சிறுவனும் தானியங்கியும்




ஒரு சிறுவன் மரக்குச்சிகளை வண்டிலுக்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு தானியங்கியைச் சந்தித்தான்.
வணக்கம் கூறி, விளையாடுவோமா? என்று கேட்டான்.
தானியங்கி மின்னியது: ஆம்!
அவர்கள் விளையாடினார்கள். சிறுவன் மகிழ்ச்சியாக இருந்தான்.
இருவரும் இறக்கமான பாதையில் ஓடியதால் தானியங்கியின் பொத்தான் ஒரு கல்லில் அடிபட்டுவிட்டது. அதனால் தானியங்கி நிறுத்தப்பட்டுவிட்டது. என்ன நடந்தது? என்று சிறுவன் கேட்டான்.
தானியங்கி பதில் சொல்லவில்லை. வருத்தமாக இருக்கிறதா என்று சிறுவன் மீண்டும் கேட்டான். தானியங்கி அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நான் இவனுக்கு உதவி செய்யவேண்டும் என்று சிறுவன் நினைத்தான்.
சிறுவன் தானியங்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான். அதற்கு உணவாக ஆப்பிள் சாறு கொடுத்தான். பின்பு அதற்கு ஒரு புத்தகத்தை வாசித்துக் காட்டினான்.
அதன்பின்பு ஒரு போர்வையை அதற்கு மேலே போர்த்திவிட்டான்.
நல்லிரவு தானியங்கி என்று சிறுவன் மெதுவாகக் கூறினான்.
தானும் ஒரு போர்வையால் போர்த்துக்கொண்டு நித்திரை செய்தான். சிறுவனின் பெற்றோர் சிறுவனுக்கு நல்லிரவு கூறுவதற்காக அறைக்குள் எட்டிப்பார்த்தனர்.
அப்பொழுது சிறுவன் தூங்கிவிட்டான் என நினைத்தனர்.
தானியங்கியைக் கதவுக்குப் பின்னால் வைத்திருந்தான் சிறுவன். அவனது பெற்றோர் அதனைக் கவனிக்கவில்லை.
திடீரென்று கதவு தானியங்கியின் பொத்தானில் பட்டு அழுத்தப்பட்டது.
அப்பொழுது இயங்கு பொத்தான் போடப்பட்ட நிலையில் இருந்தது.
உறங்கிக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்து என்ன நடந்தது? என்று தானியங்கி கேட்டது.
சிறுவன் பதில் சொல்லவில்லை.
நீங்கள் பழுதடைந்து விட்டீர்களா? என்று மீண்டும் கேட்டது தானியங்கி. தொடர்ந்தும் சிறுவன் பதில் ஏதும் சொல்லவில்லை..
நான் அவருக்கு உதவி செய்யவேண்டும், என்று தானியங்கி நினைத்தது.
தானியங்கி சிறுவனை தனது வீட்டிற்குத் தூக்கிச் சென்றது.
பின்னர் சிறுவனுக்கு எண்ணெய் கொடுத்தது.
அதன்பின்னர் அறிவுறுத்தல்கள் புத்தகம் ஒன்றை சிறுவனுக்காக வாசித்தது.
சிறுவனுக்கு ஒரு புது மின்கலம் மாற்றிப்பார்ப்போம் என்று தானியங்கி முயற்சித்தது.
அப்பொழுது தானியங்கிக் கண்டுபிடிப்பாளர் அங்கு வந்தார்.
நிறுத்து! என்று கண்டுபிடிப்பாளர் சத்தமிட்டுக் கூறினார்.
அவன் ஒரு சிறுவன்!
அப்பொழுது சிறுவன் திடீரென்று எழுந்தான். தானியங்கியைப் பார்த்தான், அவன் புன்னகைத்தான்.
தானியங்கி! நீ குணமடைந்துவிட்டாய் என்று கூறி தானியங்கியைக் கட்டியணைத்தான்.
தானியங்கி தனது கண்களை உருட்டி மின்னியது. சிறுவன்! நீயும் குணமடைந்துவிட்டாய்! என்று கூறியது தானியங்கி.
கண்டுபிடிப்பாளர் சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார்.
பின்னர் சிறுவனை மகிழூந்தில் அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
நல்லிரவு என்று சிறுவன் தானியங்கிக்குக் கூறினான். நல்லிரவு சிறுவன்
நாங்கள் நாளைக்கு விளையாடுவோமா? என்று கேட்டது தானியங்கி.
ஆம் என்று சிறுவன் தலையசைத்தான்.
அடுத்த நாள் இருவரும் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார்கள்.
– இந்தச் சிறுகதை எனது “நண்பர்கள்” என்னும் சிறுவர் சிறுகதைப்புத்தகத்திற்காக எழுதியது. இந்தக் கதையின் ஆசிரியர் எனது மகன் “கேவின் கணேசன்” ஆகும்.