கொள்ளுத் தாத்தா




கதை கேட்க: https://www.youtube.com/watch?v=bSDLT_ORioU
அப்பா இனி பிழைக்க மாட்டார் என டாக்டர்கள் கையை விரித்து விட்டனர்.
அவரை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு தனியறையில் படுக்க வைத்தோம். உறவினர்களுக்கு உடனே தெரிவிக்கப் பட்டது.
எல்லோரும் வந்து அப்பாவின் இறப்பிற்காக காத்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. காத்திருந்து பிறகு ஒவ்வொருவராக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டார்கள்.
இது நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு. அப்போதே அப்பாவுக்கு எழுபத்தியேழு வயது. பிழைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தற்போது வீட்டிற்குள்ளேயே நன்றாக நடமாடுகிறார். தனக்குண்டான கடமைகளை தானே செய்து கொள்கிறார். டிவி பார்க்கிறார்; பேப்பர் படிக்கிறார்.
அப்பா ஒரு பிரபல மல்டி நேஷனல் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றவர். வயதாகி விட்டாலும் இன்றுவரை தினமும் மாலையில் தவறாது இரண்டு பெக் விஸ்கி குடிப்பார். ராசனையுடன் சப்புக்கொட்டி நிதானமாகக் குடிப்பார். ஆனால் அலம்பல் எதுவும் பண்ண மாட்டார். அப்போதெல்லாம் அவருடைய உரையாடல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதை ஒருத்தர் பொறுமையாக கேட்க வேண்டும் என விரும்புவார். பெரும்பாலும் அது அவரது ஒரே மகனான நானகத்தான் இருப்பேன். ஷேக்ஸ்பியரையும், ஓதெல்லோவையும் எத்தனை இளசுகளுக்குத் தெரியும்? ரன்னன் மார்ட்டின் இப்பல்லாம் எவன் படிக்கிறான்?” என்பார்.
“எனக்கு ஆயுசு கெட்டிடா. நான் பாளையங்கோட்டையில் படிக்கும்போது அப்போது டாக்டர் சுந்தர்ராஜன் என்பவர் இருந்தார். தலைவலியில் இருந்து கால்வலி வரை அவர்தான் எல்லாத்துக்குமே! ஆனா இந்தக் காலத்துல கட்டை விரலுக்கு ஒரு டாக்டர்; மோதிர விரலுக்கு ஒரு டாக்டர்; சுண்டு விரலுக்கு ஒரு டாக்டர் என அலம்பல் பண்ணுகிறார்கள். கேட்டால் ஸ்பெஷலிஸ்ட்களாம்…
“இந்தக் கால டாக்டர்கள் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து அதைத்தான் டிரீட் செய்கிறார்கள். மனிதர்களை அல்ல. ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் முறையும் வேறு வேறு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்..” என்று நீண்ட வியாக்கியானம் செய்வார்.
அவர் இறந்த பிறகு அவரைப் புதைக்க வேண்டுமாம்.. அப்போது அவரது தலைமாட்டில் ஒரு ஸகாட்ச் பாட்டில், காலமாட்டில் ஒரு ஸகாட்ச் பாட்டில் விஸ்கி வைத்து விட வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.
எங்கள் குல வழக்கப்படி இதுவரை நாங்கள் உடலை எரித்துதான் பழக்கம். ‘அதுசரி அப்பா செத்தப்புறம் முடிவுகள் எடுப்பது நாந்தானே, அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என நினைத்துக் கொள்வேன்.
நான் அடுத்த வருடம் ஏஜி ஆபீசிலிருந்து ஓய்வு பெறுகிறேன். என் ஒரே மகன் மூர்த்தி ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். மூல நட்சத்திரம் என்பதால் அவனது திருமணம் சற்றுத் தள்ளி போகிறது. அவனுக்கு தற்போது தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருக்கிறோம்.
என் அப்பாவுக்கு தன் ஒரே பேரானான மூர்த்திக்கு சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணி தான் கொள்ளுத் தாத்தாவாகி விடவேண்டும் என்கிற அவசரமும் ஆசையும் அதிகம். அதை அடிக்கடி சொல்லிக் காண்பிப்பார்.
“எனக்கு ஒரு கொள்ளுப் பேரன் பிறந்து என்னுடைய கோத்திரம் வளர வேண்டும். என் வம்சம் ஆல மரமாக விருத்தியாக வேண்டும். நான் இறப்பதற்கு முன் என் கொள்ளுப் பேரன் என்னை கொள்ளுத் தாத்தா என்று ஒரு முறையாவது கூப்பிட வேண்டும்.. சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் பண்ணு..” என்று என்னை விரட்டிக் கொண்டே இருப்பார்.
நான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன்? அவனுக்கு இன்னமும் நேரம் வரவில்லை.. அவ்வளவுதான்.
சில சமயங்களில் அப்பா மீது எனக்கு எரிச்சல் வரும். ‘சீக்கிரம் மனிதர் இயல்பாக இயற்கை எய்தினால் நல்லது என்றுகூட நினைத்துக் கொள்வேன்.
அன்று புதன் கிழமை. அப்பா மிகவும் சுறுசுறுப்புடன் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டார். உடனே என்னைக் கூப்பிட்டு, “வாத்தியாருக்கு போன் பண்ணி உடனே வரச்சொல்.. நல்ல நாள் பார்க்கணும்..” என்றார்.
“நல்ல நாளா எதுக்குப்பா ?”
“நானும் அம்மாவும் சதாபிஷேகம் பணணிக்கணும்..”
நான் விக்கித்து நின்றேன்.