சூப்பரா படிப்பேன்!




‘டிங்டாங்’… அழைப்புமணி ஓசை.
‘‘ஓஹோய்…’ கால்பந்து மைதான ஆரவாரம்.
‘லொக் லொக்’…. நோயாளியின் இருமல்.
கதவு திறக்காததால் கதவைத் தட்டினார் ராதா ஆன்ட்டி.
சில நொடிகளில் கதவைத் திறந்த ஜீவா, ‘‘அம்மா’’ என்று குரல் கொடுத்துவிட்டு, டி.வி&யில் ஆர்வமானான்.
ஜீவாவின் அம்மா சுகுணாவுக்கு குளிர்ஜுரம். அவரை நலம் விசாரிக்கவே சக ஊழியரான ராதா ஆன்ட்டி வந்திருக்கிறார்.
கூடத்தில் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள், இறைந்துகிடக்கும் பாத்திரங்கள், நடுவில் அமர்ந்து டி.வி. பார்க்கும் ஜீவா… சுகுணா இருக்கும் அறை நோக்கிப் போவது ஆன்ட்டிக்கு சிரமாக இருந்தது.
‘‘வாங்க ராதா’’ மெள்ள அழைத்தாள் அம்மா.
அருகில் அமர்ந்த ஆன்ட்டி, உடல் நலம் விசாரித்து, சிறிது பேசிவிட்டு விடைபெற்றார்.
அறையை விட்டு வெளியில் வந்தவருக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் வைத்திருக்கும் இடம் பார்த்து போய் குடித்தார்.
‘‘ஆன்ட்டி எனக்கும் தண்ணீர்…’’ என்றான் ஜீவா.
அவனுக்குத் தண்ணீர் கொடுத்தார். குடித்துவிட்டு, டம்ளரை அவரிடமே நீட்டினான் ஜீவா.
‘‘கண்ணா நல்லாப் படிக்கிறியா?’’
‘‘இப்ப நடந்த டெஸ்ட்டுல நான்தான் ஃப்ர்ஸ்ட்’’ மீண்டும் டி.வி.யில் மூழ்கினான். பிறகு, ‘‘இது பழைய மேட்ச் ஆன்ட்டி, நான் நல்லாப் படிப்பேன், சும்மா ரிலாக்ஸ§க்குத்தான் இதெல்லாம்’’ என்றான்.
‘‘மனச்சோர்வைப் போக்க வேற விஷயங்கள்ல ஈடுபடடுறது நல்லதுதான். நீ பாக்கிற விளையாட்டுல எல்லா விளையாட்டு வீரருக்கும் கோல் போடத் தெரியும். ஆனா, எல்லாராலயும் கோல் போட முடியறது இல்ல. ஆனா…’’ நிறுத்தினார்.
‘‘நான் சூப்பரா படிப்பேன் ஆன்ட்டி.’’
‘‘அது உன் ஒரு திறமை. கிடைக்கிற சின்னச் சின்ன சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல் பந்தை அடிக்கிறவர்தான் கோல் போட முடியும். ஆனா, உன்னை மாதிரி மாணவர்கள் சிலர், எத்தனையோ வாய்ப்புகளை கண்டுக்காம இருக்காங்க. படிக் கிறது மட்டும்தான் தன் வேலைன்னு நெனச்சி, தன் சொந்த வேலை யைகூட செய்யத் தெரியல. நல்லா இருந்தபோது உனக்காக உழைத்த அம்மாவுக்குக் காய்ச்சல் வந்தபோது அவருக்கு உதவ நீ தயாரா இல்லை.
படிப்பைத் தவிர, வீட்டை சுத்தப்படுத்துறது, அம்மா, அப்பாவுக்கு நம்மாலானதை செய்வதுகூட நல்ல ரிலாக்ஸ்தான்.
இந்த வயசுல உனக்கு வீட்டுக்கு வந்தவரை வரவேற்க, கவனிக்க தெரிஞ்சிருக்கணும். முக்கியமா, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து குடிக்கவாவது தெரியணும்’’ என்றார் அழுத்தம் கொடுத்து.
‘‘சரி, ஜீவா நான் வரேன்’’ கிளம்பிப் போனார் ஆன்ட்டி.
‘‘லொக் லொக்… இருமல் சத்தம்.
‘‘இதோ நான் வரேன்மா’’ அவசரமாக அம்மாவை கவனிக்க ஓடினான் ஜீவா நல்ல பிள்ளையாக.
இருமலைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஜீவாவை ஆச்சர்யத்தோடு பார்த்தார் அம்மா.
– வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006