சின்னவளும் பெரியவரும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2025
பார்வையிட்டோர்: 662 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அணைக்காதே! விளக்கை அணைக்காதே!”-அடித் தொண்டையில் அலறினாள் வள்ளி, அதில் மேலோங்கி ஒலித்தது அச்சம். 

“ஏன்? ஏன் அணைக்கப்படாது?” என்று கத்தினார். பெரியவர்; ஐந்து வயது வள்ளியின் தாத்தா அவர். 

”பயமாயிருக்கு!” 

“என்னட்டி பயம்?” 

“இருட்டைக் கண்டாலே எனக்கு பயம்தான். நீ விளக்கை அணைக்காதேயின்னா அணையாமல் இரேன்! இப்ப எதுக்கு விளக்கை அணைக்கப் போறே?” என்று வாதாடினாள் அவள். 

“விளக்கு எரிஞ்சா தூக்கம் வராது அதுக்குத்தான்”. 

பெரிதாக எரிந்து கொண்டிருந்த அரிக்கன் விளக்கின் திரியை உள்ளுக்குள் இறக்கிச் சுருக்குவதற்காக அவர் கையை நீட்டினார். 

அவள் அலறினாள்: “அணைக்காதே ஐயோ, அணைக்காதேயேன்!’” 

அவர் வறண்ட சிரிப்பு சிந்தினார். 

“நல்ல புள்ளெ தான் போ! அஞ்சு வயசுப் புள்ளெக்கி பயம் என்னட்டி பயம்? இருட்டு என்ன உன்னை முழுங்கியா போடும்?” என்றார். 

வள்ளி ஒன்றும் பேசவில்லை வெறும் தரையில் படுத்துக் கிடந்தாள். 

அது சுமாரான வீடு. சத்திரம் மாதிரிப் பெரியதாகவும் இல்லை; போதுமான வசதிகள் இல்லாத சின்ன வீடும் இல்லை. பழங்காலத்து வீடு. எலெக்ட்ரிக் லைட் கிடையாது. 

இப்போது வீட்டில் தாத்தாவும் பேத்தியும் தான். அப்பா, அம்மா எல்லோரும் வெளியூர் போயிருந்தார்கள். வள்ளி அவர்களோடு வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டாள். அவள் நோக்கில் அது பெரிய வீடு தான். ஆகவே, பெரிய இடத்தில் தாத்தாவுக்குத் துணை பேத்தி; பேத்திக்குத் துணை தாத்தா என்ற நிலை. 

அவள் தனியாத இருப்பது இதுதான் முதல் தடவை. இன்றுதான் முதல் நாள். 

பகலில் எப்படியோ பொழுது போய்விட்டது. இரவு தான் தொல்லையாகவும் வேதனையாகவும் தோன்றியது பெரியவருக்கு. அதாவது, இரவில் சிறுமி தொல்லையாக மாறி, தொணதொணக்க ஆரம்பித்திருந்தாள். 

விளக்கு எரிந்து கொண்டிருந்தது. “ஏட்டி, விரிப்பிலே படேன். கீழே படுத்தபடி தூங்கிப் போயிராதே!” என்று எச்சரித்தார் பாட்டனார். 

“மாட்டேன், எனக்கு தூக்கம் வரலே” என்று சொல்லி வள்ளி எழுந்து உட்கார்ந்தாள். ”உனக்கு தூக்கம் வருதா, தாத்தா?” 

‘இல்லே.” 

“அப்பம் ஒரு கதை சொல்லேன்!’* 

அவர் ஆரம்பித்தார் – செட்டியார் கடையில் வடை திருடிய காக்கா கதைதான். 

“இந்தக் கதை வேண்டாம். இதுதான் எனக்குத் தெரியுமே. அம்மா சொல்லியிருக்கா. அப்பா சொல்லியாச்சு. நீயும் எத்தனையோ தடவை சொல்லியிருக்கே…” 

”சரி. வேறே கதை சொல்லுதேன்” என்று தலையைச் சொறிந்தார் தாத்தா. “நீ படுத்துக்கோ. நானும் பக்கத்திலே படுத்துக்கிடுதேன். விளக்கை அணைக்க வேண்டாம். கொஞ்சமா எரியும்படி சுருக்கி வைக்கலாம், என்ன?” என்று குழைந்தார். 

வள்ளி மறுக்கவில்லை. அவரும் அப்படியே செய்தார். படுத்தார். கதை சொல்லலானார். சித்திரக்குள்ளன் கதை; “ஒரு அப்பா அம்மாவுக்கு ஏழு பிள்ளைகள். கடைசிப் பிள்ளை ரொம்பவும் குள்ளம். அதனாலே, சித்திரக் குள்ளன்னு பேரு. வீட்டிலே ரொம்பவும் கஷ்டம் சோத்துக்கு வழியில்லே. அரை வயிறு, கால் வயிறு சாப்பாடு கூடக் கிடைக்கல்லே. அப்பாவும் அம்மாவும் யோசிச்சாங்க. பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டுப் போயி. பக்கத்துக் காட்டிலே விட்டுப்போட்டு வந்திரணுன்னு முடிவு பண்ணினாங்க. அவங்க ராத்திரி வேளையிலே இப்படி ரகசியம் பேசியதை, குள்ளன் மட்டும் கவனிச்சுக் கேட்டுக்கிட்டிருந்தான்.மத்தப் பிள்ளைகள்ளாம் தூங்கிட்டுது. குள்ளப்பயலுக்கு தூக்கமே வரலே. விடியறதுக்கு முன்னாடி எழுந்திருச்சான். வெள்ளைக் கல்லுகளாப் பார்த்துப் பொறுக்கி, மடிநிறையக் கட்டிக்கிட்டான்…” 

“எதுக்கு?” 

“கதையிலே அது வரும். நீ பேசாம கேளு… எல்லாரும் எழுந்திருச்சதும், பிள்ளைகளையெல்லாம் அப்பா கூப்பிட்டாரு, உங்களுக்கு வேடிக்கை காட்டப் போறேன்னு சொல்லி, காட்டுக்குக் கூட்டிட்டுப் போனாரு. பிள்ளைகள் எல்லாரும் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு விளையாடினாங்க. அவங்களுக்குத் தெரியாம, அவரு மறைஞ்சு மறைஞ்சு வீட்டுக்கு வந்துட்டாரு…” 

“அம்மா…” என்று தீனக்குரல் கொடுத்தாள் வள்ளி.

“அம்மா வீட்டிலே இருந்தாள்…” 

“இல்லே. அம்மா, எங்கம்மா எப்பம் வருவா?”- 

அழுகையின் சாயல் தென்பட்டது இதில். 

“ஏன்ட்டி, இப்ப என்ன வந்துது?” 

“அந்தப் புள்ளைக, பாவம், காட்டிலே என்ன செய்யும்? அப்பா அம்மா இல்லாமே?” 

அவசரம் அவசரமாகத் தொடர்ந்தார் தாத்தா: “அதுக்குத்தான் குள்ளப்பயல் ஒரு தந்திரம் பண்ணிப் போட்டானே? அவன் மடி நிறைய வெள்ளைக்கல்லு சேர்த்து வச்சிருந்தானில்லே? அதையெல்லாம் என்ன செய்தான்னு நெனச்சே? அப்பா எல்லாரையும் கூட்டிக்கிட்டு, காட்டை நோக்கிப் போகையிலே, அவன் பின்னாலே நடந்தான். வழிநெடுக, வீட்டிலேயிருந்து காடு வரை, அந்தக் கல்லுகளை ஒண்ணு ஒண்ணா தரையிலே வீசிக்கிட்டு வந்தான்; அடையாளமா இருக்குமின்னு. சாயங்காலம், அண்ணன்மாரெல்லாம் அப்பாவைக் காணோமேன்னு அழுதாங்க. ‘வீட்டுக்கு வழி தெரியாதே, எப்படிப்போறது?’ன்னு அழுதாங்க. குள்ளன் மட்டும் அழாமே, ‘நான் கூட்டிக் கிட்டுப் போறேன், வாங்க’ன்னு தைரியமாப் பேசினான். சாலையிலே, வழிநெடுக வீசிவெச்ச வெள்ளைக் கல்லுகளை அடையாளம் பார்த்துக்கிட்டு அவன் முன்னாலே நடந்தான். எல்லாரும் அவன் பின்னாலேயே போனாங்க. வீடு வந்து சேர்ந்துட்டாங்க…” 

”கதை போதும்” என்றாள் வள்ளி. 

“கதை முடியல்லே. இன்னும் நிறைய இருக்கு.” 

“இது வேண்டாம். வேறே கதை சொல்லு. இல்லேன்னு, எனக்கு அழுகை வந்திரும்.” 

அவள் அழுவதை தாத்தா வரவேற்கத் தயாராக இல்லை. வேறு கதைகளைச் சொன்னார். வழக்கமான குழந்தைக் கதைகள்தான்… ஆனால் வள்ளியின் நினைப்பு குள்ளன் கதையிலேயே நிலைத்து நின்றது என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து புரிந்தது. ”அம்மாவும் அப்பாவும் பொல்லாதவங்கதான். சின்னப் பையன்களை காட்டிலே விட்டுட்டா அவங்க என்ன செய்வாங்க? பயமா இருக்காது? பாம்பு கீம்பு கடிக்க வராது?” 

அவள் பார்வை அங்கும் இங்கும் அலைபாய்ந்தது, திடீரென்று கத்தினாள். “விளக்கைப் பெரிசாத் தூண்டு- அதோ பாம்பு மாதிரி என்னமோ தெரியுது…” 

“சும்மா இருட்டீ. இங்கே பூச்சி கீச்சி எதுவும் வராது” ன்று அதட்டினார் பெரியவர். 

“அந்தா நீயே பாரு. சுவரு மூலையிலே. தூணுக்கு அந்தப் பக்கம்…” 

அவர் எழுந்து விளக்கைத் தூண்டினார். சிறுமிகாட்டிய மூலையில் பார்த்தார். பழங் கயிறு ஒன்று கிடந்தது. அவளுக்குத் தைரியம் கூறினார். 

“விளக்கு இப்படியே எரியட்டும். சுருக்கவேண்டாம்” என்று அவள் கட்டளையிட்டாள். 

“சரிசரி. கண்ணை மூடிக்கிட்டு படுத்திரு. தூக்கம் தானா வந்திரும். பயம் ஓடிப்போயிரும்” என்று உபதேசித்தார். 

விளக்கில் எண்ணெய் தான் இல்லையோ, அல்லது வேறு கோளாறுதானோ, டபுக்,டபுக் என்று ஒளி இரண்டு மூன்று தரம் திரியில் குதித்தது. 

“இது ஏன் இப்படி குதிக்குது?” என்று ஆச்சர்யப்பட்டாள் வள்ளி. அவள் கேட்டு வாய் மூடுவதற்குள், விளக்கு அணைந்து விட்டது. மண்ணெண்ணெய் நாற்றம் எங்கும் நிறைந்து நின்றது. “தாத்தா, விளக்கு அணஞ்சி போச்சே?” என்றாள் அவள். 

“ஆமா ஆமா. எண்ணெய் இருந்திருக்காது. அதுனாலே என்ன? தூங்க வேண்டிய நேரம்தானே?” 

வள்ளி சிறிது நேரம் பேசாமல் கிடந்தாள். பிறகு தொண தொணப்பைத் தொடர்ந்தாள். 

“அங்கே என்னமோ சத்தம் கேக்குதே, அது என்னவா யிருக்கும்? எலியா இருக்குமோ? அல்லது, பூனையா? நம்ம மேலே வந்து விழுமோ?” என்றாள். “தாத்தா, அப்பாவும் அம்மையும் என்னை விட்டுட்டுப் போயிருவாங்களோ? அவங்க திரும்பி வரலேன்னு சொன்னா, நான் என்ன பண்ணுவேன்?”- 

பெரியவருக்கு எரிச்சல் வந்தது. “ஏண்டி வாயை மூடிக்கிட்டுக் கிடக்க மாட்டே? நீயும் உங்க அம்மைகூடப் போயிருக்க வேண்டியதுதானே? இங்கேயே தான் இருப்பேன்னு ஏன் அடம் புடிச்சே?” என்று வெடுவெடுத்தார். 

வள்ளி வாய் திறக்கவில்லை. ஆனால், தூங்கவும் இல்லை. வெளியே, தொழுவத்தின் தகரக் கொட்டகை மீது டப்டுப் என்று ஓசை எழுந்தது. பருமனான மழைத் துளிகள் விழுந்தன. “தாத்தா… தாத்தா” என்று மெதுவாகக் குரல் கொடுத்தாள் வள்ளி! 

“ஊம்ங்?” 

“அது என்ன சத்தம்? திருட்டுப் பயல் போலிருக்கு!” 

மழை சடசடவென்று பெய்யத் தொடங்கியது. “மழை தான் பெய்யுது, தகரத்து மேலே மழை விழுற சத்தம் தான்…” 

சிறிது நேரத்தில் மழை நின்று விட்டது. நாய் குரைத்தது. இன்னொரு பதிலுக்குக் குரைத்தது. 

“தாத்தா…”

அவர் பேசவில்லை. தூக்கக் கிறக்கம். 

”பயமாருக்கே…அம்மா!” 

ஆந்தையின் அலறல் கோரமாகக் கேட்டது. இருட்டில், வீட்டினுள், எது எதுவோ நடமாடுவது போல் தோன்றியது அவளுக்கு. கள்ளப்பயல், பேய், பூனை, பாம்பு அவள் மனம் தறிகெட்டு ஓடியது. 

“தாத்தா… தாத்தா…” 

எலி ஒன்று விழுந்தடித்து ஓடி வந்து அவள்மீது ஏறிக் குதித்துத் துள்ளிச் சென்றது. “தாத்தா!” என்று பயங்கரமாகக் கூச்சலிட்டாள் அவள். அவர் என்னவோ ஏதோ என்று திடுக்கிட்டுப் பதறி எழுந்தார். 

“மேலே என்னமோ விழுந்து ஓடிச்சு” என்று பயத்தோடு புலம்பினாள் பேத்தி. 

“எலியாயிருக்கும்… இப்படி பக்கத்திலே வந்து படுத்துக்கோ” என்று அவர் அவளை அருகில் அழைத்து, தைரியம் ஊட்டினார். என்னும், அவள் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டுதான் இருந்தது. 

“இருட்டைக் கண்டு சின்னப்புள்ளைக்கு ஏன் தான் இந்த பயமோ? குப்புறப்படுத்து, தலையணையிலே முகத்தை புதைச்சு, கண்ணை சிக்னு மூடிக்கோ; பயம் தெரியாது” என்று உபதேசித்தார் பெரியவர். 

அவள் அவ்வாறே கிடந்தாள். ஆயினும் அவளுக்குத் தூக்கம் வர வெகுநேரம் பிடித்தது… 

விடிந்ததும், தாத்தா எழுந்து அவர் வேலைகளை கவனிக்கப் போனார். 

வள்ளி எழுந்தபோது, வெயில் வந்திருந்தது. குருவிகள் தத்தியும் பறந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு கோழி வீட்டுக்குள் வந்தது. அதை வெளியே தூரத்திக் கொண்டு ஓடினாள். 

பூனை ஒன்று ஒரு சுவர்மீது சோம்பலாகப் படுத்திருந்தது. அதைப் பார்ப்பதற்கு இப்போது அவளுக்கு பயம் எதுவு மில்லை. “அடி, குத்து!” என்று கூட விரட்டினாள். 

தோட்டத்துப் பக்கம் போனாள். செம்பருத்திச் செடியில் பூக்கள் நிறைந்திருந்தன. அந்தச் செம்மை அவள் கவனத் தைக் கவர்ந்தது. சில பூக்களைப் பறிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. முயற்சி செய்தாள். எட்டவில்லை. பெரு விரல்களை ஊன்றி நின்று, எம்பிப் பார்த்தாள்; ஊகூங். அங்கே ஒரு கட்டை கிடந்தது அவள் பார்வையில் பட்டது. அதன் மீது ஏறி நின்று முன்னே வளைந்து, கையை நீட்டி, செடியைப் பிடித்து இழுத்தாள். 

“ஏட்டி,ஏட்டி, அங்கே என்ன செய்யுதே? கீழே விழுந்திரப் போறே” என்று பதட்டத்துடன் எச்சரித்தவாறு தாத்தா அங்கே வந்து சேர்ந்தார். 

“பூப் பறிக்கேன்!” – பெருமை குமிழியிட்டது அவள் பதிலில். 

“இப்படி முன்னாலே வளைஞ்சா, கீழேதான் விழுவே மூக்கிலே அடிபடும்” என்றார் அவர். “கட்டை சரியாக் இல்லே. இது மகுடிச்சு நீ கீழே விழுந்திருவே!’ 

அவள் வெற்றிகரமாக இரண்டு பூக்களைப் பறித்து விட் டாள். அந்தப் பெருமையிலும் மகிழ்விலும், மேலேயிருந்து “தொபுக்கடீர்” என்று கீழே குதித்தாள்; சிரித்தாள். 

அவர் பயந்து விட்டார். “ஏட்டி, இப்படிக் குதிக்கலாமா? காலு கையி முறிஞ்சிதுன்னா?” என்றார். 

”எனக்குதான் அடிபடலியே!” என்று கூவியபடி, அவள் குதித்தாள்; ஓடினாள். 

“ஏ வள்ளி! ஏட்டி! மெதுவாப்போ. மழை பெஞ்ச தரை; வழுக்கி விட்டிரும். கீழே விழுந்து முழங்காலைப் பேர்த்துக்கிட்டு அழப்போறே!” என்று கலவரத்தோடு நல்ல வார்த்தைகள் சொன்னார். 

அவள் ஏன் கேட்கிறாள்! ஓடினாள். அங்கிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தாள். கிணற்றைச் சுற்றிக் கட்டியிருந்த துவளத்தின் மீது உன்னிச் சாய்ந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். 

பெரியவருக்கு உண்மையாகவே பயம். “சே, இந்தப் புள்ளெ எத்தினி தொல்லை தருது! சனியன்! கொஞ்ச நேரம் கூடச் சும்மா இருக்கமாட்டேன்குதே!” மனம் அலுத்துக் கொண்டது. அவர் வேகமாகக் கிணற்றருகே போனார். “ஏட்டி, உனக்கு பயமாயில்லே?” என்றார். 

“தண்ணி ஆழத்திலே கிடக்குது. தெரிய மாட்டேன்குது. அதுதான் எட்டிப் பார்த்தேன்” என்று சகஜமாக பேசி, தரை மீது கால் பதித்து நின்றாள் வள்ளி. 

“கிணத்தை எல்லாம் எட்டிப் பார்க்கப்படாது, ஆமா” என்று சிரத்தையோடு உபதேசித்தார் அவர், 

அவள் கீழே விழுந்து, காயம்பட்டு, அழ போகிறாள் என்று தாத்தா பயந்துகொண்டு அவள் பின்னாலேயே போனார். அடிக்கொரு தரம் தன் பயத்தை ஒலிபரப்பிக் கொண்டிருந் தார். எச்சரித்தார் ; மிரட்டினார். 

ஒரு நாய் ஓடி வந்தது. அவள் ஒரு கல்லை எடுத்து அதன் மேலே வீசி எறிந்தாள். கல் நாய் மீது படவில்லை. 

“ஏட்டி, நாய் உன்னை கடிச்சுப் போடும்” என்றார் பெரியவர். 

“அது ஒண்ணும் கடிக்காது. அதுதான் ஓடியே போயிட்டுதே. நாயைக் கண்டா எனக்கு பயமே கிடையாது. தெரியுமா?” என்று ஜம்பம் அடித்தாள் சிறுமி. 

“நாயிட்டே எல்லாம் சேட்டை பண்ணப்படாது. ஒரு சமயம் இல்லாட்டி ஒரு சமயம் லபக்குனு கடிச்சிரும்!” 

வள்ளி எதிர்ப்புரை கூறவில்லை. சுவர் மீது சார்த்தம் பட்டிருந்த ஏணி அவள் கவனத்தைக் கவர்ந்தது. ஓடிப்போய் மூன்று படிகள் ஏறி விட்டாள். 

அதன் பிறகு தான் தாத்தா கவனித்தார். பதறினார். ‘‘ஏட்டி ஏட்டி, கீழே இறங்கு, கால் தவறி விழப்போறே. ஏணியே சரிஞ்சிரும்… சே, இந்தப் புள்ளை என்ன பாடு படுத்துது!” என்று எரிச்சலோடு குறிப்பிட்டார். 

“ஏன் தான் நீ இப்படி பயப்படுறியோ?” என்று கேட்ட படி கீழே குதித்தாள் வள்ளி. 

“இப்படி எல்லாம் குதிக்கப்படாதுன்னு எத்தனை தடவை சொல்றது? காலு கையி முறிஞ்சிரப் போகுதுட்டீ!” என்று பெரியவர் கத்தினார். 

அவருக்கு வேறு அலுவல் எதுவோ வந்தது. ”வள்ளி, வீட்டுக்குள்ளே போ, நான் இதோ வாறேன்” என்று சொல்லி விட்டுப் போனார். 

வள்ளி குதித்துக்கொண்டே உள்ளே போனாள். சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் தலை மொட்டை மாடியில் தென் பட்டது. அங்கே திடுதிடுவென ஓடினாள். குட்டையான கைப்பிடிச் சுவர் மீது படுத்தபடி தோட்டத்தை எட்டிப் பார்த்து, “தாத்தா! ஏ தாத்தா!” என்று கத்தினாள். 

தோட்டத்தில் நின்று நிமிர்ந்து பார்த்த பெரியவர் நிஜமாகவே பயந்து போனார். “இந்தப் புள்ளை தட்டட்டிக் கவுதத்தின் மேலே ஏறி எட்டிப் பார்க்குதே! கால் தவறிக் கீழே விழுந்தால் என்ன ஆகிறது?” – எனவே கோபமாகக் கூப்பாடு போட்டார். “அங்கே ஏன்ட்டீ போனே? அந்தச் சுவரு மேலே ஏன் ஏறி நிக்கிறே? கீழே விழுந்தா, செத்தே போவையேட்டி” 

வள்ளி கலகலவெனச் சிரித்தாள். 

“என்ன தாத்தா நீ! வெளிச்சமா இருக்கிற நேரத்திலே, கண்டதுக்கெல்லாம் இப்படிப் பயந்து சாகிறே” என்று கேலி வேறு பேசினாள். “நான் சின்னப்புள்ளெ. இருட்டைக் கண்டு பயப்படுவேன். அது சரி. நீ பெரிய ஆளு. வெளிச்சத்திலும், வெறும் வெளியிலும் பயப்படுறது நல்லாவே இல்லே!” என்று பெரிய மனுஷி தோரணையில் பேசினாள். 

“இந்தச் சின்னச் சவத்தை என்ன பண்ணுதுன்னே புரியலியே!” என்று மனம் குழம்பிய பெரியவர், செய்யும் வகை அறியாது, தலையைச் சொறிந்து கொண்டு நின்றார். 

“பேன் கடிக்குதா, தாத்தா? மொட்டைத் தலையிலே பேனு எப்படி வந்தது? இந்தா வாறேன். வந்து பேன் கிடக்குதான்னு பாக்கிறேன்” என்று சொன்ன வள்ளியின் தலை மறைந்தது. அவள் ஓடிவரும் சத்தம் திம்திம் என்று கேட்டது. 

– அமுதசுரபி தீபாவளி மலர் – 1969.

– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *