செக்கு மரம்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு குருதக்கார் இருந்தர். குருதய வாங்குறது விக்கிறதுதீர் அவனுக்கு வேல. ஒருநா, குதுரயப் புடுச்சுக்கிட்டு, அடுத்த ஊருக்குப் போயிருக்கர். அப்டிப் போகயில -, ஒரு ஊரு இருக்கு. அந்த ஊருக்குள்ள வந்தபோது இருட்டிப் போச்சு. இருட்ல போக முடியாது. குருதயும் சென. நடக்காதுண்ட்டு, குருதய செக்குமரத்ல கெட்டி வச்சிட்டு, சாவடில படுத்துக்கிட்டா.
விடிஞ்சு பாக்கயில, குருத ஈண்டிருந்திச்சு. சந்தோசத்ல குட்டியயும் தூக்கிக்கிட்டு, குருதயயும் புடுச்சுக்கிட்டு பெறப்படப் போகயில, செக்குக்கார வந்தர். வந்து, எதுக்கு? குட்டிய புடிச்சுக்கிட்டுப் போற. குருதய மட்டுந்தான கொண்டுவந்த, எஞ்செக்கு போட்ட குட்டியயும் சேத்துப் புடிச்சுட்டு போறயே, குட்டிய விட்டுட்டுப் போண்டு தகராறு செய்றா.
அப்ப ஊர்ப்பஞ்சாயத்து கூடுனாங்க. அந்த ஊரு நாட்டாமக்காரு வந்து, ஒக்காந்து, என்னாப்பா! ஒங்க பஞ்சாயத்துண்டு கேட்டாரு.
சாமி! கெழக்க இருந்து இந்த குருதய புடுச்சுக்கிட்டு வந்தே. இந்த ஊருக்கிட்ட வர இருட்டிப் போச்சு. இந்தச் செக்கு மரத்ல கெட்டிப் போட்டுட்டு, இந்தச் சாவடில படுத்துக் கெடந்தே. விடிஞ்சு பாக்கயில எங்குருத ஈண்டிருந்திச்சு புடுச்சுக்கிட்டு வெளியேறினே. இந்த ஆளு வந்து: ஏண்டா! எஞ்செக்கு போட்ட குட்டியப் புடுச்சுட்டு போறண்டு விடமாட்ராரு. இத நீங்கதர் கேட்டுக் குடுக்கணும்ண்ட்டு, ஒக்காந்துகிட்டர்.
ரெண்டயுங் கேட்ட நாட்டாமக்காரு, அந்தப் பஞ்சாயத்ல செக்குதான் குட்டிப் போட்டிருக்கு, குருதக்கார், பொய் சொல்றாண்டு தீர்ப்புச் சொல்லிட்டாங்க.
குருதக்கார், குருதய மட்டும் புடுச்சுக்கிட்டு, ரெம்ப வருத்தமா போறர். போற வழில, ஒரு நரி ஒக்காந்துகிட்டு, அண்ணே! குருதக்காரண்ணே! என்னா? வருத்தமா போற? என்னா விசயம்ண்டு கேட்டுச்சு.
கேக்கவும் -, கெழக்க இருந்து நர் குருதயப் புடுச்சுக்கிட்டு வந்தே. இந்த ஊருக்கிட்ட வரயில, இருட்டிப் போச்சு. விடிஞ்சதும், போவோம்ண்ட்டு, செக்கு மரத்ல, குருதயக் கெட்டி வச்சிட்டு, அங்ஙனதான படுத்துக்கிட்டே. அப்ப, எங்குருத ஈண்டுகிருச்சு.
செக்குகார் வந்து, எஞ்செக்குதா குட்டி போட்டுச்சுண்டு புடுங்கிக்கிட்டர். பஞ்சாயத்து வச்சோம். பஞ்சாயத்துலயும், செக்குதா குட்டி போட்டுச்சுண்டு சொல்லிட்டாங்க. அதனால குருதய மட்டும் புடுச்சுக்கிட்டு போறேண்டு சொன்னா.
அப்ப நரி, நரி பஞ்சாயத்துக்கு வரே. மொதல்ல நிய்யி, போயி, அந்த ஊர்ல இருக்ற நாயிகளப்புடுச்சு, கெட்டிப் போடச் சொல்லுண்டு, சொல்லிருச்சு.
நரி சொல்லவும், சரிதாண்ட்டுப் போறர். நாட்டாமக்காரு கிட்டப் போயி, நரியண்ணன், பஞ்சாயத்துக்கு வர்ராரு. நாயிகளக் கெட்டிப் போட்டுட்டுப் பஞ்சாயத்து கூடுங்கண்டு சொன்னர். சொல்லவும், நரி பஞ்சாயத்துப் பேசுறதப் பாக்கணும்ண்டு ஊரே கூடிக்கிடக்குது. இந்த நரி, ரொம்ப நேரங்கழிச்சு வந்ததுமில்லாம, கூட்டத்ல ஒக்காந்த நரி, அப்டியே ஒரங்கிருச்சு.
நரி பஞ்சாயத்துப் பண்றதப் பாக்கணும்ண்டு, நமம ஒக்காந்துகிட்டிருக்கோம். நரிக்கு, ஒரக்கத்தப் பார்ராண்டு கூட்டத்ல பேசுறாங்க. அப்ப இந்த நரி, நல்லா முளுச்சுப் பாத்துட்டு, “போங்கப்பா, கடல்ல திய்யிப் புடுச்சு, வரகம் வைக்கலப் போட்டு அமத்திட்டு வந்திருக்கே. அதாம்ப்பா, ஒரக்கமண்டு” நரி சொல்லுச்சு.
என்னடா! கடல்ல திய்யி புடிச்சிச்சாம்! வரக வைக்கலப் போட்டு, நரி அமத்துச்சாம்ல! வேடிக்கையா இருக்குண்டு, ஒருத்தனுக்கொருத்த மொனங்குனாங்க. அப்ப, நரி! என்னாப்பா செக்குமரங் குட்டி போடும் போது, கடல்ல திய்யிப் புடிக்காதாண்டு கேட்டுச்சு.
கேக்கவும், அவங்களுக்குப் புத்தி வந்து, அதெப்டிடா செக்குமரம் குருதக்குட்டி போடும். குருததாங் குட்டி போட்டிருக்கும். அது குருத போட்ட குட்டிதாண்டா. செக்கு, குட்டி போடல்ல. குட்டியத் தூக்கிக் குருதக்காரங்கிட்ட குடுங்கடாண்டு சொல்லி பஞ்சாயத்த முடிச்சாங்களாம். குருதக்கார, குட்டியயும் தூக்கிக்கிட்டு, குருதயயும் புடுச்சுக்கிட்டு, போக வேண்டிய ஊருக்குப் போனானாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.