சிவாயநம அடிகள்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 5
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே துறவியொருவர் இருந்தார். எப்பொழுது பார்த்தாலும் அவர், “சிவாயநம்; சிவாய நம” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இதனால் அவருடைய பெயர் சிவாயநம அடிகள் என்று வழங்கியது. பெரும்பாலோர் சிவாயநம அடிகளைப் போற்றிப் பாராட்டி அவர் மிகப் பெரியவர் என்று சொல்லிக் கொண்டாடினர். சிலரோ “அவ்வாறு சொல்லுவதால் யாது பயன்? இது வீண்பகட்டே தவிர வேறு இல்லை. இவர் உலகத்தை ஏய்க்கிறார்,” என்று சொல்லித் தூற்றினர்.
ஒருமுறை ஊரிலே கொடிய நச்சுகோய் ஒன்று தோன்றி மக்களைப் பெரிதும் வருத்தியது. பலர் மாண்டு தொலைந்தனர். பலர் நோய்க்கு ஆளாகி மாளாமலும் மீளாமலும் வாளா வருந்தித் தொல்லைப் பட்டனர். ஊரில் ஒருவரைக்கூட எஞ்சவிடாமல் வாட்டி வருத்திய அந் நோய் சிவாயநம அடிகளை ஒன்றுமே செய்யவில்லை. அவர் இருந்த பக்கத்தைக்கூட இந் நோய் எட்டிப் பார்க்கவில்லை இப் புதுமையைக் கண்டு பலரும் வியப் படைந்தனர்.
“சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.”
(உரை.) சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு சிவாயநம என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கட்கு, ஒரு நாளும் அபாயம் இல்லை – ஒரு பொழுதும் துன்பம் உண்டாகாது, இதுவே – இஃதொன்றுமே, உபாயம் மதி – ஊழை வெல்லுதற் கேற்ற சூழ்ச்சியறிவாகும், அல்லாத எல்லாம் – இஃதொழிந்த மற்றவை, விதியே மதியாய் விடும் – ஊழ்வினையே அறிவாக முடிந்து விடும்.
(கருத்து.) இறைவனை எண்ணியிருப்பவர்கட்கு எத்தகைய துன்பமும் உண்டாகமாட்டா. மற்றவர்கட்கு எச் செயலும் ஊழ்வினைப்படி நடக்கும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026