சிதைவுகள்… சிற்பங்கள்…




(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“எலிஃபெண்டா குகைக்கு வந்ததின் ஞாபகார்த்தமா ஒரு ஜோடி கண்ணாடி யானை வாங்கிட்டுப் போகலாங்க” படிகளின் இருமருங்கிலும் பரவியிருந்த கடைகளைப் பார்த்தவள் நின்றேன்.

“ஏறி இறங்கி, முட்டி தேயுது. போலாம் வா நீலு,”
“ஏறும் போது இளைச்சது சரி. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னே குடைஞ்சு வடிச்ச அந்த அற்புத சிலைகளைப் பார்த்த பிறகு இறங்கறது ஒரு பொருட்டாவே தெரியலைப்பா. மிதக்கறாப் போல ஒரு பரவசம், ”
“நீ ஷாப்பிங்கில் காசை கரியாக்காத வந்தீன்னா நானும் மிதந்தே இறங்கிடுவேன். ஏற்கெனவே முதல் தடவையா பாம்பே வர்ரேன்னு சொல்லி ஒரு பெட்டி முழுக்க சாமான் வாங்கி நிரப்பிட்ட. இத்தனை லக்கேஜ்ஜோட ஊருக்குத் திரும்பறத நினைச்சா…”
சாளுக்கிய, குப்த காலத்திய கல்லிலே வடித்த கலை வண்ணங்களைக் கண்ட பிரமிப்பில் இருந்த நான், ‘சரி அவருந்தான் மிதக்கட்டுமே’ என்ற பெரும் போக்கில் நடக்க, இருபது நிமிடங்களில் உறுமிக் காத்திருந்த ஃபெர்ரியில் ஏறிக் கொண்டோம்.
”அங்க இங்க நிக்காம வந்ததாலதான் ‘டக்’குன்னு ஏறிட்டோம்.”
”அரை மணிக்கொரு ட்ரிப் கிளம்புதுப்பா.”
“வெளியே வெயில் மண்டையைப் பொசுக்குதே.”
உண்மைதான். இங்கு கூரையிட்ட அகல படகினுள் சுடலின் தாளத்திற்கேற்ப அசைந்தபடி அமர்ந்திருந்தது சுகமாயிருந்தது.
“இன்னும் மூணு சீட்தான் காலி, ஆள் வந்ததும் கிளம்பிடலாம்.” போட்மேன் கொச்சை ஆங்கிலத்தில் சொன்னான்.
மலைப் படிகளில் மேலும் கீழுமாய் நடந்த களைப்பில், கலையையே திரட்டி நிமிர்த்தினாற் போல பிரம்மாண்டமாய் நின்ற சிற்பங்களின் நினைப்பில், தற்போதைய படகுதாலாட்டில், கண்கள் சொருக அவர் தோள் மீது சாய்ந்து கொண்டேன்,
“பார்த்ததிலே உங்களுக்கு எது ரொம்பப் பிடிச்சிருந்ததுப்பா?”
“ம்ம்? அந்தத் தூண்கள்.”
எனக்குள் சிரிப்பு மண்டியது.
“எனக்கு… அந்த அர்த்தநாரீஸ்வரச் சிற்பந்தான். இடது பாதியின் மார்பு விம்மலும். இடுப்பிள் அபாரவளைவும், கையின் ஓயிலும் நாள் முழுக்க ரரிக்கலாம்ப்பா. ஒரு கண்ணிலே ‘நானில்லாம நீயில்லை’ங்கற கர்வம் – மற்றதில் ‘நீயில்லாத நாளில்லை’ங்கற களிப்பு. ஆனா, இடுப்புக்குக் கீழே ஏனோ முழுகம் அழிஞ்சு சிதிலமாயிடுச்சு. மொத்தமும் பார்த்திருந்தா…” – இழுத்து மூச்சு விட்டேன்.
“இப்பவே அர்த்தநாரி முன்னாடி அரை மணி நேரம் நின்னே. இல்லேன்னா நாம் முந்தின ட்ரிப்பைக் கூட பிடிச்சிருக்கலாம்”. சட்டென்று விலகி முறைத்த என் கண்களுக்குள் அவர் விழிகள் சிரிப்புடன் கலந்தன. “யோசனைதான். சமூகத்திலேயும் ஆணும் பெண்ணும் அப்படிச் சரிபாதியா நின்னா ரம்மியமா இருக்குமேன்னு நினைச்சேன். அந்நிலை சில பெண்களுக்குத்தான் அமையுது. மீதிப் பேர் ஆணுக்கு அஞ்சி, அடங்கி அவனை அண்டித்தானே வாழறாங்க? சமமான இணையா, கம்பீரமும் உல்லாசமுமாய் ஒன்றாகி நின்ற அத்த கோலத்தை மனசிலே பதிய வைச்சுகிட்டேன்.”
“அப்போ இனி எனக்கும் சம அந்தஸ்து கிடைக்கலாங்கற?”
கண் சிமிட்டிய அவரை முறைத்து முடிப்பதற்குள் கணக்காய் வந்த மூவர், படகினுள் வரிசையாய்ப் பதிந்திருந்த வண்ண ப்ளாஸ்டிக் இருக்கைகளில் அமர்ந்தனர்.
பத்து வயது சிறுமியோடு ஒரு தம்பதியர்.
நிகோட்டின் புகையை ஆழ இழுத்துக் கொண்டு அவைகளுக்குள் சிகரெட் நுண்டினைச் சுண்டி விட்ட போட்மேன், கயிறுகளைத் தளர்த்தி விலக்க, மோட்டாரின் சீறலுடன் படகு நகர்ந்தது.
“ஆக கல்லையும் உம் பார்வை ஊடுருவிடுச்சு” என்னவர் கூறியது கேட்காதது போல விலகும் கரையையே பார்த்திருந்தேன்.
‘யு ரீட் பிட்வீன் லைன்ஸ் ஊடுருவல் பார்வை’ என்பது அவர் அடிக்கடி கூறுவதுதான்.
அதாவது திருத்தமாய்த் தெரியும் எழுத்துக்களை விட்டுவிட்டு நான் அவற்றின் இடையே இல்லாத வேறொன்றை வாசித்து விடுகின்றேனாம்.
ஆண்களுக்கு இருட்டாய்ப் படும் பல இடங்களில், வடிவங்கள் புலப்படும் பூனைப்பார்வை பல பெண்களுக்கும் உள்ளதுதானே.
ஆனாலும் தொழில் முறை நட்புகள், மனித மனங்கள், யாருக்கு எதில் நோக்கம், இனி இதுதான் நேரும், ‘இவன் போக்கு சர்யில்லை விசாரியுங்க’ என்ற எனது பலகணிப்புகள் கச்சிதமாய் வர அவருக்கு வியப்பில் விழி விரியும்.
“நீ வேண்டாங்கறியா? சரி”
“எந்த ப்ளாட்டை வாங்கிப் போடலாம் சொல்லு?”
”தம்பிக்கு நீ சொல்ற பொண்ணையே முடிச்சிரலாம்.” என்று அடிக்கடி அங்கீகாரம் வந்தது.
குருட்டுப் பூனை இல்லை என்ற ஷொட்டு கிடைத்த பின் விட்டத்தில் பாய கேட்பானேன்.
அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது மனப்பூனை நகம் நீட்டும். வித்தியாசமான மீன் சிக்கும் போது உற்சாகமாய்ப் பிரித்துப் போட்டு பார்க்கும்.
கடைசியாய்ப் படகினுள் ஏறிய தம்பதிகள் மீது ஏனோ என். பார்வை ஒடி ஓடி நிலைத்தது.
“ஆயில் ரிக் பார்த்தியா நீலு?”
“இதென்ன கோட்டையாட்டம்? கடலுக்குள்ளே இதை எப்படிக் கட்டினாங்க?”
“தொலைவிவே ரெண்டு சுப்பல் திக்கறது தெரியுதா?” என்று இவர் கேட்டதற்கெல்லாம் தலையாட்டிய பின் பார்வை மறுபடி அவர்களிடமாய் ஓடிவிடும்.
சற்று முன் லயித்த சிலைகளிடமிருந்து விடுபட்டு மனம் மனிதர்களிடம் சுவாரஸ்யமானது.
வாய் ஓயாது பேசினான் அந்த ஆள். மெதுவாகத்தான் என்றாலும் தடையில்லாது பேச்சு உருண்டது.
வெளுப்பாய், நடுத்தர உயரத்திலிருந்த அவனுக்கு வயது….. நாற்பதை ஒட்டியிருக்கும்.
நாகரீக, நறுவிக உடைகள், பாவனைகள்.
முக்கியமாய் அவன் முகபாவளைதான் கொக்கியாகி என் கவனத்தை இழுத்து நிறுத்தியது. அவன் பேச்சை அதீத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். அவனது ஒவ்வொரு வார்த்தையையும் வேதம் போன்று ஏற்றுக் கொண்டிருந்ததின் அடையாளமாய் தலை நிமிடத்திற்கு நான்கு முறை ஆமோதிப்பாய் அசைந்தது.
ஒரு வார்த்தை இடைபுகாமல் கருந்தாய் அவள் கவனித்ததில் ஏதோ இடறியது. என்னுள்ளே பூனை நிமிர்ந்தது.
‘ஏன்? – புருஷனிடம் இத்தனை ஆர்வமும் ஆசையுமாய், இடைவெட்டாது காது கொடுக்க முடியாதோ?’
புருவஞ் சுருங்கி யோசனையில் ஆழ்ந்த என் முகத்தை கேள்வியுடன் ஏறிட்ட என்னவரைப் பார்த்து புன்னகைத்தேன் ‘ஒரு விஷயத்தை முழுசாச் சொல்ல விடாம இடையே நூறு கேள்வி வீசாதேயேன்’ என்று பாவமாய்க் கோபப்படுபவர் அவர்.
அடுத்த முரண் அவள் தோற்றம் – முக ஒப்பனை, சேலையில் தரம், ரவிக்கை தைக்கப்பட்டிருந்த முறை, சிறு தோட்டில் தொங்கிய சற்றே வெளுத்த ஜிமிக்கி, தங்கம் கலக்காத கருசுமணி, கைகளில் சப்தித்த சிவப்புக் கண்ணாடி வளையல்கள், வரண்ட பாதங்களில் சாண்டக் செருப்புகள் அத்தனையும் அவனது நலுங்காத உடை, டைட்டன் கைக்கெடிகாரம், விளிம்பு தெரியாது. மின்னிய ரெஸிலென்ஸ் கண்ணாடி, பளபளத்த தோல் காலணிகள், விரலில் வெட்டிய ஒற்றைப் புஷ்பராகத்துடன் சற்றும் ஒத்துப் போகாமல் முரண்டின.
தோள்கள் உரச, அவர்களது பேச்சும் நெருக்கமும் இறுக, அவளது உள்ளடங்கிய சிறு கண்கள் ஏதோ பொக்க கண்டாற்போல அவன் முகத்தில், உதட்டசைவில், காற்றிலாடுய முடிச்சுருளில் பதிந்து கிறங்கியது.
புன்னகையுடன் அவள் ‘அச்சா’ என்றபோது என் கண்கள் படபடத்தன் -ஆக அவள் ஊமையில்லை!
அவ்வப்போது தன் கையிலிருந்த பாட்டிலைத் திறந்து அவனுக்குப் பருக மினரல் நீரைத் தந்தவள், துளி சிந்தினாலும் பதறி துடைத்து விட்டாள்.
அவளோ, பளபளவென்ற சிவப்பு சில்வாரில் அருகிலிருந்த சிறுமியோ ஏதும் பேசவில்லை; குடிக்கவில்லை.
இவள் அவன் வாயின் வார்த்தைகளையே பருகி போதை கொண்டாற் போலிருக்க, சின்னப் பெண் முகத்தில் பிக்னிக் வந்த சந்தோஷச் சுவடு துளியும் இல்லை. தொலைதூர வானத்தையே வெறித்துக் கொண்டிருந்த அந்த இளம் முகத்தைப் பார்த்த என்னுள்ளம் ஏனோ தவித்தது.
சிறுமி அச்சு அப்பெண்ணின் ஜாடை இருவருக்கும் இடையே முப்பது வயதாகிலும் இருக்கக்கூடும் – ஆக தங்கையாயிருக்கும் சாத்தியமில்லை.
அரைமணி நேரப் பயணத்தில் அவள் பார்வை அவனை விட்டு கணநேரம் நழுவவில்லை. அவ்வப்போது அவன் கையைத் தடவினாள் – தொடையில் ஆதரவாய்த் தட்டினாள்.
சற்றே அவன் குரல் உயரும் நேரங்களில் அவன் கால் முட்டிகளை இதமாகப் பிடித்து விட்டாள்.
அத்தனையும் அரசனிடம் ஓர் அடிமை நடந்து கொள்ளும் தோரணையிலிருக்க, என்னுள்ளே பூனை வெகுவாய்க் குழம்பியது.
‘என்ன மாதிரி உறவு இது?’
‘அவன் கீழ் வேலை செய்பவளோ…? கள்ளத் தொடர்பானால்…. கூடவே அவள் மகளையும் கூட்டிக் கொண்டா? சே… இருக்காது.’
‘தூரத்து உறவு…?’.
‘அந்நியோன்யம் அதிகமாயிருக்கிறதே!’.
‘அவள் பணத்துக்கு வளையும் வசையாகவும் தெரியவில்லை. இருந்திருந்தால் அவனை மிஞ்சும் பகட்டில் மின்னியிருப்பாளே?’
‘பின்னே…?”
‘சின்ன வீடு…’
‘ஏன் இந்த நாற்றக் கருவாட்டு நினைவுகள் – ஏதோ ஒன்று. புருஷன் மனைவியா இருக்கக் கூடாதா என்ன?’ என்ற பசப்பலுடன் கீறலிட்ட கேள்விகளை உதறினேன். படகு பாலாய்க் கீறி உமிழ்ந்த தண்ணீரைச் சற்று நேரம் பார்த்திருக்க, கரை விளிம்பில் நகரின் உயரக் கட்டடங்கள் நிமிர்த்தி வைத்த தீப்பெட்டிகளாய்த் தெரிந்தன. தலையைக் கோதி, புடவையை நீவி, கைப்பையைத் தோனில் எடுத்துப் போட்டுக் கொண்டேன்.
மோட்டார் சீற்றம் தணித்து ‘கேட் வே’ சுவருக்கருகில் படரு நாய்க்குட்டி போல அண்டியது. இங்கிருந்து வீசப்பட்ட பருத்த கயிறு இழுத்து இறுக்கப்பட, அடங்கி பயணிகள் இறங்க வாகாய் நின்றது. ஆனாலும் அத்தனை நேரம் சமுத்திரத்தில் ஓடி வந்த களைப்புத் தீர மூச்சிரைப்பது போல சலனமற்று நிற்கக் கூடாமல் ‘ஆடி ஆடி விம்மியது’.
இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு தாவி வெளியேற, இடிபடாதிருக்க காத்திருந்தவர்களில் எங்களுக்குப் பின்னேதான் அம்மூவரும்.
அவன் பேச்சு ஓயவில்லை.
சற்றே நெருங்கி நின்றிருந்தும் கூட அவர்கள் மொழி புரியாததில், விவரம் எதுவும் அறிய முடியாத நிலை.
படகு விளிம்புக்கு வந்து தாண்டி கற்படிகளில் கால் பதிக்கும் போது எனக்குள் ஏமாற்றம் மண்டியது. ஆசையாசையாய் மூன்று நாட்கள் படித்த பருத்த மர்ம நாவலின் முடிவு பக்கங்கள் நமத்துக் கிழிந்திருந்தாற்போல ஒரு ஆற்றாமை.
சிறுமி, குரங்குக் குட்டிபோல அநாயாசமாய்த் தாண்டி நிற்க, அடுத்தாற் போல அப்பெண் தாவும் நேரம், படகு சற்றே படிகளிலிருந்து அசைந்து விலக, தடுமாறி அலறிய அவள் கையைச் சட்டென்று எம்பி, பற்றி இழுத்தேன் நான்.
“பார்த்துங்க”’ என் கரிசனம் என் தமிழையும் தாண்டி அவளுக்குப் புரிந்தது.
“ஹோஷியாரிம்மா” – கூவினாள் சிறுமி.
“தா… தாங்க்ஸ்…” தயக்கத்துடன் முனகி நன்றியுடன் ஏறிட்ட அவள் விழிகளை வெகு அருகில் கண்டதும் எனக்குள் ஆவல் சிலிர்த்துக் கிசுகிசுத்தது.. ‘இதுதான் சமயம்.. கேட்டு விடேன்!’
அடுத்து இறங்கிய அவனை ஜாடை காட்டி, “யுவர் ஹஸ்பெண்ட்?” இயல்பாய்க் கேட்டேன்.
அறைபட்டது போல அவள் கன்னம் அதிர்ந்தது.
அச்சிறு விழிகளின் ஒளி ‘சட்’டென்று அணைந்து விட, முகத்தில் பரவிய வெறுமை அச்சுறுத்தியது. முகம் கவிழ்ந்தவள் மௌனமாகத் திரும்பி நடந்தாள்.
இதுபோதும். விடை தெரிந்து விட்டது. ‘இது முறையான உறவில்லை என்ற என் கணிப்பு சரிதான்’ என்ற இறுமாப்பில் மனப்பூனையின் வால் விறைத்து, முதுகு வளைத்து சோம்பல் முறித்தது.
என் முன்னே தளர்வாய்ப் படியேறியவளின் தலை குனிந்தேதான் கிடந்தது. கை முகத்திற்குச் சென்று விழி நீரைச் சுண்டித் தெறித்த அந்த கணம் உள்ளேயிருந்த பூனை சுருண்டது.
சக ஜீவனுக்காய்ப் பச்சாதாபத்தில் நனைந்தது.
அவள் வேதனை உணர்ந்து நடுங்கியது.
பெண்மையின்உயர்வு, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உள்ளதம் இங்கு சிலருக்கு ஏட்டளவில்… கல் அளவில் தான்.
அழுந்த யோசித்தும் சற்று முன்பு பார்த்துப் பரவசித்த அர்த்தநாரியின் உருவம் மனதுக்குள் வர மறுத்தது. சிதைந்து மூளியான கீழ் பாதி மட்டுமே கற்பனைக்கு எட்டியது. “கடல் காத்து இதமாயிருக்கே நீலு. ஏன் உன் உடம்பு நடுங்குது?” என்னவரின் கைகள் ஏதோ புரிதலுடன் ஆதரவாய் என் தோள் பற்றி இறுக்க, எனக்கும் புரிந்தது.
அந்த ஈரம் கசியும் குகைகளைப் பார்க்க அத்தனை ஆயிரம்பேர் தினம் வந்து போவது சிதைவுகளுக்காய் அல்ல.
அதை மீறி நிற்கும் சிற்பங்களுக்காய்.
இருவரும் இணைந்து படியேறினோம்.
– ராஜம் – சித்திரை மலர், 1995.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.