சுமை தாங்கி
கதையாசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 1,753
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வீட்டுக்கு முன் விறாந்தையின் வலது மூலைப்பக்கமாக போடப்பட்டிருந்த சார்மனைக் கட்டிலில் நீட்டி நிமிர்ந்து, இரு கைகளையும் தலைக்கு மேல், கட்டில் சட்டத்தில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு ஆஜானுபாகுவாகக் கிடந்தார். மலக்கியாசர். வகிடுபிரிந்துவிடப் பட்ட சருள் கேசம் ஜன்னல் வழியே வந்த காற்றில் அசைந்து கொண்டிருந்தது.
அவர் ஊருக்குள் கட்டட வேலை ஒப்பந்தம் எடுத்துச் செய்து கொடுக்கும் சில்லறைக் கொந்தராத்துக்காரர். அவரிடம் கட்டட வேலை செய்வதற்கென ஒரு தொழிலாளர் குழு இருக்கிறது. அந்தக் குழுவில் மேசன்மாரும், மேசன் மாருக்கு ‘முட்டாள்’ வேலை செய்யும் கூலிகளுகளும்தான் இருக்கிறார்கள்.
அந்த வட்டாரத்தில் மலக்கியாசரின் பெயர் பிரசித்தம். தன் கீழ் ஒரு மனிதக் கூட்டம், தான் சொல்லியவாறு செய்வதற்கு இருப்பதில் அவருக்கு உள்ளூரப் பெருமை. அதை மனைவியிடம் அடிக்கடி சொல்லியும் கொள்வார். அந்தப் பெருமை நினைப்புத்தான் அவருக்கு ஊருக்குள் கர்வத்துடன் வாழ வைக்கிறது.
மலக்கியாசர் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகில், கீழே சுவரில் முதுகை முண்டு கொடுத்துக்கொண்டு, சேலையை முழங்கால் வரை ஒதுக்கி, கால்களைப் பின்னியபடி நீட்டிக் கொண்டும் சொண்டு சிவக்க வெற்றிலை சாப்பிட்டுக் கொண்டும் அவருடைய மனைவி முத்தம்மா இருந்தாள்.
மனைவியுடன் செல்லங் கொஞ்சிக்கொண்டிருந்த மலக்கியாசர் தெருவில், தன் ‘பார்ட்டில்’ வேலை செய்யும் கணபதி வருவதை கண்டு விட்டார்.
“எடி முத்தம்மா கணபதி சம்பளக் காசுக்கு வாறானடி”
“கிடக்கிற காசையும் அவனிட்டை குடுத்திட்டு எனக்குச் செருப்பு வாங்க என்ன செய்யிறீங்கள் எண்டுபாப்பம்.”
“கத்தாதை, பொறு”
“நாளைக்குக் கடன் திருநாள், கோயிலுக்குப் போகவேணும் இண்டைக்கு கடை பூட்ட முதல் செருப்பு வேண்டவேணும்”
“வெண்டுதாறன், பயப்படாதை.”
அவர் மனைவியைச் சமாதானம் செய்தபடி, ‘சிலுவை’ போட்ட தன் படலையைப் பார்த்தார். கணபதி படலையைக் கடந்து தன் வளவுக்குள் வந்துவிட்டான். எண்ணைக்குப் பதில் சீமேந்துப் புளுதி படிந்த தலையைக் கைவிரல்களால் கோதி மயிரை ஒழுங்குபடுத்தியிருந்தான். இடுப்பில் தோளில் பழவேட்டிக் கீலத்துண்டு. ‘லங்கா’ சாறத்தை மேலிருந்து மடித்துச் ‘சண்டி’க் கட்டுகட்டியிருந்தான். இடுப்பில் சாறத்தின் மேல் சணல் கயிற்றால் வரிந்திருந்தான். ஒரு கிழமைக்கு முன் வரித்த கயிறு இன்னும் அவிழ்க்கவில்லை. வியர்வை காய்ந்து உடலில் உலகப்படம் வரைந்திருந்தது. கால்விரல் இடுக்குகளிலும், பாதத்தின் விளிம்பைச் சுற்றியும் சீமெந்து வெள்ளை. இடதுகையில் ஒரு சிறு போத்தலை துண்டுச்சாக்கால் சுற்றி வைத்திருந்தான்.
சென்ற கிழமைக்கு முதற் கிழமை மலக்கியாசர் ‘பார்ட்டி’ வேலையை நிறுத்திவிட்டு நுவரெலியாவுக்குச் சென்றுவிட்டார். அந்தக் கிழமை கணபதிக்கு வேலை இல்லை. அவன் இன்னொரு கூலியையும் சேர்த்து ஒரு வீட்டுக்கு கல்லரிந்தான். ஐந்து நாட்களுக்குத்தான் கல்லரிவு இருந்தது. வீட்டுக்காரன் இருவருக்கும் சம்பளமாக நாற்பது ரூபாவைக் கொடுத்து தன் விஷயத்தை முடித்துவிட்டான். மற்றக்கூலி, தனக்கு ஐந்து நாட்களுக்கும் இருபத்தைந்து ரூபா சம்பளமென்று கேட்க கணபதி கொடுத்து அனுப்பிவிட்டான். மத்தியானச் சாப்பாட்டுக்கு ஐந்து நாளும் ஐந்து ரூபாய் வாங்கியதால், மிகுதியாக இருந்தது. பத்து ரூபா கல்லரித்த அச்சு வாடகைக்கு எடுத்ததனால் அந்த வாடகை மூன்று ரூபா எழுபத்தைந்து சதத்தைக் கொடுத்தான். மிகுதியாக இருந்த ஆறேகால் ரூபாவில் கால் ரூபாவை ஏழுநாட்களுக்குப் பொதுவில் மனைவியிடம் கொடுத்து ‘திட்டு வாங்கிக்’ கொண்டு, அடுத்த கிழமை ‘பார்ட்டிக்கு’ வேலைக்கு வந்தான்.
அந்தச் சம்பளத்துக்குத்தான் இப்போது வந்திருக்கிறான்.
அவன் விறாந்தை விளிம்பில் ஏறிநின்று, தயங்கியபடி, மலக்கியாசரை விநயமாகப் பார்த்தான். ‘சம்பளத்துக்கு வந்திருக்கிறேன்’ என்று அந்தப் பார்வைக்குப் பொருள்.
மலக்கியாசர் இரு கைகளையும் எடுத்து கட்டிலின் பக்கச் சட்டங்களில் உராசிக்கொண்டு நிமிர்ந்தார். கண்களிலும் முகத்திலும், தான் ஒரு முதலாளி என்ற சிறுகர்வம் ஊடுருவி நின்றது.
கணபதி கைகளை பின்னுக்கு கட்டிக் கொண்டு நின்றான்.
“என்ன கணபதி, அண்டைக்கு பிள்ளைக்குச் சுகமில்லையெண்டு சொல்லிப்போட்டு, நாலுமணிக்கே ஓடியிட்டியாம். சாந்தேப்பை சாமான் எடுத்து வைச்சனியா?”
கணபதி அவரையே பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றான்.
“என்னடாப்பா…”
“இல்லை, தனம் நிண்டவன்…”
“சாமானுக்கு ஆர் பொறுப்பு உன்னையல்லவா பொறுப்பு வைச்சனான்?”
“ஆம்” எனக் கணபதி தலையை அசைத்து ஆமோதித்ததான்.
“பேந்தென்னெண்டு அவனிட்டை கேக்கிறது. மேசன் ராசதுரையிடை சாந்தேப்பையைக் காணவில்லை. நாளைக்கு அவன் வேலைசெய்யச் சாந்தேப்பையில்லை. இப்ப வேண்டிக் குடுக்க வேணும்.”
கணபதி மௌனமாக நின்றான்.
“என்ன செய்யிறது. ரெண்டரை பொறுத்திருக்கிறன். உன்னட்டை ரெண்டரை கழிச்சிருக்கு”
மலக்கியாசர் அவனைப் பார்க்க விரும்பாமல் குனிந்து, பாதத்தை சொறிந்து கொண்டார்.
அவருக்கு இரண்டரை ரூபா அடித்துக் கொண்டதில் நெஞ்சுள் மகிழ்வின் முகை.
“நீ இந்தக்கிழமை எத்தனை நாள் வேலை செய்யதனி?”
“திங்கள் ஒண்டு செவ்வாய் ரண்டு, புதன் மழையெண்டு வேலையில்லை. வியாழன் மூண்டு…..” கணபதி தன் விரல்களை மடித்து எண்ணினான்.
“வியாழக் கிழமை நாலு மணிக்கு போயிட்டாய். எப்பிடி முழு நாள் போடுறது. அரைநாள் தான் போட்டிருக்கு” – மலக்கியாசர் மிடுக்குடன் சொன்னார்.
எண்ணியவன் கைவிரல்களை மடித்து அளவோடு நிறுத்தி, நிமிர்ந்து அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, பின்னும் தொடர்ந்து எண்ணினான்.
“வியாழன் ரெண்டரை, வெள்ளி மூண்டரை, நேற்று மேசன்மார் வரயில்லையெண்டு அரைநேரம். அப்ப மூண்டரையும் அரையும் நாலு நாள் அப்ப நாலு நாளுக்கும் எவ்வளவு சம்பளம்?” மலக்கியாச் கேட்டார்.
கணபதி படிப்பறிவிலாதவன். கணக்குப் பார்க்கத் தெரியாதவன், வாய் பேசும் ஊமை என்பதெல்லாம் மலக்கியாசருக்கு நன்கு தெரியும்.
“நீங்களே பாருங்கோ”
“நாலு நாளுக்கும் நாலரை ரூபாப்படி நாமூண்டு பன்னிரெண்டு, நாலரை ரெண்டு பதினைஞ்சு ரூபா, என்ன சரியா?”
அவன் இலாய்ச் சிரித்தான்.
“பதினைஞ்சு ரூபாய்க்கு எவ்வளவு, காசு வாங்கியிருக்கிறாய்?” “சாப்பாட்டுக்கு ஒவ்வொரு ரூபா, அண்டைக்கு ரெண்டு ரூபா.”
“அப்ப ஐஞ்சும், ரெண்டும் ஏழு ரூபா போனால் இன்னும் எட்டு ரூபா. அதிலை ஐம்பது சதம் போனா ஏழரை ரூபா தரவேணும்.”
மலக்கியாசர் தன் பார்ட்டியில் வேலை கொடுப்பதற்காக கிழமைக்கு மேசனிடம் எழுபத்தைந்து சதமும் கூலியிடமும் ஐம்பது சதமும் எடுப்பது விழக்கம்.
ஏழரை ரூபா என்றதும் வாழ்க்கைச் செலவுகள், கடன்கள் நினைவில் வர அவன் மனம் கனக்கிறது.
“உனக்கு இண்டைக்குக் காசு” வேணுமா? என்ன அவசரம்?” மலக்கியாசரின் கேள்வியில் அனாயாசம் தொனித்தது. ”
அவன் சிரித்தான்.
“இஞ்சேருங்கோ, எங்கடை மாடு வயலுக்கை கட்டியிருக்கு. வெய்யிலாயிருக்க. கணபதியை ஒருக்கா அவிட்டுக் கொண்டரச் சொல்லுங்கோ” முத்தம்மா மெதுவாகச் சொல்லிவிட்டுக் கணபதியைப் பார்த்தாள்.
“ஓ….. கணபதி பின்னாலை வயலுக்கை எங்களிடை வெள்ளைமாடு கட்டியிருக்கு. அவிட்டுக் கொண்டு வந்து கட்டிவிடு பாப்பம்.”
போத்தலையும் சாக்கையும் முன்சுவரோடு வைத்துவிட்டு வயலுக்குப் போய் மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்து கட்டினான். வியர்வை உடலில் கசிந்தது. பழையபடி வந்து போத்தலையும் சாக்கையும் எடுத்துக்கொண்டான்.
“உதென்ன போத்தல்?”
“மருந்துக்கு……!”
மலக்கியாசர் மடியை அவிழ்த்து நோட்டுக்களை எண்ணினார். அவன் கண்கள் அவற்றை விழுங்கின.
“இந்தா மூண்டு ரூபா கிடக்கு, இந்தக்கிழமை காசு தட்டுப்பாடு, மிச்சம் அடுத்தகிழமை.”
அவனுக்கு உள்ளமும் உடலும் சுருங்கியது. முகம் கறுத்தது.
ஒரு கையால் மடியை சொருகிக் கொண்டு, மற்றக் கையால் காசை நீட்டினார் மலக்கியாசர்.
அவன் போத்தலைப் பிடித்திருந்த கைகளைப் பிசைந்து கொண்டு அசையாமல் நின்றான். நெற்றிப் பொருத்துக்கள் கனத்தன.
“என்ன?”
“புள்ளைக்கு மருந்து வாங்கவே காணாதே” என மனதுள் எண்ணிக் கொண்டு நின்றவன், மலக்கியாசரின் வெடுக்கான கேள்வியால் கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டான்.
“இன்னும் உனக்கு ஐஞ்சு ரூபா தரவேண்டும்.”
அவனுக்கு இதைக்கேட்டதும் முன்னொரு கிழமை சாப்பாட்டுக்கு வாங்கிய கடனையும், மருந்துக்குத் தேவையான பணத்தையும் எண்ணியதும் வேதனை அவனை வாட்டியது.
சரிசரி போயிட்டுவா?”
முகமனுக்காக தலையை அசைத்துவிட்டு கணபதி இறங்கி நடந்தான். தன் ஒரே மகள் செல்லத்தின் காய்ச்சலால் வாடிக் காய்ந்த தோற்றம் அவன் எண்ணக் கல்லில் சிலை வடித்தது.
அவன் தெருவுக்கு ஏறியதும் மலக்கியாசர் முத்தம்மாவைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தார். அவளென்ன சும்மாவா இருப்பாள்?
தெருவுக்கு ஏறியவன் முன்னாலிருக்கும் வைரவ கோயிலைக் கண்டதும் தோள் துண்டை எடுத்து இரு கைகளாலும் நெஞ்சோடு ஒற்றிக் கொண்டான். அவனுக்கு கடவுள் பக்தி அதிகம்.
“கெதியாப் போய் சம்பளக் காசை வாங்கிப் புள்ளைக்கு மருந்துமெடுத்துக் கொண்டு மிச்சமிருந்தால் இருபத்தைந்து சதத்துக்கு மீன் பொடியும் வாங்கிக் கொண்டு வாருங்கோ” என்று மனைவி கூறியவை நெஞ்சுக்குள் நிரைகட்டி நெரித்தன. கணபதிக்கு.
மடியில் கிடந்த மருந்தத் துண்டை எடுத்துப் பார்த்தான். கபாலப் பொருத்துக்களைக் குத்தி தணலேற்றி, வந்த கண்ணீர் விழிவட்டத்துக்குள் மூட்டம் போட்டன. கண்களை இறுக மூடி விரித்தான்.
“டுப்! டுப்!”
மருந்துத் துண்டில் கண்ணீர்த் துளிகள் விழுந்து பரவின. தன் பிள்ளையில் அவனுக்கு அளவு கடந்த பாசம்.
கணபதி நடந்து கொண்டிருந்தான். அவன் வேகமாக நடந்தான். சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
அவன் தனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டான். அவர்களில் யார் தனக்குக் கடன் கொடுக்கக் கூடியவர்கள் எனக் கற்பனை செய்தான்.
மலக்கியாசரையும் அவன் நினைத்துக் கொண்’டான்.
“அந்த ஆளும் என்ன செய்யும், நான் காசு வேண்டாமல் நிக்க, வெடுக்’கென விழுந்தது அந்த மனிசனுக்கும் குடுக்க வேண்டியவங்க குடுக்கவில்லையாக்கும்” என்றெண்ணியவாறே, மருந்துப் பெயர் எழுதியிருந்த துண்டைத் திரும்புவும் மடியில் வைத்துக்கொண்டான்.
அவன் மிக வேகமாக நடந்துகொண்டிருந்தான்.
சில நேரம் கழித்து மலக்கியாசரும் அவர் மனைவி முத்தம்மாவும் அந்தத் தெருவில நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களும் வேகமாகத்தான் நடந்தார்கள். அவர்கள் செருப்புக் கடையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
யோ.பெனடிக்ற்பாலன்
மார்க்சிய முற்போக்குவாதி யோ.பெனடிக்ற் பாலன் ஆவார். சமகாலக்கதைகளாக இப்படி எத்தனை காலம், ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள், பட்டம் விடுவோம், கரையேறும் மீன்கள் முதலான நல்ல சிறுகதைகளைப்படைத்துள்ளார். குட்டி அன்னாரது தரமான நாவல். ‘விபசாரம் செய்யாதிருப்பாயாக’ அவரது சிறுகதைகளின் தொகுப்பு.
– 04.03.1962, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.
| பெனடிக்ற் பாலன், யோ. (1939 - 1997) ஓர் எழுத்தாளர். இவர் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது 'விபச்சாரம் செய்யாதிருப்பாயா' என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற…மேலும் படிக்க... |