சத்வசீலக் காற்படிகன் கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 248
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
7. வீரவரன் கதை | 8. சத்வசீலக் காற்படிகன் கதை | 9.1 மணிமான் கதை
விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்க மரத்திலிருந்து வேதாளத்தைப் பிடித்துக்கொண்டு வருகையில், அது மறுபடியும் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது:
கிழக்குக் கடற்கரையிலே தாம்பரலிப்தி என்ற பட்டணம் உண்டு. அதற்கு பாமபுரம் என்ற பெயரும் வழங்கி வந்தது. அந்த நகரத்திலே. சண்டஸிம்ஹன் என்ற அரசன் நீதிவழுவாமல் அரசு செலுத்தி வந்தான்.
ஒருசமயம் சத்வசிலன் என்ற க்ஷத்திரியனொருவன் அவ்வரசனுடைய அரண்மனையின் ஆசார வாசலை அடைந்தான். அங்கே அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அரசன் சமூகத்திலே மற்றுஞ் சில க்ஷத்திரியர்களுடன், ஏழ்மையால் கந்தலான ஓர் ஆடைத் துண்டைக் கிழித்து எறிந்தான். இவ்வி தட) அவன் அந்த அரசனுடைய காற்படிகனான பரிவாரங்களுள் ஒருவனாக ஆகி விட்டான். காற்படிகனாக உள்ளவன் ஊதியம் ஏதும் பெறக்கூடாது. அவன் சேவகத்தை மெச்சி அரசன் அளிக்கும் பதவியையே ஏற்கலாம். நீண்ட காலம் அவன் தொடர்ந்து அரசனிடம் விசுவாசமாக ஊழியம் செய்து வந்தான்; ஆயினும் அதற்காக ஊதியம் ஒன்றும் அவன் பெறவில்லை.
‘அரச குலத்தில் பிறந்திருந்தும் நான் ஏன் இப்படி பரம தரித்திரனாக இருக்கிறேன்? பரம ஏழையாக இருந்தும் ஆண்டவன் ஏன் எனக்கு அதிகமான ஆசாபாசங்களை அளித்திருக்க வேண்டும்? இவ்வரசனிடம் நான் மிகுந்த விசுவாசத்துடனும் சிரத்தையுடனும் உழைத்து வருகிறேன். ஆயினும் இது வரையில் அரசனுடைய கடைக்கண் பார்வை என்மீது விழவில்லை. நீண்ட காலமாகவே. நான் பசியால் வாடுகிறேன்: என்னுடன வந்தவர்களும் வெந்துயரால் அல்லல்படுகிறார்கள்”-இவ்வி தம் அவன் தனக்குள்ளே சிந்தித்தான்.
இப்படி சத்வசீலன் சிந்தித்து வரும்போது ஒருநாள் பாராளும் பார்த்திபன் வேட்டைக்குக் கிளம்பினான். கொடிய விலங்குகள் வாழும் கானகத்துக்கு சதுரங்க சேனைகளும் பரிவாரங்களும் புடைசூழ மகாராஜன் சென்றபோது. சத்வசில காற்படிகனோ தன் கையில் ஒரு பிரம்பைப் பிடித்துக் கொண்டு அரசன் முன்னால் ஓடினான். சிறிது நேரம் வேட்டையாடிய பிறகு, புதரிலிருந்து தப்பிய ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திக் கொண்டு மன்னவன் வெகுதூரம் சென்று வேறு ஒரு வனாந்தரத்தை அடைந்தான். அரசனால் காட்டுப் பன்றியை பிடிக்கமுடியவில்லை. அது தப்பி ஓடிவிட்டது. வழி தெரியாமல் அரசன் களைத்துப் போய் நின்றுவிட்டான். உடன் வந்த பரிவாரத்தார் அனைவரும் பின் தங்கி விட்டனர். வேகமாகச் செல்லக்கூடிய குதிரை மீது மன்னன் சவாரி செய்து வந்தும் காற்படிகன் மட்டும் பசியும் தாகமும் வருந்தத் தன் உயிரையும் லக்ஷ்யம் செய்யாமல் அரசனுடன் ஓடி வந்திருந்தான்.
இவ்விதம் அவன் மட்டும் மிகுந்த கஷ்டங்களுக்கிடையிலும் தன்னைத் தொடர்ந்து வந்ததைக் கண்ட அரசன் அவனை நோக்கி, “நாம் வந்தவழி தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியும். ஆயினும் இப்போது சூரியன் உச்சிக்கு வந்து வெய்யில் கொளுத்துகிறது. ஆகவே தாங்கள் சிறிது நேரம் தங்கி இளைப்பாறிய பிறகு கிளம்பலாம்!” என்று சத்வசீலக் காற்படிகன் தெரிவித்தான். உடனே அரசன் அவனை நோக்கி, “அப்படியானால் எங்கேயாவது சமீபத்தில் தண்ணீர் அகப்படுமா, பார்” என்றான்.
“அப்படியே” என்று சொல்லி விட்டுக் காற்படிகன் பக்கத்தில் இருந்து மரத்தின் மீது ஏறி நாற்புறமும் சுற்றிப் பார்த்தான். சமீபத்திலே ஓர் ஆறு ஓடுவதைக் கண்டு மரத்திலிருந்து கீழிறங்கி அரசனை அங்கே அழைத்துச் சென்றான் காற்படிகன்.
பாராளும் வேந்தன் நீராடிய பிறகு பசியால் பிராணன் போகும் நிலைக்கு வந்து விட்டான். காற்படிகனுக்கும் அதே பசி மயக்கந்தான். ஆனாலும் அவன் தன் ஆடையின் ஒரு நுனியில் முடித்து வைத்திருந்த நெல்லிக்காய்களை எடுத்து அலம்பி அரசனிடம் கொடுத்தான். அவை எங்கே கிடைத்தனவென்று மன்னன் கேட்டபோது அவன், “சென்ற பத்து வருட காலமாக மனதைக் குளிரச் செய்து திருப்தி செய்விக்க நான் பசிக்கு இந்தக் காய்களை மட்டும் தின்று குடும்பத்திலே உழலும் துறவியாக வாழ்ந்து வருகிறேன்” என்று தெரிவித்தான். இதைக் கேட்டதும் அரசன் மனம் இறங்கியது. அவனுக்கு அவமானமாகவும் போய்விட்டது. “தங்கள் ஊழியர்களில், யார் யார் சௌகரியமாக இருக்கிறார்கள் யார் யார் கஷ்டப்படுகிறார்கள் என்பதையறியாத மன்னர்களும், இந்த நிலையை மன்னர்களுக்கு எடுத்துக் கூறாத மந்திரிமார்களும் மகாபாவிகள்” என்று தனக்குத்தானே மன்னன் கூறிக் கொண்டான்.
பிறகு காற்படிகன் குதிரைக்குச் சேணமிட்டுத் தயாரிக்க. அரசன் அதன்மீது ஏறித் தன் நகரத்துக்குக் கிளம்பினான். வழியிலே சேனையும் வந்து சேர்ந்து கொள்ள அவர்கள் கடைசி யாகத் தலைநகரம் திரும்பினார்கள். அங்கே காற்படிகனுடைய ராஜ பக்தியையும், விசுவாசத்தையும் ராஜன் பலபடியாக எடுத்துரைத்துப் புகழ்ந்தான். காற்படிகனுக்கு ஏராளமான செல்வத்தையும் பிரதேசங்களையும் சன்மானமாக அளித்தான். அப்போதும் அவனுடைய தகுதிக்கு ஏற்ப அளித்ததாக அரசனுக்குத் திருப்தி உண்டாகவில்லை. சத்வசீலனும் காற்படிகப் பதவியை விட்டொழித்து, தன்னிலைக்கு தக்கபடி பிரமுகனாக வாழ்ந்து வந்தான். அது முதல் அவன் சண்டசிம்ஹ மகாராஜனோடு கூடவே இருந்து வந்தான்.
ஒருநாள் மன்னன் தனக்கு இலங்கையரசன் குமாரியை மணம் முடித்து வருமாறு சத்வசீலனை அனுப்பி வைத்தான். அவனும் தன் குலதெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டு மணம் முடிப்பதற்காக புவி மன்னன் அனுப்பி வைத்த புரோகிதர்களுடன் கப்பலில் கிளம்பினான். பாதி வழி போனதும் சூறாவளி தோன்றி திடீரென நடுக்கடலிலிருந்து ஒரு கொடி கிளம்பியது. கடலுக்கும் ஆகாயத்துக்கும் ஒன்றாகத் தங்கத்தாலான அந்தக் கொடி காற்றிலே அலையுண்டு பலவிதமான வர்ணங்களை வாரி வீசியது. அதே சமயம் திடீரென்று வானத்திலே எங்கிருந்தோ மேகக் கூட்டம் தோன்றி சூறாவளிக் காற்றாக அடித்துப் பெருமழை பெய்தது. ஏதோ ஒரு சக்தியினால் அந்தக் கப்பலானது, காற்றாலும், மழையாலும் கொடி மரத்தையடைந்து, அதனோடு ஒட்டிக் கொண்டது. அப்பால் அந்தக் கொடி மரம் மெதுவாகக் கப்பலுடன் நீருக்குள்ளே அமிழ ஆரம்பித்தது.
கப்பலிலிருந்த புரோகிதர்கள் பயத்தால் ஒடுங்கி ஆபத்தில் உதவக் கூச்சலிட்டனர். அவர்கள் கூச்சலைக் கேட்ட சத்வசீலன் தன் மேலாடையை வரிந்து கட்டிக்கொண்டு கையில் ஒரு கத்தியை ஏந்திக் கடலில் குதித்தான். எதனால் கப்பல் நீருள் அமிழ்ந்து வந்ததென்பதை அறியாமல், சண்டை போட்டு அதைத் தடுத்து விடலாம் என்றே அவன் நினைத்தான். அவன் கடலில் குதித்த கணமே காற்றும், அலையும் சேர்ந்து கப்பலை வெகு தூரம் கடத்திச் சென்று விட்டன. அதிலே இருந்த அத்தனை பேரும் கடலின் வயிற்றுக்கு இரையானார்கள்.
கடலில் குதித்த சத்வசீலன் தன்னைச் சுற்றிலும் பார்த்தபோது. தான் கடலின் அடியிலுள்ள வேகமான ஒரு நீர்ச் சுழலால் இழுத்துச் செல்லப்படுவதையும் ஒரு மணல் திட்டின் மேல் மீது அவன் ஒதுக்கப்படுவதையும் உணர்ந்தான். அந்த மணல் திட்டு அமானுஷ்யமான ஒரு தீவாக மாறியது.
கண்ணுக்கு எட்டிய வரையில் கடல் தென்படவே இல்லை. விசாலமான அந்த அமானுஷ்ய தீவிலே அழகான ஒரு நகரம் இருப்பதை சத்வசீலன் கண்டான். அந்த நகரம் பொன்னாலும். மணிகளாலும் இழைக்கப்பட்ட மாட மாளிகைகளையும் நந்தவனங்களையும் தடாகங்களையும் கொண்டு ஜொலித்தது. ஆனால் மனித சஞ்சாரமே எங்கும் தட்டுப்படவில்லை. அங்கே துர்க்கையம்மனுக்கு மேரு பர்வதம் போன்ற உயரமான கோவில் ஒன்றும் இருந்தது. அவன் போய்த் தேவியை வணங்கிப் பிரார்த்தித்து விட்டு, “இது என்ன மாயம்?” என்று வியந்தபடியே, ஒரு பக்கத்தில் உட்கார்ந்தான்.
அதே சமயம் கோயிலுக்கு எதிர்புறத்தில் பிரகாசமாக விளங்கிய ஒரு மாளிகையின் கதவைத் திறந்து கொண்டு நாககன்னிகையோ என்று சந்தேகிக்கக் கூடிய பெண் ஒருத்தி வந்தாள். நீலோத்பலம் போன்ற இரு விழிகளைக் கொண்ட அவளின் அழகை வருணிக்கவே முடியாது. சுற்றி ஆயிரம் தோழியர்களுடன் அவள் அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தாள். அதே சமயம் சத்வசீலன் இதயத்திலும் அவள் நுழைந்து விட்டாள். கோயிலுக்குள்ளே அவள் தேவியை வழிபட்டு மீண்டும் வெளிக் கிளம்பினாலும், சத்வசீலன் இதயக் கோயிலை விட்டுக் கிளம்ப மறுத்துவிட்டாள்.
அவளுடைய மோகன உருவம் மறுபடியும் தன் மாளிகைக்குள் நுழைந்தபோது சத்வசீலனும் கூடவே அதனைப் பின் தொடர்ந்தான்.
உள்ளே நுழைந்த அவன் அங்கே மற்றொரு பட்டணத்தையே கண்டான். புவனத்தில் உள்ள எல்லாவிதமான சுக போகங்களையும் அங்கே அனுபவிக்கலாம் என்கிறபடி அது நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கே மணிகள் வைத்து இழைக்கப் பட்டிருந்த ஓர் ஆசனத்தில் அந்த மோகனாங்கி அமர்ந்திருந்தாள். தவசீலனும் போய் மௌனமாக அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
அவனுடைய இளமை மணக்கும் உள்ளத்துணர்ச்சியை உடலின் படபடப்பு நன்கு எடுத்துக் காட்டியது. தன் மீது அவன் மையல் கொண்டிருக்கிறான் என்பதையும், தன் அழகை அனுபவியாமல் போகமாட்டான் என்பதையும் அறிந்து கொண்ட அந்த அதிசயக் கன்னிகை தன்னுடைய பாங்கியரின் முகத்தைப் பார்த்தாள். தலைவியின் உள்ளக்கருத்தை உடனே உணர்ந்து கொண்ட தோழிகளும் அவனையணுகி, “நீங்கள் இவ்விடம் விருந்தாளியாக வந்திருக்கிறீர்கள். ஆகவே, எங்கள் எஜமானி அளிக்கும் உபசாரத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எழுந்து முதலில் குளித்துச் சாப்பிடுங்கள் என்று வேண்டினார்கள்.
இதைக் கேட்ட அவனுடைய சபல புத்தியிலே கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. அவன் வேறு வார்த்தை பேசாமல் எழுந்திருந்து பக்கத்தில் அவர்கள் காட்டிய குளத்துக்கு குளிக்கச் சென்றான். அதிலே அவன் மூழ்கித் தலை நிமிர்ந்தவுடன், தான் தாம்ரலிப்தி நகரில் சண்டசிம்ஹ மகாராஜாவின் தோட்டத்துக்குளத்தின் மத்தியில் இருப்பதை கண்டதும், அவன் திகைத்து விட்டான்.
“என்ன இது? சிறிது நேரத்துக்கு முன் ஓர் அழகிய அதிசயமான பட்டணத்தில் இருந்தேன். இப்போது இந்தத் தோட்டத்தில் இருக்கிறேன். அமுதம் போல் இனிப்பான அந்தக் கன்னிகையின் தரிசனம் ஒரே கணத்தில் அவளைப் பிரிந்து வாடும் விஷமாக மாறிவிட்டதே! இது கனவல்ல; நன்றாக விழித்திருந்த நிலையிலேதான் கண்டேன். பாதாளலோகத்துப் பெண்கள் என்னை இவ்விதம் மயக்கி இழுத்துப் போய் விட்டார்களென்று இப்போதுதான் விளங்குகிறது!”
இவ்வி தம் சிந்தித்துக் கொண்டே அவன் தோட்டத்திலே அங்கு மிங்கும் நடந்தான். அந்தக் கன்னிகையின் மீது கொண்ட மோகக் கிறக்கத்தின் காரணமாகப் பிரிவாற்றாமை தாளாமல் வருந்தினான். காற்றில் பறந்து வந்த புழுதியும், மகரந்தத்தூளும் படிந்த உடம்புடன் அவனை இந்நிலையில் கண்ட தோட்டக்காரர்கள் உடனே ஓடிப்போய் மகாராஜனிடம் தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட மன்னவனும் திகைப்புற்று, தோட்டத்துக்கு வந்து அவனைக் கண்டு ஆச்வாசப்படுத்தி சமாதானம் செய்தான். பிறகு, “நண்பா. இதெல்லாம் என்ன? இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்? எல்லாவற்றையும் என்னிடம் சொல்லவேண்டும்” என்றான் மன்னவன். உடனே சத்வசீலனும் தனக்கு நேரிட்டது முழுவதையும் அரசனுக்கு எடுத்துச் சொன்னான்.
இதைக் கேட்டதும் அரசனுக்கு சந்தோஷம் ஏற்பட்டது. “இவன் மகாவீரன் தான். ஆயினும் நம் அதிர்ஷ்டத்தினால் தான். பூர்வ ஜன்ம புண்ணியத்தினால்தான், இவன் இவ்விதம் காதலில் சிக்கினான். இப்போது நான் இவனுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் இருக்கிறேன். அதேபோலச் செய்து என் பழங்கடனைத் தீர்த்து விடலாம்” என்று தனக்குத் தானே தீர்மானித்துக் கொண்டான். உடனே அவன், “கவலைப்படாதே. நானே உன்னை அந்த அசுரப்பெண் இருக்குமிடத்திற்கு அதே வழியாக அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லி அவனைத் தேற்றினான்.
மறுநாள் அரசன் நாட்டு நிர்வாகத்தைத் தன் மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு, சத்வசீலன் வழி காட்ட, அவனுடன் கப்பலில் புறப்பட்டான். பாதி தூரம் போனவுடனே முன் மாதிரியே நடுக்கடலிலிருந்து அழகான துவஜம் ஒன்று கிளம்புவதைக் கண்டான். உடனே சத்வசீலன் அரசனை நோக்கி, “நான் கூறிய கொடிமரம் இதுதான். நான் இங்கே கடலில் குதிக்கிறேன். மகாராஜாவும் என் பின்னாலேயே குதித்து, கொடி மரத்துக்குப் பக்கத்தில் முழுகவேண்டும்” என்று சொன்னான். அவ்விதமே அவர்கள் கொடிமரத்தை அணுகினார்கள்: கொடிமரமும் கீழிறங்கியது. சத்வசீலன் அதைத் தொடர்ந்து மூழ்கினான். அரசனும் கூடவே மூழ்கினான். அவர்களிருவரும் அந்த அதிசயமான தீவை அடைந்தார்கள். துர்க்கையம்மனைப் பார்த்து மகாராஜன் மனமகிழ்ந்து வழிபட்டு, சத்வசீலனுடன் ஆலயத்தில் அமர்ந்து விசித்ர வனிதையின் வருகைக்காகக் காத்திருந்தான்.
ஜொலிக்கும் மாளிகையிலிருந்து கண்ணைப் பறிக்கும் வனப்புடைய அந்த கன்னிகை தன் பாங்கியருடன் வெளி வந்தாள். சத்வசீலன் உடனே அவளை மகாராஜனுக்குச் சுட்டிக் காட்டி “அவள் தான்!” என்றான். அரசனும் சத்வசீலன் மையல் கொண்டுள்ள பெண் பேரழகியே என்பதை கண்ணாரக் கண்டு திருப்தி கொண்டான். அவளோ சத்வசீலன் பக்கத்தில் சகல ராஜசின்னங்களுடன் அரசன் வீற்றிருப்பதைக் கண்டு, “இவர் யாராக இருக்கக் கூடும்?” என்று திகைத்துப் போனாள்.
துர்க்கையம்மனை வழிபட அவள் கோயிலுக்குள் நுழைந்தாள். அரசன் மிக்க அலட்சியத்துடன் சத்வசீலனையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் நுழைந்தான். கன்னிகையோ பூஜையை முடித்துக்கொண்டு தனக்கு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்று துர்க்கையை வணங்கி விட்டு வெளியே வந்தபோது, அரசனையும், அவன் தோழனையும் காணவில்லை. ஆகவே அவள் தன் பாங்கியருள் ஒருத்தியை அழைத்து, “இப்போது நான் பார்த்த ராஜகம்பீரர் எங்கே இருக்கிறார் என்று தேடிப் பார்த்து அழைத்துவா. அவர் நிரம்பவும் பெரிய மனிதராகத் தோன்றினார். சாதாரணமாக நம் இருப்பிடத்துக்கு அவர் வரக்கூடியவர் அல்ல. அவரை நாம் தக்கபடி உபசரிக்க வேண்டும்” என்றாள்.
கன்னிகையால் தூதனுப்பப்பட்ட தாதியும், மகாராஜனைத் தேடிப் பார்த்து வணங்கித் தன் எஜமானியின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். அரசரோ அலட்சியமாக, “இந்தத் தோட்டமே ஒரு விருந்தாக இருக்கிறதே. இன்னும் வேறு என்ன உபசாரம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட பாங்கி அதைத் தன் எஜமானியிடம் தெரிவித்தாள். உண்மையில் அவன் சிறந்தவன் என்றும். அதற்குத் தக்கபடி உபசரிக்க வேண்டும் என்றும் விசித்திரக் கன்னிகை நினைத்தாள்.
அரசன் தன் புலன் அடக்கத்தால் அவளுடைய கவர்ச்சி கரமான உபசாரத்தை ஏற்பதில் எவ்வளவுக்கு எவ்வளவு அலட்சிய மனப்பான்மையைக் காட்டினானோ. அவ்வளவுக்கு அவ்வளவு அவளுக்கு அரசனிடம் மரியாதையும். வேட்கையும் ஏற்பட்டன. தன் பிரார்த்தனைக்கு இரங்கி தனக்குக் கணவன் ஆவதற்காகத் துர்க்காதேவியே அந்த ராஜகம்பீரனை அவ்விடம் அனுப்பி வைத்திருப்பதாக அவள் நினைத்துவிட்டாள். ஆகவே மனதிற்குகந்தவனை அழைக்க மங்கையே நேரில் புறப்பட்டாள்.
அவள் அருகில் வந்தபோது அந்த அசுர கன்னிகையை அரசன் உற்றுக் கவனித்தான். வஜ்ஜிரம் போல் உறுதியான தேகக் கட்டுடன், இளமை வனப்புள்ள, கண்களில் அடங்காத ஆசைத் துடிப்புடனும் விளங்கினாள். அரசனின் ஆடையாபரணங்களையும், அழகிய முகத்தையுங்கண்டு. அதிகமாக மோகக்கிறக்கம் கொண்டாள்.
அவள் அரசனை வணங்கி, தன் உபசாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டினாள். அவன் உடனே சத்வசீலனைச் சுட்டிக் காட்டி அவளிடம். “இவன் குறிப்பிட்ட துர்க்காதேவியின் திருஉருவத்தை வழிபடுவதற்காகவே நான் இங்கே வந்தேன். துவஜஸ்தம்பத்தைத் தரிசித்துப் பிறகு உன்னையும் கண்டேன். இன்னும் என்ன உபசரிப்பு இருக்கிறது?” என்று கேட்டான்.
உடனே அந்தக் கன்னிகை, “மூவுலகத்திற்கும் அதிசயமாக விளங்கும் சிங்காரத் தோட்டத்தைப் பார்க்கவேண்டாமா? வாருங்கள்” என்று அழைத்தாள். இதைக்கேட்ட மன்னன் சிரித்துக்கொண்டே, “அதைப் பற்றி இவனும் சொல்லியிருக்கிறான். நீராடுவதற்காக அதிலே ஒரு தடாகம் இருக்கிறதாம்” என்றான்.
“பூமானே! தாங்கள் இப்படிப் பேசலாகாது. நான் ஏமாற்றுபவளல்ல! அன்றி தங்களைப் போல மரியாதைக்குரிய பெரியவர்களை யார் தான் ஏமாற்ற நினைப்பார்கள்? உங்கள் இருவருடைய மேன்மையையும் உணர்ந்த நான் உங்களுக்கு அடிமையாகி விட்டேன். ஆகவே என் கோரிக்கையை தட்டக் கூடாது!” என்று வேண்டிக்கொண்டாள்.
அதைக் கேட்ட அரசன் அதற்குச் சம்மதித்து, சத்வசிலனையும் அழைத்துக் கொண்டு அவளைத் தொடர்ந்து தோட்டத்திற்குச் சென்றான். விலை மதிக்க முடியாத ரத்தின சிங்காதனம் ஒன்றில் அரசனை உட்காரவைத்துக் கன்னிகை அவனுக்கு முறைப்படி அர்க்கியம் வழங்கினாள்.
“பாதாள வேந்தர்களுக்கு வேந்தனான காலநேமியின் குமாரி நான்! சக்ரதாரியான விஷ்ணு என் தந்தையை சுவர்க்கத்துக்கு அனுப்பிவிட்டார். எனக்குப் பிதிரார்ஜிதமாகக் கிடைத்துள்ள இந்த இரு அதிசய நகரங்களும் விசுவகர்மாவினால் நிர்மாணிக்கப் பட்டவை. நினைத்தவை ஈடேறும் இந்த இடத்தில் சாவும் மூப்பும் யாரையும் அணுகா. இந்த அமானுஷ்யமான தீவில் ஆண்களே இல்லை. இந்நகரங்களைப் பெண்ணொருத்தி எத்தனை காலத்தான் தன்னந்தனியாக ஆள முடியும்?” என்று கூறி அரசனை வணங்கினாள்.
அதன் பிறகு அவளே வலிய அரசனிடம் நெருங்கித் தன் தாபத்தைத் தீர்க்க வேண்டுமென்று சொன்னாள்.
அவளது அளவுமீறிய தேகப் பூரிப்பையும், அவளுடைய கருவிழிகளில் தென்பட்ட அடங்காத போதையையும் கண்ட அரசனின் மெல்லிய உடல் நடுங்கியது. அவள் அரசனை நோக்கி “நான் இது பரியந்தம் எந்த ஆடவன் மீதும் மோகம் கொண்ட தில்லை. உங்கள் அழகிய உ உருவத்தைக் கண்டதும் உற்றுக் கவனித்தேன். இத்தனை வருஷங்களாக அமிழ்ந்து அடங்கிக் கிடந்த ஆசையெல்லாம் இப்பொழுது பெரு வெள்ளமாகப் பொங்கியெழுகிறது. இனி தாளமாட்டேன். என்னை மணந்து என் தாகத்தைத் தீர்ப்பவர் எவரோ, அவரை இந்த மாயத் தீவிலிருந்து போகவும் விடமாட்டேன். ஆண் வாடை வீ சாத இந்தத் தீவில் தன்னந்தனியாய் அரசாளும் நான் அவரை உயிருக்குயிராய் காதலித்து உலகப் பிரளய பரியந்தம் இந்தத் தீவிலே மனம் மகிழ்ந்திருப்பேன். துர்க்கையம்மன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்! என் தந்தையைப் போல் ராஜ கம்பீரமாக விளங்குகிறீர்கள். அடியாளை இந்நகரங்களோடு அனாதையாக விட்டுப் போகாதீர்கள்!” என்றாள்.
உடனே அரசன் அவளை நோக்கி, “அப்படியானால் என் அருமை மகளே, உன்னை அனாதையாக விட்டுப் போகமாட்டேன்!” என்று கூறி விட்டு, அவளுடைய அடங்காத தேகப் பூரிப்பையும், வஜ்ஜிர தேகத்துடன் தன் அருகில் நின்ற சத்வசீலனையும் உற்று நோக்கிக் கொண்டே, “உன் தவிப்பை நான் அறிந்து கொண்டேன், பெண்ணே! உனக்குத் தேவையானது வெறும் அழகிய உருவமல்ல! இவன் என் அந்தரங்கத் தோழன். உன் மீது தீராத மோகம் கொண்டிருக்கிறான். மகளே! உன்னை இவனுக்கு அளிக்கிறேன். இவன் உன்னையும் உன் நகரங்களையும் ஆளுவான்! நீயும் இவனும் ரதியும் மன்மதனும் போல் பிரளய பரியந்தம் இந்த மாயத் தீவிலே குதூகலமாய் இருங்கள்!” என்றான்.
தன் குலதெய்வமே தந்தைக்குப் பதிலாக ராஜகம்பீரன் உருவில் வந்திருப்பதாக எண்ணிய பாதாள கன்னிகையும், அவனே அப்படிக் கூறிவிட்டதால், அதை ஏற்றுக்கொண்டு பணிந்தாள்.
சத்வசீலனின் விருப்பம் நிறைவேறியது. அவன் அந்தக் கன்னிகையை மணந்து மாயத் தீவிலுள்ள இரு நகரங்களின் அரசுரிமையையும் அடைந்தான். அதன் பிறகு மகாராஜன் தன்னை வணங்கிய அவனை நோக்கி, “அன்று நடுக்காட்டில் எனக்குச் சாப்பிட இரண்டு நெல்லிக் கனிகளைக் கொடுத்தாய். அதற்கு ஈடாக இன்று நான் உனக்கு ஒரு பெண் கனி தந்தேன்!” என்று சொன்னான். பிறகு விசித்திரக் கன்னிகையைப் பார்த்து, “என் ராஜ்யத்தின் தலைநகருக்கு நான் திரும்பிப் போக வழி காட்டவேண்டும்” என்று கேட்டான். அவள் அரசனுக்கு ஒரு கத்தியையும் ஒரு பழத்தையும் கொடுத்தாள். பழம் மூப்பைத் தடுக்கும் என்றும், கத்தி வெற்றியையே கொடுத்து கூற்றுவனை அணுகவொட்டாமல் தடுக்கும் என்றும் தெரிவித்துவிட்டு, பழையபடியே குளத்தில் மூழ்கச் சொன்னாள். அரசனும் அவ்வி தமே குளத்தில் மூழ்கித் தன் தலைநகரை அடைந்தான். மாயத் தீவிலோ பாதாள கன்னிகையுடன் சத்வசிலனும் நீண்ட காலம் அரசாண்டு வந்தான்.
இவ்விதம் கதை சொல்லி முடித்த வேதாளம் விக்கிரமாதித்தனைப் பார்த்து, “சேவகனான சத்வசீலன், அவன் மகாராஜன். இவ்விருவரில் யாருடைய நன்றி விசுவாசம் விசேஷமானது? சொல்லுமையா. ராஜனே!” என்று கேட்டது.
அதற்கு விக்கிரமாதித்த மகாராஜன் பின்வருமாறு பதில் சொன்னான்:
“சேவகன் நன்றி விசுவாசம் செலுத்துவது அவனுடைய கடமை! அரசாள்பவனுக்கு அது கடமையல்ல! ஆகவே, அரசன் தன்னை மோகித்த அதிசய கன்னிகையைத் தன் பழைய சினேகிதனுக்குத் தத்தம் செய்த நன்றி விசுவாசமே விசேஷமானது!”
(வடமொழி மூலம் ஒன்றில் கேள்வியும் பதிலும் வேறொரு விதமாக, பின்வருமாறு காணப்படுகிறது:)
“இவ்விருவருள் யார் அஞ்சா நெஞ்சுடன் கடல் நீரில் மூழ்கினார்கள்? யார் செயல் விசேஷமானது?” என்று கேட்டது வேதாளம்.
“இருவருள், சத்வசீலனே தைரியசாலி! உண்மையில் அவன்தான் விளைவு என்ன ஆகும் என்பதை அறியாமல் முதலில் துணிந்து கடல் நீரில் குதித்தான். அரசனோ எல்லாவற்றையும் நன்றாக அறிந்துக் கொண்டு ஒரு காரியம் கை கூடுவதற்காகவே குதித்தான். அன்றியும் பாதாள கன்னிகையை மணப்பது தனக்குப் பொருத்தமில்லை என்று கருதியே அவன் அந்தப் பெண்ணின் மையலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சத்வசீலனே உயர்ந்தவன்!” என்று விக்கிரமாதித்தன் விடையளித்தான். மறுபடியும் வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கமரத்தில் தொற்றிக் கொண்டது.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.