சத்தியத் திருட்டு
புத்தகக் கண்காட்சியின் அந்த அரங்கிற்குள் தயங்கியவாறே நுழைந்த அந்தச் சிறுவன், புத்தகங்களையெல்லாம் பார்த்தவாறே, ஒரு புத்தகத்தின் முன்நின்று, சற்றுத் தயங்கியபின், இருபக்கமும் பார்த்து, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற உணர்வில், அப்புத்தகத்தைத் தன் வயிற்றுப் பகுதியில் சொருகிக் கொண்டு, மேல் சட்டையால் மறைத்துக் கொண்டான். மேலும் பல புத்தகங்களைப் பார்வையிடுவது போல் பார்த்தபடி, கூட்டத்தினிடையே வாயிலைக் கடக்கும் தருணத்தில், அவனது தோள் மீது ஒருகை விழுந்ததும் திடுக்கிட்டான்.
“”திருட்டுக் கழுதை… இங்கே வாடா…” என்று அந்தக் கண்காணிப்பாளன் அவனைப் பிடித்திழுத்தபடி, அரங்கின் உரிமையாளரிடம் கொண்டுவந்து நிறுத்தி, “”ஐயா, இந்தப் புத்தகத்தை இவன் திருடிட்டான்…” என்று கூறி, அந்தப் புத்தகத்தையும் அவரது மேசைமீது வைத்தான்.
உரிமையாளர் அந்தப் புத்தகத்தையும், அந்தச் சிறுவனையும் பார்த்தபடி, “திருடினாயா, இதை?’
என்று கேட்டார்.
சிறுவன் நடுங்கியபடி, “”மன்னிச்சுடுங்கய்யா.. நான் நகராட்சிப் பள்ளியிலே அஞ்சாவது படிக்கிறேன். எங்க தமிழாசிரியர்தான் எப்பவும் இந்தப் புத்தகத்தைப் பத்தி அடிக்கடிப் பேசி, இதை எல்லா மாணவனும் படிச்சா, நல்ல மனுசனா வாழலாம்னு சொல்வாரு. அப்பா இல்லாத எனக்கு அம்மா மட்டும்தான். கூலி வேலை செஞ்சு படிக்கவைக்கிறாங்க. சாப்பாடு கூட ஸ்கூல்ல மதிய உணவுதாங்க. இந்தப் புத்தகத்தை எப்படியும் படிக்கணும்னு ஆசை. காசு இல்லே. இப்பக்கூட, இதைப் படிச்சுட்டு ரெண்டு நாள்ல இங்கேயே திருப்பி வச்சுடலாம்னுதான் எடுத்தேன். தப்புதாங்க. மன்னிச்சுடுங்க. தயவு செஞ்சு விட்டுடுங்க…” என்று அழ ஆரம்பித்தான்.
உரிமையாளர் அவன் தோளில் கைவைத்து, “”இந்தப் புத்தகத்தைத் திருடியாவது படிக்கணும்னு உனக்குத் தோணும்படி கற்றுக் கொடுக்கிற உன் ஆசிரியரை நான் மனமாற வாழ்த்துகிறேன், தம்பி. நீ திருடியிருக்காம, நிலைமையைச் சொல்லி என்கிட்டே கேட்டிருந்தியானா, நானே கொடுத்திருப்பேன். பரவாயில்லை, உன் வகுப்பிலே எத்தனை மாணவர்கள்?” என்று கேட்டார்.
“”முப்பது பேர் சார்…” என்று அவன் கூறியதும், அவர் கண்காணிப்பாளரிடம், “”முப்பது பிரதிகளை ஒன்ணாகக்கட்டி இந்தத் தம்பிகிட்டே கொடுங்க. எல்லாப் பிள்ளைங்களும் இதை இலவசமா படிக்கட்டும். அந்த ஆசிரியரையும் ஒருநாள் சந்திக்கணும்…” என்றார்.
தயங்கி நின்ற கண்காணிப்பாளரிடம் மறுபடியும், “”எதை எதையோ அரசாங்கத்துல இலவசமாக் கொடுத்துக் கெடுக்கிறாங்க. அதுக்கு நாம இந்தப் புத்தகத்தை இலவசமா இவங்களுக்குக் கொடுப்பது உயர்வானது. நன்மை பயக்குமெனின் பொய்மையும் வாய்மைதானே? சத்தியம், அகிம்சை வளரவும், இந்த நாட்டின் வருங்காலம் இந்த இளைய சமுதாய தளிர்க்கரங்களால் உயரவும், காரணமான இந்தத் திருட்டு, திருட்டாகாது. முப்பது காப்பி எடுத்துக் கொடுங்க…” என்று கூறியபடி அச்சிறுவனிடம், “”உன்னோட ஆசிரியர் போன்றவர்களாலும், உன்னைப் போன்ற மாணவர்களாலும் வருங்கால இந்தியா வளமாக இருக்கும்ணு எனக்கு நல்லாப்படுது, தம்பி…” என்று கூறி, அவன் “திருடிய’ அண்ணல் காந்தியின் சுய சரிதையான “சத்திய சோதனை’ புத்தகத்தை அவனிடம் கொடுத்தார்.
மலிவுப் பதிப்பாக அதை அச்சிட்டு, எல்லாப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாகக் கொடுக்கும் திட்டமும் அவரது மனதில் அப்போதே உருவாகியது.
– கே. பி. பத்மநாபன் (ஜூலை 2012)