சூழல் சந்திப்பு




அந்த இலக்கிய கூட்டம் வெகு விமர்சையாக நடந்துகொண்டிருந்தது. மேடை முழக்கங்கள், தற்பெருமைகள், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட வாதங்கள் நிரம்பியிருந்தது. பொதுவாக இவ்வகை கூட்டங்கள், நடக்கும் அவையின் நான்கு சுவர்களுக்கு அப்பால் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால் அவையில் பேசப்படும் உயர் சித்தாந்தங்கள், ஆர்வமாக கேட்கும் செவிகளுக்குள் புகந்து அவர்களுடைய சிந்தைக்குள் ஏறுமா என்றுகூட நம்பிக்கையுடன் சொல்லமுடியாது. வரிசையாக பேசிய படைப்பாளிகள், தங்கள் ஆளுமையின் ஊடகங்களுக்கு தக்க பாகங்களை மட்டும் காணபித்து கொண்டனர். அப்பாவி மாணவர்கள் சிலர் குறிப்புக்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சிலர் சிந்தை மயங்கி உரைகளை கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த கூட்டம் சற்றே வித்தியாசமானது. இளமையும் முதுமையும் கலந்திருந்த இடம். இந்த சங்கமம் திட்டமிட்டதல்ல. இந்த கூட்டத்திற்கு அழைப்பிதழ் இல்லாமல் வந்தவர்கள், சில இளவட்டங்கள். தங்களை இளம் புலிகள் என அழைத்துக்கொண்டனர். இரு குழுக்களிடையே நிலைப்பாட்டில் மிகுந்த உரசல்கள் இருந்தன. முதிர்ந்த எழுத்தாளர்கள் அவர்களுடைய முந்தைய காலத்து எழுத்து நடையை, பேசிய பேச்சை காத்துக்கொள்ள எந்த வித முயற்ச்சியும் எடுக்கவில்லை. அதற்க்கு கரணம் இருந்தது. பிரசுரங்கள், வாசிப்பாளர்கள், விருதுகள் என அனைத்தையும் பார்த்துவிட்டனர். இலக்கிய மேல் தடத்திலேருந்து பார்த்தால் சமுதாயத்தின் அழுக்கு கரைகள் இன்னும் நிறைய அவர்களுக்கு தெரிந்தன. அதனை எழுதி அழிக்க நினைத்த காலங்களெல்லாம் போய்விட்டன. எழுத்தினால் கொண்டுவரக்கூடிய மாறுதலின் எல்லைகளை கண்டுவிட்டவர்கள். மறுபுறம் இளம் எழுத்தாளர்கள், இந்த கிழடுகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற தெளிவான முடிவில் இருந்தனர். தங்களுடைய அறிக்கையில் “பேணா முனை காகிதத்தின் மேல் உரசும்போது, தீ பொறி எழுந்து காகிதம் தீபற்றி எரியவில்லை என்றால் அது எழுத்தே அல்ல” என்றனர். இறுகுழுக்களிடமும் கத்தி இல்லை. அதற்காக போர் நடக்காது என யார் சொன்னது? அழைப்பில்லாமல் வந்த இளம்புலிகள் முதிர்ந்தவரர்களை பார்த்த பார்வை, ஜெமினி சிர்கஸ்ஸில் கூண்டிலிருக்கும் புலிகள் , ரிங்மாஸ்ட்டரை பார்த்து ” ஒத்தையா சிக்காமையா போயிரப்போற?” என கேட்டது போல இருந்தது.
அடுத்தகட்டம் போவாதற்கு முன் சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன். என் கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவதில் எனக்கு சம்மதம் கிடையாது. பாத்திரங்கலின் பெயர்கள் அவர்கள் மீது ஒரு கரையை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு உதாரணத்திற்கு இந்த கதையில் வரும் மூன்று பாத்திரங்களுக்கு மிஸ்ரா, அலேக்ஸ் பாண்டியன், சௌபார்னிகா என பெயர் சூட்டலாம். மிஸ்ரா என்றவுடனேயே உங்கள்க்கு புலப்படுபவை அவர் வடக்கர், ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர் என்ற உண்மைகள். அதே போல் அலேக்ஸ் பாண்டியன் என்றவுடேயே அவர் தென் தமிழ்நாட்டை சேர்ந்தவர், கிரிஸ்துவர் என்பவை. தேர்ந்த வாசகர்கள் அலேக்ஸ் பாண்டியன்னின் சமுதாய பிரிவையும் சொல்லிவிட முடியும். சௌபார்னிகா தமிழ் வாசகர்களுக்கு கொஞ்சம் கடினம்தான். சூர்பனகாவை போல ஒரு அரக்கி என நீங்கள் நினைத்தால் உங்களை பழிக்க முடியாது. பெரும்பாலானோர்க்கு சௌபார்னிகா ஒரு நதியின் பெயர் என்பது தெரிய வாய்ப்பில்லை. கதை நடையில் மிஸ்ரா நிகழ்வுகளின் தேவையினால் அலேக்ஸ்சை கன்னத்தில் அறைய நேர்ந்தால் வட இந்திய ஆதிக்கம், அஹங்காரமென்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வாய்ப்புகள் உண்டு. சௌபார்னிகாவுக்கும் அதே கதிதான். கதையின் நிர்பந்தத்தால் அவள் மீது குற்றங்கள் சுமக்கப்பட்டால், அது நதியின் மீதே சுமத்தப்பட்ட குற்றங்களாகிவிட சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால் இந்த கதையில் வரும் பாத்திரங்களுக்கு எழுத்துக்கள் மட்டும் பெயராக வைத்துளேன். இந்த இலக்கிய முறை புதிதல்ல, காஃகா போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கையாண்ட முறைதான்.
கூட்டத்தின் முன் வரிசையில் “அ”, “ஆ” உட்காந்து மேடை பேச்சாளர்களின் முழக்கங்களுக்கு செவிசேர்த்து கரகோஷங்களில் ஈடுபட்டனர். இதிலேருந்தே அவர்கள் பழம்புலிகள் அணியை சார்ந்தவர்கள் என்பது உங்களுக்கு புரியும் என எதிர்பார்கிறேன். இதை போன்ற பல கூட்டங்களை பார்த்த அனுபவசாலிகள். இலக்கிய கூட்டங்களுக்கு குழுவில் போக மறந்தவர்கள் தனிமைபடுத்தபட்டு அலட்சியப்படுத்தப்படும் குரூரத்தை பார்த்தவர்கள். மேடைப்பேச்சு வாய்ப்பு இருவருக்கும் ஒரு வெகுமானம் உண்மையில் மாலையில் தண்ணி பார்ட்டி திட்டத்தில் சகாக்களுடன் முன்னேற்பாடுகளுடன் வந்திருந்தனர். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிடத்தக்கது. எரிசாராயத்திற்கு பீர், விஸ்கி , சாம்பேயின் என்றெல்லாம் பாரபட்சம் காட்டாமல் பொதுவாக “தண்ணி” என குறிப்பிட்டுளேன். வாசகர்களுக்கு எரிசாராயம் என்பது தண்ணீர் மற்றும் மதுவின் கலவை என்பது (நிச்சயம்) தெரிந்திருக்கும். இந்த கலவையை பார்க்கும் விதத்தில் தான் வித்யாசமிருக்கிறது. தமிழ்நாட்டில் எரிசாராயதை வட்டார வழக்கில் “தண்ணி” என்பது கர்நாடகத்தில் “எண்ணை” என்றாகிவிடுகிறது. பசித்தவன் வடையை பார்கிறான், தத்துவவாதி துளையை பார்க்கிறார் . உங்களுடைய தீவிரவாதி என்னுடைய சுதந்திர போராட்ட வீரன்.
அ வின் மேடை வாய்ப்பு வந்தது. அவை வணக்கத்திலருந்து மெதுவாக தொடங்கி, தன்னடக்கத்தில் சில வார்த்தைகள் பேசிவிட்டு, மரபு இலக்கியதிலேருந்து சில குறிப்புக்கள், ஆ வின் புத்தகத்திலேருந்து சில குறிப்புக்கள், தவிர்க்கமுடியாத ருஷ்ய, ப்ரென்ச் தத்துவங்கள், தென் அமெரிக்க ஆசிரியர்களின் பட்டியல்கள், தமிழ் முன்னோடிகளை குறிப்பிடும்போது அவர்களுடைய முதலேழுத்துகளை மட்டும் குறிப்பிட்டு (உதாரணத்திற்கு ப.சி, ல.கி, தி.ச. இதை படிக்கும் திரு கு. சுரேஷ் அவர்களே, தயவுசெய்து புனைபெயருடன் எழுதவும்) நினைவோடையில் சில பயணங்களை பகிர்ந்தபோது, ஒலிபெருகியின் சத்தத்துடன் தன் குரல் சத்தத்தின் இஸ்தாயியையும் ஒப்பிட்டு, வன்ம வாதங்களை முன் வைத்த போது தன் குரல் இஸ்தாயியையும் உயர்த்தியது மட்டுமில்லாமல் முஷ்டியையும், கண்களின் பாவனைகளையும் உடல் மொழியின் மாற்றங்களுடன் சேர்த்து ஆவேசத்துடன் பேசினார். இதில் அவருக்கு அனுபவம் உதவியது. “கடும் உண்மைகளை சுடும் வண்ணம் ஏழுத வேண்டும்” என கூறியபோது கரகோஷங்களுக்கு நடுவில், அவருடைய தோழி ஈ, இரண்டாம் வரிசையில் அவளுடைய அழகிய கண்களுடன் அவரை பார்ப்பதை கவனித்தார். “ஈ யை போல துணிச்சலுடன் சமுதாய நிர்பந்தங்களை தகர்த்தெறிந்து எழுதுங்கள் ” என முழங்கியபோது, ஈ யின் மீது அவையின் கண்கள் படருவதை உணந்தவள் உள்ளூற புன்னகைத்தாலும் வெளியில் நேர்முகம் காண்பித்தாள். ஆ மட்டும்தான் உண்மைதெரிந்து புன்னகைத்தார்.
இத்தருணத்தில் ஈ யை பற்றி சில குறிப்புக்கள் அவசியமாகிறது. ஈ ஒரு வளரும் இளம் கவிதாயினி.
“வத்தக்குழம்பில் பருப்பில்லை,
உன்மேல் எனக்கு வெறுப்பில்லை”
என்ற நேர் வரிகளை
“வறண்டு கிடைக்கும்
என் நெஞ்சம்,
உன்னால்தான்
எனினும்,
ஒத்தையடி
பாதையில்
உன்
பாதம் மட்டும்
படியாதா?”
என மாற்றி எழுதும் திறமை படைத்தவர். உரை நடை நேர் வரிகளை செங்குத்தாக அடுத்தடுத்த வரிகளில் எழுதினால் அது கவிதை ஆகிவிடுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். அதில் நான் நடுநிலை வகுக்க விரும்பவில்லை. உண்மையில் அவரின் கவித்துவ பாண்டித்யத்தை மதிப்பிட எனக்கு ப்ரஞை பத்தாது. ஒன்று மட்டும் சொல்லமுடியும் முதிர்ந்த குதிரையின் நாற்றத்தை பொருட்படுத்தாமல் அதன்மீதேறி, ஊர் பார்க்க வலம் வர கேட்ட விலை கொடுக்க தயாராகிருந்தவர்.
கூட்டம் நடு நேரம் அடைந்தபோது ஒரு சலசலப்பு. இளம் புலிகள் அணியிலேருந்து ஒருவர்ருக்குகூட பேசும் வாய்ப்பு அளிக்கப்படாததில் ஒரு சர்ச்சை. கால கட்டவனையை காட்டினார் நடுவர். அ அங்கு விரைந்தார். “எல்லோருக்கும் பேசும் உரிமம் கொடுக்கப்பட வேண்டும். இது ஜநாயக நாடு. ஒரு அவகாசம் கொடுங்கள் அவர்களுக்கு” என்றார். நடுவரும் ஒப்புக்கொண்டார். இளம்புலிகள் அணியின் பேச்சாளரான பூ முன்வந்தார்.
“இக்கால இலக்கியத்தில் தேக்கம் தோன்றிவிட்டது. எரிமலையாய் வெடிக்கவேண்டிய வரிகள், மயில் இறக்கை வருடுவது போல இருக்கிறது. இதனை நாங்கள் ஒரு கணமும் ஒப்புக்கொள்ள மாட்டோம்” என தொடங்கி மதியிலேருந்து வாய்க்கு சரிந்து வர வரைக்கும் கூட பொறுக்க முடியாத புரட்சி வார்த்தைகள், ஒரு கணம் பூ வை உள்ளூராகவே பொசிக்கிவிடும்போல இருந்தது. அவர் உரை முடித்தவுடன் அவர்தரப்பில் ஆரவாரங்கள் ஆரம்பமாகி முடிவதற்கு வெகு நேரம் ஆனது. மீதம் இருந்த நிகழ்ச்சிகள் அதிகம் நிகழ்வுகளின்றி முடிவடைந்தது. அ வும் ஆ வும் திட்டமிட்டபடி அவர்களுடன் சமநிலை தோழர்களுடன் நாள்முழுக்க காத்திருந்த பார்ட்டிக்கு தயாரானார்கள்.
ஓரிரண்டு சுற்று சென்றபின் ஆ தான் அதனை கவனித்தார். ஈ கூட்டத்தில் பலபேருடன் பேசிக்கொண்டிருப்பதை.
ஆ , அ யின் மது குவளையை காட்டி “நண்பா, ஈ மேய்த்துக்கொண்டிருக்கிறது, சீக்கரம் பருகிவிட்டு”
அ விற்கு அவர் தோழன் சொன்னது புரிந்து திரும்பி பார்த்தார். இப்பொது ஈ ஒரு முதிர்ந்த சமுதாயவாதிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“மேய்ப்பது ஈ யின் இயல்பு. அதை மாற்ற முடியாது”
“ஆனால் அந்த அழுகிய பழத்தின் மீது உட்காந்துவிட்டு உன்மேல் உட்கார்ந்தால் அவருடைய நோய் உனக்கும் பரவிவிடும்”
“அந்த நோய் எனக்கு தெரிந்ததுதான். அதற்கான மருந்தும் என்னிடம் உள்ளது”
சில நிமிடங்கள் ஆனது, ஈ கூடம் முழுக்க மேய்ந்துவிட்டு முடிவில் பூ விடம் பொய் சேர்ந்தார். இருவரும் தங்கள் நெருக்கத்தை பிறர் பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் ஆனந்த களிப்பில் கழித்துக்கொண்டிருந்தார்கள். ஆ அதனை கவனித்தார்.
“பார் தோழா! ஈ கடைசியில் பூ விடம் சேர்ந்துவிட்டது. இயற்கை அல்லவா?” என்றார் ஆ
“ஆமாம், ஈ குப்பையில் தான் போய் சேரும்”