சற்றுமுன் கிடைத்த தகவல்




சற்றுமுன் கிடைத்த தகவல்:
சென்னை அண்ணாசாலையில் காரில் வந்து கொண்டிருந்த பிரபல நடிகை கஜகுமாரியை சில மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
ஒரு சில தொலைகாட்சிகள்:
பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தை அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். தற்பொழுது நாம் அந்த இடத்தில் நின்று கொண்டு நேயரகளுக்கு மக்களின் கருத்துக்களை வழங்குகிறோம்.

ஒருவர்: என்ன நடக்குது இந்த நாட்டிலே? அரசாங்கம் என்ன பண்ணிகிட்டிருக்குது?
மற்றொருவர்: காவல்துறை இதையும் வேடிக்கைதான் பார்க்குது.
எதிர்கட்சி அரசியல்வாதி:
இப்ப தெரியுதா நாட்டிலே சட்டம் ஒழுங்கு கெட்டுகிட்டு இருக்குதுன்னு, இதுக்கு மக்கள்தான் ஒரு முடிவு எடுக்கணும்
அமைச்சர் ஒருவர்:
சும்மா ‘பொத்தாம் பொதுவா’ பேச கூடாது, காவல்துறை இதை கண்டுபிடிக்கறதுக்கு முயற்சி பண்ணிகிட்டு இருக்குது
பத்திரிக்கை நிருபர்: இதுவரைக்கும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்குது?
அமைச்சர்: அதையெல்லாம் இப்ப சொல்ல முடியாது, காவல்துறை கண்டிப்பா முயற்சி பண்ணி கண்டுபிடிப்பாங்க
சேனலின் நிருபர்: நன்றி நேயர்களே நாம் இப்பொழுது நிலையத்துக்கு திரும்புவோம்,
மற்றொரு தொலைகாட்சி சேனல் :
இந்த அதிர்ச்சிகரமான, அக்கிரமமான செயலை பற்றி நம் பொது வல்லுநர்கள் இப்பொழுது கலந்துரையாட போகிறார்கள். அதில் பிரபல காவல்துறையை சேர்ந்தவரும்… பிரபல அரசியல்வாதியானவரும்…பிரபல வக்கீல் ஒருவரும்…சமூக சிந்தனையாளரும்…
மற்றொரு தொலைகாட்சி சேனல்:
முதலில் இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதை இந்த காணொளியை கண்டு கொண்டிருக்கும் நேயர்களுக்கு விளக்கி விடுவது நலம் என்கிறோம்
கடத்தப்பட்ட பிரபல நடிகை வருமுன், தலை தலை, மற்றும் கும்மாகுத்து போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அவர் அன்று வழக்கம்போல காலை எழுந்து குளித்து தயாராகி அவர் நடித்து கொண்டிருக்கும் பட சூட்டிங்குக்கு ஸ்டூடியோ காரில் ஸ்டுடீயோவை நோக்கி வந்து கொண்டிருந்திருக்கிறார்.
அப்பொழுது அவர் பின்னால் வந்த கார் வேகமாக இவர்கள் சென்ற காரின் முன் வந்து நிறுத்தி நான்கைந்து பேர் இறங்கி இந்த காரில் இருந்த நடிகையை பலவந்தமாகி இறக்கி நின்ற காரில் ஏற்றிக்கொண்டு பறந்து விட்டனர்.
காவல் துறை அந்த நிகழ்ச்சிகளை சி.சி.டி.வி காமிராவின் மூலம் ஆராய்ந்து குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அனைத்து தடங்களிலும் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு தொலைகாட்சி சேனல்:
சேனல்: நேயர்களுக்கு கடத்தப்பட்ட நடிகையின் இளமை கால வாழ்க்கையை பற்றி அவர்களின் பாட்டியின் தோழியாக இருந்தவரிடம் இருந்து நேரடியாக நேயர்களுக்கு ஒளிபரப்புகிறோம்
வயதான பாட்டி ஒருவர் கண் தெரியாமல் உட்கார்ந்திருக்கிறார். அவரின் முன்னால் மைக் வைக்கப்பட்டிருக்கிறது. அவரோ எங்கோ பார்த்துக் கொண்டிருக்க..பாட்டி பாட்டி இங்க பேட்டி காண வந்த பெண் பாட்டியின் தலையை திருப்பி மைக் பக்கம் கொண்டு வர..
பாட்டி கடத்தப்பட்ட நடிகை கஜகுமாரியை பற்றி…….!
பாட்டி அமைதியாக உட்கார்ந்திருக்க..
மீண்டும் பாட்டி இந்த பக்கம் தலையை திருப்பி மைக் முன்னால் தலையை கொண்டு வர..
பாட்டி சட்டென விழித்து என்ன? என்று தலையை இலேசாக தூக்கி பார்க்க…
நன்றி நேயர்களே இதுவரை நடிகை கஜகுமாரியை பற்றி அவர்களின் பாட்டியின் தோழியிடம் அவரை பற்றி விசாரித்த்தை பார்த்தீர்கள் அடுத்து அவர் எங்கனம் கடத்தப்பட்டிருப்பார்? எப்படி கடத்தியிருப்பார்கள்? யார் அதை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது? என்று முன்னாள்..முன்னாள்..காவல்துறை அதிகாரியாக இருந்தவரான திரு… என்பவரிடம் நேர் காணலை நடத்தியிருக்கிறோம், அதை இப்பொழுது பாருங்கள்.
மற்றொரு தொலைக்காட்சி சேனல்:
நாங்கள் காவல்துறையின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின் தொடர்ந்து நேயர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்… இப்பொழுது அண்ணசாலையில் உள்ள காவல்துறை அலுவலகத்தின் வாசலில் நமது நிருபர் நின்று கொண்டு கட்டிடத்தின் முகப்பை இதோ வாசகர்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறோம்
மற்றொரு தொலைக்காட்சி சேனல்:
கடத்தப்பட்ட நடிகை நடித்த படங்களின் பாடல்காட்சிகளை நேயர்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறோம்.. அவர் நடித்த கும்மாங்குத்து படத்தில் அவரை வைத்து படம் எடுத்து தற்பொழுது மார்க்கெட்டில் பழைய பேப்பர் கடை வைத்திருப்பவரான திரு மணியம் அவர்களின் நேர்முகத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்
நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றால்…. பட்டென அந்த சேனல் ஒளிபரப்பு காட்சி மாறி,
நன்றி நேயர்களே இது வரை நடிகை கஜகுமாரியின் நடிப்புலக அனுபவங்களை இவரிடம் கெட்டு (கேட்டு) இரசித்தோம்..
எல்லா தொலைகாட்சி சேனல்களும் தமிழ்நாடு இந்த நிகழ்வினால் கொந்தளித்து கிடப்பதாக மாற்றி மாற்றி காட்டிக்கொண்டிருக்க..
திடீரென்று அனைத்து சேனல்களிலும்:
சற்றுமுன் கிடைத்த தகவல்:
நடிகை கஜகுமாரி தான் கடத்தப்பட்டதாக சொன்ன தகவலை மறுத்துள்ளார். அவர் இப்பொழுதுதான் ஷூட்டிங் முடித்து ஜப்பானில் இருந்து திரும்பியதாகவும், தற்பொழுது ஓய்வுக்காக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று அவரை பர்மா பஜாரில் பார்த்த தகவலை மறுத்துள்ளார்.
சற்றுமுன் கிடைத்த தகவல்:
காவல் துறை நடிகை கடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்களை வலை வீசி தேடி வருகிறது..
சில் தொலைகாட்சி சேனல்களில்:
நேயர்களே நடிகை கஜகுமாரியை கடத்தப்பட்டதாக ஏன் புரளி கிளப்ப்பட்டது?, அதை யார் செய்திருக்க கூடும்? அதனால் பலனடைபவர் யார் என்று நமது பொது வல்லுநர்களால் கலந்துரையாடல் ஒன்று நடக்க உள்ளது.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |