சட்டென்று மாறிய வானிலை




மாலை நேரத்து மயக்கம் போல வெயிலும் இல்லை குளிரும் இல்லை தொலைக்காட்சி செய்திகளில் வருவது போல் மிதமான வானிலை. உள்ளத்தில் மகிழ்ச்சியும் இல்லை அதற்காக எரிச்சலும் இல்லை. அருவி விழுந்து நுரைத்துப் பொங்கும் நீர் அமிழ்தம் போல் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

வாழ்வில் சாலையில் வரும் திருப்பங்கள் போல் எந்த மாற்றமும் இல்லாமல் தட்டையாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால் ஏற்படும் விளைவா என்றால் சரியாக சொல்லத் தெரியவில்லை.
சில மன துயரங்களுக்கு காரணங்கள் இருப்பதில்லை. குறிப்பாக பெண்கள் கண்ணீர் விட்டு துயரத்தை நீக்கிக் கொள்வது போல் ஏதாவது ஒன்று அல்லது எதை கொண்டாவது விடுதலை பெறுவது ஒரு பழக்கம்.
ஒரே பதவி அதனால் என்றால் அதுவும் இல்லை. பதவி உயர்வு வந்தால் மகிழ்ச்சியா, வந்த நொடி வேண்டும் என்றால் ஒரு விதமான மன உச்சம் ஏற்படலாம். ஆனால் அதில் வரும் சிக்கல்கள் எதிர் வினைகள் அறம் அற்று சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது சரியாக இருக்குமோ என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று இப்போது இருக்கும் வேலையும் பதவியும் தனிப்பட்ட முறையில் எந்த வித சிக்கலும் இல்லாமல் செயல்பட ஏற்றது என்பதால் பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது மகிழ்ச்சி தான்.
ஆனால் நம்முடன் பணியாற்றுபவர்களின் மன வேதனைகள், எதன் பொருட்டு என்பதை கணிக்க முடியவில்லை. நபர்களுக்கு நபர் மாறும். ஆனால் சம்பளம் அனைவருக்கும் பொது. சம்பளம் தொடர்பான பிரச்சனைகள் தான் தலை தூக்கிக் கொண்டு இருக்கிறது. எப்போதும் வருட இறுதியில் கிடைக்கும் சம்பள உயர்வு மற்றும் ஊக்கத் தொகை சரியாக கிடைத்துவிடும். அதுவும் வழக்கமாக தெரிந்தது தான். எனவே அதில் பெரிய ஆவலோ, மகிழ்ச்சியோ இல்லை என்பது தான் உண்மை. நமக்கு எவ்வளவு வந்தாலும் அதற்கான செலவுகளும் நம்மை பின் தொடர்ந்து வந்து விடுகிறது.
ஆனால் இந்த வருடம் இரண்டு மாதங்கள் வேறு பல காரணங்களால் தாமதம் ஆனது. அதனை ஒட்டி போராட்டங்களும் மன கசப்புகளும் நீங்கி பேச்சு வார்த்தை மூலம் கோரிக்கைகள் சரி செய்யப்பட்டு விட்டது. அடுத்த மாதம் தான் அரியர்ஸ் வரும் என்று உறுதியாக எல்லோரும் காத்துக் கொண்டு இருக்கிறோம். புதிதாக எந்த பிரச்சனையும் வராமல் இருந்தால் சரி. இந்த பிரச்சனையும் கூட உயர் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் வந்தது தான். மற்றபடி நிறுவனத்திற்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை. சிறு சிறு காரணங்களை வைத்துக் கொண்டு பெருவாரியான ஊழியர்களையும் அவர்களின் அன்றாட பாடுகளையும் எண்ணாமல் இருப்பது தான் பெரிய சிக்கல். அலட்சியம் தான் காரணம்.
அரியர்ஸ்க்காக காத்துக் கொண்டு இருக்கும் கடன்கள், அதுவும் படிப்புக்கான நகை கடன்கள், மருத்துவ காரணமாக செலவுகள், வீட்டு கடன்கள். இப்படியான ஒவ்வொன்றாக இருக்கும் பெரிய பட்டியல். இந்த வாரம் முழுவதும் எவ்வளவு தான் உற்சாகமாக வேலை செய்தாலும் நிதி தொடர்பான செலவுகள் வரும் போது எரிச்சல் தான் அதிகமாகி உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் நொறுக்கி விடுகிறது.
சிறுக சிறுக காற்றை பெற்ற வண்ண பலூன்கள் உடையாமல் மேலெழுந்து பறக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் உடைந்து சூழ்நிலையை மாற்றி விடுகிறது. அதிலிருந்து சட்டென்று விடுபடும் வித்தையை கற்க தான் போராட வேண்டியிருக்கிறது. இன்று காலை முதல் அனைவருடனும் வழக்கத்திற்கு மாறாக எரிச்சலும் கோபமும் காட்ட வேண்டியிருந்தது. பல வருடங்கள் ஒன்றாக வேலை பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தான் இருந்தாலும், புரிந்து கொண்டவர்களால் நமக்கு பெரிய கசப்புகள் இல்லை.
ரத்னா காலையிலேயே அழைத்தாள். கேஸ் சிலிண்டருக்கு பணம் கட்ட வேண்டும். எங்கு பணம் எடுத்து வைத்தீர்கள் என்றாள். அப்போது தான் எல்லா பணத்தையும் வீடு மாத தவணை தொகை கட்டியது ஞாபகம் வந்தது. பணம் சுத்தமாக இல்லை என்பது நினைவுக்கு வந்தது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து கூப்பிடுகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டேன்.
அடுத்த வேலையில் மூழ்கி போனதால் பணத்தை பற்றி மறந்து விட்டேன். மீண்டும் ரத்னாவிற்கு அழைத்தேன் பணம் எப்போதோ எடுத்து வைத்த ஞாபகம் வந்தவுடன். ஆனால் அதற்குள் அவள் வழக்கமான அவள் புராணத்தை ஆரம்பித்தாள். எனக்கு கேட்க நேரம் இல்லை மற்றும் வேலையும் உள்ளதால் அணைத்து விட்டேன். இது ஒரு கெட்ட பழக்கம் பழக்கமாகி விட்டது. எப்படியும் அவள் சேமிப்பிலோ அல்லது அருகில் இருக்கும் அவள் தோழியிடமோ வாங்கி எப்படியும் சமாளித்து விட்டு இருப்பாள். இப்போது சிக்கல், அவளுக்கு சரியாக பதில் கூறாதது தான். மீண்டும் சண்டை மூழும். எதை கொண்டாவது சமாளிக்க வேண்டும். எப்போதும் சிறியவற்றை வளர்த்து விட்டு விட்டு அதனை எதிர்கொள்வது தான் வழக்கம்.
அரியர்ஸ் பற்றிய ஞாபகம் வந்து கொண்டே இருந்தது, என்னென்று தெரியவில்லை. எல்லா வேலைகளும் இன்று தடங்களுடன் தான் முடிந்தது. ஆனாலும் எப்படியோ முடித்து விட்டோம். முன்னதாகவே அலுவலகத்தில் சொல்லிவிட்டு பர்மிசனில் வீட்டிற்கு சென்றேன்.
ரத்னா இயல்பாக தான் இருந்தாள். எந்த கோபமும் இல்லை. சரண்யா வீட்டு பாடம் செய்து கொண்டு இருந்தாள், அவ்வப்போது அவள் அம்மாவிடம் அடம் பிடித்தாள். சரண்யா டீ கொடுத்தாள், எதுவும் பேசவில்லை அவள். அமைதியாக கோபமாக இருப்பது ஒரு அழகு தான். ஏதோ கவனத்தில் டீயை குடித்து முடித்தேன். டீ நன்றாக தான் இருந்தது. ஆனாலும் மனது ஈர்க்க வில்லை.
இன்று செவ்வாய்கிழமை வார சந்தை. சரண்யாவை அதட்டினேன். இது வழக்கமாக உள்ளது தான். அவள் வீட்டு பாடம் முடிக்காமல் விளையாடிக் கொண்டு இருந்தாள். அவள் கோபித்துக் கொண்டு படுத்துக் கொண்டாள். ரத்னாவிடம் அந்த கோபம் உயர்ந்து திரும்பியது. ரத்னாவையும் திட்டினேன். நான் ஏன் திட்டினேன் என்று தெரியவில்லை. அவள் தான் என்னை கோபித்து கொள்ள வேண்டும். ஆனால் சரண்யாவிடம் உள்ள சாதாரண கோபம் ரத்னாவிடம் கொழுந்து விட்டு எரியும் தீயை போல கோபம் மாறியது ஏன் என்று தெரியவில்லை. எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நடக்கிறது. நீ சரண்யாவை சரியாக கவனிக்கவில்லை என்றேன். அமைதியாக இருந்த ரத்னா அவள் கோபத்தை காட்டத் தொடங்கினாள். நீங்க தான் சிலிண்டருக்கு பணம் வைக்கவில்லை. எப்போதும் இப்படித்தான். சிலிண்டர்காரர் பாவம் அதிக நேரம் நின்று கொண்டு இருந்தார். வித்யாவிடம் வாங்கலாம் என்றால் அவள் காலையிலேயே மகனுக்கு உடம்பு சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்று விட்டாள். நல்லவேளை என் தம்பி சுரேஷ் வந்தான். ஏதோ இங்கு ஸ்கூல் வேலையாக வந்தான். அவனிடம் வாங்கி கொடுத்தேன் என்றாள். நான் சொல்வதை நீங்கள் வேண்டும் என்றே கேட்காதது போல் உள்ளது என்றாள். இப்போது எங்கு எதையெல்லாம் நான் கேட்கவில்லை, நான் மறந்து போனது ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது அவள் சொல்வது சரிதான். ஆனாலும் நம்மை குறை கூறினால் மனம் ஏற்று கொள்வது இல்லை. எல்லா கசப்புகளையும் ரத்னா மீது வீசிவிட்டேன். அவள் சாதாரணமாக பேசியதை கேட்டதை நான் நிதானமாக கேட்டு இருக்கலாம். சில சொற்கள் பல மாதமாக தங்கிக் கொண்டு திடீரென்று வெளிப்பட்டு நம்மையே எரித்து விடுகிறது. ரத்னா மீண்டும் அமைதியாகி விட்டாள். அப்பா கலர் பென்சில் வாங்கி விட்டு வாங்க என்று சரண்யா கேட்டாள். கோபத்தில் மீண்டும் குழந்தையையும் திட்டினேன். குழந்தைகள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் ஏன் அவளை திட்டினேன்,
என் கட்டுப்பாட்டில் நான் இல்லை, இது போல் கோபம் எப்போதும் படிகளில் ஏறி செல்வது போல் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வதில்லை. முதல் படியிலேயே தவிர்த்து விட்டு இயல்புக்கு வந்து விடுவேன். இன்று ஏன் என்று தெரியவில்லை ஏதோ நோய் வந்தது போன்றும் அடுத்த அடுத்த நிலைகளுக்கு திருவிழா ராட்டினம் போல் மேல் எழுந்து கொண்டு செல்கிறது. இன்று ரத்னாவிற்கு பிறந்தநாள். அதுவும் எப்படி மறந்து போனாள். எது நமக்கு மறதியை தந்தது. எது கோபத்தை தருகிறது என்று எண்ணிக் கொண்டே இருந்தேன். போன வருட பிறந்த நாளுக்கு முதல் நாளே எல்லா ஏற்பாடுகளும் செய்தேன். ஒன்றும் பெரிதாக இல்லையென்றாலும் நிறைவாக தான் இருந்தது. புடவையிலிருந்து பூவிலிருந்து இனிப்புகளும் எல்லாம் சிறப்பாக இருந்தது. அன்று ஏதோ விடுமுறை கூட, எதற்கு என்று தெரியவில்லை. ஒரு நாள் முழுவதும் கொண்டாட்டமாக இருந்தது. இந்த வருடம் அதற்கு நேர் எதிராக உள்ளது. நான் நினைத்து பார்த்தது போல் ரத்னா நினைத்திருப்பாளா. கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் எதுவும் இல்லை. நாம் தான் காரணம். சில நேரங்களில் எல்லாம் நம் உள்ளங்கையில் தான் உள்ளது ரேகையில் இல்லை. கைவிட்டு போக வில்லை. எந்த நொடியிலும் சரி செய்து கொள்ளலாம். நாம் தான் அலட்சியம் காட்டுகிறோம்.
ரத்னாவாக எதுவும் கேட்ட மாட்டாள். கேட்டு எனக்கு தர்ம சங்கடத்தை கொடுக்க மாட்டாள். ஆனால் நாமாக ஏதாவது செய்தால் ஏற்றுக் கொள்வாள். முக்கியமாக அதிக ஆடம்பரமாக இருந்தால் வேண்டாம் என்பாள். இந்த நாளை சரி செய்ய முடியாமல் தவற விட்டு விட்டேன்.
மனநிலையை மாற்ற எனக்கு தெரிந்த ஒரே செயல் அந்த இடத்தை விட்டு செல்வது. நான் காய்கறி மார்க்கட் நோக்கி சென்றேன். வழக்கமாக தெரிந்த வியாபாரிகள். நலம் விசாரிப்பு. பார்த்து ஒரு வாரம் ஆகிறது. எல்லா காய்கறிகளும் ஒவ்வொன்றாக ஒவ்வொருவரிடமும் வாங்குவேன். இங்க தான் காய்கறி மட்டுமல்ல பல பொருட்கள் கிடைக்கும். பழம், பூ, இரும்பு பொருட்கள், ஊறுகாய் வகைகள், வித விதமான பிஸ்கட்கள். அதிலும் மஞ்சள் நிறத்தில் வரி வரியாக கோடுகள் உள்ள பிஸ்கட் அருமை. வித விதமான குழாய் புட்டு வகைகள், ஒரு மூலையில் வாசமில்லா கருவாடு, பச்சைக் காய்கறிகள் புல்வெளி போல் காட்சி தந்தது. எப்போதும் ஒரே அளவு தொகையில் தான் காய்கறி வாங்குவேன். இறுதியாக கருவேப்பில்லை வாங்கினேன்.
அதன் மணம் என்றும் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய தாத்தா வீட்டின் முற்றத்திலேயே இருக்கும். அதனை கடக்கும் போது எல்லாம் அதன் மணம் வீசிக் கொண்டே இருக்கும். ஒரு முறை கம்பளிபூச்சி அந்த மரத்தை ஒட்டியுள்ள முருங்கை மரத்தில் உள்ள ஒரு பகுதி முழுவதுமாக பரவி விட்டது. அதனால் தீ பந்தத்தை வைத்து பச்சை மரத்தை ஒரு புறம் எரித்தார்கள். அந்த தீ கருவேப்பில்லை மரத்திலும் பட்டு விட்டது. நல்ல வேளை ஒரு பகுதி மட்டும் மணம் வீசிக் கொண்டு இருந்தது. அந்த வயதில் எல்லாம் அதை தடுக்க முடியவில்லை. கருவேப்பில்லை மணத்தை நுகரும் போது எல்லாம் தாத்தாவும் தாத்தா வீட்டு மரமும் தான் ஞாபகம் வரும். இப்போது புதிதாக வீடு கட்ட அதை வெட்டி விட்டார்கள். அந்த வீடும் மரமும் என்னுடைய ஞாபகங்களில் மட்டுமே தங்கிவிட்டது. மனம் கொஞ்சம் அமைதியானது. வீட்டிற்கு சென்றால் நான் இயல்பாக இருப்பேனா தெரியவில்லை.
சரவணன் அழைத்தான் ஏதோ அவர்களின் அலுவலகத்திற்கு விருந்தினர்கள் வர உள்ளார்கள். அவர்களுக்கு நினைவு பரிசு கொடுக்க வேண்டும். அதற்காக புத்தகம் வாங்க வேண்டும் என்றான்.
நான் சந்தையில் தான் இருக்கிறேள். நீ நேராக புத்தக கடைக்கு வந்து விடு என்றேன். நான் செல்லும் போது எனக்காக காத்து கொண்டு இருந்தான். புத்தக கடைகாரர் சில பரிந்துரைகள் கொடுத்தார். நானும் படித்த சில புத்தகங்களின் பெயர்களை கூறினேன். சரவணனும் கொஞ்சம் புத்தகம் படிப்பவன் தான். எங்கள் பரிந்துரைகளை தவிர்த்து விட்டு புதிதாக வந்த சமீபத்தில் விருதுகள் வாங்கிய புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினான். எல்லா புத்தகங்களையும் கிப்ட் ரேப்பர் மடிக்கும் நேரத்தில் நான் ஏற்கனவே வாங்கி படிக்காமல் இருந்த தலைப்பில்லாதவை – யுவன் சந்திரசேகர் எழுதிய புத்தகம் கண்ணில் பட்டது. பறவைகள் சிறகுகள் விரித்து பறப்பது போல் கொஞ்சம் புரட்டி நடுவில் ஒரு கதையை வாசித்தேன். இரண்டு பக்கங்கள் தான்.
கங்கையில் நடக்கும். நான்கு பேர் படகில் செல்வார்கள். ஒருவன் தன் மனைவியை மாட்டை அடிப்பது போல் அடிப்பான். எதிர்பாராத விதமாக அவள் அவனை ஆற்றில் தள்ளி விட்டு விடுவாள். இப்போது மூன்று பேர் தான். படகோட்டி எதுவும் சொல்ல மாட்டான். அவள் படகோட்டியின் காலை தொட்டு வணங்கி விட்டு செல்வாள். பெரிய அமைதி நிலவியது. அந்த புத்தகத்தை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சரவணன் எனக்கும் ஒரு புத்தகம் வாங்கி கொடுத்தான்.