சட்டென்று மாறும் மனநிலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 108 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

வனிதாமணி, இளஞ் செழியன், கோபாலன் மூவருக்கும் ஒரே ஒரு கவலை ஒரே மாதிரியான கவலை நெடு நாட்களாக இருந்து வந்தது. அது வனிதாமணி இன்னும் குமரிப் பெண்ணாக மாறவில்லை என்பதுதான். வனிதாமணி பனிரெண்டாம் வகுப்பை முடித்து அதற்கான தேர்வு முடிகளும் வந்துவிட்டன. ஆனாலும் அவள் உடல் அளவில் இன்னும் பக்குவம் அடையாத சிறுமியாகவே இருக்கின்றாள். இதுபற்றி அவளது தந்தை கோபாலன் அவளிடம் பேச அச்சப்பட்டார். இளஞ்செழியனும் அதைவிட அதிகமாக பயந்தான். அவளாகக் கூப்பிட்டால் ஏதாவது மருத்துவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று அவன் காத்திருந்தான். அவளது உடலில் நரம்பு மண்டலத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது. அதுதான் அவளது அத்தகைய நிலைப்பாட்டிற்கு காரணம் என்று சிலரும் சத்தான உணவுகளை சரியாக சாப்பிடாததே காரணம் என அக்கம் பக்கத்தினரும் பேசிக் கொண்டிருந்தனர்.

இளஞ்செழியன் நினைத்தபடி ஒரு நாள் வனிதாமணியே அவனிடம் பேசினாள்.

“டேய் செழியா என்ன ஒரு நல்ல பெண் மருத்துவர்கிட்ட கூட்டிக்கிட்டு போறியாடா?” என்று பரிதாபமாகக் கேட்டாள். அவள் குரலில் துக்கமும் துயரமும் இரண்டறக் கலந்து அவளை பெரும் கவலைப்பள்ளத் தாக்கில் மூழ்க வைத்தது. மறுநாள் இளஞ்செழியன் தஞ்சையில் உள்ள ஒரு பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தான்.

பெண் மருத்துவர் வனிதாமணியை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஏம்மா உனக்கு என்ன வயசு ஆகுது?”

“பதினேழு வயசு ஆகுதும்மா”

அதன் பின் மருத்துவர் அவளை உள்ளறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து அவள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து பார்த்தார்.

“சரி இனிமே நீ பயப்பட வேண்டாம். உனக்கு அடி மனசுல அளவுக்கு அதிகமான பயம் இருக்கு. அதோட சத்துப்பற்றாக்குறை யினாலதான் இப்படி ஆகியிருக்கு. நீ மாதுளம் பழமும், அன்னாசிப் பழமும் தினமும் சாப்பிடணும். அப்புறம், நான் கொடுக்கிற மருந்த தினமும் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வரணும். ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப நீங்க என்ன வந்துப் பாருங்க!” என்றார் அந்தப் பெண் மருத்துவர்.

“சரிம்மா”

“சரி உன்னோட வந்திருக்கிற பையன் யாரும்மா?”

“அது என்னோட முறைப் பையன்தான். அவனத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”

உடனே பெண் மருத்துவர் இளஞ்செழியனை உள்ளே அழைத்தார்.

“தம்பி இங்க வாங்க. நீங்க ஒரு நாலு நாளைக்கு இந்தப் பொண்ண சாய்ந்தரமா இங்கே அழைத்துக் கொண்டு வர முடியுமா தம்பி?” என்றார் அந்தப் பெண் மருத்துவர்.

இளஞ்செழியன் மருத்துவரை சற்று அதிர்ச்சியுடன் பார்த்தான். அவன் தினமும் அவளை தரங்கம்பாடியில் இருந்து தஞ்சைக்கு மாலையில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அழைத்து வர வேண்டும் என்றால் அவனது வேலை கெடும் என்ற எண்ணம் அவனிடம் மேலிட அவன் மனம் அதிர்ச்சிக்கு உள்ளானது.

“அம்மா மருந்து மாத்திரைகளால் மட்டும் இதைச் சரிப்படுத்த முடியாதா?” அவன் கேட்டான்.

“சரி தம்பி நீங்க தினமும் சாயந்தரம் நான் சொல்ற மாதிரி இந்த பெண்ணப் படுக்க வைத்து கை விரல்களையும் கால் விரல்களையும் நான் இப்ப செஞ்சி காமிக்கிற மாதிரி அமுக்கி விடணும். நான் இப்ப உங்களுக்கு கொடுக்கிற மருந்து மாத்திரைகளை சரியா சாப்பிட்டு வரணும். அதுக்கப்புறம் தேவைப்பட்டால் நீங்க என்னை வந்து பாருங்க!” என்றார் மருத்துவர்.

“சரிம்மா” என்று சொல்லிவிட்டு மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மருத்துவருக்கு நன்றி தெரிவித்து விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

வெளியே வந்த இளஞ்செழியன் வனிதா மணியை அங்கேயே வெளியில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் அந்தப் பெண் மருத்துவர் இருந்த அறைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தான்.

“என்ன தம்பி! இங்க ஏதாச்சும் மறந்து வச்சுட்டுப் போயிட்டீங்களா?” என்று கேட்டார்.

“அதெல்லாம் இல்லம்மா. எனக்கு கொஞ்சம் பயமா இருக்குமா. இவளை எப்படியாவது சீக்கிரமா குணப்படுத்திட்டீங்கன்னா உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும். நான் வேணும்னா நாலு நாளைக்கு தினமும் சாயந்திரம் இவளை இங்கே கூட்டிட்டு வரட்டுங்களா?” அவன் தயக்கத்துடன் கேட்டான்.

“நான் அந்த பொண்ணோட உடம்ப நல்லா சோதிச்சுப் பாத்துட்டுத்தான் சொல்றேன். நீங்க பயப்படாமப் போங்க. தினமும் அந்த பொண்ணோட கால் விரல்களையும் கை விரல்களையும் நல்லா அமுக்கி விடுங்க. இன்னும் ரெண்டு வாரத்துல அவள் கண்டிப்பா பெரியவளா ஆயிடுவா. நீங்க பயப்படாம போயிட்டு வாங்க தம்பி”

இருவரும் பேருந்தில் பயணித்து, தரங்கம்பாடிக்கு இரவு ஏழு மணி அளவில் வந்து சேர்ந்தார்கள்.


அனிதா மணியின் தந்தை கோபாலனும் இளஞ்செழியனின் தந்தை ராஜலிங்கமும் மிக நெருங்கிய உறவினர்கள் இருவரும் மாமன் மச்சான்கள். ராஜலிங்கம் வேதாரணியத்தில் இருந்து தனது மகனை அழைத்துக் கொண்டு தரங்கம்பாடியில் இருக்கும் தனது மைத்துனர் கோபாலனின் வீட்டிற்கு ஞாயிறு தோறும் வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். மாமன் மச்சான்கள் இருவரும் மணிக்கணக்காக பேசிக் கொண்டும் சீட்டு விளையாடிக் கொண்டும் பொழுதைக் கழிப்பார்கள். அப்போது வனிதாமணியும் இளைஞ்செழியனும் கடற்கரைப் பக்கம் சென்று ஓடிப் பிடித்து விளையாடி மகிழ்வார்கள். மதியம் ஆட்டுக்கறி அல்லது மீன் குழம்பு சமையல் தடபுடலாக நடக்கும். வனிதா மணிக்கு ஐந்து வயதாக இருக்கும் போது இளஞ்செழியனுக்கு எட்டு வயது ஆகியிருந்தது. அப்போதே இளஞ்செழியனை கோபாலன் “மாப்பிள்ளை” என்று அழைக்க ஆரம்பித்தார். இளஞ்செழியன் அவரை “மாமா” என்று அழைப்பதும் வனிதாமணி அவனை ‘வாடா’ என்று அழைப்பதும், அவன் அவளை “வாடி போடி” என்று அழைப்பதும் வாடிக்கையானது.

இளஞ்செழியனின் அப்பா ஏழு ஆண்டுகளுக்கு முன்பும், அவனது தாய் மறு ஆண்டும் இறந்துவிட அதன் பின்னர் இளஞ்செழியன் கோபாலன் மாமா வீட்டிலேயே தங்கி கொண்டான். அவரது வீட்டு மாடிப் பகுதி அவனது இருப்பிடமானது. ஒண்டிக்கட்டையாய் இருந்த அவனுக்குக்கு அண்டிக் கொள்ளவும் ஆதரவும் ஆறுதலும் சொல்லவும், வனிதாமணி அவனுக்கு துணையாகவும் தூணாகவும் இருந்து அவனை சிறப்பாக கவனித்துக் கொண்டாள். இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதென சிறு வயதிலேயே ராஜலிங்கமும் அவரது மனைவியும் உயிரோடு இருக்கும்போதே எல்லோரும் சேர்ந்து முடிவு செய்து இருந்தனர். அதனால் வனிதாமணி இளஞ்செழியனோடு எந்த பயமும் பதட்டமோ இல்லாமல் இரவு நேரங்களில் கூட அவனோடு ஒன்றாக ஒரே கட்டிலில் தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டாள். ஆரம்பத்தில் கீழ் வீட்டில் இருந்தவள் அவளது தாய் இறந்தபின் மாடியில் இளஞ்செழியனோடு அங்கேயே தங்கிக் கொண்டாள்.

இளஞ்செழியனுக்கு துணையாக மாடியில் இருக்கும் அவனது சிறிய அச்சகத்தில் அவனுக்கு உதவியாக இருந்து அவனை கவனித்துக் கொள்வாள் அச்சக வேலை இல்லாத போது அவன் துணிகளில் ஓவியம் வரைவதை துணைத்தொழிலாக வைத்திருந்தான். வனிதா மணி அவனுக்கு பிடித்தமான உணவுகளை அங்கேயே சமைத்துக் கொடுப்பாள். வனிதாமணி அவளது அப்பாவிற்கு சாப்பாடு போடுவதற்காக மட்டும் கீழ் வீட்டிற்கு வருவாள். இப்படியாக மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. அவனுக்கு அவள் மீதும் அவளுக்கு அவள் மீதும் அப்படி ஒரு பற்றுதல் பாங்காய் பரிணமித்தபடி இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அப்படி நேசித்தார்கள். சில நாட்கள் கோபாலன் காலை ஏழு மணி அளவில் மாப்பிள்ளை இடம் ஏதேனும் தகவலைச் சொல்வதற்காக மாடி ஏறி வரும்போது அனிதா மணியும் இளஞ்செழியனும் ஒரே கட்டிலில் கட்டிப்பிடித்தபடி படுத்துக் கிடப்பதைப் பார்த்துவிட்டு எந்தவித பதட்டமோ கோபமோ படாமல் அப்படியே அமைதியாகப் போய்விடுவார். ஏதோ சின்னக் குழந்தைகள் படுத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் அமைதியாக அவர்களை தொந்தரவு செய்யாமல் அப்படியே போய்விடுவார். அவரது நினைப்பு ஒரு வகையில் உண்மையாகவும் இருந்தது.


இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் வீட்டை நோக்கி நடந்தனர். அப்போது வழியில் அவர்களைப் பார்த்த கோபாலன்,

“மாப்ள யாரோ ஜெர்மன்ல இருந்து ரெண்டு பேரு உங்க ஓவியங்களை பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க. நான் நீங்க தஞ்சாவூர் போயிருக்கிறதா சொல்லி இருக்கேன். அவங்க நாளைக்கு வந்து உங்களை பார்க்கிறதா சொல்லிட்டு போயிருக்காங்க மாப்பிள்ளை” என்று சொல்லிவிட்டு அவர் கடற்கரையை நோக்கி மெல்ல நடந்தார்.

“சரிமாமா” என்று சொல்லிவிட்டு இளஞ்செழியன் வனிதா மணியின் கைகளைப் பற்றிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அன்று இரவு இளஞ்செழியன் வெகு நேரம் தூங்கவே இல்லை. அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளை கொடுத்துவிட்டு அவளை கட்டிலில் படுக்க வைத்தான். அதன் பின் அவளது கை விரல்களையும் கால் விரல்களையும் மருத்துவர் சொன்னவாறு நன்றாக அமுக்கிவிட்டான். விரைவில் அவள் குமரியாக மாற வேண்டும் என்று இறைவனை வேண்டியபடி அவன் அவள் அருகில் படுத்தான். அப்படியே சில நிமிடங்களில் அவன் தூங்கிப் போனான்.


மறு தினம் இளஞ்செழியன் அவனது நண்பன் சிவராமன் கொடுத்த ஓர் இளம் பெண் சம்பந்தப்பட்ட ஒரு பேய்க்கதைப் புத்தககத்தைப் படித்தான். . அந்தக் கதைப் புத்தகம் படிக்க விறுவிறுப்பாகவும் ஆர்வத்தை தூண்டக் கூடியதாகவும் இருந்தது. இளஞ்செழியன் அந்தக் கதையை ஒரு வாரத்தில் மூன்று முறை திரும்பத் திரும்பப் படிக்க ஆரம்பித்தான். அந்தப் பேய் கதையின் தாக்கம் அவன் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.


வனிதாமணி பெண் மருத்துவரைப் பார்த்து விட்டுச் சென்ற பதிநான்காம் நாள் குமரிப் பெண்ணாய் மாறிப் போனாள். வழக்கமான சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் எளிமையான முறையில் நடந்து முடிந்தன. அப்போது அவளது நெருங்கிய தோழிகள் இருவர் அவளோடு தங்கியிருந்தனர். நான்கு நாட்கள் கேலியும் கிண்டலும் சிரிப்புமாக நாட்கள் நகர்ந்தன. அதன் பின் ஒரு நாள் வனிதாமணி இரவு ஏழு மணி அளவில் தனது நேசத்திற்குரிய இளஞ் செழியனைப் பார்ப்பதற்காக அவன் தங்கி இருக்கும் மாடி வீட்டிற்கு மிகுந்த ஆசையோடும்

ஆவலோடும் ஓடி வந்தாள். ஆனால் இளஞ் செழியன் வனிதா மணியைப் பார்த்த பொழுது ஓர் இளம் பேயைப் பார்ப்பது போல் அவனுக்குத் தோன்ற அவன் அவளைப் பார்த்து பதட்டம் அடைந்தான். பயந்து நடுங்கினான். அவனிடம் இருந்து வார்த்தைகள் கூச்சலாய் வெளிப்பட்டது.

“ஏய் நீ ஏன் இங்க இப்ப வர்ற?. உன்னப் பாக்கவே பயமா இருக்கு! உன்னப் பாக்கப் பிடிக்கலடி! இனிமே நீ என்னப் பாக்கவே வராத! இப்படியே ஓடிப் போயிடு”

அவனை ஆசையோடு கட்டித்தழுவி முத்தமிட நினைத்த அவளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருந்தது. அவனது கூச்சல் அவளை நிலைகுலைய வைத்தது. அவள் மனம் வெறுத்து, வீட்டின் வெளி வாசல் கதவைத் திறந்து, அந்த இரவு வேளையில் மனம் போனபடி அவள் தெருவில் நடந்து சென்றாள்.

அது செப்டம்பர் மாதம். வேளாங்கண்ணித் திருவிழா நடைபெறும் காலம். சாலைகளில் வேளாங்கண்ணித் திருவிழாவிற்கு நடைபயணமாகச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவள் அருகில் இருந்த பூங்காவிற்குள் தனது மென்மையான பாதங்களை உள்ளே பதித்தாள். பூங்காவிற்குள் அப்போது நாற்பது வயது திருடன் ஒருவன் சிமிட்டி இருக்கையில் அமர்ந்தபடி தனது மறுநாள் திட்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். வனிதாமணி அவனுக்கு அருகில் சுமார் பத்து அடிகள் தள்ளி இருந்த சிமிட்டி இருக்கையில் அமர்ந்தாள்.


மாடி வீட்டில் தனியாக படுத்திருந்த இளஞ்செழியனுக்கு ஒரு வார காலமாக தூக்கமே வரவில்லை. அவன் தன்னையே நொந்து கொண்டான். தனது பிரியத்திற்குரிய வனிதா மணி ஆசையோடு அவனை நெருங்கியபோது அவன் ஏன் அப்படி கூச்சலிட்டு அவளைத் துரத்தி விட்டான் என்பது அவனுக்கே புரியவில்லை. நீண்ட நெடிய யோசனைக்குப் பின் அவனுக்கு ஓர் உண்மை புரிய ஆரம்பித்தது. அதற்கு காரணம் அந்தப் பேய்க்கதை புத்தகம்தான் என்பதை அவன் உணர்ந்தான். மறுநாள் அவன் கோபாலன் மாமாவிடம் சொல்லிவிட்டு நாகப்பட்டினம் சென்றான். அங்கே மனநல மருத்துவர் தணிகாசலம் அவர்களைச் சந்தித்தான். அவனது மனநிலை இயல்பு நிலைக்கு மாறும்வரை அவன் அங்கே ஒரு வாரம் தங்கியிருந்தான்.

.

அவன் மீண்டும் தரங்கம்பாடி க்கு ஒரு வாரத்திற்கு பின் திரும்பி வந்தான். அப்போது அவன் மனதில் வனிதா மணியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அவன் வீட்டிற்குச் சென்றான். கோபாலன் மாமா கடற்கரைப் பக்கம் காற்று வாங்கச் சென்றிருப்பதாக தகவல்கள் கிடைத்தன. அவன் பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் வனிதா மணியைப் பற்றி விசாரித்தான். ஐந்து நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணித் திருவிழாவிற்கு திருட வந்த ஒரு திருடனோடு அவள் ஓடிப் போய்விட்டதாக பாட்டி சொல்ல அவன் அப்படியே ஆடிப் போய் விட்டான். வனிதாமணி எப்படியும் ஒரு நாள் அவனைத் தேடி திரும்பி வருவாள் என அவன் ஆவலோடு அவளின் வருகைக்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.

அவனது காத்திருப்பு, ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஓராண்டு என நீடித்தது. ஆனால் வனிதாமணி அதன் பின் திரும்ப அங்கு திரும்பி வரவே இல்லை.

குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 10ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 

முத்தமிழ்ப்பித்தன் எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *