சுமதி என் சுந்தரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 168 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

பேருந்து மைசூர் நிலையத்தில் நின்றதுமே தனது பையைத் தூக்கிக்கொண்டு பேருந்தை விட்டு இறங்கிய சுமதிக்கு வயிற்றைப் பிசைந்தது. அப்பாவை எப்படி சமாளிப்பது …அவர் கோபக்காரர் ஆயிற்றே. அவள் தானியங்கியைத் தேடத்துவங்கின போது பரிச்சயமான குரல் பின்னால் இருந்து கேட்டது.

“என்னம்மா, தனியாக வந்திருக்கே? மாப்பிள்ளை வரலையா?” கேட்டது பக்கத்து வீட்டு கைலாசம் மாமா. மாமா ஆட்டோ ஓட்டுநர் தான். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக மைசூரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

“இல்லை மாமா, அவர் வேலையா தும்கூர் போய் இருக்கிறார். ஒரு வாரம் ஆகும். அவர் தான் என்னை அனுப்பி வைச்சார் ” சுமதியின் வாயில் இருந்து சரளமாக பொய்யான சொற்கள் உதிர்ந்தன.

அவள் ஆட்டோவில் ஏறியதும் ஆட்டோ சரஸ்வதிபுரத்தை நோக்கிப் பறந்தது.

“அதுவும் நல்லதுதான்மா. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு புது ஊரில் தனியாக விட்டுவிட்டு போகறது அவ்வளவு நல்ல இருக்காது”

அன்று வெள்ளிகிழைமை ஆதலால் சாலையில் போக்குவரத்து கம்மியாகத் தான் இருந்தது. பத்தே நிமிடத்தில் வீடு வந்து விட்டது.

பக்கத்து வீடு தான் என்றாலும் சுமதியின் வீட்டிற்கும் மாமாவின் வீட்டிற்கும் உள்ள பந்தம் விவரிக்க இயலாது. அன்பு, அக்கறை, பரிவு எல்லாமே நிறைந்த உறவு இரண்டு குடும்பங்களுக்கு நடுவிலும் இருந்தது.

சுமதி வீட்டிற்குள் நுழைந்ததுமே அவள் தங்கை விமலா ” அக்கா, என்ன ஆச்சர்யம்…வாக்கா… அம்மா அக்கா வந்திருக்கா” என்று உள்ளே சமையல் அறைக்குள் ஓடினாள்.

மங்களம் கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள்.

“என்னம்மா தனியா வந்திருக்கே. மாப்பிள்ளை எங்கே?” என்ற மங்களித்திடம்,

“அம்மா எனக்கு பசிக்கிறது. டிபன் சாப்பிட்ட பின்னர் விவரமாக சொல்றேனே” என்ற சுமதி சமையல் அறைக்குள் நுழைந்து தோசை மட்டும் தேங்காய்ச் சட்டினியை தட்டில் போட்டுக்கொண்டு முன் அறைக்கு வந்து அமர்ந்தாள்.

“அப்பா எங்கம்மா?”

“அப்பா, இப்போது தான் வேலாயுதம் மாமாவைப்பார்க்கப்போய் இருக்கார். பத்து நாட்களுக்கு முன்னர் மாமாவிற்கு கிட்னி ஸ்டோன் ஆப்ரேஷன் நடந்தது அவரை விசாரிக்க போய் இருக்கார்” என்ற மங்களம் மகளை மேலும் கீழும் நோட்டம் விட்டாள். அவள் வயற்றில் பயம் பந்து மாதிரி சுருட்டிக்கொண்டது. திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி விட்டது. பெண்ணைப்பார்த்தால் புதிதாகத் திருமணம் ஆன பெண்ணின் களை சுத்தமாக இல்லை. என்னவாக

இருக்கும்? கூடிய சீக்கிரம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் மங்களம்.

அதற்குள் விமலாவும் அவளுக்குப்பின்னர் பிறந்த தங்கையான ரோகிணியும் சுமதியுடன் வம்பளக்க ஆரம்பித்து விட்டனர். “அக்கா, அத்திம்பேர் எப்படி இருக்கார்?” என்றாள் ரோகிணி. படு சுட்டி அவள். “எல்லாம் நல்லாத்தான் இருக்கார்” சுமதியின் குரலில் இருந்த அசுவாரஸ்யம் சமையல் அறையில் இருந்த மங்களத்தின் கவனத்தில் இருந்து தப்பவில்லை.

விமலா கல்லூரிக்குக் கிளம்பி விட்டாள். அன்று காலை நடக்க வேண்டிய வகுப்புகள் மதியத்திற்கு மாற்றப்பட்டு விட்டிருந்தன. கல்லூரியில் ஏதோ தணிக்கைக் குழு வந்திருந்ததாம். ரோகிணிக்கு அன்று பள்ளி விடுமுறை. பத்தாம் வகுப்பு மாணவி அவள்.

சுமதி பி ஏ முடித்து விட்டு மைசூரில் நாராயணபுராவில் ஒரு அலுவலகத்தில் அங்குள்ள விற்பனைப்பிரிவின் சேல்ஸ் டைரக்டரிடம் அவரது காரியதரிசியாகப்பணியாற்றி வந்தாள். மாதம் இருபதாயிரம் சம்பளம். இரண்டு வருடம் வேலைபார்த்த பின்னர் தான் மூன்று மாதங்கள் முன்னர் அவளது திருமணத்தைப்பற்றின பேச்சு வீட்டில் தொடங்கியது.

ஆதிநாராயணன் அவர்களுடன் உயிருக்கு உயிராக பழகிய அவரது ஆபீஸ் நண்பர் பாலகிருஷ்ணா கௌடாவின் மூத்த மகன் சுப்பண்ணா தான் அவர் தேர்ந்து எடுத்த மாப்பிள்ளை. பாலகிரிஷ்ணாவிற்கு மூன்று மகன்கள். முதல் பையன் பெங்களூரில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தான். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்ற கம்பனியில் வேலை பார்த்து வந்த மேனேஜிங் டைரக்டருக்கு சுப்பண்ணா தான் ட்ரைவர். மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். அரசு வேலை வேறு. பென்ஷன் உண்டு.

பாலக்ரிஷ்ணா கௌடாவின் மற்ற இரு மகன்களும் மைசூரிலேயே வேலை பார்த்து வந்தார்கள்.

ரொம்ப வருடமாகவே பாலகிருஷ்ணாவும் ஆதிநாராயணனும் தங்களது நட்பை உறவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர். பாலக்ரிஷ்ணாவின் மனைவி ஆஸ்த்மா நோயாளி பாவம். நான்கு நாட்கள் நன்றாக இருந்தால், மூன்று நாட்கள் படுக்கையில் விழுந்து விடுவாள்.

ஆதிநாராயணன் பிராமணர் தான். ஆனால் இப்போது பிராமண மாப்பிள்ளைகள் கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. ப்ராமணப் பையன்கள் முக்கால் வாசிப்பேர் அமெரிக்கா சென்று விட அவர்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை சமாளிப்பது எளிது அல்ல என்பதை ஆதிநாராயணன் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டிருந்தார்.

மங்களத்திற்கு இதில் வருத்தமே. உறவுக்காரர்கள் என்ன சொல்வார்கள்?

” மங்களம், நம்ம பெண் கல்யாணத்திற்கு உறவினர் யாரேனும் பண உதவி செய்வார்களா. உனது பெரியப்பா பையன் ரமேஷ் லண்டனில் தானே இருக்கிறான். கேட்கலாமா?” கிண்டலாகக்கேட்டார் ஆதிநாராயணன்.

” நீங்க வேற..விளையாடறீங்களா ?” என்றாள் மங்களம்.

பி ஏ படித்து விட்டு ஒரு கார் ஓட்டுனரைத் திருமணம் செய்து கொள்வதா? கொதித்து விட்டாள் சுமதி. சிறிய வயது முதலே அவளுக்கு சுப்பண்ணாவைத் தெரியும். இரு குடும்பங்களுக்கும் வெகு நாட்களாக நல்ல தோழமை இருந்ததால் நல்லது கெட்டதிற்கு அவர்கள் வீட்டிற்கும் இவர்கள் வீட்டிற்கும் போக்குவரத்து இருந்து கொண்டே தான் இருந்தது.

பாலக்ரிஷ்ணாவின் மனைவி நோய்வாய்ப்படும்போதெல்லாம் மங்களம் தான் அவர்களுக்குச் சமையல் பண்ணி கொடுத்து அனுப்புவாள். ஒருநாள் கூட மங்களம் முகம் சுளித்ததே இல்லை. பாலக்ரிஷ்ணா மங்களத்தை த் தன் தங்கையாகவே பாவித்து வந்தார்.

சுப்பண்ணா குடும்பப் பொறுப்புகளை உணர்ந்தவன். குடி சிகரெட் என்று கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. பத்தாவது வகுப்பிற்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறவில்லை. அதனால் கார் எப்படி ஓட்டுவது என்று நன்றாகக் கற்றுக்கொண்டவன் சில காலம் ஒரு கூரியர் கம்பனியில் வேலை பார்த்து விட்டு தகுந்த வயதை அடைந்ததும் மைசூரில் ஒரு கம்பனியில் ஓட்டுனராக

வேலைக்குச் சேர்ந்தான். அங்கே நல்ல வேலை பார்த்து அவனது முதலாளியே அவனுக்காகப் பரிந்துரைக்க அவனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்து விட்டது.

சுப்பண்ணா பார்க்கக் களையாக கோதுமை நிறத்தில் சுருட்டை முடியுடன் அரும்பு மீசையுடன் கவர்ச்சியாகத் தான் இருந்தான். அவனது வாட்டசாட்டமான தோற்றத்தைப்பார்த்து பாலக்ரிஷ்ணாவின் உறவினர்கள் அவனுக்கு த் தங்கள் பெண்ணைக்கொடுக்க முன் வர, பாலக்ரிஷ்ணா பிடி கொடுத்து பேசவில்லை. சுமதி தான் தன் மருமகள் என்று அவர் முடிவு எடுத்து விட்டார்.

சுப்பண்ணாவிற்கும் சுமதியைத் திருமணம் செய்து கொள்வதில் ஆட்சேபணை இல்லை. தந்தை சொல்லை த் தட்டாத தனயன் அவன்.

சுமதியின் அழுகைக்கு அவள் தந்தை மசியவே இல்லை. மூன்று நாட்கள் சுமதி கொலைப்பட்டினி இருக்க ஆதிநாராயணனுக்கு மார்பு வலியே வந்து விட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது மங்களம் மகளிடம் முகம் கொடுத்து பேசவில்லை.

“உன்னை வளர்த்து ஆளாக்கியதற்கு என் கணவரை நான் இழக்க வேண்டும் என்றால் அப்படியே ஆகட்டும். உனக்கு திருப்தி தானே?” என்றாள் அவள் மகளிடம்.

சில வருடங்கள் முன்னர் ஆதிநாராயணனுக்கு வயிற்றில் அல்சர் வந்து சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்ட போது கைலாசமும் பாலக்ரிஷ்ணாவும் தான் பண உதவி செய்ய முன் வந்தார்கள். அவர்கள் உறவினர்கள் ஒருவரும் முன் வரவில்லை

வேறு வழியின்றி சுமதி சுப்பண்ணாவை க் கைப்பிடித்தாள். ஆனால் முதல் இரவின் போது சுமதி கணவனிடம் வெடித்து விட்டாள். அவளது வார்த்தைகள் அவனை முட்களாக க் குத்த அவன் அவளிடம் இருந்து ஒதுங்கிக்கொண்டான். அமைதியாக அவன் அவளிடம் கூறியது – “உன் சம்மதம் இல்லாமல் என் விரல் கூட உன்னைத் தொடாது.”

கடந்த ஒரு மாதம் ஆக அவனுடன் ஒரே கூரைக்கடியில் வாழ்ந்தாலும் அவர்கள் இருவரும் இரு தனித்த துருவங்களாகவே இருந்தனர்.

“ஒரு கார் டிரைவரின் மனைவி என்று சொல்லிக்கொள்வதை விட, நான் தூக்கில் தூங்குவதே மேல்” என்று அவள் மிரட்ட சுப்பண்ணா நாசூக்காக ஒதுங்கிக்கொண்டான்.

ஏனோ தானோவென்று சமையல் செய்வது , மணிக் கணக்கில் கைபேசியில் மூழ்கி இருப்பது என்று சுமதியின் நாட்கள் மெதுவாக நகர்ந்தன. தனது எதிர் காலத்தை நினைத்து சுமதி இரவில் தூங்காமல் தவித்தாள். அவன் ஹாலில் தூங்க இவள் மட்டும் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை அவன் விடியலிலேயே வேலைக்குச் சென்று விட அவனுக்கு வாட்ஸாப்ப் மூலம் தகவல் தெரிவித்து விட்டு அவள் மைசூருக்கு க் கிளம்பி விட்டாள்.

வீட்டிற்கு திரும்பி வந்த ஆதிநாராயணனுக்கு மகள் மேல் கோவம் வந்தாலும் அவர் காட்டிக்கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் சென்றது. மங்களத்திற்கு மகளின் நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை.

” அம்மா, பிடிவாதம் பிடித்து என்னை அவருக்குக்கட்டி வைத்து விட்டீர்கள். ஆனால். ஒரு கார் ஓட்டுனருக்கு மனைவியாக வாழ்வது எனக்கு அவமானம் ஆக இருக்கிறது. வேண்டாம் அம்மா. ” கெஞ்சினாள் சுமதி.

“உனக்கு என்ன தான் வேண்டும்” என்றாள் மங்களம்

” அம்மா ப்ளீஸ்..நான் மறுபடியும் வேலைக்குச் சேர்கிறேன். எனது பழைய கம்பனியிலேயே எனக்கு வேலை கிடைத்து விடும். இப்போதைக்கு எனக்கு அவரோடு வாழ வேண்டாம்.”

” இப்படி சொன்னால் எப்படி. நீ வாழாவெட்டியாக இங்கு வருவதற்குத் தான் உனக்கு த் திருமணம் செய்து கொடுத்தோமா?”

“அம்மா, ப்ளீஸ்..பிடிக்காத கணவனுடன் வாழ்வதற்கு பதில் எனக்கு விஷம் கொடுத்து விடேன்”

” என்னடி இது? பயமுறுத்துகிறாயா …. அவ்வளவு கோழையா நீ?”

விவாதம் நின்றது.

ஒரு வாரம் கழித்து ஆதிநாராயணன் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டிற்குள் வந்தார்.

“மங்களம், நான் தான் தப்பு பண்ணி விட்டேன். அந்தப்பையன் பாவம். பாலக்ரிஷ்ணா உடைந்து போய் இருக்கிறான். நாங்கள் இருவரும் கலந்து பேசி விட்டோம். சேத்தன் தெரியும் இல்லையா. நாலாவது வீடு திம்மப்பாவின் அக்கா பையன். அவனிடம் பேசியாகி விட்டது. அவன் வக்கீல் ஆக இருக்கிறான். விவாகரத்து வாங்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டோம்”

‘பாலக்ரிஷ்ணாவின் ஒன்று விட்ட அக்கா வின் பெண் சுப்பண்ணாவைத் திருமணம் செய்து கொள்ள தயார் “

“என்னங்க இது..குண்டைத் தூக்கி போடுறீங்க” மங்களம் இடிந்து போய் விட்டாள்.

சுமதி நிம்மதி பெருமூச்சு விட்டாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. கை தன்னிச்சையாக கழுத்தைத் தடவியது. மஞ்சள் மணம் கமிழ சுப்பண்ணா அவள் கழுத்தில் கட்டிய தாலி.

அடுத்த நாள் அவள் தாயார் கைலாசம் மாமாவின் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தது சுமதியின் காதுகளில் விழுந்தது.

“இவள் தான் பிடிவாதமாக இருக்காள். அந்த பையன் பாவம் இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்து விட்டான். ஆனால் சுமதிக்கு விவாகரத்து கொடுப்பதில் தனக்கு முழு சம்மதம் என்றும் கூறி விட்டான். “

கைலாசம் மாமாவின் மனைவி கூறுவது கேட்டது

” அவனைப்பற்றி நல்லாத்தெரியும். இந்த காலத்தில் இந்த மாதிரி பையன். சுமதி தப்பான முடிவு செய்கிறாள் மங்களம். இவர் கூட தான் ஆட்டோ டிரைவர். நான் அந்த காலத்து பி எஸ் சி. ஆனால் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்?”

கைலாசம் மாமாவின் மனைவி படித்தவளா? சுமதிக்கு இந்த தகவல் அதிர்ச்சி அளித்தது.

தனது நடவடிக்கைகள் அவளுக்கு அருவருப்பைத் தந்தன. கார் ஓட்டுநர் எனறால் இளக்காரமா? அதுவும் ஒரு தொழில் தானே? இதில் என்ன கௌரவக்குறைச்சல் இருக்கிறது? சுப்பண்ணாவின் உருவம் அவள் கண் முன் நின்றது. திருமண நாளின் போது அவன் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி. அவள் அங்கே இருந்த போது ஒரு முறை கூட அவன் அவளிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையே. ஒரு கூச்சல். ஒரு கத்தல்… ஊஹூம். ஒரு நல்ல மனிதனை கணவனாக அடைய நான் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அடுத்த நான்கு நாட்கள் சுமதி தூங்கவே இல்லை. ஐந்தாம் நாள்

அவள் தந்தையிடம் வந்தாள் ” அப்பா நீங்களும் மாமாவும் என்னைச் சேர்ந்து என் வீட்டில் விட்டுடுங்க. என்னை மன்னிச்சிடுங்க. என் தப்பு எனக்கு புரிந்து விட்டது. ஒருவரோடு தொழிலை வைத்து அவர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது. எனக்கு என் கணவரிடம் உடனே பேச வேண்டும். பேசலாமா?”

ஆதிநாராயணனும் மங்களமும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போய் நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *