சித்திரத்தில் பெண்எழுதி




(நான் மாணவியாக இருக்கும்போது -எழில் நந்தி- என்ற புனை பெயரில் ‘வசந்தம்’பத்திரிகைக்கு எழுதிய கதை)
ஏழைப் பெண்களை எரித்தழிக்க வசதியான ஆண்கள் ஒருநாளும் தயங்குவதில்லை.
உடம்பெல்லாம் தாங்கமுடியாமல் எரிகின்றது.அக்கினிக்குள் குளிப்பவள்போல அவள் துடிக்கின்றாள்.பொன்னுடல் என்று வர்ணிக்கத் தக்க அவள் உடல் எரிந்த கருகிய அடையாளத்தில் பார்ப்பதற்குக் பயங்கரமாகவிருக்கிறது.
உடம்பின் கீழ்ப்பாகம் முழுதும் கருகிவிட்டது.மேற்பாகத்தில் பெரியதாக்கம் எதுவுமில்லை.அதுவும் அந்தக் குறுகுறுப்பான முகத்தில் எந்த வடுவும் இல்லை.கீழ்ப்பாக எரிவின் வேதனையால்,அவள் முகம் சுருங்குகின்றது.கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு வேதனையை மனதினுள் அமுக்குகிறாள்.அவளுக்கு வயது இருபது இருக்கலாம்.
இளமையின் சிங்காரமெல்லாம் நிறைந்த வயது.காற்றை வாரியிறைக்கும் மின்விசிறி அவள் உடலிற்கு இதந்தரவில்லை.எரிவு கூட,அவள் உடம்பை முனகலோடு நெளிக்கிறாள்.
முனகலும்,நலிவும்,மெலிவும்,சோகமும்,துயரமுமாய் அவள் கண்களிலே வரிக்றது அந்த ஆஸ்பத்திரி வார்ட்–.
எத்தனை துன்பங்கள்! நீரிழிவு நோயால் காலிழந்த அம்மணிப் பாட்டியின்.கரகரத்த ஓலம் இடது பக்கத்தில்.மறுபக்கம்,எரிகாயங்களால் உடல் நிறைந்த ஒருத்தியின் மௌன முனகல். அவள் சத்தத்தை விட,அவளின் நாற்றம்தான் அவளை நினைவூட்டும்.அவர்களுக்கு நடுவில் அவள்-சிவகாமி.
‘ஐயோ கடவுளே,எரிவோடு எரிவாய் என்னைக் கொண்டு போயிருக்கலாமே? ஏன் இப்படி வதைக்கிறாய்?’ சிவகாமியின் இதயமும் கண்களும் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கின்றன.
யாரோ வருகிறார்கள்.,போகிறார்கள,நெஞ்சு நிறை துயரங்கள் தங்களின் பார்வையாளர்களிடம் பணிக்கப் படுகின்றன.வாதையோடு வேதனையைத் தாங்கி நின்ற முககங்களில், மகிழ்சிசியின் வேலைப்பாடு மின்னுகின்றன.
‘சிவகாமி’.
உள்ளம் உடைபட்ட குரலில் ஓடி வருபவர்கள் அவளைப் பெற்றெடுத்தவர்கள்.நெஞ்சம் துடிக்கத் தெருவோரம் நின்ற தவிப்பு மறைகிறது.
‘ஏனம்மா அழுகிறீர்கள்?’
ஏதோ கேட்கவேண்டுமென்று கேட்கிறாள் சிவகாமி.வெறும் ஓசையாய வெளிப்பட்ட கேள்வியை ஆராயவில்லை பெற்றவர்கள்.அணியிழந்து மணியிழந்து,களையிழந்து கருகிய உடலாய்க் கிடக்கும் தங்கள் கண்மணியின் நிலையினால் நெஞ்சம் புழுங்குகிறார்கள்.
‘சிவகாமி’
அன்பும் ஆதரவும் கலந்த அந்த சாந்தமான குரலைக்கேட்டுத் திரும்புகிறாள் சிவகாமி. ஊசி மருந்துடன் நிற்கிறாள் நேர்ஸ் மரியா..
‘ஒரு ஊசி போடுவமா?’
கண்மட்டத்தில் பிடித்துக் காற்றை வெளியேற்றிவிட்டு ஊசிபோடத் தயாராகின்றாள் நேர்ஸ் மரியா.
‘ஓம் அம்மா.. இந்தக் கையில காலமை ஊசிபோட்டது. இப்ப உதிலை போடுறியளே.’
பயமும்,அன்பு கண்ட துணிவும் மண்டியிடக் கேட்கிறாள் சிவகாமி.
மரியா சிரிக்கிறாள்.குழந்தையின் பூஞ்சிரிப்பு.குழந்தைத் தனமான சிவகாமிக்கு இரங்கிச் சிரிக்கிற சிரிப்பு.சிவகாமியின் முகம் கழிப்புறினும்,அதை மனத்துள் மறைத்துப் புன்னகையை முகத்தில் ஏற்றிக் கேட்கிறாள்.
‘ஏனம்மா இன்னும் எத்தினை நாளைக்கு ஊசிபோடுகிறது?’
‘கொஞ்ச நாளைக்குத்தானே, வருத்தம் மாறி,புண் எல்லாம் மாறியபின்..’
‘புண்மாறுமா.. பொய்?’
‘ஐயோ என்ரை ராசா இப்படிச் சொல்லாதயடி’ தாய்மை அழுதது.
நிர்ச்சலனமாய் வெளியே ‘சூனியத்தில்’ சிவகாமி ஊடுருவுகிறாள். உயிரற்ற அந்தப் பார்வையில் மரியாவுக்க ஏதோ உண்மை புலப்படுகிறது.
‘ஆச்சி ஊசி போடுவமே?’
ஆச்சி அம்மணியிடமிருந்து பதிலுக்கு ஓலம் பிதுங்கிற்று.
‘என்ரை முருகா, நான் என்ன கறுமம் செய்தனான்? காலையும் வெட்டிக் கைகையும் ஊசிக்கெண்டு பாழ்படுத்திப் போட்டேனே..’
நோயாளரைப் பார்க்க வந்தவர்கள் நேர்ஸ் மரியாவையும் அம்மணி ஆச்சியையும் விடுப்புப் பார்க்கிறார்கள்.
‘ஏனணை ஆச்சி,உனக்குப் புண் மாற வேணும்தானே.நீங்க மாட்டனென்டால் எனக்கென்ன?சரி நான் போறன். நீங்க என்னெட்டான செய்யங்கோ..’ பொய்க் கோபத்தில் மரியாவின் முகம் மாறுகிறது.
அம்மணி ஆச்சியின் பொக்கை வாயில் சிரிப்பு குமிழ்கிறது. காலிழந்த துன்பம் வேறு,கைவலி மற்றொன்று.கனிவுடன் அம்மணிக் கிழவியைத் தடவுகையில் மரியா தன் ஆச்சியையும் நினைக்கிறாள். அவளின் ஆச்சி திரோசாவும் இவள் போலவே இருப்பாள்.
ஊசி வண்டி நகர்கிறது.
வெளியில் ஊதற்காற்று.சாரல் அடிக்கிறது.ஜன்னலுக்கு வெளியே பார்வை போகிறது.தூறல் மழையில் தலையின் சுமையோடு ஒருவன் செல்கிறான்.அவன் கஷ்டப்படுவதெல்லாம் தன் பிள்ளைகளுக்காகவிருக்கலாம்.மரியாவின் மனக் கண்ணில் நீர் பனிக்கின்றது. உயிருடன் போராடிக்கொண்டிருக்கும் அந்தக் கடைசிக் கட்டில் நாகம்மாவின் மகன் போனகிழமை கேட்டான்.
‘மிஸி.. ‘இது’ இப்படி எத்தனை நாளைக்கு இழுத்துக் கொண்டு கிடக்கும்?’
நெஞ்சிலும் நினைவிலும் மடியிலும் அன்பால் சீராட்டி வளர்த்த அவனின் தாய் நாகம்மாவிற்கு அவன் இட்ட பெயர்’இது’ஆயிரம் விதமான உணர்ச்சிகளின் எழுச்சிகளை,ஏளனங்களை மன்னித்தவள் மரியா,இந்தப் பாசமற்ற கேள்விக்குரியவனை அவளால் மன்னிக்க முடியவில்லை.ஊருக்குப் பெரிய மனிதன் வேஷமிடும் நரிக்கூட்டத்தில் அவன் ஒருவன்.
வெற்றுணர்வாய், அந்நிமிடத்தின் இடைவெளி கழியச் செல்கிறாள்.அந்தப் பக்கத்தால் வருபவர்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு பரபரக்கிறார்கள்.காரணம் அறியச் செல்கிறாள்.ஒவ்வொருநாளும் நாகம்மா ஆச்சி செய்யும் திருவிளையாடல்.அருமையாக வாய்திறக்கும் குணதிசயமுள்ளவள் அவள்.அவளின் கட்டிலின் எல்லா இடமும் அழுக்காகிக் கிடக்கிறது.
ஊசி வண்டி தயங்குகிறது.இன்னொரு தாதியின் உதவியுடன் துணையோடு வருகிறாள் மரியா.அழுக்கு அகற்றப் படுகிறது.
‘மிஸ’ சிவகாமி அழைக்கிறாள்.மரியா கண்களால் அவளை என்னவென்று கேடடாள்;.மரியாவின் கண்களில்தான் அவள் பாஷை இருக்கிறது என்பதை சில நாட்களுக்குள் அறிந்தவள் சிவகாமி.
‘ஒரு தோடம்பழம் கரைத்துத் தாறிங்களோ?’
இருள் கவியும் நேரம்.பட்டென்று மின் அழுத்தியைத் தட்டுகிறாள் சிவகாமி. பளிரென்ற வெளிச்சத்தில் சிவகாமியின் கண்கள் குளமாயிருப்பது தெரிகின்றது.
‘என்ன சிவகாமி.என்னேரமும் அழுதபடி,தெரியாமல் நடந்து போச்சுது,தெரிந்துபோய் நெருப்பில விழயில்லையே@
‘தெரிந்து கொண்டு தீயில் விழவில்லை,வஞ்சகத்தில் விழுந்து விட்டேன்’. துயரம் வெடித்து குமுறிற்று.தனிமையின் தவிப்பு, உணர்ந்து கொண்ட துணையைக் கண்டதும் அழுது புலம்புகிறது.
‘சிவகாமி அழாதேயும்,சடவுள் நல்லவர்..இவளத்தோட தப்பினீர்;,முகம் தப்பினது அருந்தப்பு. கடவுளுக்கு நீர் நன்றி சொல்லவேண்டும்’ மரியா ஆதரவுடன் தடவுகிறாள்.
‘உயிரோட இருப்பதால அழுகிறேன்.உயிர் போயிருந்தால் நிம்மதி’
‘கர்த்தரே,இந்தச் சகோதரியின் வாழ்விற்குச் சஞ்சலத்தை நீக்கிச் சாந்;தியையும்,சந்தோசத்தையும் வழங்கும்’ மரியா யேசுநாதரை வேண்டுகிறாள்.சிவகாமி அழகழிந்த துன்பத்தால் மனம் குழம்புகிறாள்.சிவகாமிக்கு இருபது வயதுதான். அதற்குள்ளா இந்தக் கொடிய துன்பம்.!
‘மிஸ்..மிஸ்ஸி’ சட்டென்று ஒலி கேட்டுத் திரும்புகிறாள் மரியா.
மிஸ் வேதநாயகம்-சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளி,இளம் பெண். குரலிலேயே கர்வமும்,முகத்திலே அகம்பாவமும் எழுதிவைத்தாற்போலத் தெரிகிறது.
‘நாளைக்குத்தானே ஒப்பரேசன்,இன்டைக்கு ‘டென்னுக்’ முதல் வயிறாரச் சாப்பிடலாம் என்டுதானே சொன்ன நீPங்கள்?;.
ஏதும் கேட்கவேண்டும் என்பதால் கேட்ட கேள்வி அது.சிவகாமியுடன் மிஸ் மரியா அன்பாகக் கதைப்பதைக் கண்டதும் மிஸ் வேதநாயகத்திற்கும் கட்டாயம் ஒரு தேவை வரும்.
இருள் எங்கும் பரவிவிட்டது.மிஸ் வேதநாயகத்திற்குத் தேவையான தகவல்களைச் சொல்லி விட்டு மரியா நகர்கிறாள்.
மரியா நேரத்தைப் பார்க்கிறாள். விடுதிக்குப் போகும் நேரமும் வந்து விட்டது.
‘மிஸ்ஸி,.சிவகாமிக்குச் சுகம் வருமே? இண்டைக்கும் ரத்தம் கொடுத்தவை. நாளைக்கும் கொடுக்க வேணுமாம்..யாரையும் ரத்தம் கொடுக்கச் சொல்லினமாம்’.
மிஸ் வேதநாயகம் கதை கிண்டுகிறாள். அந்தக் கதையில் இருந்த விஷம் நுர்றுபேரைக் கொல்லுமே. எரிந்து கருகிய சிவகாமி இன்னும் உயிரோடு வாழவேண்;டுமா என்று அவள்.நினைக்கிறாள்.
சிவகாமியை மரியா ஆதரவு ததும்பப் பார்த்தாள்.அவளின் பார்வைக்குச் சிவகாமி பதில் சொன்னாள்.
‘சாகிறத்துக்கு நான் வேண்டுகிறேன் மிஸ்’
‘கர்த்தரே இருபது வயதேயான இவளுக்கு எவ்வளவு விரக்தி? இதைத் தீரும்’ மரியா பிரார்த்தித்தாள்.
‘என்னம்மா யாரும் ரெத்தம் கொடுக்க வந்தார்களா?;’ சிவகாமியின் தாய் மௌனமாக நின்றவள் மெல்லச் சொல்கிறாள்.
‘ஒருத்தன் வந்தான்,கனகாசு கேட்கிறான்.அவனுக்கு நான் எங்க போவன்?’
‘மடுவில் மாதாவே,இப்படியொரு கொடுமையா? பதிலின்றி விரைகிறாள் மரியா.
நாகம்மாவின் இறுதி மூச்சுத்துடிக்கிறது.
மௌனத்தால், துன்பத்தை அமுக்கிய வைராக்கியம் பாய்ந்த முகத்தில் வெளிறல் பரவுகிறது.
‘இது’ எப்போது மேலே போகும்’ என்று கேட்ட மகன் கடைசி நேரத்திலும் அங்கு இல்லை.அந்தக் கட்டிலில் இருந்து அவளின் பிரேதம் அகற்றப்படுகையில் அந்த வார்ட்டின் சோகமயமான பெருமூச்சு எல்லோர் நெஞ்சிலும் எழுந்தது.
‘இரத்தத்திற்கு ஒழுங்கு பண்ணிட்டம் அம்மா.’
நிறைவுடன் கூறிய தாயை மரியா நோக்கினாள்..சிவகாமியின் தாயின் காதை அலங்கரித்த தோடுகளைக் காணவில்லை.தோடுகளே இரத்தமாயிற்று!
மூக்கைத் தாண்டி நாடிவரை கூடியிருந்த’ மாஸ்கை’ எகிறி மணக்கிற தசை நாற்றம்,சிவகாமியின் பாதியுடல் பச்சை இறைச்சியாய்த் தெரிகிறது. உதிரம் உருகி வடிகின்றது. சிதலும், ஊன நீரும்,மணமும்,புண்ணும்,ஒவவொருதரமும் சுத்திகரிக்கும் போதும் சிவகாமி என்னவிதமாகத் துடிக்கிறாள்.கண்களால் நோக்கி,இதயத்தால் தாங்கமுடியாத துடிப்பு அது.
‘நான்படும் வேதனை போதும்,என்ரை கடவுளே என்னைக் கொன்றுவிடும்’ அவள் அழது துடித்தாள்.
‘வாழ முடியேல்லை என்டு சாக நினைச்சன்,அது இப்படி வேதனையைத் தருகுதே’
சிவகாமியின் ஓலத்தில் எழுந்த குரலில் பட்டென்று உண்மை தெறித்ததுபோல் இருக்கின்றது.நெஞ்சில் அமுக்கி வைத்தருந்த உண்மை,எல்லாக் கட்டுகளையும் மீறி வெளியே பிரவகித்ததோ?
‘சிவகாமி நீங்கள் விபத்தில் எரியவில்லை, அப்படித்தானே?’ மரியாவின் தீட்சண்யமான பார்வை சிவகாமியை என்னவோ செய்கிறது.’எனக்கு மட்டும் சொல்’ என்று கட்டளையிடும் பார்வை.அவள் அந்த பார்வைக்கு அடிமையானாள்.
‘மிஸ்ஸி.. உங்களுக்குச் சொல்லுறன்.யாருக்கும் இதைச் சொல்லப்படாது,கெஞ்சிக் கேட்கிறன்.’ மரியாவின் காதுகளில் புலொரன்ஸ் நைட்டிங்கேல் தாயின் சத்திய வாக்கு ஒலிக்கிறது.
‘என்வசம் ஒப்புவிக்கப்பட்ட எந்தக் குடும்ப விஷயத்தையும் வெளியிட மாட்டேன்’.
‘நீ என்னிடம் சொல்லலாம்’ என்ற தோரணையில் மரியா சிவகாமியைப் பார்க்கிறாள்.
‘குடும்பத்தைபக் காப்பாற்ற வேலை செய்து வந்தேன்,என்னை நான் கட்டுப்படுத்தி வந்தேன்.ஏழ்மையும் இல்லாமையும் என் ஒழுக்கத்தை உயர்த்தி வைத்திருந்தது.வெளி மயக்கு, வெறும் வார்த்தையின் வேஷம்,இவற்றின் முன் .. நான் தலைகீழாய் கவிழ்ந்து.. ஐயோ மிஸ்ஸி..’
சிவகாமி சரிந்து சரிந்து அழுது துடித்தாள்.மரியாவுக்கு அந்த நிமிடம் நெஞ்சம் உடைந்தது. அந்தக் கள்ளம் கபடமற்ற பிஞ்சுமனம்,இந்த ஏமாற்றத்தால்,இந்தத் தவறால் தன்னை மாய்க்க முயன்ற கொடுமையை மரியா நினைத்தாள்.இவள் இன்று தன் இதயத்தால்.தன்னை மீறி அழுதாள்.ஆனால்; அந்தக் கண்களில் மீண்டும் சாந்தி தெரிந்தது.
‘சிவகாமி இதற்காக இப்படிச் செய்தாய்? விசர்ப்பிள்ளை. வாழவிடாதவன் முன் வாழ்ந்து காட்டாமல்,இப்படியா செய்வது? வெறும் அன்பின் தோல்வியால் வாழ்க்கையை முடித்துக் கொள்வதா?’
‘அன்பு தோற்றால் வாழலாம், பண்பு தோற்றால் வாழமுடியுமா மிஸ்?’
மரியா அந்தச் சொற்களின் முன் பதில் சொல்ல முடியாது போனாள்,உடைந்த இளமைக்கு என்ன தேறுதல் சொல்வது?
பழைய நினைவுகளில் சிவகாமி குமுறினாள்.
‘பாவம் குமர்ப் பெட்டை எரிவு தாங்காம அழுகிறாள்’ அம்மணி ஆச்சி தனது துக்கத்தையம் மீறி சிவகாமிக்காகத் துக்கப் பட்டாள்.
மத்தியானம் டியுட்டிக்கு விரைகிறாள் மரியா.மிஸ் வேதநாயகத்திற்கு ஒப்பரேசன் முடிந்து விட்டது.மயக்க மருந்தினால் உறங்குகிறாள்.வேதநாயகத்தை முன்னரே மரியா அறிவாள்.வாழ்ந்து கெட்டவள் வசதியால் மறைத்தவள்.சிவகாமியைப்போல் மனச்சாட்சி இருந்தால் ஆயிரம் முறை கருகிச் செத்திருக்க வேண்டும். அவள் வாழ்கிறாள. உலகம் அவளின் பணத்தை மீறி எதுவும் சொல்லாமல் மௌனமாகி விட்டது.
சிவகாமி நன்கு உறங்குகிறாள்.அவளின் நெற்றியில் மரியா கைவைக்கிறாள். சிவகாமியின் நெற்றி தணலாய் எரிகிறது. காய்ச்சல் அளக்கப் படுகிறது. நூற்று நான்கு டிகிரி. உடனடியாக டொக்டர் வருகிறார்.ஊசி மருந்து எழுதிக் கொடுத்து விட்டு அதை அவசரமாகப் போடும்படி சொல்கிறார்.
டொக்டரை மரியா பரிதாபமாகப் பார்க்கிறாள்.’டிஸ்பென்ஸரியில் இந்த மருந்து இல்லையே டொக்டர்’
மரியாவின் குரலில் சிவகாமியின் ஏழ்மை பிரதிபலிக்கிறது. சுpவகாமியின் தாய் அழைக்கப் படுகிறாள்.
‘அம்மா இதை வெளிக் கடையில உடனே வாங்கி வாருங்கள்’
‘எவ்வளவு காசு வரும் மிஸி?’
மரியா மௌனத்தால் அந்தத் தாயைப் பார்க்கிறாள்.விலையைக் கூறமுன் தாய் அங்கிருந்து போகிறாள்.
குளிர் பந்தனத்தை சிவகாமியின் நெற்றியில் போட்டபடி நிற்கிறாள் மரியா. மனக் குழப்பத்தைப்போலவே கண்களிலும் சஞ்சலம்.
யாரையோ தேடிக்கொண்டு ஒரு இளைஞன் அந்தப் பக்கம் வருகிறான்.
சிவகாமி வேதனையால் உழன்று கொண்டிருக்கிறாள்.சிவகாமியைக் கண்டதும் அந்த இளைஞனின் முகத்தில் பேயறைந்த மாற்றம். அதே நேரம் வேதனையுடன் கண்களைத் திறந்த சிவகாமி தன் உணர்வுகளெல்லாம் ஒருங்குசேர மரியாவின் கைகளை இறுகப் பிடிக்கிறாள்.
‘மிஸ் வேதநாயகம்..’மரியாவிற்கு தள்ளி நின்ற அந்த இளைஞனின் குரல் தளும்பிக் கேட்கிறது’
‘பெட் நம்பர் எயிட்’
பதிலைச் சொல்லிக் கொண்டே சிவகாமியைப் பார்க்கிறாள் மரியா.சிவகாமியின் முகமெங்கும் வியர்வை தெறித்திருக்கிறது.
‘அவர் யாரைக் கேட்டார்?’
‘மிஸ் வேதநாயகத்தைக் கேட்டார்,ஏன் தெரிந்தவரோ?’
சிவகாமி தன்னை மறந்து விம்மினாள். குரல் உடைந்து அழுதது.
‘அவர்தான்..அவர்தான்.மிஸ்ஸி..’ மரியாவின் தலையில் ஆஸ்பத்திரி கவிழ்ந்த அதிர்ச்சி.
‘இவனா?’
நேர்ஸ் மரியா அவனைப் பார்த்தாள்.ஒரு கொடிய மிருகத்தைப் பார்க்கும் வெறித்த பார்வை.தகப்பன் சம்மதிக்கவில்லை என்ற சாட்டோடு ஒருத்தியின் இளமையைச் சூறையாடிவிட்ட,இன்னொருத்திக்குக் காதலனாய்,வஞசிக்கப் பட்டவளுக்கு முன் மனிதனாய் நிற்கிறானே..இவன் மிஸ் வேதநாயகத்திற்க ஏற்றவன்.இருவரும் ஒரே அச்சு
‘சிவகாமி’ மரியா பெருமூச்செறிந்தாள்.
ஊசி மருந்துடன் எவ்வளவோ நேரம் கழித்து வருகிறாள் சிவகாமியின் தாய்..
‘அடையாளப் பாஸை உள்ள விட்டிட்டுப் போயிட்டன்.அதால காவல்காரன் உள்ள வர விடமாட்டன் என்டிட்டான்’
சிவகாமியின் தாய் களைத்திருந்தாள்.
‘நீ காற்சட்டை போட்டவனோட நாலு இங்கிலிசில கதைத்துக்கொண்டு வந்திருந்தா வரமுடியாத நேரத்திலயும் உள்ளே வந்திருக்கலாம்’ தாய்க்குச் சொல்ல மரியாவுக்கு வாய் உன்னியது.
சிவகாமி புலம்புகிறாள்.
‘அம்மா,இருவது வருஷமும் நேர்மையா வாழ்ந்திட்டு உங்கட நம்பிக்கையைக் கடைசில கெடுத்திட்டு.. அம்மோ..’ தாயால் தாங்கமுடியவில்லை. மகளை விளங்காமலே அவளும் அழுதாள்.
நேர்ஸ் மரியா அசையாது நின்றாள்.அவளின் உயிர்நிறைந்த கண்களில் இன்று சவக்களை,அவளே செத்தவள்போல் நின்றாள்.
விடிகின்றது.
மரியா சிவகாமியின் வெறும் கட்டிலைப் பார்க்கிறாள்.அக்கட்டிலில் விழுந்து அழவேண்டும் என்ற நெஞ்சத் துடிப்பு.ஆனால்,அவளுக்குரிய தன்னடக்கம் அதைத் தடுக்க நெஞ்சம் அழுகிறது.
அம்மணி ஆச்சியைத் தாண்டி மரியா செல்கிறாள்.எட்டாவது கட்டிலடியில் மிஸ்.வேதநாயகத்துடன்’அவன்’ நிற்கிறான்.
மரியா அவனைப் பார்க்கிறாள். மன்னிப்பற்ற பார்வை.
(இந்தச் சிறுகதைதான் பாலசுப்பிரமணியம் அவர்களை என் வாழ்வுடன் இணைத்தது)