சுபியானின் சாகசங்கள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2024
பார்வையிட்டோர்: 221
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இந்த இழவப் பேசுங்க… இல்லாட்டி மூடி வெய்ங்களன்.”
என்ற அன்பு கொஞ்சும் வார்த்தைகளில் பொய்க் கோபம் கலந்து அவனிடம் சொன்னாள் சுபியானின் மனைவி.
கைத் தொலைபேசியை ‘ஓன்’ செய்து பத்து நிமிடங்களுக்குள் மூன்று தடவைகள் தானாகச் சிணுங்கித் தானாக அடங்கி விட்டிருந்தது. அதைக் கண்டுதான் அவள் அப்படிச் சொன்னாள்.
அழைக்கும் இலக்கங்களைப் பார்த்து விட்டு அவன் அதைக் கையிலெடுக்காமல் தேர் தல் முடிவுகளை அறிவிக்கும் ஒளிபரப்பில் லயித் திருந்தான். தொலைக் காட்சியில் ‘ஆய்த எழுத்து’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
யாருக்குப் பதிலளிக்க வேண்டும் யாருக்குப் பதில ளிக்கக் கூடாது என்பது அவ னுக்கு மட்டுமே தெரியும். காலையில் எழுந்ததும் வீட்டுத் தொலைபேசியின் தொடர்பைக் கழற்றி விட்டிருந்தான்.
முறுக வறுக்கப்பட்ட முந்திரிப் பருப்புகளை ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து அவன் அமர்ந்திருந்த கதிரைக்கு முன்னாலிருந்த டீப்போயில் வைத்து விட்டு,
“ஒங்களுக்கு பிளேன்டி ஊத்தயா… டீ ஊத்தயா?” என்று அவனது மனைவி கேட்ட வேளை நான்காவது முறையாகக் கைத்தொலை பேசி சிணுங்கியது.
“டீ..” என்று பதில் சொல்லி விட்டு அழைக்கும் இலக்கத்தைப் பார்த்தான்.
போதகர் போல் அன்ரனி!
இந்தப் போதகரைக் காட்டித்தான் தலைவரிடமிருந்து பெருந் தொகையொன்றை அவன் சுருட்டிக் கொண்டு வந்திருந்தான்.
திட்டமிட்டு அவன் தலைவரிடம் கொண்டு சென்றவர்களை விடத் தானாகவே வந்து விழுந்த வாய்ப்புத்தான் போதகரின் தொடர்பு. தலைவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்ற போதகரின் கருத்தை அவன் புத்திசாலித்தனமாகப் பணமாக்கிக் கொண்டான்.
ஆயுதங்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் அரசியல்வாதிகளின் மீது போதகருக்கு நாட்டம் இருக்கவில்லை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி இன, மத. பிரதேச வேறுபாடு காட்டாமல் பன்னி ரண்டு வருடங்களாகச் சேவை செய்த தலைவரின் அரசியல் போதக ருக்குப் பிடித்திருந்தது. அவரது பிரதேசத்தைச் சேர்ந்த சுபியான் தலைவ ரிடம் நெருக்கமுள்ளவனாக இருக்கிறான் என்பதைப் போதகர் அறிந் திருந்தார். தலைவருக்குத் தம்மிடமும் தம்மைப் போன்ற ஏனைய போதகர் கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் வாக்குகளைத் தேர்தலில் தலைவருக்குப் பெற்றுத் தருவதாகத் தாமாகவே வந்து தெரிவித்த போது சுபியான் மலர்ந்து போனான்.
போதகரின் பிரதேசத்தில் பத்து நாட்கள் வேலை செய்யப் போவதாகச் சொல்லிப் பத்து லட்சம் ரூபாய்களைத் தலைவரிடமிருந்து சுபியான் பெற்றுக் கொண்டான். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத போதக ருக்குத் தெரியாமல் இப்பணத்தைப் பெற்றுக் கொண்ட அவன் அப் பணத்தைக் கொண்டு குறையாக இருந்த அவனது வீட்டைக் கட்டும் வேலையைத் துரிதப்படுத்தினான்.
போதகரின் பிரதேசத்தில் தலைவரின் போஸ்டர் ஒட்டுபவர் களுக்கு இரண்டாயிரம் மூவாயிரம் என்று தொகைகளை வழங்கி விட்டுப் பணத்தில் பெரும் தொகையைச் சுருட்டிக் கொண்டான். அதன் பிறகு அவனது மூளை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது.
சுபியான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பமொன்றில் பிறந்தவன். அரசாங்கப் பாடசாலையொன்றில் துப்பரவுத் தொழிலாளியாகத் தொழில் செய்து வந்தான். இயல்பில் எல்லோருடனும் நெருக்கமாகவும் சினேகமாகவும் பழகும் சுபாவம் அவனுக்கிருந்தது. அந்தச் சினேகத்தைப் பயன்படுத்தி அவன் ஊசி நுழைக்கும் இடத்தில் உலக்கையை நுழைத்து விடும் குள்ளத்தனமான ஆசாமி என்பதை அவனது ஊரார் அறிவார்கள்.
இளவயதில் அவனுக்கு ஒரு பலவீனமாக இருந்த அந்தக் குள்ளப் புத்தியை வளர்ந்த பிறகு ஒரு பலமாக மாற்றிக் கொண்டான் சுபியான். அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவனது பிரதேசத்தவர்கள் அவனை அங்கீகரிக்க மறுத்தனர். அதாவது அவனைப் பொறுத்த வரை அவனது ஊரவர்கள் ‘துட்டனைக் கண்டால் தூர நட’ என்பது போல் நடந்து கொண்டனர். இன்று வரை அந்த அங்கீகார மறுப்பு இருந்தாலும் கூட அதை வேறு ஒரு நபரில் வேறு ஒரு பிரதேசத்தில் அவன் பெற்றுக் கொண்டான்.
அதில் துரதிர்ஷ்டவசமாக மாட்டிக் கொண்டவர் அயலூர் அரசியல் தலைவர். சுபியானின் ஊரில் தனது அரசியலை முன் கொண்டு செல்லத் தலைவருக்கு ஓர் ஆள் தேவைப்பட்டான். அப்படியே வந்து ஒட்டிக் கொண்டான் சுபியான். அதன் பிறகு தலைவருக்கு எல்லாமே அவனாகிப் போனான்.
அவனது சுறுசுறுப்பும் வேகமும் தலைவருக்குப் பிடித்திருந்தது. தலைவர் காலால் இட்டால் தலையால் செய்து முடிப்பது போல் நடித்தான். தலைவருக்காக உயிரை விட்டுவிடத் தயாராக இருப்பது போல் பாவனை செய்தான். தலைவர் அவனது நடிப்பை உண்மையென்று நம்பினார்.
சுபியான் எந்தச் செயற்பாட்டையும் பதறிப் பதறியே செய்வான். கூட இருக்கும் அத்தனைப் பேரையும் ஒரு பதற்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுவான். மடிக்குள் நெருப்பு விழுந்தவனைப் போலப் பதறிப் பதறிக் கதைப்பான். நாளைக்கு உலகம் அழிந்து விடப்போகிறது என்கிற தினுசில் துடிக்கும் அவனது நடத்தை தலைவரின் அரசியலில் அபிமானங் கொண்டவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திற்று. ஒரு புயலைப் போல் நுழைந்து அந்த இடத்தின் நிலைமையையே ஒரு கணத்தில் மாற்றிவிட்டுச் செல்லும் அவனது போக்கைக் கண்டு தலைவரின் அபிமானிகள் தலை வரை எச்சரித்தனர்.
சுபியான் போன்ற ஒருவன் ஹொலிவூட்டில் இருந்திருந்தால் மாலன்பிரண்டோ, அந்தனி குயின் போன்றவர்கள் சுபியானிடம் பிச்சை எடுக்க வேண்டியிருந்திருக்கும். தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் சிவாஜி கணேசன், கமலஹாசன் போன்றோர் நடிப்பைக் கைவிட்டிருப்பார்கள்.
தன்னை எச்சரித்த உண்மையான விசுவாசிகளையே எச்சரிக்கும் நிலைக்குத் தலைவர் வந்திருந்தார். அதாவது தலைவரை அந்த நிலைக்கு அவன் மாற்றியிருந்தான். தலைவருக்கு இவன் சூனியம் செய்து விட்ட தாகவும் கூட அரசல் புரசலாகக் கதையிருந்தது.
காலம் செல்லச் செல்லத் தலைவரின் உடன் பிறப்புக்களையும் உறவினர்களையும் தன்மீது சந்தேகப்படும் தலைவரின் அபிமானி களையும் மிரட்டும் அளவுக்கு சுபியான் துணிந்தான். “நான் தலைவரின் அரசியலை முன்னெடுப்பவன். மக்களோடு இருப்பவன். நான் சொல்வதை நீங்கள் செய்து தரவேண்டும்” என்று தலைவரின் அதிகாரிகளுக்குப் பெருங் குரலில் உத்தரவு போட்டான். வெறுத்துப் போன தலைவரின் அபிமானிகளான புத்தி ஜீவிகள் பலர் ஒதுங்கிப் போனார்கள்.
“தும்புக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டிப் பள்ளி வாசலுக்குள் கொண்டு போனாலும் அதைக் கொண்டு குப்பை கூட்டலாமே தவிர ஆஸாக் கோலாகப் பயன்படுத்த முடியாது” என்று தலைவரின் உறவினர் ஒருவர் ஒருமுறை தலைவரிடம் முறையிட்ட போது ‘சுபியானின் விடயத் தில் தலையிட வேண்டாம்’ என்று உறுதியாக அவருக்குச் சொல்லி விட்டார் தலைவர்.
சுபியான் தன் தப்பாட்டத்தில் மும்முரமாயிருந்தான்.
தலைவரின் காதுகளுக்குச் செய்தி செல்லும் வகையில் அவ்வப் போது சில வதந்திகளைப் பரப்பி விடுவான் சுபியான். அவன் பரப்பிய முதலாவது வதந்தி விடுதலைப் புலிகள் அவனைக் கொலை செய்யத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது. அவனது நெருங்கிய உறவினரைக் கொண்டு இந்தச் செய்தியை அவன் பரவ விட்டான்.
இந்தச் செய்தி வெறும் ‘டும்’ என்பது தலைவரின் அபிமானி களுக்குப் புரிந்தது. புலிகள் ஒரு சொறி நாய்க்கு ஒரு புல்லட்டைச் செலவ ழித்தாலும் இவனைப் போன்ற ஒருவனைக் கொல்லப் பயன்படுத்தப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சுபியான் எதற்கோ திட்டமிடுகிறான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இந்த வதந்தியை அவிழ்த்து விட்ட இரண்டு வாரங்களில் தலைவ ரைச் சந்தித்தான் சுபியான். அரசியற் செயற்பாடுகளை வேகமாக முன்னெ டுக்கத் தனக்கு ஒரு வாகனம் தேவை எனத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தான் சுபியான். உயிராபத்தில் இருக்கும் சுபியானுக்கு வாகனம் தேவை என்று தலைவர் கருதி ஒரு வாகனத்தைப் பெற்றுக் கொடுத்தார். இரண்டாம் மாதம் அதற்கு எரி பொருள் செலவுக்கு மாதா மாதம் பணம் கேட்டு வந்து நின்றான். தலைவரின் அரசியல் முதுகெலும்பல்லவா அவன்? பணம் வழங்கப்பட்டது.
ஆறுமாதங்களுக்கு ஒரு முறை தேய்ந்த டயர்களுடன் வாகனத் தைக் கொண்டு வந்து நிறுத்திப் புதிய டயர் போட்டுத் தரக் கோரினான். எல்லாப் பிரதேசங்களையும் சேர்ந்த மக்களை ஏற்றி இறக்கிப் பணி புரிவதாலும் தலைவரின் சேவைகளை மக்கள் மயப்படுத்துவதாலும் அவ் வாகனத்தின் டயர்கள் சீக்கிரமே தேய்ந்து விடுவதாகக் கதை விட்டான்.
புதிதாக டயர்களைப் போட்டுக் கொடுத்தால் அவற்றைக் கழற்றி விற்றுக் காசாக்கி விட்டுப் பழைய டயர்களுடன் அந்த வாகனத்தை ஓட்டித் திரிவதை தலைவரின் அபிமானிகள் கண்டு பிடித்தார்கள். தலைவரைச் சந்தித்துப் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவோரிடம் பணம் பெற்றுக் கொண்டு வாகனத்தில் ஏற்றித் தலைநகருக்கு அழைத்து வருவதைத் தலைவரின் அதிகாரிகளால் அறிய முடிந்தது. ஆனால் அவர்களால் அது பற்றி மூச்சு விடக்கூட முடியவில்லை.
அவன் அவிழ்த்து விட்ட இரண்டாவது வதந்தியின் நோக்கம் தலைவர் உண்மை விளங்கித் தன்னைத் கழற்றி விட்டு விடக் கூடாது என்பது. தலைவரின் எதிர் அரசியல்வாதி ஐம்பது லட்சம் ரூபாவுக்குத் தன்னை விலைபேசுகிறார் என்பதுதான் அந்த வதந்தி.
தலைவர் அவனை அழைத்து விசாரித்த போது தனது மனைவி யின் பெயரால் உண்மை என்று சத்தியம் பண்ணினான். கோடிக் கணக்கில் தந்தாலும் தலைவரை விட்டுப் போவதில்லை என்று தலைவரின் கரங்க ளைப் பிடித்து அல்லாஹ் மீது சத்தியம் செய்தான். இந்தச் செய்தி கேள்விப பட்ட தலைவரின் அபிமானிகள் ‘கோடி ரூபாய் ஒரு கட்டுப் பட்ட தை புகையிலை கொடுத்துக் கூட அவனை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று அங்கலாய்த்தனர்.
தனது பிரதேசத்தில் தன்னோடு இருந்தவர்களையெல்லாம் அழைத்து வந்து தலைவருக்கு அறிமுகப்படுத்தினான் சுபியான். அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது முன்னூறு வாக்குகளைத் தம் கைவசம் வைத்திருப்பவர்கள் என்று தலைவருக்குப் படம் காட்டினான். பிறகு அவர்கள் பிரிந்து சென்று விடாமல் நம்மோடு இருக்க வேண்டும் என்ப தால் அவர்களுக்கு மாதாந்தம் பத்தாயிரம் முதல் பதினையாயிரம் ரூபாய்கள் வழங்குவதற்குத் தலைவருக்கு ஆலோசனை கூறினான். அவ் வாறு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைத் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறும் தான் அதனைப் பிரித்துக் கொடுப்ப தாகவும் கேட்டுக் கொண்டான். அவ்வாறு மாதாந்தம் வரும் பெருந் தொகைப் பணத்தில் பாதியைக் கொடுத்து விட்டு மீதியை சுபியான் சுருட்டிக்கொண்டான்.
சுபியான் தலைவருடன் இணைவதற்கு முன்னர் இரண்டு தேர்தல்களில் அவனது பிரதேசத்திலிருந்து தலைவருக்கு முன்னூறு வாக்குகள் விழுந்திருந்தன. தலைவரின் கருத்தில் சுபியான் பெரும் அரசியல் கில்லாடி என்பதால் அவன் மூன்றாவது தேர்தலில் பத்தா யிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை எல்லாப் புறத்திலும் பெற்றுத் தருவான் என்று தலைவர் மிகக் கடுமையாக நம்பினார்.
சுபியானின் நம்பிக்கை வேறு விதமாக இருந்தது. இந்தத் தேர்தல் முடிவதற்குள் தான் தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில் பெற்றிருந்த காருக்கும் புதிய வீட்டுக்கென வாங்கிய பெரிய ரீ.வீ. ரேடியோ செற், சோபா செற் ஆகியவற்றுக்கும் கணக்கு வழக்கை முடித்து விடுவதுடன் வீட்டையும் கட்டி முடித்துவிடுவது என்று தீர்மானித்தான்.
தமது சிறு சிறு தேவைகளுக்காகத் தலைவரை சுபியான் மூலம் சந்தித்த பலர் இருக்கிறார்கள். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இவர் களுடன் சுபியான் தொடர்ந்து உறவைப் பேணி வந்திருந்தான்.
கைத்தொலைபேசிக்கு வந்த முதலாவது அழைப்பு ஓர் அரச அதிகாரியிடமிருந்து வந்திருந்தது. தலைவர் மூலமாக அந்த அதிகாரிக்கு சுபியான் இடமாற்றம் ஒன்றைப் பெற்றுக் கொடுத்திருந்தான். இடமாற்றம் பெற்றுத் தரக் கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்குப் பத்தாயிரம் ரூபா வும் அந்த அதிகாரியின் திணைக்களத்தில் உள்ள ஒருவருக்கு வழங்க வென இருபத்தையாயிரம் ரூபாவையும் அதிகாரியிடமிருந்து பெற்றிருந்தான்.
தேர்தல் வேளையில் அந்த அதிகாரியைக் காட்டி அவரிடம் ஆயிரம் வாக்குகள் இருப்பதாகச் சொல்லித் தலைவரிடம் இரண்டு லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டான். தனது பெயரால் சுபியான் தலைவரிடம் பணம் பெற்றதை அறியாத அப்பாவி அதிகாரி தலைவரில் கொண்ட அபிமானத்தால் சுபியானிடம் பேசுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அடுத்த அழைப்பு ஒரு கோவில் தர்மகர்த்தாவிடமிருந்தும் இன்னொன்று தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி யிலிருந்து தலைவரால் கணினி ஒன்று வழங்கப்பட்ட ஒரு பொதுச் சங்கத் தின் தலைவரிடமிருந்தும் வந்திருந்தன.
இவர்களது ஒவ்வொரு தேவைக்கும் தலைவரைச் சந்திக்க வரும் போது தனது சிறு சிறு தேவைகளை அவர்களைக் கொண்டு சுபி யான் நிறைவேற்றிக் கொள்ளத் தவறியதேயில்லை. அப்படி நிறைவேற்றிக் கொள்ளும் அதே வேளை அடுத்த தேர்தலில் தலைவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்குகளைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தான். அவர்களும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தலையை அசைத்துக் கொள்வார்கள்.
போதகரைத் தலைவருக்கு அறிமுகப்படுத்திய பிறகு இவர்களை ஒருவர் இருவர் என அழைத்துக் கொண்டு சென்று தலைவரைச் சந்திக்கச் செய்தான் சுபியான். சந்திக்கும் போது ஒவ்வொருவரும் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை வாக்குகளைப் பெற்றுத் தருவதாகத் தலைவரிடம் உறுதியளிக்கும் படி கேட்டுக் கொண்டான்.
சந்திப்புக்குப் பின்னர் இவர்களுக்குத் தேர்தல் செலவுகளுக்கு வழங்கவென இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய்கள் வரை தலைவரிடம் பெற்றுக் கொண்டான் சுபியான். அந்தப் பணத்தில் தலைக்குப் பத்தாயிரம் அல்லது பதினையாயிரம் என்று போக மீதியைத் தானே சுருட்டிக் கொண்டான்.
இவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில் தேர்தலுக்கு முன்னரே வீட்டைக் கட்டி முடித்தான். தேர்தலில் அநேகமாகத் தலைவர் மண் கௌவுவார் என்பதையறிந்திருந்ததால் தேர்தல் தினத்துக்கு முந்திய தினம் எந்த வித ஆர்ப்பாட்டங்களுமின்றிக் குடியேறினான். தேர்தலுக்குப் பின்னர் தலைவரிடமிருந்து எதையும் கறக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் தவணைக் கட்டணத்தில் பெற்ற கார் முதல் கதிரை வரை எல்லாவற்றுக்கும் மீதிப் பணத்தைச் செலுத்தி முடித்தான்.
இவ்வாறு சுபியானுக்கு மட்டும் நாற்பது லட்சம் ரூபாய்களைக் கொடுத்த தலைவர் தேர்தலில் தோல்வியுற்றார்.
சுபியானின் சொந்த ஊரிலேயே அவனுக்காக இருநூற்று ஐம்பது வாக்குகள் விழுந்திருந்தன.
வறுத்த முந்திரிப் பருப்புகளைக் கொறித்த படி இதோ தொலைக் காட்சிக்கு முன்னால் சுபியான் அமர்ந்திருக்கிறான். அவன் யார் யாரைக் கொண்டு தலைவரிடம் பணம் சுருட்டினானோ அவர்கள் தலைவர் மீது கவலைப் பட்டு அவனது கைத்தொலைபேசிக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போதகரின் அழைப்பையும் தவிர்த்து விட்டுத் திரைப்படத்தில் மூழ்கியிருந்தான் சுபியான்.
வீட்டுச் சுவர்களுக்குப் புதிதாகப் பூசப்பட்ட இள நீல வர்ணத் தின் வாசம் அவனது மனதுக்கு இதமாக இருந்தது. தனது திறமையையும் புத்திசாலித் தனத்தையும் ஒரு கணம் நினைத்துப் பெருமிதப்பட்டான்.
நாளை தலைவரைப் பார்த்து விட்டுத்தான் மற்றவர்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தான் சுபியான்.
குறுக்கறுத்த அவனது மனைவி,
“தலைவருக்கு என்ன செல்லப் போறீங்க?” என்று கேட்டாள்.
“தலைவரக் கட்டிப் புடிச்சிக் கத்தினா எல்லாம் செரியாப் போகும் புள்ள!”
என்று சொல்லிச் சிரித்தான்.
– 25.05.2010
– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.