செவ்வாய் கிரக மர்மம்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: October 30, 2023
பார்வையிட்டோர்: 4,857
அமெச்சூர் வானியலாளர்கள் தான் முதன் முதலில் அதைக் கண்டு பிடித்தார்கள். கட்டிடங்கள் போல தோற்றமளிக்கும் கட்டமைப்புகள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திடீரென தோன்ற ஆரம்பித்தன. அதை ஆராய்ந்து அதன் மர்மத்தைக் கண்டு பிடிக்க இஸ்ரோ ஒரு குழுவை நியமித்தது. அதற்கு தலைவனாக நான் பொறுப்பேற்றேன்.
தினமும் என் மேலதிகாரி என்னைக் குடைந்து கொண்டிருந்தார். இரவு பகலாக ஒரு வாரம் வேலை செய்த பின் நான் என் மேலதிகாரியை போனில் அழைத்து, “பாஸ், அந்தக் கட்டமைப்புகளின் மூல காரணத்தை கண்டு பிடித்து விட்டோம்.” என்றேன்.
“வெரி குட். எங்கிருந்து வந்தன அந்தக் கட்டமைப்புகள்?”
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அங்கு கட்டமைப்புகளை உருவாக்க முடியுமா என்ற பரிசோதனையில் நாம் ஈடுபட்டோம். அதற்காக சூரிய சக்தியில் இயங்கும் ஐம்பது 3D பிரிண்டர்களையும் அவைகளை இயக்க ஒரு ரோபோவையும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினோம். பரிசோதனை நன்றாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஒரு சில அரசியல் காரணங்களுக்காக திடீரென்று அதை நாம் நிறுத்த வேண்டியதாகி விட்டது.”
“ஆம், எனக்கு அது நினைவிருக்கிறது.”
“பரிசோதனையின் முடிவில், செவ்வாய் கிரகத்திலிருந்த ரோபோவை செயலிழக்க ஒரு சிக்னலை அனுப்பினோம். ஆனால் அது சரியாக போய் சேரவில்லை போலிருக்கிறது.”
“மை காட்! அப்படியென்றால்… ”
“ஆம். அந்த ரோபோ கடந்த ஐம்பது வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்திருக்கிறது.”