கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2025
பார்வையிட்டோர்: 12,390 
 
 

“என்னடா…வெளியே புறப்பட்டு போன கையோடு திரும்பிட்டே? எதையாவது மறந்துட்டியா?”

ஈசி சேரில் சாய்ந்தவாறு கேள்வி கேட்ட அம்மாவை குறுகறுவென்று பார்த்தான் ரகு.
பார்வையில் அதீத அலட்சியத் தோரணை காணப்பட்டது.  கூடவே நமுட்டுச் சிரிப்பு வேறு!

பதில் சொல்லாமல் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் ஒரு மிடறு விழுங்கிவிட்டு மீண்டும் புறப்பட்டுச் செல்ல நிமிர்ந்து உட்கார்ந்தாள் அம்மா.

ரகு சகுனம் பார்த்திருப்பதுதான் காரணம்!

ரகுவிற்கு சகுனம் பார்க்கின்ற அந்த நாட்களில் அம்மா பரபரப்புடன் செயல்படுவாள். ஆனால் இதில் ரகுவிற்கு உடன்பாடு  கிடையாது.  மாறாக விளக்கெண்ணெய்
குடித்தது போல் முகச் சுளிப்போடு காணப்படுவான். முணுமுணுப்பான்; ஏன் சில சமயங்களில் தர்க்கம் கூட செய்திருக்கான்.

இதற்கெல்லாம் அம்மா அசரமாட்டாள். பிள்ளையாண்டான் போகிற காரியம் உருப்படியாக நடக்கவேண்டுமே என்கிற ஒரே குறிக்கோளோடு, புன்முறுவலுடன் அனைத்தையும் பொறுத்துக் கொள்வாள்.

ஒரு தடவை ரகு எம்.பி.ஏ பாஸ் செய்த கையோடு எல்.ஐ.சி.யில் செக்ஷ்ன் ஆபிஸர்
போஸ்டுக்கு இன்டர்வியூ கார்டு வந்திருந்தது. அவன் புறப்படும் சமயம் தெருவையே
அடைத்துக்கொண்டு பாட்டிகள் ஊர்வலம்  ஒன்று வர பற்றிக்கொண்டு வந்தது அம்மாவுக்கு!

‘நேரம் காலம் தெரியாம வந்து இப்படி கழுத்தறுக்கிறதுகள். இதுகள் ஊர்வலம் நடத்தல்லேன்னு யார் அழுதா?’

மனதுக்குள் வெதும்பினாள்.

அந்த ஊர்வலம் தங்கள் வீட்டை தாண்டி  ஐம்பதடி தூரம் கடந்த பின்புதான் அம்மாவுக்கு மூச்சே வந்தது .

அதன்பிறகு உள்ளே நுழைந்து ஒரு டம்ளர் நீர் கொண்டு வந்து ரகுவிடம் கொடுத்து குடிக்கச் சொன்னாள் . சகுனப் பரிகாரமாம்! பிறகுதான் அவன் புறப்படவே அனுமதி கிடைத்தது.

ஆனால் அரைமணி அவகாசத்துக்குள் திரும்பிவிட்டான் ரகு.

“நல்லா சகுனம் பார்த்தேம்மா…நேரம் கடந்து போனதால் என்னால் இன்டர்வியூவுல கலந்துக்க முடியல்ல..” ரொம்பவும்  விசனப்பட்டான்.

“போடா…எதையும் மனப்பூர்வமா செய்யணும். அப்போதுதான் பலன் கிடைக்கும். நீ
அரைமனதோட சகுனம் பார்த்தே. இன்டர்வியூ கை நழுவிப் போயிடிச்சு.” வெடுக்கென்று அம்மா சொல்ல வாயடைத்துப் போனான் ரகு.

‘பயல் எப்படியெல்லாம் அலைக்கழிச்சான்! அப்படிப்பட்டவன் இன்னிக்கு தானாக
சகுனம் பார்த்திருக்கான் என் துணையில்லாமல்! என்ன ஆச்சு இவனுக்கு?’

நினைத்து நினைத்து மாய்ந்து போனாள்  அம்மா.


“வீட்டுக்குள் ஆள் நுழையறது கூட தெரியாம அப்படியென்ன பலமான சிந்தனை?”

குரல் கேட்டு சிந்தனை கலைந்த அம்மா, கோகிலாவைப் பார்த்ததும் வாயெல்லாம்
பல்லானாள்.

மூத்தவள் கோகிலா வெளியூரில் வசிப்பவள். அடிக்கடி வந்து அம்மாவையும், தம்பி
ரகுவையும் பார்த்து நலம் நலம் விசாரிப்பது வழக்கம்! அதன்படிதான் இன்றும் வந்திருந்தாள்.

“வா கோகிலா, நல்லா இருக்கியா?.ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”.கோகிலா
கொடுத்த பழப்பையை வாங்கியவாறு அன்பொழுக விசாரித்தாள் அம்மா.

“ம்..ம்..எல்லாரும் நல்லா இருக்காங்க . நீ எப்படிம்மா இருக்கே.?.ரகுவக்கூட வழியில
பார்த்தேன்…”

“பேசினியா?”

“இல்லேம்மா.  அவன்தான் காலுல சுடு தண்ணி கொட்டினமாதிரி பறக்குறானே..
நின்னு பேச நேரம் ஏது அவனுக்கு?.

அது சரி. தள்ளுவண்டியில பழம் வாங்குறப்போ கவனிச்சேன். வீதியில இறங்கின
ரகு திரும்ப வீட்டுக்குள்ள நுழைந்தது தெரிஞ்சுது..ஒருவேளை என்னை பார்த்துட்டு நான்
வர்றத உன்கிட்ட சொல்ல வந்தானாம்மா?”

பொட்டில் அறைந்தாற்போல் வந்தது கேள்வி. நிலைகுலைந்து போனாள் அம்மா.
அப்பொழுதுதான் ஒரு உண்மையும் உறைத்தது.

பொதுவாக ரகு வெளியே போய் வருகிறேன் என சொன்னான் என்றால் ஒண்ணு
அது லைப்ரரியாக இருக்கும்.  அல்லது ஏதாவதொரு நண்பனுடைய வீடாக இருக்கும்.
இன்று அப்படித்தான் சொல்லியிருந்தான். சாதாரண விஷயம் தான். சகுனம் பார்க்க
வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இதுவரை பார்த்ததும் கிடையாது.

அப்படியென்றால்…

ரகு தேவையில்லாமல் சகுனம் பார்த்த விஷயம் ஏதோ ஒன்றை தெளிவாக கோடிட்டுக் காட்டிவிட அம்மா வியர்த்துப் போனாள்.

மகளின் பொட்டில்லாத முகத்தை பார்க்க திராணி இல்லை. ஆனால் வேறு வழி
இல்லை..வலுவில் வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு, “ஆமாம் கோகி…கரெக்டாச் சொல்லிட்டே…” பொய் சொல்லி சமாளித்த அம்மா மனதில், முதல் முறையாக
சகுனம் மீது தீராது வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *