சாமி சொன்ன மாதிரி
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தில், வடக்கத்திக் காளியம்மன் கோயில் இருக்கிறது. இப்பகுதியில், இந்த தெய்வத்தைப் பற்றிய கதை ஒன்று வழங்கி வருகிறது. உத்தமபாளையம் தாலுகாவில் தேவாரம், திம்மி நாயக்கன்பட்டி, தம்பி நாயக்கன்பட்டி, எரணம்பட்டி போன்ற ஊர்கள், இக்கதை வழங்கும் பகுதிகளாகும்.
எரணம் பட்டில ஒரு பொண்ணு, சின்னப் பிள்ளயா இருந்ததிலிருந்து,மேற்கு மலைக்கு வெறகெடுக்கப் போகுமாம். இந்தப் பிள்ள ஒண்ணுமா. அதுனால சிறுவயசுல இருந்து வெறகெடுத்து வித்து, அத வச்சுச் சாப்ட, இப்டியுமா இருக்கு.
வெறகெடுக்கப் போகயில, கெட்டுச்சோறு கொண்டு போகும். கொண்டு போறக் கெட்டுச் சோத்த, அந்தக் கோயிலுக்குள்ள வச்சிட்டு, வெறகு வெட்டிட்டு வந்து, அந்தக் கோயில்ல எரக்கி வச்சிட்டு, கெட்டுச் சோத்தத் திண்டுட்டு, வெறகத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வருமாம்.
இப்டியுமா இருக்கயில, அந்தப் பிள்ள வயசுக்கு வந்திட்டா. வயசுக்கு வந்ததோட வெறகெடுக்கப் போறா. அதத் தீட்டுண்டு நெனைக்காம, கோயிலுக்குள்ள போயி, கட்டுச் சோற வக்யப் போகயில, அந்தச் சாமி! நில்லும்மா! இதுநா வரைக்கும் உள்ளார வந்த, நர் ஒண்ணுமே சொல்லல்ல, இப்ப, நிய்யி வயசுக்கு வந்து தீட்டா இருக்க. அதுனால உள்ள வராம, எது கொண்டு வந்தாலும், வெளிய, மரத்ல கட்டித் தொங்க விட்டுட்டுப் போ! நர்’ பாத்துக்கிறேண்டு சொல்லிருச்சு.
சொல்லவும், கெட்டுச் சோத்த கோயிலுக்கு முன்னால இருக்ற மரத்ல, கட்டித் தொங்கவிட்டுட்டு, காட்டுக்குள்ள போயி, வெறகெடுத்துட்டு வந்து, கெட்டுச் சோத்த திண்டுட்டு, வெறகச் செமந்துகிட்டு வீட்டுக்குப் போயிட்டா.
இப்டி இருக்கயில, ஒரு நா, அவளுக்கு கலியாணம் முடிஞ்சிருச்சு. கலியாணம் முடிஞ்ச
கலியாணம் முடிஞ்ச பெறகும் விடாம, வெறகெடுக்கப் போயிக்கிட்டிருக்கா. இருக்கயில, அவளுக்குப் பிள்ள பெறந்திருச்சு.
பிள்ள பெறந்த பெறகு, ஒரு நா, வெறகெடுக்க மலக்கிப் போறா.போயி, சாமி சொன்ன மாதிரி, கோயிலுக்கு முன்னால, மரத்ல தொட்டி கட்டிப் போட்டுட்டு, “வடக்கித்தியம்மா பாத்துக்கண்ட்டு” காட்டுக்குள்ள போயிட்டா.
இவ காட்டுக்குள்ள போகவும், காத்தும் மழயும் புடுச்சு அடிக்குது. மழ வெறிக்கும் வெறிக்கும்ண்டு பாத்தா. வெறுச்ச பாடில்ல. இருக்க – இருக்க புடிச்சுத் தாறுமாறா அடிக்குது. மழ அடிக்கவும் பிள்ளயப் போட்டுட்டுப் போனவ, திரும்பிப் பிள்ளகிட்ட வர முடியல.
வர முடியாம இருக்கவும், அந்தக் காட்டுக்குள்ள, ஒரு கல்லடில, மரத்தடில ஒண்டி ஒக்காந்துகிட்டா. அண்ணக்கி ராத்திரியெல்லாம் மழ புடிச்சு அடிச்சிட்டு, விடியப் போகயில மழ விட்டுச்சு. பிள்ள நாபகத்ல ஓடயக் கடந்து, ஒடப்பக் கடந்து ஓடியாறா.
அண்ணிக்கி ராத்திரியெல்லாம் இவ வராம இருக்கவும், இந்தச் சாமி, பிள்ளயத் தூக்கி பால் குடுத்து, அழுகவிடாம வச்சிருக்கு. இந்தச் சாமிதர், பாத்துக்கிறேண்டு சொல்லியிருக்கில்ல. அதர், அழுக விடாம வச்சிருக்கு. விடிஞ்சு போச்சு.
விடியங்காட்டில, வெறகெடுக்கப் போனவளக் காணமேண்டு புருச தேடி வாரர். இவனும் கோயிலுக்கு வர, அவளுங்கோயிலுக்கு வரச் சரியா இருந்திச்சு. பிள்ள நாபகத்ல இவனயும் பாக்காம கோயிலுக்குள்ள ஓடுறா.
ஓடிப்பாக்கயில, சாமி மடில பிள்ள இருக்கு. ஆவலா ஓடுனா. ஓடிப் பாக்கயில பிள்ள கல்லாப் போச்சு. ஐயையோ! கல்லாப் போச்சேண்ட்டு, அலறிக்கிட்டு வெளிய ஓடியாந்தா. வெளிய வந்து நிண்டு பாக்கயில, சாமி மடில இருக்ற கொழந்த துளும்பி அழுகுது. உள்ள ஓடிப்பாத்தா கல்லாப் போகுது. இப்டி, மாறி – மாறி தெரியுறதால, இவளும் ஏமாந்து அழுதுகிழுது, பொலம்பித் தவுச்சிட்டு, பிள்ளய எடுக்காம வீட்டுக்கு வந்திட்டா. அந்தப் பிள்ளதான் இப்ப, வடக்கித்தியம்மா மடில இருக்குது. இப்பயும் அப்டியே அந்தச் செல, அந்த மலையடிவாரத்ல இருக்குது.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.