சலாம்…
ஓர் ஊரில் ரகுராம் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குக் கிளி வளர்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தன் மாளிகையில் தங்கக்கூண்டில் ஒரு பச்சைக் கிளியை அடைத்து வைத்து வளர்த்து வந்தார். கிளியும் அவருடன் பாசத்துடன் இருந்தது.
என்னதான் பழம், கொட்டைகள் என்று விதவிதமாகச் சாப்பிட்டாலும், தான் சுதந்திரமாக இல்லையே என்ற எண்ணம் கிளிக்கு வேதனையைத் தந்தது.
தன்னை விடுவிக்கும்படி, ரகுராமிடம் கிளி அடிக்கடி கூறி வந்தது.
அதற்கு ரகுராம், “”விதம்விதமாக பழம், கொட்டைகளை உனக்கு வேளாவேளைக்குத் தருகிறேன். அத்தோடு மற்றவர்கள் போல இரும்புக் கூண்டில் வைக்காமல் உன்னை ஒரு தங்கக் கூண்டில் வைத்திருக்கிறேன். இதை விட உனக்கு என்ன வேண்டும்?” என்று கூறி மறுத்துவிடுவார். இதனால் கிளியின் வருத்தம் அதிகமாகிக் கொண்டே சென்றது.
ஒருநாள், வேலை விஷயமாக ரகுராம் வெளியூர் புறப்பட்டார். தன் குடும்பத்தாரிடம் “”உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் சொன்னதையெல்லாம் குறித்துக் கொண்டார். பிறகு தனது செல்லக் கிளியிடம் வந்தார்.
“”உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்குக் கிளி, “”நீங்கள் பூங்கா வழியே செல்லும்போது என் நண்பர்களைப் பார்த்தால் “சலாம்’ சொல்லுங்கள். உங்கள் மாளிகையில் தங்கக்கூண்டில் நான் இருப்பதைச் சொல்லுங்கள்…” என்று கேட்டுக் கொண்டது கிளி.
அவரும் சரியென்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். தனது வேலைகளை முடித்துவிட்டு, தனது குடும்பத்தார் சொன்னதையெல்லாம் வாங்கிக் கொண்டு, கிளி சொன்ன பூங்கா வழியே வந்தார்.
அங்கே ஒரு மரத்தில் நிறையக் கிளிகள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.
“”ஓ! கிளிகளே, நலமா?” என்று கேட்டார்.
“”நாங்கள் சுதந்திரமாக, நலமாக இருக்கிறோம். நீங்கள் யார் பெரியவரே?” என்று கேட்டன அந்தக் கிளிகள்.
“”என் பெயர் ரகுராம். என் வீட்டில் தங்கக்கூண்டில் வளரும் என் செல்லக் கிளி, உங்களுக்கெல்லாம் சலாம் சொல்லச் சொன்னது” என்று கூறினார்.
அவர் சொன்ன அடுத்த வினாடியில் மரத்திலிருந்த ஒரு கிளி மயங்கிக் கீழே விழுந்து இறந்தது. இதைப் பார்த்த ரகுராம், “”நாம் என்ன சொன்னோம்?” என்று வருத்தப்பட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்.
வீட்டுக்கு வந்தவர், தனது குடும்பத்தாருக்குக் கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுத்துவிட்டு, தனது செல்லக் கிளியிடம் வந்தார்.
அதனிடம் நடந்தவற்றைக் கூறினார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் அவரது கிளி உடனே மயங்கிக் கீழே விழுந்து, இறந்தது போல அசைவற்றுக் கிடந்தது.
ரகுராமுக்கு மீண்டும் குழப்பம்!
“நாம் என்ன சொன்னோம்…’ என்று மனம் வருத்தியவர், கூண்டைத் திறந்து கிளியைத் தூக்கிக் கொண்டு போய் தோட்டத்தில் புதைத்துவிட முயற்சித்தார்.
அங்கு அவர் ஒரு சிறிய குழியைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது, அசைவற்றுக் கிடந்த கிளி, சிறகை அடித்துக் கொண்டு பறந்து போய் ஒரு மரக் கிளையில் அமர்ந்து கொண்டது.
அதைப் பார்த்த ரகுராமிடம், “”ஐயா, என் நண்பர்களிடம் சலாம் சொல்லச் சொன்னது எதற்குத் தெரியுமா? சலாம் என்றால் யோசனை என்று அர்த்தம். என் நண்பர்களில் ஒருவர் இறந்தவிட்டதாகச் சொன்னீர்களே… உண்மையில் அவர் இறக்கவில்லை. இறந்தது போல நடித்தது. அப்படி நடந்ததை நீங்கள் என்னிடம் வந்து கூறினீர்கள். நானும் அதோபோலச் செய்தேன். எனக்கு விடுதலை கிடைத்தது. இனிமேல் என்னைப் போல எந்த உயிரினத்தையும் வீட்டில் அடைத்து வளர்க்காதீர்கள். இது எனது அன்பு வேண்டுகோள்…” என்று கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் பறந்து சென்றது கிளி.
– எம்.ஜி.விஜயலெட்சுமி கங்காதரன் (அக்டோபர் 2012)