சப்தங்கள்…நிசப்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 3,638 
 
 

சாரி.. இந்த படத்துல உங்களை வேண்டாம்னுட்டாங்க. இப்ப “பீக்”ல இருக்கற பாடகர கூப்பிட்டிருக்காங்க.

ஏன் இவ்வளவு நாள் நான் அவங்களுக்கு பாடிகிட்டுத்தானே இருந்தேன். எல்லோரும் நல்லா இரசிச்சுகிட்டுதானே இருந்தாங்க, இப்ப என்ன திடீருன்னு.

அவரு பாடின பத்து பாட்டுமே இப்ப சூப்பர்டூப்பர் ஹிட்.. அதனாலே இந்த சந்தர்ப்பத்துல இந்த படத்துலயும் பாடவைக்கணும்னு ஆசைப்படறாங்க.

புதிசா வரவங்க தாராளமா வரட்டும், அதுக்காக புக் பண்ணி பாடப்போற நேரத்துல வேண்டாம்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்லே

எனக்கும் தெரியுது, அதனாலதான் கொடுத்த அட்வான்சை கூட வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

பணம் வேணும்னா இப்ப கூட தர்றேன்..அதைப்பத்தி எனக்கு பிரச்சினை இல்லை. ஆனா கலைஞனா எனக்கு மனசு கனக்குது.

என்ன பண்ணறது, என்னை மன்னிச்சுங்குங்க…நான் வர்றேன்..

அம்மா..நெஞ்சுவலிக்குதே….

தட்…தட்..தட்..ஏதோ டிராலி உருளுகிறது.

இறக்கு..இறக்கு.. மெல்ல

நிறைய பேர் நடந்துவரும் காலடியோசை…

யெஸ்….ஓகே..க்விக்…கொண்டு போங்க…. சத்தங்கள்.

தயவுசெய்து இங்க கூட்டம் போடாதீங்க..இனிமையான குரல். இந்த குரலுக்கு சொந்தக்கார பெண் அழகாகத்தான் இருக்க வேண்டும். மீண்டும் பேசமாட்டாளா? கடுமையாக பேசுவது போல் தோன்றினாலும் குரலில் இனிமை போகாமல் பேசுகிறாள்.

சே..குரலைபற்றி இப்பொழுது என்ன அக்கறை?

ஏன் ரசனை என்பது இருக்கககூடாதா? அழகு, அசிங்கம், இவைகள் எல்லாமே நம்மனதுக்குள் ஓடும் எண்ணங்கள் தான். ஒருவனுக்கு தோன்றும் அழகு மற்றவனுக்கு அசிங்கமாக தெரியலாம்.

ஹலோ..ஹ்லோ…ஹலோ…

இது யார் குரல் அபஸ்வரமாய்.. இதற்கு அந்த பெண்ணை கூப்பிட சொன்னால் கூட நன்றாய் இருக்கும்.

ஓ..ஓ..ஓ..ஊ..ஊ.ஊ..

இது என்ன அழுகை சத்தம், இந்த சத்தம் அடிக்கடி கேட்கும் சத்தம்தான் இப்பொழுது நாரசாரமாய் ஒலிக்கிறது.

எனி திங்க் இம்புரூவ்…? நத்திங்.. கசகசமுசவென பேச்சு…

கூ..கூ..கூ….கூ….

இது என்ன சத்தம், ஏதோ..இஞ்சீனிலிருந்து வருகிறது போலிருக்கிறது.

கிராபிக் எப்படி காட்டுது? அப் அண்டு டவுன்ல…இருக்குது.. ஓ சிவியர்தான்..

ஓ..ஓ..ஓ..ஊ…ஊ..ஊ…. அழுகை சத்தம்..

அடடா இந்த சத்தம் நம்மை விடாதா? வேண்டாம் அப்படி சொல்லக் கூடாது. இந்த அழுகையும் சிரிப்பும் எத்தனையோ வருடங்கள் கேட்டு அனுபவித்திருக்கிறோம்.

ஆ…ஹா….ஹா….ஹா….பாட்டு…சத்தம்

என்ன குரல்..என்ன குரல்..அப்படியே சொக்க வைக்கிறதே.. இது அந்த பையன் பாடுனதா..உண்மையிலேயே நல்லா இருக்கு. அப்படியே இதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு….நிசப்தம்.

சாரி ..எங்களால முடிஞ்ச வரைக்கும் போராடி பார்த்துட்டோம், அவருக்கு வந்த சிவியர் ஹார்ட் அட்டாக்குல கோமாவுக்கே போயிட்டாரு. முடிஞ்ச வரைக்கும் அவருக்கு நினைவு வர போராடுனோம். பட் ஒன் திங்க்…அவர் மூச்சு நிக்கற கடைசி நிமிசத்துல முகத்துல ஒரு புன்னகையை பாத்தோம். எங்களுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. என்னடான்னு யோசிச்சு பார்த்தப்ப பக்கத்துல இருந்த செல்லுல இருந்து ஒரு பாட்டு கேட்டுச்சு..அதை கேட்டப்புறம்தான் அந்த முகத்துல புன்னகை வந்திருக்கும்னு நினைக்கிறோம்.

டாக்டர் அவர் பெரிய பாடகராய் இருந்தாலும், மத்தவங்க பாடறதையும் இரசிப்பாரு டாக்டர். நான் பாட பாட என் உயிர் போனா ரொம்ப சந்தோசப்படுவேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு.

ஒரு மாதம் கழித்து அவரை பற்றி மேடையில் அவரோடு பாடியவர் சொல்லிக் கொண்டு இருந்தார்

“அவன் சப்தங்களிலே இனிமை கண்டவன் இன்று நிசப்தமாய் ஆகிவிட்டான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *