல்லைக்கு ஓடிவிடவேண்டுமென்றும், நான் முடிவுகட்டியிருந்த வேளை.
எனது மனைவியும், அருமை மகள் ஒரே நாளில் றோசலினும் கார் விபத்தால் என்னிலிருந்து பிரிக்கப் பட்டனர். மெல்லிய தென்றலிலே சிலிர்த்துக் கிடந்த றோசாச் செடியை அதன் முட்களே இறுக்கிப்பிடித்து நசித்துச் சீரழித்துவிட்டது போன்ற உணர்ச்சி. பாசத் தின் பயங்கரக் கொடுமையை அப்பொழுதுதான் என் னால் உணரமுடிந்தது.
எனது ஆத்மாவின் மீது முதலாவது ஒளிக் கதிரைப் பாய்ச்சி அதற்கு விளக்கத்தையும், அர்த்தத்தையும் தந்தவள் எனது அன்பு மனைவி எவாஞ்சலின்.
‘மாலைப்பொன் வெயில் மணக்கின்ற வேளைதனில்
வேலை விழியை மலர்த்தி வழிநின்று
வாருங்கள் என்றே வர வேற்கும் வாய்ப்பரிய
தேனே ! கனியே ! தெவிட்டாத நற்பாகே ! ‘
என்று அவளுக்காக எனது நெஞ்சிலே கவிதைகள் ஊறிப் பிரவாகித்து, என்னையே மூழ்கடித்துக்கொண்டிருந்தன.
எனது அருமை மகள் றோசலின்…? வாழ்வெனும் நறுமலர்ச்சோலையிலே எவாஞ்சலின் என்ற புதுமலரின் திரள்பயனாக, அத்தராக நின்று உள்ளும், புறமும் மணக்க வைத்தாளே என்குழந்தை றோசலின்? என்னால் அடையப்படக்கூடாத, அனைத்திலும் மேலான ஒரு கன வாக, எனது உயிரிலே பதிந்து ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்ட அவளை நான் மறப்பது எப்படி? இந்தக் கணத் திலேகூட அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுக் கால்கள் எனது இதயத்திலே உதைத்துக்கொண்டிருக்கின்றன.
என்னைத் தழுவிக்கொண்டு, தனது குழிவுக்கன் னத்தை எனது கன்னத்தோடு ஒட்ட வைத்துக்கொண்டு, எனக்குள்ளே என்னைக் காட்டி, என்னையே தானாக்கிக் கொண்ட அந்தச் சிறுமியை மறப்பதிலும், நினைத்துப் பார்ப்பதே மகா கொடிய அனுபவமாக இருந்தது…
அவள் என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தாள். என்னைச் சூழ்ந்திருந்த தாவர, சங்கமங்கள் அனைத்தையும் விழுங்கிக்கொண்டு, விசுவரூபித்தவளாய் என்னை அரித்தரித்து, அழித்தழித்துச் சாகாமல் சாக வைத்துக் கொண்டிருந்தாள்.
எல்லாமே வெறுத்தன.. றோசலின் போன்ற உரு வெளித் தோற்றமே ஏற்படாத ஒரு மூலைக்கு நான் போய்விடல் வேண்டும்…
ஆயிற்று. இன்னும் ஒரு மாதம்.
(2)
இலங்கை வந்தடைந்தேன்; வடக்கே சென்று கடமையை ஏற்றேன்.
எனக்குச் சொல்லப்பட்டவையும், நானே வாசித்துக் கொண்டவையுமான செய்திகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாகிவிட, நிருவாண உண்மை என் முன்னால் கவர்ச்சியோடு. நிமிர்ந்து நின்றது. அந்த உண்மையில் அழகு இருந்தது; திருப்தி இருந்தது; நம்பிக்கை இருந் தது. வேறு என்ன வேண்டும்?
சுதந்திரம் கிடைத்ததும், புதிய நல்வாழ்வை எதிர் நோக்கிப் பிரசவ வேதனைப்படும் ஓர் இளம் சமுதாயத் தின் பிரதிபலிப்பை நான் இந்த அழகிய தீவிலே கண் டேன். அது எனக்கு ஒரு புதுப் பலத்தைத் தந்தது. அவர்களுக்கு உதவி, அவர்களின் முயற்சிகளைக் கை தூக்கிவிடுவது எனக்குக் கிடைத்த பெரும்பேறு எனக் கருதினேன்.
அதிகம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? புகை யும் புழுதியும் படிந்ததும், இரைச்சல் செறிந்ததுமான தொழிற்சாலையினுள்ளே என்னையும் ஓர் அங்கமாக்கிக் கொண்டு, எனது கடமையிலேயே மூழ்கிக் கிடந்தேன்.
ஆனால், இவையெல்லாம் எத்தனை நாளைக்கு ? உத் தியோக பத்ததியின் கெடுபிடிகளும், எனது வெள்ளைத் தோலும் மற்றவர்களிலிருந்து என்னைப் பிரித்து வைக்கத் தான் உதவின. பாலைவனத்திலே நாளெல்லாம் அலைந்து திரிந்த ஒருவன், பசும்புற்றரையைக் கண்டும் அதை அடையமுடியாது கால்கள் முடமாகிவிட்டது போன்ற பயங்கர வேதனை மீண்டும் என்னைப் பீடிக்கத் தொடங்கி விட்டது. அசமந்தமான நாள்களின் ஆமை வேகப் பயணத்திலே நான் ஒரு தூசாக, துகளாக ஆகி விட்டதுபோல இருந்தது. என்னை உணர்ந்து, என் னுடன் சமமாகப் பழகி எனது விருப்பு வெறுப்புக் களிலே பங்குகொள்ள யாருமே இல்லாத அநாதர வான நிலையில், நான் எதைத் தேடி ஆறாயிரம் மைல் களைக் கடந்து வந்தேனோ, அது எனக்குக் கிடைக்க வில்லை; கிடைக்கவேயில்லை.
பள்ளமும் மேடுமான ஒழுங்கற்ற தெருக்களும், பாதையோரங்களிலே முளைத்துக் கிடந்த பற்றைப் புதர்களும், ஓயாது ஒழியாது பேரிரைச்சல் செய்யும் கடலுந்தான் எனக்குத் துணைவர்களாயின.
(3)
கே. கே. எஸ். ஸில் இருந்து மூன்று மைல் தூரத்திலே ஏகாந்தமான ஓர் இடம் இருக்கின்றது. அதற்குப் பெயர் ‘சேந்தாங்குளம்’. வெண் மணலும், கருங் கடலும் கலந்து உறவாடும் இடம் அது. ஞாயிற்றுக் கிழமைகளிலே என் கீழ் அதிகாரிகள் சிலரை வருந்தி அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்குச் செல்வேன்.
மாலைவேளையில் வானம் இரத்தக் களரியாக மாறி விட்டிருக்க அதனுடைய பாதங்களைக் கட்டியணைத்த படி கடலானது சோக கீதம் எழுப்பிக்கொண்டிருக்கும். மலைப் பாம்புகளைப் போல நுரைத் தோல்களால் தங்களை மூடியபடி அலைகள் சீறிச் சீறிப் புரளும். நீர்த் திரட்சிக்குள்ளே உடம்பைப் புதைத்துக்கொண்டு கால மெல்லாம் கிடந்துவிடவே தோன்றும். நேரம் போவது தெரியாது.
குழந்தைகள் போல் தத்தித் தவழ்ந்து நடை பயின்று அலைகள் புரளும்போது துள்ளிப் பாய்ந்தும், தெப்பம் போல மிதந்து கிடந்தும், மிக வேகமாகத் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு நீந்தியும் செல்வதிலே எனது துன்ப துயரங்கள் குறைந்து போவதுபோலப் பிரமை ஏற்பட் டது.
ஆனால், இதுவும் நீடிக்கவில்லை. என்னோடு கடலுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக, எனது தலையைக் கண் டாலே ஓடி ஒளிக்கத் தொடங்கினார்கள். உப்புத் தண் ணீரிலே குளிப்பதால் உடம்பு பிசுபிசுக்கிறதாம். தலை மயிரில் அழுக்கு ஏறுகிறதாம்.
மீண்டும் தனிமை, ஏக்கம், சோகம். எனது றோச லின் மீண்டும் எனது இதயத்தைச் சல்லடைக் கண்க ளாக்கத் தொடங்கினாள். புலப்படுத்த முடியாத சோக அலைகள் எனக்குள்ளே குமுறி ஆர்ப்பரித்து என்னை விழுங்கலாயின.
மரண தாகம்போல எழுந்த இதய தாகத்திற்கு விஸ்கியும் பிரண்டியும் எவ்வகையிலும் பிரயோசனப் படவில்லை. நான் அழிந்துகொண்டிருந்தேன். சகல நம் பிக்கைகளும் இழந்த அபாக்கியவானாக, இந்தச் சிறிய தீவிலேதான் நான் எனது கடைசி மூச்சை விடப் போகிறேன் போலும்.
(4)
”கர்த்தரே! உமக்கு ஸ்தோத்திரம். நீர் எனது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டுவிட்டீர். இல்லா விடில் இத்தகைய பெரும்பேறு எனக்கு என்றைக்குமே கிட்டியிருக்காது.”
சேந்தாங் குளத்திலே நான் அடிக்கடி சந்தித்து, ரொபி முதலியன கொடுத்து அறிமுகம் செய்துகொண்ட சிறுவர்கள்தாம். அவர்களுக்கிடையே இந்தச் சிறுமி எப்படி முளைத்தாள்? அவள்…
போதிய போஷாக்கில்லாது சற்றே சோகை பிடித்து உப்பிய முகம். ஆறுவயதுக்கு மேல் போகாது. ஆனால், கிழக்கு நாடுகளுக்கே உரிய வளர்ச்சி குறைந்த தன்மை. பரட்டை மயிர்… அழுக்கேறிய பொத்தல்கள் விழுந்த சிறிய கவுண். அதற்குக் கீழே சோடை பற்றி மெலிந்த கால்கள். மாலைக்கால மஞ்சள் வெயிலுக்கும், கப்பி வரும் இருளுக்கும் இடைப்பட்ட பொது நிறம். இவை எடுத்த எடுப்பில் எவனுடைய மனத்தையும் ஈர்த்துவிடாது என்பது உண்மையே.
ஆனால், எனக்கு அந்தக் கோலத்தைப் பற்றிய அக் கறையோ, வெறுப்புணர்வோ ஏற்படுவதற்கு முன்பே எனது கட்டுப்பாட்டையும் மீறிக்கொண்டு மனம் அவ ளிலே சென்று லயித்துவிட்டது. அர்த்தமிருந்தோ, அர்த்தமில்லாதோ அவள் சிரிக்கும்பொழுது, அந்தக் கன்னங்கள் குழிந்து… ஆண்டவனே ! என் றோசலினுக்குத்தான் இப்படிச் சிரிக்கத் தெரியும்.’
நான் அந்தச் சிறுமியை வைத்த கண் வாங்காது பார்த்து நிற்கிறேன். அந்தப் பரட்டை மயிர், சுருண் தொங்கும் பொன் மயிர்க் கற்றையாகவும் அந்தக் கண் கள் நீலமணிச் சுடர்களாகவும், அந்தக் கன்னக் குழிவு கள் தக்காளிச் சிவப்பும், நெருப்பொளியும் பெற்றுள்ள தீக்கங்குகளாகவும்… என் றோசலின்… என் கண்மணி…
ஓடிச் சென்று அவளைத் தூக்கி ஆசை தீர முத்த மிட்டு என் நெஞ்சுக்குள்ளே அணைத்துக்கொள்கிறேன்.
அந்தச் சிறுமி பயந்து கதறுகிறாள். சிறுவர்கள் பயப்பிராந்தி கொண்டு ஓடிப்போகிறார்கள். அவளும் பலவந்தமாக என்னிலிருந்து விடுபட்டுக் கொண்டு கண் ணீருங் கம்பலையுமாக ஓடுகிறாள், பயந்தழுவி நின்ற நிலையிலே உருண்டு புரண்ட அந்த விழிகளிலும் றோசலினைத்தான் கண்டு…
நெஞ்சு கரைந்து உருகுகிறது. கண்கள் கசிகின்றன றோசலின் ஆவாகனமாகிவிட்டிருந்த அந்தச் சிறுமி யையே நோக்கி நிற்கின்றேன்.
என்னால் தாளமுடியவில்லை. மீண்டும் கடலினுள் பாய்ந்தபொழுது, எனது கண்ணீர்த் துளிகள் பொல பொலவென்று உப்பு நீரோடு, உப்பு நீராய்க் கலந்துவிடு கின்றன. உடலின் வெப்பம் தணிந்துபோகும்வரை கடல் அலைகளிலேயே மிதந்துகொண்டிருக்கின்றேன்.
(5)
காலமும், நான் கொடுத்த ‘ரொபி’ மற்றும் விளை யாட்டுப் பொருள்களும் சேர்ந்து அந்தச் சிறுவர்களை யும், விசேடமாக அந்தச் சிறுமியையும் என் பக்கத் திற்கு இழுத்து வந்தன.
அவளுக்குப் பெயர் லில்லி மலர். கடற்கரையிலே வாழ்ந்த மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அம்மா நண்டு பிடிக்கவும், அப்பா மீன் பிடிக் கவும் போய்விடுவார்கள். அந்த வேளைகளில் அவளும், அவளுடைய அண்ணன்மாரும் பக்கத்து வீட்டுச் சிறுவர் சிறுமிகளும் கடற்கரையிலே வந்து விளையாடுவார்களாம். அப்படியாக நான் கற்பனை செய்துகொண்டேன். அவர் களுடைய பாஷைதான் எனக்குப் புரியாதே !
ஆனாலும், நாங்கள் எங்களின் மூதாதையரது பாஷை யாகிய சைகை முறையிலே பல விஷயங்களைப் பேசிக் கொண்டோம். ஓடிப் பிடிப்பதும், தூக்கித் தோளிலே சுமந்து துள்ளுவதும், எனக்குஞ் சரி அவர்களுக்குஞ் சரி மிக விருப்பமான செயலாக இருந்தன.
இந்தச் சாக்கிலே நான் லில்லியை எனக்கு மிக அருகிலே கொண்டுவந்துவிட்டேன். அவளுக்கு நான் வைத்த பெயர் றோசலின். எனது இதய தாபங்கள், பாசங்களின் சுமைதாங்கியாக அந்தப் பெயர் விளங் கியது. சிறிது நாட்களில் சிறுவரிடையேயும் அதுவே பிரசித்தி பெற்றுவிட்டது.
சிறுவர்களின் இயல்பான நுண்ணறிவு எனக்கும் நன்கு றோசலினுக்குமிடையே ஏற்பட்ட பிணைப்பினை எடைபோட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். நான் எப்பொழுது போனாலும்சரி றோசலின் கடற்கரை யிலே இல்லாவிட்டால், ஓடிச் சென்று அவள் நித்திரை யாக இருந்தால்கூடப் பிடித்து இழுத்து வந்துவிடுவார்கள்.
அவள் எனக்குப் பக்கத்திலே எனது தொடையிலே தனது மெலிந்த குருத்துக் கையைப் போட்டுக்கொண்டு, தலையை ஆட்டி, ஆட்டிக் கன்னங்கள் குழிவிழச் சிரிக் கும்போது… ‘ஓ! எனது றோசலின் இறக்கவில்லை. இணைந்தபடி இதோ எனக்குப் பக்கத்திலே என்னிலே இருக்கிறாளே என்று பெருமை கொண்டு தலைநிமிர முடிகிறது இந்தப் பிணைப்பை, இந்தப் பேரானந்தத்தை என்னால் இழக்கவே முடியாது.
எல்லைகடந்த செக்கர்வானமும், குமுறிக் கொந்த ளிக்கும் பெருங் கடலும் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்கின்றன. வைரப் பாறையிலே தத்தித் தவழ்ந்து ஓடு கிறது சிற்றாறு. கோடிக்கணக்கான மைல்களுக்கப்பால் கிடக்கும் நெருப்புக் கோளத்தின் கதிரொளியிலே மலர் களெல்லாம் மலர்ந்து பரவசமாகின்றன. இந்தப் பிணைப்பிற்கு வியாக்கியானம் செய்வது எவ்வளவு சிரம மானதோ, அவ்வளவு சிரமமானதுதான் எனக்கும். இந் தச் சிறுமிக்குமிடையே ஏற்பட்டுள்ள அன்பிற்கு வியாக் கியானம் செய்வதும்!
கற்களையும், மண் வகைகளையும், அவற்றின் கலப்பையுமெல்லாம் பல்லாண்டுகளாய் ஆராய்ச்சி செய்து வந்தும், எனது மனம் இன்னும் மண்ணாகவோ, கல்லா கவோ ஆகிலிடவில்லையென்றால், அதற்கு றோசலினும்,
றோசலினாகிவிட்ட இந்த அன்புச் சிறுமியுமே காரணம் என்று நான் உறுதியாகச் சொல்லமுடியும்.
பாச உணர்ச்சி வளர வளர றோசலினைப் பிரிந்திருப் பதே இயலாத செயலாகிக்கொண்டிருந்தது. பிற்பகல் எப்போது வரும், றோசலினை எப்போது காண்பேள் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு நான் அவளிலே கலந்துகொண்டிருந்தேன்.
எனது கார் ‘கோண்’ சத்தம் கேட்டதுமே றோச லின் ஓடிவரப் பழக்கப்பட்டிருந்தாள். அவள் அந்த மணலிலே தனது பஞ்சுப் பாதங்களைப் பதித்து ஓடி வரும்போது, றோசலினே உயிர் பெற்று ஒரு தேவதை யாகி, மெல்லப் பறந்து வருவதுபோல எனக்குத் தோற் றும். ஓடிச் சென்று அவளைத் தூக்கி ஆர அணைத்தபடி என்னையே மறந்து போவேன்.
மாலைக் கருக்கல் மங்கி மறைந்து இருள் பரவி றோசலினது தாய் அவளை அழைக்கும் குரல் கேட்கும் வரை, அந்தக் கடற்கரையின் ஒற்றைப் பூவசர மரத்தின் கீழேயே இருவரும் அமர்ந்திருப்போம். அவள் தனது பாஷையிலே பேசுவாள்; நான் எனது பாஷை யிலே பேசுவேன். இருவருக்கும் ஒன்றும் புரியாது. புரியவேண்டிய அவசியம்கூட இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளப் பாஷைதான் அவசியமென் றால், எமது மூதாதையர் எந்தப் பாஷையிலே பேசிக் கொண்டார்கள் ? உள்ளத்தை மூடி மறைத்துப் போலி அரண் எழுப்பி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ளவே உதவி வரும் பாஷை எமக்கு வேண்டாம். எமது இத யங்களின் பாஷைதான் பளிங்குபோல தெளிவாக, விளக்கமாக இருக்கிறதே.
எனது அனைத்துலகுமே இந்த மூன்றடிச் சிறுமிக்குள் ளேயே அடங்கிவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட, அந்த உணர்ச்சியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருந்தேன்.
“கண்ணீருக்கும் குருதிக்கும், வானத்திற்கும், கட லுக்கும் எவ்விடத்திலும் பேதமற்ற ஒரே நிறந்தான். உள்ளுணர்வுகளும், இதய தாகங்களும் இந்த நிறத்தைப் போல அமைந்தவையே. சாதி, மத, ன பேதங் களைக் கடந்தவை இவை.”
இந்த ஞானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, என்னைக் கவிந்திருந்த இனப் பெருமை, உத்தியோகப் பத்ததி எல்லாம் பாம்புத் தோலைப் போலக் கழன்றுவிட, றோச லின் எனது இதய தேவதையாகி, அவளது குழந்தை மையின் முன்னால் எனது அனைத்துமே சமர்ப்பண மாகிக்கொண்டிருந்தன.
எனது கார் மணலிடையே ஊர்கிறது.
றோசலின் கார் ‘ஹோண்’ சப்தம் கேட்டதும் மணலிலே மிதந்து ஓடி வருகின்றாள்.
அவளைத் தூக்கி அணைத்து எனது அன்பு முத்திரையைப் பதித்து…
“மேலும் இரண்டு வருடங்களுக்கு எனது சேவை ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொண்டேன் டார்லிங்! அது உனக்காகத்தான்; உனக்காகவேதான்’ என்று விரிவாக, அழகாக, சிரிப்புக் குலுங்கல்களுக்கிடையே சொல்லப்போகிறேன்.
எனது பாஷை அவளுக்கு விளங்காதுதான்.
ஆனால் எனது சிரிப்பு, பாசம், நெஞ்சம் என்பன இருக்கின்றன.
அவை போதும்… அவள் என்னைப் புரிந்துகொள் வாள். அந்தப் புரிதலின் தெளிவிலே அவளது கன் னங்களிலே குழி விழ, அவள் சிரிக்கும்போது…
அந்தச் சிரிப்பிற்குப் பரிசாக அளிப்பதற்கு
என்னிடம்
என்னைத் தவிர
வேறு ஒன்றுமே இல்லை.
– வசந்தம், 1965-12-10.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.