சிவோகம் என்ற மந்திரம் சொல்லி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 12,720 
 
 

கனிமொழி என்றதும் நீங்கள் நினைப்பீர்கள் பழரசம் போல இனிமையானதென்று உங்கள் கண்களில் களை கட்டித் தோன்றும் அவள் முகம் மாத்திரமல்ல உயிரால் மனதால் உணர்வுகளால் பழகுவதற்கும் அவள் ஒரு பளிங்கு வார்ப்பு ஆனால் அது அறியாமல் அவள் மனதைக் கணை எய்திக் காயப்படுத்தவென்றே காத்துக் கிடந்த மனிதர்களின் எல்லை கடந்த பாவக் கறைகளுக்கு ஆத்ம பரிகாரம் தேட விரும்பும் விழிப்பு நிலையின் ஒளிச்சுவடுகளில் இதுவும் ஒன்று இந்தக் கதை

கனிமொழிக்கு மிகவும் கஷ்டமான ஒரு வீட்டுச் சூழல். வீடு என்ற அதற்குப் பிறகு தான் மற்றதெல்லாம். அவளைப் பொறுத்தவரை வீடு காடு எல்லாம் ஒன்று தான். காட்டுக்குப் போனாலும் கலங்காத திடசித்த மனப்பாங்கு அவளுடையது வறுமையில் தீக்குளித்து வாழ்கிற காலத்திலும் கடமையே கண்ணாகக் கர்மயோகம் புரிந்து அவள் வாழ்ந்த காலமே அவளைப் புடம் போட்டு மலரச் செய்த ஒரு பொற் காலம் அப்போது கூட எத்தனையோ சவால்களை அவள் எதிர் கொள்ள நேர்ந்தது

அதிலும் பின் வீட்டுப் பெண் சரளா அவளை வார்த்தைகளால் சுட்டெரித்துக் கருவறுத்துப் போடுவதற்கென்றே கங்கணம் கட்டிக் கொண்டு காத்து நின்ற போதெல்லாம் வாயில் தடம் புரளாத அன்பு வேதம் காத்து சத்தியத்தின் ஒளி பிரகாசமான சாட்சி தேவதையாக நின்று வாழ்க்கையின் நடப்புகளில் சேறு பூசிக் கொள்ளாமல் அவள் தன்னைப் பிரகடனப்படுத்தி வாழ்ந்தது சரளாவைப் பொறுத்த வரை உப்புச் சப்பற்ற வெறும் காட்சி நிழல் மாதிரித் தான் இந்த நிழலை ஊடறுத்தே அவள் பார்வை நீளும் அதற்கேற்ப சங்கதிகளைக் கிரகித்துக் கொண்டு அவள் கனத்த குரலில் பேசும் போது நிலமென்ன வானமே அதிரும் இந்த வான அதிர்வுகளில் கனிமொழி வீடு நடுங்கும் போது கூடஅவள் கவலைப்படுவதில்லை

யாரும் அழுது விட்டுப் போகட்டும் இந்தக் கண்ணீரிலேயே குளிர் காய்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்ற பெரும் களிப்பு நிலைமை அவளுடையது இதற்காகவே தினமும் கனிமொழியை வலிய வந்து வம்புக்கு இழுப்பது ஒரு நடைமுறைச் சம்பவமாகவே மாறி விட்டது

படுக்கையறை ஜன்னல் வழியாகப் பின்புறமாகக் கோடியில் பார்த்தால் அடர்த்தியாகச் செழித்து வளர்ந்த ஒரு பலா மரம் தெரியும் அதற்கப்பால் எல்லை வேலியையும் தாண்டித் தான் சரளாவின் வீடு அவளின் அடுக்களையில் நின்று பார்த்தால் கனிமொழியின் வீட்டில் நடப்பதெல்லாம் ஒளிவு மறைவின்றித் தெரியும் அங்கு என்ன பொருள் வாங்கினாலும் மறு கணமே சரளாவும் எப்படியோ அதை வாங்கத் தயாராகிவிடுவாள் அவள் ஒரு பிராமணப் பெண்னென்பதால் வீட்டில் பஞ்சப்பாடு இல்லை புரோகிதம் கோவில் பூசை வருமானம் என்று ஏகமாய்ப் பணம் குவியும் போது சரளாவுக்குச் சேவை செய்ய நாலைந்து அடியாட்களோடு பெரிய எடுப்பில் வாழ்க்கை கழியும் போது அவளுக்கு நாக்குத் தடிக்காமல் என்ன செய்யும் அதற்குப் பலி பாவம் இந்தக் கனிமொழிதான் வெறும் பேச்சோடு நின்றால் பரவாயில்லை

வேலிக்கப்பால் சகல குப்பைகளும் கொட்டுவது முதற்கொண்டு அவள் செய்கிற கொடுமைக்கு முன் தலை வணங்கி அடங்கிப் போவதைத் தவிர கனிமொழிக்கு வேறு வழியில் கால் வைத்துப் பழக்கமில்லை வரிந்து கட்டிக் கொண்டு சண்டை பிடிக்கிற ஆளில்லை அவள் அப்படியிருக்காமல் போனதால் தான் வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகள் அவளுக்கு அது அவள் சொந்த வாழ்க்கையிலும் உண்டு

இழப்புகளையே யோசித்துக் கொண்டிருந்தால் இறையுணர்வாகிய தெய்வீக நிலை அடியோடு வரண்டு போகும் என்பதை நினைத்துத் தானோ என்னவோ அவள் இப்படி எவரோடும் மோதி அழிந்து போகாமல் வாயடங்கிப் போன மெளன தவம் இருக்கிறாள் அவள் இப்படித் தவமிருப்பதே சரளா என்கிற ஐயரம்மா வாங்கி வந்த வரம் போல அவள் எப்போதும் உச்சி குளிர வைத்து இப்படியெல்லாம் ஆட்டம் போட வைத்திருக்கிறது

கனிமொழிக்கு நான்கும் பெண்பிள்ளைகள் மூன்றாவது மகள் ஸ்ருதி கொஞ்ச நாட்களாய் இடை நடுவில் மனநலம் பாதிக்கப்பட்டு படிப்பும் குழம்பி வீட்டில் நிற்கிறாள் ஒட்டுறவற்ற கணவனால் வந்த சோகத்தை விட இது இன்னும் கொஞ்சம் அதிகமாய் அவள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அவளை நிலைகுலைய வைத்தாலும் மீண்டும் அவள் எழுந்து சரித்திரம் படைப்பது ஆன்மீக விழிப்பு நிலை கொண்ட சாதனை மாதிரி அவளுக்கு கடைசி மகள் இந்து படிப்பில் புலி பத்தாம் வகுப்பிலே படிக்கும் போது தவறுதலாகக் கிணற்றில் விழுந்து சுவரோடு தலை அடிபட்ட காரணத்தினால் காதில் சீழ் வடிவதோடு மட்டுமில்லாது ஓரளவு கேட்கும் திறனும் இழந்து அவளைச் செவிடென்றே முத்திரை குத்துகிற நிலை தான்

இந்தக் குறைபாடுகளே போதும் சரளா நாக்கு வழித்து வசை புராணம் பாட கனிமொழிக்கோ வீடு தாங்காத பிரச்சனைப் புயல் அன்றாடம் காசுப் பிரச்சனையே பெரும் சூறாவளி மாதிரி வந்து தாக்கும் புருஷன் ஒழுங்காகச் சம்பளப் பணம் அனுப்பாததால் வந்த வினை அப்போது அவனுக்கு வேலை அனுராதபுரத்தில் உடற் தேவை நினைத்து அடிக்கடி வந்து போனாலும் வீட்டு நிலைமையை அவன் அவன் கணக்கில் எடுப்பதிலை

அவள் தான் என்ன செய்வாள் படி தாண்டிப் போய்க் கடன் கேட்டுக் கையேந்திப் பிழைக்கிற நிலைமை தான் அவளுக்கு. அப்படி ஒரு நாள் மதியம் முழுதும் கடன் கேட்டு அலைந்து விட்டு அவள் வீடு திரும்பி வரும் போது இந்து முன் வாசலில் முகம் களையிழந்து நிலை தடுமாறி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அவசரமாகப் படியேறி வந்த களைப்போடு கனிமொழி குரல் பதறிக் கேட்டாள்

“என்ன இந்து ஏதும் பிரச்சனையே முகமெல்லாம் கறுத்துக் கிடக்கு”

“ஓமம்மா பெரிய பிரச்சனை இந்த ஐயரம்மா செய்த காரியத்தைக் கேட்டால் கொதிச்சுப் போடுவியள் .நான் பார்த்தனானம்மா பின்னாலை வந்து மூன்று பலாக்காய்” வெட்டிக் கொண்டு போனதை நான் என்ரை இரண்டு கண்ணாலையும் பார்த்தனான்”

“அது கறி சமைக்க பிடுங்கியிருக்கும் இது எப்பவும் நடக்கிற கூத்துத் தானே சரி அதை விடு இதுக்குப் போய்ச் சண்டை பிடிக்கவா முடியும்? நல்லாய் உயர்த்தி வேலி அடைச்சாலும் ஆட்டுக்குக் குழை ஒடித்து கிளுவை பூவரசு எல்லாம் படுகிற நிலைமையில் வேலியும் சரிந்து வீழ்ந்தால் மனுஷி வேறென்ன செய்யும். ஊரெல்லாம் சுத்தியலைஞ்சு எனக்குக் களைக்குது நான் முகம் கழுவிப் போட்டு வாறன் போய் அடுப்பை மூட்டு தேத்தண்ணி வைச்சுக் குடிக்க வேணும் “என்று சற்றுச் சத்தமாகவே சொன்னாள் அவளுக்குக் காது மந்தம் என்பதை நினைவு கூர்ந்தவளாய்

பின்னர் முகம் கழுவக் கிணற்றடிக்கு வரும் போது ஐயரம்மா காட்டுக் குரலெடுத்துக் கத்துவது கேட்டது அதைக் கிரகிப்பதற்காகச் சற்று நின்றாள்

“அதைக் கேட்டு என்ன ஆகப் போகுது? வேதம் சொல்லித் தரவா அந்தக் காட்டுக் குரல் இல்லையே இருந்தாலும் கேட்டுத் தான் பார்ப்போமே”

“உதுகள் இரண்டுக்கும் எங்கை கல்யாணம் நடக்கப் போகுது ஒன்று விசர் மற்றது செவிடு”{

கத்தி ஓய்ந்தது பிராமணத்தியின் காடு வெறித்த குரல். இப்படிக் காடு காண நிற்பவளுக்கு வாழ்க்கை மட்டும் பிரமாதம். ஏன் சிறிதும் குறையின்றி ஒரு வரம் போலானது அவளுக்கு. அவளுக்கு எட்டுப் பிள்ளைகள் ஆறு பெண்களும் இரண்டு பையன்களும். நான்கு பெண்களும் கல்யாணமாகிய சுமங்கலிகள்.. மற்றது இரண்டுக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலைமையில் அவள் ஏன் பேச மாட்டாள். இதை விட இன்னும் பேசுவாள் அவள் ஒரு கொடிய பாவியாக இருந்தும் வாழ்க்கை ஏன் அவளுக்கு ஒரு வரம் போலானது?

இது வேறொன்றும் இல்லை அவள் ஐயரின் மந்திர ஜெபமே அவள் பாவம் போக்கும் தாரக மந்திரம்

“கடவுளே மிகப் பாரதூரமான இந்த அக்கினிக் குண்டத்திலிருந்து நான் வெளியே வர ஒரே வழி என் மனசெல்லாம் ஒருமித்து நானும் ஜெபிப்பேன் மந்திரம் ஓதியே என் பாவங்களைக் கரைப்பேன் ஓம் சாந்தி “

அப்படியே ஸ்தூல சரீரம் அசையாமல் தன்னுள் மூழ்கி அவள் சொல்லிக் கொண்டிருந்த போது வெளிப் பிரக்ஞையாய் இந்துவின் குரல் கேட்டது

“என்னம்மா சொல்ல வாறியள்?அந்தப் பாதகத்திக்கு “

“நீயும் கேட்டனியோ அதை?

“நல்ல வேளை நான் முழுச் செவிடாயில்லை அது தான் ஜீரணிச்சிட்டன். எங்களுக்கு எங்கை கல்யாணம் நடக்கப் போகுது? அக்காவுக்குத் துணையாய் நானும் இருந்திட்டுப் போறனே கல்யாணம் பண்ணி என்ன ஆகப் போகுது? கடைசி வரை இந்த வட்டத்திற்குள்ளை தான். அட என்னவொரு சுயநலம் நான் அது கழன்று போனால் ஆருக்கு நட்டம் சொல்லுங்கோவம்மா”

ஐயரம்மா குரல் கேட்டு வேதாந்தம் பேசி அவள் நிற்பதைக் கண்டு அவளை அப்படியே ஆரத்தழுவிக் கட்டியணைத்துக் கொண்டே அன்பு வேதம் மறந்து போகாத குரலில் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கியவாறே கனிமொழி கூறியது ஐயரம்மாவுக்குக் கேட்டதோ இல்லையோ அவளுக்குக் கேட்டது

“நரம்பில்லாத நாக்கு வாய்க்கு வந்தபடி பேசுவது கூட எல்லாம் நல்லதுக்குத் தான் என்று நான் நம்புறன். சீவனாக இதையெல்லாம் கேட்டு மனம் தாங்காமல் கஷ்டப்பட்டு அழிந்து போவதை விடச் சிவனாக மாறி சாந்தி நிலை பெற நான் சொல்ல வாறது என்னவென்றால் கண்ணை மூடிக் கொண்டு தினமும் நீ இதை ஓயாமல் ஜெபித்துக் கொண்டிரு சொல்லு சிவோகம் “

“என்னம்மா கதை சொல்லுறியள்? இதென்ன புதுக்கதை “

கதையல்லடி சீவனையே சிவனாக மாற்றும் ஒப்பற்ற மந்திரம் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் இந்தக் கல்லடிகள் கூடப் பஞ்சு தான் எமக்கு “

“சிவோகம் என்று சொல்லியவாறே அணைப்பிலிருந்து விடுபட்டு அவள் தலை ஆட்டும் போது எங்கோ வெகு தொலைவில் கனவில் ஒலிப்பதுபோல ஐயரம்மாவின் அன்பு நிலையழிந்த காட்டுக் குரல் மீண்டும் கேட்ட போதும் வேத பிரகடனமாக அவள் ஜெபித்த அந்தச் சிவோகம் என்ற சொல்லாட்சிக்கு முன்னால் அது முற்றிலும் மறைந்தொழிந்து போனது போல நீட்சியாகத் தொடரும் அந்த இறையொளியில் ஆன்மீக ஞாபகமான அந்த ஒளி வெள்ளத்தில் அவளோடு கூடவே கனிமொழியும் கரைந்து உயிர் சிறக்க மெய்யல்ல ஊன உடல் பொய் மறந்து காற்றில் கால் முளைத்துப் பறக்கிற அந்த மேலான சுகத்தில் தான் என்ற தன் முனைப்புக் கொண்ட கருந்தீட்டான அந்தக் கரிய உலகம் ஒரு கனவு போல் அவள் கண்களை விட்டு அடியோடு மறைந்து போனது. அந்நிலையில் ஐயரம்மா என்னும் உயிரை வதைக்கும் ஞாபக நெருப்பு உள்ளே நின்று வதைக்காமல் மனம் நிறைந்து வழிபாடு காணும் அந்தக் குளிர்ச்சியில் முற்றாக அழிந்து ஒழிந்து விட்ட சிலிர்ப்பு அடங்க அவளுக்கு வெகு நேரம் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *