செங்கோன்மை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,612
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அரசனால் செய்யப்படும் நீதியின் தன்மை
சேரநாட்டுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு மேற்கே சென்ற கப்பல்களையும், மேற்கு நாடுகளி லிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு முசிறி, தொண்டி என்ற துறைமுகங்களை நோக்கி வந்த கப்பல்களையும் “கடற்கடம்பர்” என்பவர்கள் வழி மறித்துக் கொள்ளை அடித்து வந்தனர். இதனால் சேரநாட்டுக் கடல் வாணிகம் தடைப்பட்டு நின்றது. இதை அறிந்த செங்குட்டுவன் அவர்களைத் தாக்கச் சென்றான். இவன் வருகை தெரியாது அக்கள்வர் – கள் களிப்புடன் இருந்தார்கள். செங்குட்டுவன் திடீரெனச் சென்று அவர்களைச் சிறைப்படுத்தி அத்தீவுகளை நாசமாக்கினான். அங்கிருந்த படகையும் செல்வங்களையும் எடுத்து வந்தான். இதனால் அயல் நாட்டு வணிகரும், தமிழ்நாட்டு வணிகரும் வாயார வாழ்த்தினர். மேலும் தன் நாட்டு மக்களையும் பாதுகாத்து அவர்களிடம் அன்புகொண்டு அரசு செய்தான்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். (39)
குடி = தன் கீழ்வாழும் மக்களை
புறங்காத்து = பிறர் வருந்தா வண்ணம் பாதுகாத்து
ஓம் = (தானும் துன்பம் செய்யாமல்) அன்பு கொண்டு
குற்றம் = (அம்மக்களிடத்தில்) குற்றம் உண்டானால்
கடிதல் = அக்குற்றத்தைத் தண்டனையால் ஒழித்தல்
வேந்தன் தொழில் = அரசனது கடமையாகும்
வடு அன்று = பழி அல்ல.
கருத்து: குடிமக்களைப் பாதுகாத்து அவர்களிடத்திலுள்ள குற்றங்களைப் போக்கி ஆளுதல் அரசன் கடமை ஆகும்.
கேள்வி: அரசனுக்குரிய முக்கிய கடமைகள் எவை?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.