சுடலையாண்டி
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே எரியும் பெருநெருப்பில் உலகம் வெந்துகொண்டிருக்கும் வேளை. இதனைத்தான் உச்சி மத்தியானம் என்கிறார்களோ! எல்லாப் புறங்களிலும் அனலின் வெம்மை படர்கிறது. என் அகத்தும், புறத்தும் ஒரே கொதிப்பு. மனதில் அலைபாயும் எண்ணங்கள் முட்டி மோதுகின்றன.

அஃது மயானபூமி. பட்டினத்தின் ஒதுக்குப்புற மாசு அமைந்திருந்தது. வானளாவிய ஆலமரங்கள், அவற்றின் கிளைகள் பயங்கரமான வேதாளங்கள் நீளக் கால்கள் ஊன்றி நிலைத்து நிற்பன போலத் தோற்று கின்றன. கொளுத்தும் அந்தக் கொடிய வெயிலுங் கூட அப்பிரதேசத்துள் நுழையக் கூகூகிறது போலும்!
இலைகளின் ‘சலசலப்புச்’சத்தத்தில் மனித உடலின் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. ஏறிட்டு நோக் சுவே இதயம் பலமாக அடித்துக்கொள்கிறது!
திட்டுத்திட்டான சாம்பர் மேடுகள். சுடலை ஞானம் எனக்குப் பிறக்காவிட்டாலும் உலகவாழ்வையேவெறுக் க த் தூண்டுகின்ற மனோநிலை உயிர்க்கின்றது. ஏன்?
செல்வம், அழகு, ஆசைகள் அத்தனையும் நிராசை களாகிச் சிதைந்துபோன எலும்புகளாக, கரிந்து விட்ட நிணச்சுதைகளாக, உடலை நடுங்க வைக்கும் ‘கோறை’போன மண்டை ஓடுகளாக அங்கே காட்சி யளிக்கின்றன.
சமரசம் நிலவும் இடம் அதுதானாமே! உண்மை தான். ஏழை, செல்வன், முதலாளி, தொழிலாளி, ஆண் டான், அடிமை என்ற பேதமெதுவும் அங்கில்லை. எல்லாருமே பிடிசாம்பராகப் போய் முடிவெய்தியுள்ள மோனநிலை –
‘காடுடைய சுடலைப் பொடிபூசி உளங்கவர் கள்வனாகிய திரிசூலன் திருநடனமிடும் இடமும் இது வாமோ? தில்லையம்பலத்தாடுங் கூத்தப்பிரான், எதற்காக இப்பேழ்வாய்ப் பிசாசுகளின் நிரந்தர உறை விடத்து நிருத்தமிடச் சித்தங் கொண்டான்? அவனோர் பித்தனன்றோ! அவனுக்கு எல்லாம் ஒன்றுதானாமோ!
மனிதப்பிறவி எடுப்பவர்கள் என்றேனும் ஒரு போது, அநித்தப்பிறவியின் அந்தரங்கங்களை அம்பலப் படுத்தும் மயானபூமியை, உயிருடன், உணர்வுடன் தனியாகத் தரிசித்துப் பார்க்கவேண்டும். ஞான நிலை பெற இயலாதாயினும், தீய நெறிப்படர, முனை யாத் தூண்டுதலாவது பிறக்காதா?
துவிச்சக்கர வண்டியை, வேலி ஓரத்து மரத்துடன் சாய்த்துவைத்த பின்னர், முட்கம்பிப் போர்வைக்குள் முடங்கிக் கிடக்கும், அந்த மயானத்தில் என் பார் வையை மேயவிட்டபொழுது……..!
ஆலகாலமுண்டவன் கோவண உடையுடன் மீண்டும், சுடலையாண்டியாக என் போன்ற ஈனப்பிறவிகளுக்கும் தரிசனந் தரச் சித்தங்கொண்டுவிட்டானா…என்ற ஐயம், ஆச்சரியம் தோன்றி மறைந்தது. மன தில் ஏனோ நிலைகொள்ளவில்லை!
நேற்றைப்பொழுது இதே நேரம், பாடசாலையில் என் வகுப்பிற் படிப்பித்துக்கொண்டிருந்தேன். கணக் கைக் கொடுத்துவிட்டு, மாணவர்களைக் கூர்ந்து நோக் கியபடியிருந்தேன். எப்பொழுதும் பாடங்களில் மிகச் சமர்த்தனாக விளங்கும் அவனைக் காணவில்லை. எங்கே அவன்? ஏன் வரவில்லை? என்ற கேள்விகள் என் மனதுள் கிளர்ந்தன.
‘சிற்றம்பலம் வரவில்லையா?’
‘இல்லை ஐயா!’ என்று பதிலிறுத்தனர் மாணவர். ‘ஏன் வரவில்லை?’ நான் கேள்வி தொடுத்தேன்.
அவர்கள் சிரித்தார்கள். என்னிடத்திற் பேசுதற்கு அவர்களுக்கு அதிக துணிச்சல் வேண்டுமெனினும் சமயாசமயங்களில், என் முகக்குறிப்பைக் கண்டு பயந்தெளிந்து பேசுகின்ற பாடம், அவர்களுக்குக் கைவந்த கலை!
‘சுடலையாண்டி, எங்கே போவான்? அங்கேதா னிருப்பான். இன்று எவ்வாறோ நாலோ, ஐந்தோ சதம் எடுத்துக்கொண்டு வந்துசேர்வான்.
நாளைக்கு நமக்கெல்லாம் ‘பெருமை’ காட்டியபடியே ‘ஐஸ்பழம்’ வாங்கிச் சாப்பிடுவான்!’
அவர்கள் தமக்குள் கதைத்துச் சிரித்தனர். ‘என்ன பேசுகிறீர்கள்?’ சற்று அதிகாரத்தோடு கேட்டேன்.
‘சிற்றம்பலம் சுடலைக்குப் போய் பணம் எடுக்கின்றவன் ஐயா. அங்கு கிடைக்கும் பணத்தைக்கொண்டு தான், வகுப்பு முடிந்ததும் மலையாளத்தானிடம் ‘ஐஸ் பழம்’ வாங்கிச் சாப்பிடுபவன் ஐயா…சிற்றம்பலத்தின் ‘கைச்செலவு’க்குப் பணம் கிடைக்கும் வகையை அவன் பள்ளித்தோழன் தொடர்ந்து விவரித்தான்!
எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. சிற்றம் பலம் என்ற அந்தச் சிறுவனையும், அவன் குடும்பத் தினரையும் எனக்கு நன்கு தெரியும். ‘வாழ்ந்து கெட்ட’ குடும்பம்! வறுமையின் கோரப்பிடிக்குள், அந்தச் சின் னஞ்சிறு குழந்தை மனதின் அசாதாரணத் துணிவு பெருவியப்பளிக்கின்ற தன்றோ!
பட்டின நாகரிகத்தின் எல்லையை, எட்டிப்பிடித்து விட்ட அந்த ஊரின் மயானத்தில், சிறுவன் சிற்றம் பலம் பணம் தேடுகின்றானாமே! எப்படி? நாள் தவறா விட்டாலும், மாதத்தில் பலபேரைத் தன்னுள் சாம்பர் மேடாக்கி வரும் அந்தப் பயங்கர பூமியில், பணம் விளைகிறதா…?
ஏன் விளையாது? வாய்க்கரிசியோடு போடப்படும் சில்லறைக்காசுகள், சுடலையில் பிற கிருத்தியங்களுக் காக வீசப்படும் காசுகள் எல்லாம் தீ மூட்டப்பட்ட பின்னர், பிரேதத்துடன் சேர்ந்து வெந்து, கருகி, உரு மாறிக் கறுத்துவிடுமே!
ஏன், அன்றைக்கு வாய்பாடு அட்டை வாங்கச் சிற்றம்பலம் தந்த ஐந்துசதக் குத்தியும் அப்படித் தானே கறுத்திருந்தது. அதனை எதிலோ வைத்து நன் றாக அழுத்தித் தேய்த்து ஒளியேற்ற முயன்ற அவன் முயற்சியின் முத்திரைகூட அதிலே பதிந்திருக்கவில்லையா……!
சிற்றம்பலம்….நீ என்ன ‘நூதனமான பிறவி’ யடா ……! அவன்மீது என்னையறியாமலே ஆழமான பரிவு பிறந்தது. கணிதபாடமும், மாணவர்களும் என் மனத்திரையிலிருந்து மறையத்தொடங்கினர்.
‘பேய்வாழ் கானகத்தே நின்றாடும் பிரானையல்ல’ பணம் தேடும் சிற்றம்பலவனைக் காண என் நெஞ்சு துடித்தது!
உடல் முழுவதும் சுடலைச் சாம்பர் படிந்த கோலம். கோவணாண்டியாக, கையில் ஒரு நெடிய தடியுடன், சாம்பர் மேடுகளைக் கிளறித், தட்டிச், சில்லறைக் காசு கள் சேர்க்கத் துரித முயற்சியில் தன்னை மறந்து இயங்கிக்கொண்டிருப்பவன் சிற்றம்பலம்!
வாய்பாடு அட்டை, ஐஸ்பழம், எழுதுகோல் இவற் றுக்கு அவனுக்குச் சில்லறை வேண்டும். கொடுப்பவர் எவரும் இலர், அவனைப் பொறுத்தவரை…!
ஆனால், ஊர் அவனைப்போலச் சுடலையாண்டியாகவா இருக்கிறது?
கொளுத்தும் வெயிலிலும் ‘வெண்சுருட்டு’ப் பொதி களையே புகையாக ஊதித்தள்ளும் வாலிபச்சிங்கங்கள், பொழுது சாய்ந்ததும் கோகுலகானக் கண்ணனைக் காணச் செல்லும், இராதையைப் போலப் படமாளிகை யில் ‘காதல் மன்ன’னைத் தரிசிக்கச் செல்லும் ‘வீராங்கனைகள்….’ மண்ணையும் விண்ணையும் ஒன்றாக்கி, மாத மும்மாரி மழை பொழியச் செய்து, நாட்டையே சொர்க்கலோகமாக்கி விடுவோமென மேடையில் முழங்கும் அரசியல் தலைவர்கள்….நன்றாக வாழுகிறார்கள்.
அந்தச் சின்னஞ்சிறு குழந்தை மட்டும், ஊரே அருவருக்கும், வெறுக்கும், நினைத்து நெஞ்சு நடுங் கும், மயானபூமியில் ‘சல்லிக்காசுகள்’ பொறுக்கப் படாதபாடு படுகிறது!
என்ன உலகம்! இதுவும் ஒரு வாழ்வா? வாழ்வா? துவிச் சக்கர வண்டியை ஓசைப் படாமல் மெல்ல எடுத்து, பிரதான வீதியில் நிறுத்தி, எனது பயணத்தைத் தொடக்கினேன்.
அவன் — அந்த முயற்சியில் ஆழ்ந்து கிடந்தமை யால் என்னைக் காணவே இல்லை. கண்டிருப்பானாயின் என்ன எண்ணுவானோ…!
பாடசாலைத் தொடக்கமணி ஒலித்து ஓய்ந்தது. வகுப்பு ஆரம்பித்தது. நாலைந்து நாள்களாகச் சிற்றம் பலத்தை அந்தப் பக்கமே காணவில்லை. என்னுள்ளம் அவன் வருகைக்காக ஏங்கித் துடித்தது. அவனுக்கும் எனக்கும் என்ன உறவு? ஆசிரியன் நான். அவன் என் மாணவன், என்னிடம் பயிலும் முப்பது பேரில் ஒருவன்தானே! மற்றையவர் அனைவரிலும் காணாத எதனை அவனிலே காணத் தவிக்கின்றேன்?
‘சிற்றம்பலம் ஏனோ பாடசாலை வரவில்லை?’ ‘ஐயா அவனைப் பேய் அடித்துவிட்டதாம்! ஏதோ காய்ச்சலா கக் கிடந்து புலம்புகின்றானாம். இன்று கடுமையாகி விட்டதனால் அரசினர் மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்களாம்!” கண்களில் நீர் ததும்ப அவ னது பள்ளித்தோழன் இப்படிச் சொன்னான். கூடப் பழகிய குற்றமல்லவா? அந்த மாணவன் நிலை குலைந்து, உளஞ்சாம்பி, உருகினான்.
நான் என்ன மனிதனா? மரக்கட்டையா? என் கண் கள் ஊற்றெடுக்க ஆரம்பித்தன. விம்மி, விம்மி அழ வேண்டும் போலிருந்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். மாணவர்களும் என்னை வியப்புடன் பார்க்கின்றனர். எனக்கென்ன, அவன் கதை தெரி யாதா? கண்ணாரக் கண்டிருக்கிறேனே அவன் செயலை! பாவம்; திரும்பிவருவானோ, அல்லது திரும்பாமலே போய்விடுவானோ! யாரறிவார்?
பேயோ, பூதமோ இவற்றைப்பற்றி ஆராயவேண் டிய அவசியம் இதுவரை எனக்கு நேரவில்லை. பேயு மில்லை,பூதமுமில்லை என்று அடித்துப்பேசிவிட்டு அந் தரங்கத்தில் ‘மாந்திரீகம்’ செய்ய ஆள் தேடும் பகுத் தறிவு வாதியுமல்லன் யான்! ஆனால்…… ?
சிற்றம்பலம் எப்படி நோயுற்றான்? அவனுக்காக இறைவனை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறொரு செயலும் எனக்குப் புலப்படவில்லை. அவ்வாறே அம் பலக்கூத்தனை வாயார, நெஞ்சார வழுத்தினேன். அவ னருள் செய்வான் என மனந் தேறினேன்.
மனம் ஒருநிலைப்பட்ட உணர்வில், பாடசாலை என்ற நினைவே போய்விட்டது! என்னுள் நானாக, விவரிக்கவொண்ணாப் பரவசக் காட்சியில் மூழ்கினேன்.
சூலந்தரித்த சிவன், எமபாசந்தவிர்க்கும் அரன், ஒரு சுடலையாடி, சுடலையாண்டியன்றோ, நெற்றிக்கண் மின்ன, விரித்த செஞ்சடை வீறுற்றாட, தரித்துள புலித்தோல் விழித்தெனை நோக்க, காதார் குழையாடக் காட்சிதருகின்றான் அகத்தில்……!
புறம் மறைந்துவிட்ட புதுநிலை. பாடசாலை, மாண வர், உலகம் எங்குற்றனரோ…!
காலைநேரம், புதிய மனத்தெளிவுடன் துவிச்சக்கர வண்டியை வேகமாக மிதித்து வருகிறேன். அதோ ஒரு தாய் …… ‘பரபரப்பு’டன் என்னை நோக்கி விரைந்து வருகிறாள்.
அவள் – சிற்றம்பலத்தின் அன்னையல்லவா? என்ன செய்தி சொல்வாளோ…! நெஞ்சம் பலமாக அடித்துக் கொள்கிறது.
‘ஐயா, என் மகனை நேற்றுத்தான் அரசினர் மருத்துவ மனையிற் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறேன். கடுமையான காய்ச்சலில் வருந்தியவன். இரவு எவ்வளவோ சுகப்பட்டுவிட்டான். என் உயிர் மீண்டுவிட்டது ஐயா!’
அவள் கன்னங்கள் நனைந்தன, நீரினால். என் னுளம் குளிர்ந்தது உவகையால்.
‘பலநாள்களாகப் பாடசாலைக்கு வரவில்லை. அது தான் உங்களிடம் சொல்லிவிட்டு மருத்துவ மனைக்குப் போகலாமென்று வந்தேன்!’ அந்தத் தாய் சொன்னாள். சொற்களில் பெண்மையின் தாய்மை பிரவகிக்கிறது.
“கடவுள் கைவிட மாட்டார். போய்வா அம்மா!’ அந்த அன்னை மனநிறைவுடன் வேகமாக நடந்தாள். நானும் பாடசாலை நோக்கி விரைந்தேன். இந்தச் சின்னஞ்சிறு சுடலையாண்டியை, அந்தப் பென்னம் பெரிய சுடலையாடி, காப்பாற்றிய செயலை, என் மாண வர்களிடஞ் சொல்லி மகிழவேண்டாமா; என்ன…?
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |