சுமை பேதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2025
பார்வையிட்டோர்: 313 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மனுசன், மாட்டையும் குதிரையையும் காட்டியும் மட்டமாவா பூட்டான்?… மாடு வலிக்கற தெங்காட்டியும், குதிரை வலிக்கற வண்டி ஒஸத் தின்னா, மனுசன் இஸ்க்கற வண்டி எல்லாத்தியுங் காட்டியும் ஒஸத்தி இல்லியா சாமி?” 

ரிக்ஷாக்கார மருதையாவுக்குப் பூர்வீகம் தென்னாற் காடு ஜில்லாவைச் சேர்ந்த விக்கிரவாண்டி. 

கல்யாணம் கட்டிக் கொண்ட இரண்டு வருஷத்திற் கெல்லாம் பெண்சாதியோடு ஏற்பட்ட சிறு சச்சரவைச் சாக்காக வைத்துக் கொண்டு ஏற்கெனவே தன் உள்ளத் தைக் கவர்ந்திருந்த “கௌரவ லட்சியமான மிலிட்டரியில்” சேர்ந்து இரண்டு வருஷத்திற்குப் பின் கையில் இரண்டு நூறு ரூபாய் ரொக்கத்துடன் விக்கிரவாண்டிக்கே திரும்பி வந்து பழைய மருதையாவாகவே காலம் கழித்து வந்தான். 

என்னதான் இருந்தாலும் அந்த வானம் பார்த்த பூமியில் அவனால் வாழ்க்கை நடத்த முடியவில்லை. கடைசியில் கையிலிருந்த சில பத்து ரூபாய்களை வைத்துக் கொண்டு – என்ன ‘பிசினஸ்’ நடத்திப் பிழைத்து விடலா மென்று நினைத்தானோ? – தன் ககதர்மிணி சகிதமாக ஒரு நாள் சென்னை வந்து சேர்ந்தான். 

என்னென்னவோ முயற்சிகள்… எல்லாவற்றிலும் அவனைப் போன்றவர்களின் போட்டியும் கூட இருந்தது. முயற்சிகள் யாவும் வியர்த்தமாயின. பின்புதான், தன்னை யொத்த மனிதர்களுடன் போட்டியிடுவதைவிட, யந்திரங் களுடனும், கால்நடைகளுடனும் போட்டியிடுவது எவ் வளவோ மேல் என்று நினைத்து முடிவில் ஒரு நாள் கம்பீரத்துடன் ‘ரிக்ஷா’ வண்டியின் ஏர்க்காலைப் பற்றிக் கொண்டு தார்ரோட்டில் வியர்வைத் துளிகள் சிந்தித்தெறிக்க ஓடி ஓடி உழைத்தான்; சம்பாதித்தான்… 

எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலத்தின் இறக்கத்தில் ‘தூங்கு மூஞ்சி’ மரத்தடியில் அவன் குடும்பம் நடத்தினான்… அவனைப் போன்று அவன் சகாக்கள் பலரும் அப்படித்தான் அங்கு வாழ்ந்தனர். 

அவன் மனைவி பூங்காவனத்துக்கு மட்டும் சிற்சில சமயங்களில் தன் ஊரில் தான் வாழ்ந்த வாழ்க்கையும், இப்படி மரத்தடியில் காய்ச்சிக் குடிக்க வேண்டிய காலம் வந்ததையும் நினைக்கும் போது மனம் நையத்தான் செய்யும்… என்றாலும் மருதைய்யாவின் சிரிப்பும் பாட்டும், கிண்டலும் கேலியும் அவற்றையெல்லாம் தட்டி யெறிந்து மறக்கடித்து விடும். 

அன்று ஊரிலிருந்து பூங்காவனத்தின் தம்பி செல்லப்பன் வந்திருந்தான். தன் மாமன் பட்டணத்தில் என்னவோ பெரிதாக வேலை பார்ப்பது போலவும் தனக்கும் ‘ஏதாவது வேலை கெடைச்சி ஒழுங்கா பொழச்சிக்கலாம்’ என்றும் எண்ணமிட்டு வந்த செல்லப்பனுக்கு “அக்காவும் மாமனும் மரத்தடியில் பொங்கித் திங்கறதும், மாமன் மாடுமாதிரி மனுசனை வண்டியிலேத்தி இழுத்துக்கினு போறதும்” பெருத்த ஏமாற்றமாகவும், அவமானமாகவும் இருந்தது. 

“ஏ, மாமா… போயும் போயும் பட்டணத்துக்கு ரிக்ஷா வலிக்கவா வந்தே?…” அவன் கேள்வியில் கிண்ட லும் வருத்தமும் கலந்திருந்தன. 

“வேறே என்னடா பண்றது? இதைவிட நல்ல வேலென்னு வேறே ஒண்ணும் எனக்குத் தோணலே…எனக்கே இன்னிக்கு இஸ்டம்னா வண்டியெ வலிச்சிக்கினு ரெண்டு சவாரி அடிப்பேன்! அப்போ மாமனுக்குக் கறியுஞ் சோறுந்தான்… ஒரு நாளைக்கு அலுப்பா இருந்து துனா எப்பேர்ப்பட்ட ராஜா வந்து சவாரி கேட்டாலும். போடா ஜாட்டான்னு வண்டியிலேயே படுத்துக் கெடப் பேன்… நம்ம இஷ்டப்படி நம்ம வேலெ… வேறே என்னடா வேணும்…” 

‘“அது என்னவோ மாமா… நம்ம ஊர்க்காரங்க. யாராவது பார்த்தாங்கன்னா…” 

“அட… இவன் யார்ரா… ஊர்க்காரன் ஊர்லே…. இங்கே என்னா திருடாமா, கொள்ளை அடிக்கறமா… கஷ்டப்பட்டு ஒழச்சா கூலி… இதிலே என்னா மச்சான் அவுமானம்?…” 

“எனக்கு என்னவோ பிடிக்கலை மாமா”… 

“போடா… இவுரு கலெக்டரு பேரன்… கவுனரு உத்தியோகந்தான் பாப்பாரு. நம்மாலே ஆவாதுடா சாமீ…” 

“சரி… சோத்தெத் துன்னுப்புட்டுப் பேசுங்க”…. என்று அழைப்பு விடுத்தாள் பூங்காவனம். 

அலுமினியம் தட்டிலிருந்த பழைய சோத்தைப் சாப்பிட்டுக் கொண்டே சொன்னான் மருதை: 

“தோ… பாருடா மச்சான்… இந்தக் காலத்திலே எந்த வேலையும் செஞ்சுப் பொழைக்கலாம்… அதுலே என்னா கேவலம்! வேணும்னா சொல்லு; நம்ம நாயுடு வூட்லே இன்னும் ரெண்டு வண்டி புதுசா வருது… ஒனக்கும் ஒண்ணு வாடகைக்குப் புடிச்சி தர்றேன்.” 

“சே… சே… நா மாட்டேன்; வந்த வழியெப் பார்த்துக்கினு ஊருக்குப் போறேன்.” 

“ஐய, அவனெப் புடிச்சிக்கிட்டு நீயேன் வம்பு குடுக்கிறே… என்னமோ வந்தான்… ரெண்டு நாளுக்கு இருந்துட்டுப் போறான்” என்று தன் தம்பிக்குப் பரிந்து பேசினாள் பூங்காவனம். 


“டேய்… மச்சான், எங்கூட வர்ரியா பட்டணமெல்லாம் சுத்திக் காட்றேன், உம்… நீதான் ராத்திரிக்கு ஊருக்குப் போறியே; சரி… ஏறு வண்டியிலே அந்தப் பக்கம்தான் போறேன்…” 

“சீ… என்னெ ஒக்காரவெச்சி மாமன் இழுக்கிறதா?” என்று நினைத்துச் செல்லப்பன் தயங்கினான். 

“வேணாம்… நா’ நடந்தே வர்ரேன்…” 

“டே… ஏர்ரா… எந்தெந்தப் பசங்களெயெல்லாம் நா ஏத்திக்கினுப் போறேன்… ஒன்னெ ஏத்திக்கினா என்னரடா? உம்… சும்மா ஏறி உக்காரு…” 

வண்டியில் ஏறி உட்காரும்பொழுது செல்லப்பனுக்கு. உடல் குன்றி உள்ளமெல்லாம் கூசியது 

‘லைட் ஹவுஸ்’ பார்க்க செல்லப்பனை விட்டுவிட்டு அதற்குள் எங்கோ ஒரு சவாரிபோய் விட்டு மீண்டும் ஹைகோர்ட் அருகே மரத்தடியில் வந்து நின்றான் மருதையன். 

உள்ளே சென்ற செல்லப்பன் இன்னும் வெளியே வர வில்லை. 

மருதையனுக்கு அருகே யாரோ ஒரு மனிதர் பேப்பர் படித்துக் கொண்டு நின்றிருந்தார்… உள்ளிருந்து வரு வோரையும் பேப்பரையும் மாறி மாறி அவர் பார்ப்பதிலி ருந்து அவரும் யாருக்காகவோ காத்திருக்கிறார் என்று தெரிந்துக் கொண்டான் மருதை. 

“என்னா சார்… யாருக்கோசரமாவது காத்துக்கினு இருக்கிறியா…” என்று பேச்சுக் கொடுத்தான். 

“ஆமா… பொண்டுவ போயிருக்காங்க இன்னங் காணமே” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் பேப்பரில் பார்வையை ஒட்டினார் அந்த ஆசாமி. 

“என்னா சார் பேப்பர்லே விசேஷம்?… சண்டெ வருமா…?” 

”உம்… நம்ம இந்தியாவுலே வராது…” 

“மந்திரிங்க எதனாச்சும் பேசி இருக்காங்களா சார்…” 

“ஓ… பேசி இருக்காங்க. இந்த ரிக்ஷா வண்டியெல்லாம் எடுத்துப்புடணுமின்னு கூடப் பேசி இருக்காங்க…” 

“என்னா சாமி…? என்னா…” 

“மனிதனை மனிதன் சுமந்து செல்லும் ரிக்ஷா வண்டிகள் மிகவும் அநாகரீகமானவைகள் தான்னு ஒரு மந்திரி பேசி இருக்கார்” என்று பேப்பரில் இருந்த வாசகத்தைப் படித்துக் காட்டினார் அவர். 

“அது என்னா சாமி எப்பப் பார்த்தாலும் இப்படிப் பேசிக்கினே இருக்காங்க?… நானும் ரொம்ப தடவை கேட்டுப்புட்டேன். இல்லே… நான் தான் கேக்கறேன்… மாட்டு வண்டி ஒஸத்தியா… குதிரை வண்டி ஒஸத்தியா? சொல்லு சாமீ…” 

“குதிரை வண்டிதான்…” 

“அப்படின்னா மனுசன் மாட்டையும் குதிரையையும் காட்டியும் மட்டமாவா பூட்டான்? மாடு வலிக்கிறதெங் காட்டியும் குதிரை வண்டி ஒஸத்தின்னா. மனுஷன் இஸ்கற வண்டி எல்லாத்தியங் காட்டியும் ஒஸத்தி இல்லியா சாமீ…” அந்த மனிதருக்குப் பதில் சொல்ல முடியவில்லை… சிரித்தார்: 

ஸ்டேஷனுக்குள்ளிருந்து செல்லப்பனும் வந்துவிட்டான். 

செல்லப்பனை ஏற்றிக்கொண்டு அவன் புறப்பட்ட நேரத்தில். 

“ஏ! ரிக்ஷக்ஷா” என்ற குரல் கேட்டுத் திரும்பினான். 

“ராயபுரத்துக்கு வர்ரியா.” 

“இல்லே, எம்மச்சானெ ரெயிலுக்கு ஏத்திக்கினு போறேன்” என்று சிரித்தான் மருதை! 

வண்டி எர்ரபாலு செட்டித் தெருவில் வந்து கொண் ருந்தது. பெரிய பெரிய பேல்களையும் மூட்டைகளையும் ஏற்றிய கட்டை வண்டிகளை மூன்று நான்கு பேராய் வியர்வை, கசிந்து கசிந்து உடலெல்லாம் வழிய, 

“ஏறு…ஹம்… தள்ளு… அடி… அடி… என்று பெருஞ் சப்தமட்டுக் கொண்டு தள்ளி வருவதையும் செல்லப்பன் கண்டான். “டே… மச்சான்… இது தேவலாமாடா?” என்றான் மருதை. 

“பின்னே என்ன மாமா? இது எவ்வளவோ தேவலாமே…” என்றான் செல்லப்பன். 

மருதை சிரித்தான். 

“டேய்… எல்லாச் சொமையும் ஒன்னுதானே.” 

“அதில்லே மாமா. என்னா இருந்தாலும் ஒரு மனுசனை வெச்சி இன்னொரு மனுஷன் வலிச்சிக்கினு போறதுன்னா கேவலந்தான்.” 

“டேய் மச்சான், நம்ம வண்டியிலே எதெ வெச்சி இஸ்த்தாலும் பாரம் பாரந்தான்; அதிலே எதுக்கு இது மனுஷன் பாரம் இது மூட்டெ பாரம்னு நெனைச்சிக் கணும்? என்னமோ ஒரு மூட்டென்னு நெனைச்சிக்கறது. அவங்களெ மனுஷனா மதிச்சாத்தானே நமக்குக் கேவலம்? நம்பளை மனுசன்னு மதிக்காமெ நம்ம முதுவு மேலே ஒக்காந்திக்கிறவங்களை நாம்ப ஏன் மனுசன்னு நெனைக்கணும்?” …. 

ஒருகணம் செல்லப்பன் யோசித்தான். வண்டி ‘பிராட்வே’யில் வந்து கொண்டிருந்தது. 

“மாமா ரிக்ஷாவெ நிறுத்து” என்றான். மருதைய்யா ஒன்றும் புரியாமல் வண்டியை நிறுத்தவே, கீழே குதித்த செல்லப்பன் ‘நா’ நடந்து வர்ரேன் மாமா” என்றான். 

“என்னடா மச்சான் திடீர்னு?” 

“அதுவா மாமா, நா மனுசன் அதனாலே” என்று ‘பளிச்’செனக் கூறினான் செல்லப்பன். 

மருதையா சப்தம் போட்டுச் சிரித்தான். 


மறுநாளிலிருந்து செல்லப்பனும், தன் மாமனைப் போலவே ‘ரிக்ஷா வலிக்க’ ஆரம்பித்துவிட்டான்! 

தார்ரோட்டில் வியர்வைத் துளிகள் சிந்தித்தெறிக்க ஓடி ஓடி உழைத்தான். ஆமாம்; அவன் அகராதிப்படி ரிக்ஷாவை இழுத்தால் மனிதன்தான்… ரிக்ஷாவில் சவாரி செய்பவர்களைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. 

– உதயம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1954, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *