சபலம் – ஒரு பக்க கதை





பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து கொண்டிருந்தது கொல்லம் பாஸஞ்சர். கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல், இதே ரயிலில் – இதே எதிர்
இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் அந்த இளைஞனை வழக்கம் போல் உற்றுப் பார்த்தார் சிவலிங்கம்.
இளைஞன் பார்க்க லட்சணமாக இருந்தான். அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. கைப்பையில் டிபன் பாக்ஸும் இருப்பதால், எங்காவது புதிதாக வேலையில் சேர்ந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு இளைஞனைப் பார்க்கும்போதும், கல்யாண வயதில் பெண்ணை வைத்திருக்கும் எல்லா சராசரி தகப்பனுக்கும் வரும் சபலம், சிவலிங்கத்துக்கும் வந்தது.
சினேகமாகச் சிரித்தார்.
“எந்த ஊர் தம்பி?’ எனத் தொடங்கி, தொடர்ந்து லாவகமாகக் கேள்விகளைப் போட்டு தேவையான தகவல்களைத் தெரிந்து கொண்டவருக்கு எல்லாமே திருப்தியாக இருந்தது.
சிணுங்கிய செல்போனைக் காதுக்குக் கொண்டு போனான் இளைஞன்.
“அப்படியா? குட்டிப் பயகிட்டே சொல்லு, சாயங்காலம் வரும்போது அப்பா அவனுக்கு பொம்மையும் சாக்லேட்டும் வாங்கி வருவேணாம்..’
முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் சிவலிங்கம்.
அவரது மன ஓட்டத்தைப் போலவே ரயிலும் நின்று விட்டிருந்தது, சிக்னல் கிடைக்காமல்.
– எஸ். அமல்ராஜ் (நவம்பர் 2011)