கொலைக்கு சாட்சி!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 2,443
லூர்து மாதாவைத் தரிசிக்க பாரிசில் நாங்கள் ஏறிய ரயில், பிரான்சின் தென் மேற்கிலுள்ள லூர்து மாதாவின் தேவாலயம் அமைந்த லூர்து என்ற சிறிய நகரை நோக்கி வேகமாக சென்றது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு மேலான பயணம் அது. மாலை நான்கு மணியளவில் ஏறிய ரயில் லூர்து நகரத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. விரைவு ரயில் என்பதால் பெரிய நகரங்களில் மட்டுமே நிற்கும். மாலை நேரத்து சூரிய வெளிச்சம் கண்ணுக்கு இதமாக இருந்தது. ரயில் கண்ணாடி வழியே வெளியே எட்டிப் பார்த்தபோது பச்சைக் கம்பளத்தின் மேல் சிறுவனது பொம்மை ரெயில் ஓடுவதுபோல் கண்ணுக்குத் தெரிந்தது.
பிரான்சின் அந்த நிலப்பகுதி குன்றுகளற்ற, பச்சை நிறமான சமவெளியாக கண்ணுக்கெட்டியவரையும் தெரிந்தது. அதிகாலையில் கோலம் போட்டதுபோல் இடையிடையே மஞ்சள் பூத்த கனோலா வயல்கள் வந்து வண்ணம் தெளித்தன. மாலை வானம் ஆகாயத்தில் ஹோலி பண்டிகை அரங்கேற்றியது.
மாலை மயங்குவதற்கு முன்பாக உணவுகள் விற்கும் புஃபே பகுதிக்குச் சென்று சான்விட்சை வாங்கிக் கொண்டு வந்து மனைவி சியாமளாவுடன் உணவுண்டேன். உணவருந்திய களைப்புடன் ஏற்கனவே செய்த விமானப் பயணத்தின் உடல் சேர்வு என்றபடி சியாமளா ஜன்னலோரம் கண் மூடியபடி தூங்குவதற்குத் தயாராக இருந்தபோது, நான் எனது மடிக் கணணியை எடுத்து, ஏற்கனவே பயணத்தில் எடுத்த படங்களை பார்க்கத் தொடங்கினேன். அதன்பின் பயணத்தில் உள்ள விடயங்கள் பற்றிய சில குறிப்புகளை எழுதத் தொடங்கினேன்.
பாரிசில் எங்களுடன் ரயில் ஏறிய பலர், உலகத்தின் சிறந்த வைனுக்கான திராட்சைகள் விளையுமிடமான, போரடெக்ஸ்ல்(Bordeaux) இல் இறங்கிவிட்டார்கள். பச்சைக் கம்பளமாக வெளியே விரிந்து கிடந்த நிலப்பகுதிகளைப் இப்பொழுது இருள் தனது பெரிய வயிற்றிற்கு இரையாக்கிக் கொண்டது.
மூலை இருக்கையில் மனைவி சியாமளா இருந்ததால் கொஞ்சம் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக எனக்கும் ஒரு மூலை இருக்கையைத்தேடி, ரயில் பெட்டியின் முன்னே இருந்த இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டேன்.
அமரும்போது என் முன்பான இருக்கைகளில் இருந்த வயதான பிரன்சிய தம்பதியினருக்கு நாகரீகத்திற்காக ‘ஹலோ’ எனச் சொல்லிவிட்டு எனது கண்ணை மூடினேன். கண்களை மூடியவுடன் எண்ணங்கள் அந்த விரைவு ரயிலைவிட வேகமாக பயணம் செய்தது.
இந்தப் பயணம் காசி ராமேஸ்வரம் மற்றும் கதிர்காமம் போல் ஒரு தலயாத்திரை. ஆனால் கத்தோலிக்க தேவாலயத்கானது. நமது இலங்கையில் மடு மாதாவிடமும், இந்தியாவில் அன்னை வேளாங்கண்ணியிடமும் மனைவிக்காக தல யாத்திரை செய்துள்ளேன். இம்முறை சியாமளா பல வேண்டுதல்களுடனும், விண்ணப்பங்களுடனும் லூர்து மாதா கோவிலுக்கு வருவதாக வேண்டிக்கொண்டதன் பயனாகவே இந்த பயணம் மேற்கொண்டுள்ளோம். எனக்கு இறை நம்பிக்கை அதிகமில்லை. அத்துடன் ஏற்கனவே பத்து வருடங்கள் முன்பாக இங்கெல்லாம் போயிருந்ததால் பெரிதான ஆவலில்லை. ஆனாலும் கட்டிய மனைவிக்கான விட்டுக் கொடுப்புகள் வாழ்க்கையில் எப்போது செய்யவேண்டும் என்பதை இந்த அரைநூற்றாண்டு இல்லறம் உணர்த்தியுள்ளது. மேலும் பிரயாணங்கள் எனக்குச் சலிப்பூட்டுவதில்லை. பிரயாணங்களில் வித்தியாசமான மனிதர்களையும் அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க முடிவது எழுத்தாளனான எனக்கு பலவிதத்தில் உதவுகிறது.
மனிதர்களில் வெளிப்பார்வைக்குக் கண்ணில் தெரியும் புறத்தோற்றங்களை நாம் வித்தியாசங்களாகப் பார்க்கிறோம்; பேசுகிறோம்; அதை வைத்து அரசியல் செய்கிறோம். ஆனால் மனிதர்களது அகவெளிகள் அதினிலும் பல மடங்கு வித்தியாசமானது- ஆழமானவை – கணத்துக்குக் கணம் மாறும் தன்மையுள்ளவை. உதாரணமாக ஒருவரை மார்க்சியவாதி, இனவாதி அல்லது மத அடிப்படைவாதி என நிரந்தரமாக முத்திரை குத்திவிடுவோம். ஆனால் அவர் ஆச்சரியமாகத் தன்னை ஒவ்வொரு விடயத்திலும் மாற்றிக் கொண்டிருப்பார். இதைவிடச் செயல்களில் ஒருவர் உலோபி அல்லது வள்ளல் என நிரந்தரமான பெயர் கொண்டவர் அவர் சில நேரங்களில் அவரது செய்கையில் முற்றாக மாறுபட்டுத் தெரிவார். ஆற்றில் ஓடும் நீர் போல் மன எண்ணங்கள் எதுவும் நிரந்தரமானது அல்ல. மனிதர்களது எண்ணங்கள் இடம், காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பது நம்மில் பலர் உணர்வதில்லையே!
இந்த விடயத்தை மனத்தில் வைத்தபடி நாம் ஒருவரை அவதானித்தால் எமக்கு அவரது செய்கையே முக்கியமானது. அந்த செய்கையின் விளைவே நமக்குத் தெரிவது. அதனாலே அரசுகள் குற்றங்களை மட்டும் பார்க்கிறது. அதற்காகத் தண்டிக்கிறது. குற்றங்கள் செய்ய நினைப்பதைத் தண்டிக்க முடியாது. ஆனால் மதத்தில் மட்டுமே கெட்டதை நினைப்பதும் குற்றமெனச் சொல்லப்படுகிறது அதனாலே மதம் நல்லது எனப் பலர் நினைத்த போதும் யார் தவறான விடயங்களை நினைக்காது விடுகிறார்களா என்ன? எந்த மதத்தவன் குற்றங்கள் செய்யாது இருக்கிறான்? அதனால் தற்போதைய உலக வாழ்வில் மதம் எந்த பிரயோசனம் அற்றது மட்டுமல்ல, மனிதர்களுக்கு சுமையாகிவிடுகிறது. ஒவ்வொரு மதமும் தன்னளவில் குற்றங்களைக் சுமக்கும் பாவ மூட்டை போன்றது . இந்து மதம் தன்னுடன் சாதியை வைத்து சகமனிதனைக் கீழே வைத்து புவியில் பல்லாயிரக்கணக்கான வருடகால பரிணாமத்தில் உருவாகிய உன்னதமான மானிடத்தை இழிவு படுத்துகிறது. அதேபோல் சகோதரத்துவம் பேசும் இஸ்லாம் மதம் ஆதியிலிருந்தே ஆபிரிக்க அடிமைகளை வைத்திருந்தது. கொடுமைகளை எதிர்த்து உயிர்விட்ட தேவமகனின் பெயரில் உருவாக கிறீஸ்துவ மதம் மத்திய காலத்தில் செய்த கொடுமைகள் அளவற்றது. புத்தமதம், சிந்தனையில் பக்குவம் பெறாத குழந்தைகளை, அதுவும் ஏழைக் குழந்தைகளை மதத்தின் பெயரால் தொடர்ந்து மூளைச் சலவை செய்கிறது: இந்த காலத்திலும், இதையிட்டு எவரும் பேசுவதில்லையே?
இப்படியான எனது சிந்தனையோட்டம், புல்லைக் கண்ட இடத்தில் கடித்தபடி அலையும் கடிவாளம் அற்ற குதிரையாக சமவெளியில் ஓடியது.
எவ்வளவு நேரம்தான் கண்ணை மூடியபடி இருப்பது? இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. இன்னமும் ஒரு மணி நேரத்தில் எமது இடம் வந்துவிடும். பயணத்தால் தூக்கத்துக்கான கால நேரங்கள் மாறிவிட்டது.
கண்ணெதிரே இருந்த அந்த தம்பதிகளைப் பார்த்தேன். என்னெதிரே இருந்த பெண் அறுவது வயதானவர். ஒரு காலத்தில் காண்போரை வசிகரிக்கும் கவர்ச்சியாக இருந்த தொல்லியல் சான்றுகளுடன், சிவப்பு மேற்சட்டையும் கருப்பு பாண்டும் மிகவும் மெல்லிய சிவப்பு உதட்டுச் சாயமும் பூசியவர். குட்டையாக வெட்டப்பட்ட நரைத்த தலைமயிர். அவரது கழுத்திலிருந்து நாடிக்கு வரும் நேரான கோடுபோல் தெரிந்த தோல் மடிப்புகள் தெரிந்த போதிலும், முகத்தில் ஒரு கம்பீரமான சாயல் தெரிந்தது. நீலமான இரு கண்களும் வாகனத்தின் ஹைய் பீம் லைட்டாக ஒளிர்ந்தன.
நான் தன்னைக் கூர்ந்து பார்ப்பதை உணர்ந்ததும் பெண்ணின் மெதுவான புன்முறுவல் முகத்தில் பூத்தது. பதிலுக்குச் சிரித்துவிட்டு அவரது அருகே இருந்த ஆணைப் பார்த்தேன். வெள்ளை சேட்டு, வெள்ளைப் பாண்ட், நரைத்த தலையுடன் மூக்குக் கண்ணாடி அணிந்தபடி ஆனால் கண்களை மூடியபடி மனைவியின் தோளில் குழந்தைபோல் சாய்ந்தபடி உலகத்தை மறந்து அமர்ந்திருந்தர். அவரது இரு கைகள் மனைவியின் கைகளின் உள்ளே அன்னியோன்னியமாகப் புதைக்கப்பட்டிருந்தது. மனைவியிலும் அவருக்கு பத்து வயது கூட்டி எழுபது வயது என கணக்குப் போடமுடியும். முதிர்ந்த தோற்றமாக தோன்றினாலும் உடல் பருமனற்று திடகாத்திரமாக தெரிந்தது. இளம் வயதில் ஏதாவது விளையாட்டு வீரராக இருக்கலாம் என்பதற்குச் சாட்சியாக விரிந்த தோள்களும், இறுகிய தசைகளில் புடைத்த இரத்த நாளங்கள் முன்கைகளில் இருந்தன.
அந்த பெண்ணின் அமைதி தவழும் முகத்தை கூர்ந்து பார்த்தபோது அவளது நெற்றியில் மற்றும் இடது கண்ணருகே இரண்டு கருப்பான இடங்கள் கரும் திராச்சை கனியாயத் தெரிந்தன. அவை பழைய காயங்கள் என எனது மருத்துவ மூளைக்குப் புரிந்தது.
அவை எப்படி ஏற்பட்டிருக்கும்? இந்த வயதில் குடும்ப வன்முறை சாத்தியமா?
கணவனால் ஏற்பட்டவையா? விழுந்து ஏற்பட்ட காயங்களாக இருக்கலாமோ என்ற ஆராய்வில் எனது மனம் அலை மோதியது . கணவன் எழுபது வயதானவர். அவரது வயது, உடலின் தோற்றம், , மனைவியின் தோளில் அன்னியோன்னியமாக சாய்த்திருந்த விதம் அவரை வன்முறையாளராகக் காட்டவில்லை. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து முதுமையடைந்த இலட்சியத் தம்பதிகளாகக் காட்டியது.
எப்படி காயம் பட்டிருந்தாலும் அந்தப் பெண்மீது ஒரு அனுதாபம் அல்லது ஈர்ப்புடன் அவளைப்ப் பார்த்துச் சிரித்தேன். அவளும் சிரித்தாள்.
பிரான்சில் ஒரு ஒரு சில இளைய சந்ததியினரைத் தவிர மற்றவர்களுக்கு ஆங்கிலம் புரியாது. வழி கூடபேசி அறிந்து கொள்ள முடியாத நிலை. எப்படி இந்தப் பெண்ணிடம் பேசமுடியும்?
ஏதாவது ஒரு பிரெஞ்சு வார்த்தையைப் பேசிவிட்டு அதன்பின் ஆங்கிலம் பேசினால் பேசுவார்கள் என நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது.
அந்த பெண்ணிடம் ‘பொன்ஜோர்’ என்றேன்.
அவளும் அதை எதிரொலித்தார்.
‘இதற்கு மேல் பிரெஞ்சு மொழி தெரியாது. ஆங்கிலம் மட்டுமே தெரியும் நான் ஸ்ரீலங்காவில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கிறேன்.’ என்றேன்.
‘நான் பாரிசில் வசிக்கும் இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், என் பெயர் வெரோனிக்கா ‘ என்றார் அழகிய சிரிப்புடன்.
அதன் பின்பு எங்கள் உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது. ஆனால் அவரின் கணவரிடம் மெதுவான அசைவுகளைத் தவிர வேறு எந்தவிதமான உயிர்ப்பும் தெரியவில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது.
‘எனது கணவருக்கு டயபட்டீஸ் நோய் உள்ளது’ என்றார்.
‘எனக்கும் உள்ளது’ என ஆற்றுதலாக சொல்ல முயன்றேன்.
சிரித்தபடி ‘அது மட்டுமென்றால் பிரச்சனையில்லை. என்னால் சமாளிக்கமுடியும்’
அப்பொழுது எனது முந்திரிக்கொட்டைத்தனத்தை நொந்துகொண்டேன்.
சிறிது நேரம் மௌன இடைவெளியின் பின்பாக தொடர்ந்தார்….
‘அவரது வலிப்பு நோய் சமீபத்தில்தான் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில், மூளையில் கட்டி ஒன்று இருப்பதாகவும் ஆனால் அதை வெட்டி சேர்ஜரியால் எடுக்க முடியாத இடத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள். வலிப்பு வருமுன்பு கோபத்துடன் எதையாவது தூக்கி எறிவதும், நான் தடுக்க நினைக்கும்போது என்னைத் தள்ளுவதும் நடக்கும். அந்த வலிப்பு அரைமணிநேரமாவது நீடிக்கும். அதன் பின் அமைதியாக பல மணிநேரம் தூங்குவார். ஆரம்பத்தில் இடையிடையே வந்த வலிப்பு இப்பொழுது பெரும்பாலும் தினசரி வருகிறது. அவரை வீட்டில் வைத்து என்னால் பராமரிக்க முடியாது என்ற நிலை வந்ததால் ஒரு பாதுகாப்பான நிலையத்தில் விடவிருக்கிறேன். நானே நித்திரை மருந்துகளால் அவரை அமைதியாக வைத்திருக்கிறேன். அங்கு சென்றால் அவர்கள் அதையே செய்வார்கள். கட்டிலில் வைத்து ஊசி மூலமாக மயக்கத்தில் வைத்திருப்பார்கள். அந்த வாழ்க்கையை அவர் வாழ்வதை நான் வெறுக்கிறேன்…. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை. எனது இரு பிள்ளைகளும் இது வரை பராமரித்தது போதும் உன்னால் முடியாது எனச் சொல்கிறார்கள். நாங்கள் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள். எனது மனச்சாட்சிக்கு இது மிகவும் துன்பமாக இருக்கிறது. நன்மையிலும் தீமையிலும் இளமையிலும் முதுமையிலும் ஒன்றாக இருப்போம் என்றே லூர்துமேரி தேவாலயத்தில் திருமணம் சபதம் செய்துகொண்டோம். இப்பொழுது அவரது கடைசி காலத்தில் கைகழுவுவதுபோல் நடப்பது எனது மனசாட்சிக்கு செய்யும் குற்றமாக நினைக்கிறேன். ஆனால் வேறுவழி இல்லை என்பதால் அவரை பராமரிக்கும் நிலையம் ஒன்றில் சேர்ப்பதன் முன்பாக லுர்து மாதாவிடம் கொண்டு சென்று அவரிடம் ஒப்புவிக்கப்போகிறேன். எனக்குத் தெரியும் அதனால் எதுவித பிரயோசனமும் இல்லை என… ஆனால் எனது மனசாட்சியைச் பரிசுத்தப்படுத்த இருவரும் அங்கு செல்கிறோம்’.
‘நாங்களும் லூர்து மாதாவிடம் செல்கிறேம்’ என்றேன்
‘அப்படியா?’ என ஆச்சரியட்டுவிட்டு ‘நான் ஆரம்பத்தில் ஒரு கன்னியாஸ்திரீயாகவும் ஆசிரியராகவும் இருந்தேன். பிரான்சின் சிறிய நகரமொன்றிலிருந்து லூர்து மாதா தேவாலயத்திற்கு பாடசாலைப் பிள்ளைகளைக் கூட்டி வந்தேன்.அப்பொழுது இவரும் ஒரு ஆசிரியராகப் பிள்ளைகளுடன் வந்தபோது இருவரும் சந்தித்தோம். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிபின்பு அந்த நட்பு காதலாகியது. திருச்சபையின் அனுமதியுடன் மடத்திலிருந்து விலகி நாங்கள் திருமணம் செய்தோம்.ஒவ்வொரு வருடமும் லூர்து நகரத்திற்கு வருவோம். எங்கள் இரு பிள்ளைகளும் ஞானஸ்தானம் எடுத்தது இங்குதான். எங்களுக்கு லூர்து மேரி முக்கியமான தெய்வமாக நினைக்கிறோம்.
மழைக் காலத்தில் கொட்டும் அருவியாக வெரோனிக்காவின் வார்த்தைகள் என் முன்னால் வந்து தெறித்தன. ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை அறிமுகமற்ற மூன்றாம் மனிதனான என்னிடம் கொட்டித்தீர்ப்பதில் என்ன பயன் என நினைத்தேன். அத்துடன் அறிமுகமற்ற ஒருவரது அந்தரங்கத்தை தோண்டி வெளியில் எடுத்த குற்ற உணர்வும் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும் தனது நெஞ்சின் ஆழத்திலிருந்த நினைவுகளை, நிலத்தில் புதைந்த இரும்புப் பாத்திரத்தின் துருவாக வெளியே எடுப்பது ஒரு விதத்தில் மன ஆறுதலாகவும் சொஸ்தமளிக்கும் சிகிச்சையாகவும் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். என்னிடம் வெரோனிக்கா எந்த தீர்வையே ஆலோசனையையோ கேட்கவில்லை. நான் செய்யக்கூடியது: அந்தப் வெரோனிக்காவின் மனக்குறைகளை செவிமடுப்பதன் மூலம் அவளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கலாம் என மட்டுமே நினைத்தேன்.
பண்டைய அரச நகரமான போ(Pau) நகர் வந்தபோது பலர் இறங்கினார்கள். இதுவே லூர்து நகரத்திற்கு முன்பு உள்ள ரயில் நிலயம். இதன்பின்பு, அரை மணிநேரத்தில் லூர்து நகர் வரும் எனக் கூகுள் மூலம் அறிந்து வைத்திருந்தேன்.
எல்லோரும் இறங்கிய சில நிமிடத்தில் கணவன் தலை, வெரோனிக்காவின் தோளிலிருந்து சிறிது சரிந்ததுடன் அவரின் கழுத்தில் உள்ள தசைகளிலும் மெதுவான அசைவு தெரிந்தது.
நான் அவரைப் பார்த்ததை அவதானித்ததும் வெரோனிக்கா ‘அவருக்கு இன்சுலின் ஊசி போடும் நேரம்’ என அழுத்தமாக கூறினார்.
இன்சுலின் போட்டு சில நிமிட நேரங்களில் குழுக்கோசின் செறிவு இரத்தத்தில் குறையும். அதனால் உடனே உணவு கொடுக்கவேண்டும். இல்லாது போனால் குழுக்கோஸின் செறிவு குறைய, முக்கியமாக மூளை இயங்காது ‘கோமா’ என்ற மயக்க நிலைக்குப் போகும் சாத்தியம் ஏற்படலாம். அதன்பின்பு மற்றைய உறுப்புகள் மெதுவாக இயங்க மறுக்கும் நிலையை அடையும் என்பது எனது மிருக வைத்திய அறிவுக்குத் தெரிந்தவை.
வெரோனிக்கா ஒரு தேமாஸ் பிளாஸ்க் போன்ற குளிர் பெட்டியில் வைத்திருந்த பேனா போன்ற இன்சுலின் ஊசியை எடுத்து, அவரது சட்டையைத் தூக்கி வயிற்றில் ஊசியை ஏற்றிவிட்டு மீண்டும் தனது தோளில் அவரது தலையை அவதானமாகச் சாய்த்து வைத்தாள்.
அவர்களது இந்த செய்கை அந்தரங்கமான விடயம் என்பதால் எனது தலையைத் திருப்பி வெளியே பார்த்தேன். இருள் ரெயிலை போர்த்தியிருந்தது. இடைக்கிடையே வெளிச்சம் மின்மினிப்பூச்சியாக ஒளிந்தது.
சிறிது நேரத்தில் மீண்டும் அந்த தம்பதிகளைப் பார்த்தேன். கணவரிடம் எந்த அசைவுகளும் இல்லை.
நான் கேட்காமலே ‘ஏற்கனவே அவருக்கு மயக்கும் மாத்திரை கொடுத்திருக்கிறேன் இந்த நேரத்தில் எப்படி உணவு கொடுக்க முடியும். இன்னும் மயக்கமோ தெரியவில்லை அல்லது அசதி போலிருக்கு’ என வெரோனிக்கா அங்கலாய்த்தார்.
ரயிலின் ஓசையில் அந்தப் பதில் அரைகுறையாகக் காதில் விழுந்தாலும் எனக்கு அந்தப் பதில் திருப்தியில்லை. மனிதன் கோமாவுக்கு போய்விடலாம் என நினைத்தேன். ஆனாலும் எனது அரை குறையான மருத்துவ அறிவை வெரோனிக்காவிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை.
சில நிமிடத்தின் பின்பாக சும்மா இருக்க முடியவில்லை. மனத்தில் ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்று பட்சி சொல்லியது.
‘அவருக்கு உணவு கொடுக்க வேண்டாமோ? ‘ என்றேன்
‘இன்னமும் சில நிமிடத்தில், லூர்து நகருக்குப் போய்விடுவோம்… அங்கு ஹோட்டலில் பார்த்துக்கொள்ளலாம்’ என்றார்.
எனக்கு அந்தப் பதில் பிடிக்கவில்லை: ‘நான் போய் புஃபேயில் ஏதாவது வாங்கி வரவா?’ மீண்டும் முந்திரிக்கொட்டையாக.
‘தேவையில்லை’ என்ற சொல் செந்நிற வர்ணம் பூசிய உதடுகளால் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டது. கொஞ்சம் கோபத்துடன் யன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
மீண்டும் வெரோனிக்காவிடம் என் பார்வை சென்றபோது அப்போது இதுவரை அந்தப் பெண்ணின் கைகளுக்குள் புகைந்திருந்த அவரது கை தளர்ந்து தொங்கியது!
அந்த கையை தனது கைகளால் பற்றிக்கொண்டு ‘குளிர்ந்து விட்டது’ என்றாள்.
‘எனது மனைவி வைத்தியர்’ என்று கூறிவிட்டு நித்திரையாக இருந்த சியாமளாவை அழைத்து வந்தேன். அவர் கையை தொட்டுவிட்டு ‘நாடி துடிக்கவில்லை’ என்றார்
வெரோனிக்காவிடம் எதுவும் சொல்லாது நான் எழுந்து அடுத்த பெட்டியிலிருந்த ரயில்வே அதிகாரியைக் அவசரமாக அழைக்க, அவர் வந்து கையைத் தொட்டு பார்த்துவிட்ட அங்கிருந்த இதயத் துடிப்பை உருவாக்கும் கருவியைக்( Cardiac defibrillator) கொண்டு வந்தார்.
அவரது பின்பாக மேலும் ஒரு ரயில்வே அதிகாரி வந்தார். அவர்கள் இருவருமாக பிரெஞ்சு மொழியில் பேசியபடி அந்த மனிதரைச் தூக்கி இருக்கைகளின் இடையே உள்ள நடைபாதையில் படுக்க வைத்தனர். அப்போது ரயிலில் பயணிகள் அதிகமில்லை. நாங்களும் அந்த இடத்திலிருந்து விலகி நின்றோம் . அந்த அதிகாரிகள் அந்த மனிதரது வெள்ளை சேட்டை இரண்டாகக் கோழி இறக்கையாகப் பிரித்தார்.
கிழிந்த சேட்டின் உள்ளே அணிந்திருந்த அவரது உள் பெனியனைக் கிழிக்க முயன்றபோது அது இலகுவாய் கிழியவில்லை. ரப்பராக இழுபட்டது. அதை தலையால் கழற்றிய பின் அந்த மனிதர் வெற்று மேலுடன் உரித்த கோழியாகக் கிடந்தார். அவரது பாண்ட் கரையூடாக வெள்ளை உள்ளங்கி தெரிந்தது.
எங்கு போனாலும் உள்ளங்கிகள் சுத்தமாக இருக்கவேண்டும். எந்த இடத்தில் எது நடக்கும் என்பது தெரியாது என எனது அக்கா முறையானவர் சொன்ன புத்திமதி மின்னி மறைந்தது.
அந்த மனிதரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அருகில் நின்ற வெரோனிக்காவை விலகச் சொல்லி விட்டு அந்த இதயதுடிப்பை உருவாக்கும் கருவியால் இரு கைகளையும் நெஞ்சில் வைத்து அழுத்தியபோது அந்த மனிதரது உடல் சிறிது துள்ளி அதிர்ந்தது. ஆனால் அவரது வெள்ளைக் காலணி அணிந்த இரு கால்கள் மேல் எழுந்து ரயில் இருக்கைகளை தொட்டு கீழே விழுந்து அடங்கியது. மற்றைய அதிகாரி நீல ஸ்ரெதஸ்கோப்பை இடது நெஞ்சில் வைத்து பார்த்துவிட்டு இதயதுடிப்பை உருவாக்கும் கருவி வைத்திருந்த அதிகாரியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்.
மீண்டும் இருமுறை இதயத்துடிப்பை உருவாக்கும் கருவியால் நெஞ்சில் அழுத்தியபோது…. பாவம், அந்த மனிதனது உடல் எம்பிக் குதித்தது. மீண்டும் இரண்டு கைகளை வைத்து மார்பின் இடது பக்கத்தை சில முறை அழுத்தினார்.
கருவிக்கே இதயத்துடிப்பு வராதபோது கைகளால் அழுத்துவது வீண் வேலை எனப் எனக்குப் புரிந்ததால் சியாமளாவைப் பார்த்தேன்.
இரு அதிகாரிகளும் வெரோனிக்காவை நோக்கி உதட்டை பிதுக்கினார்கள்.
கண்களின் இமைகளை விரித்துப் பார்த்தார்கள். எந்த அசைவும் தெரியவில்லை.
வெரோனிக்காவைப் பார்த்தபோது அவரது முகம் உயரத்தில் பறக்கும் விமானத்தின் யன்னலுடாக கீழே சமுத்திரத்தைப் பார்ப்பதுபோல் அமைதியாக இருந்தது. கண்களில் எதுவித சலனமும் தெரியவில்லை.
எப்படி இவ்வளவு அமைதியாக வெரோனிக்காவால் இருக்க முடிகிறது எனச் சிந்தித்தபடி நின்றபோது ரயில் பலமான சத்தத்துடன் நின்றது. இருக்கைகளை உடனே பிடித்து விழுவதை எல்லோரும் தவிர்த்தார்கள். கீழே படுத்திருந்த மனிதரது உடல் மட்டும் முன்னால் சிறிது தூரம் ரயில் பெட்டித்தரையில் வழுக்கியபடி சென்றார். யாரோ ஒருவர் சங்கிலியை பிடித்து இழுத்திருக்கவேண்டும்.
ரயில் நின்ற இடம் பிளாட்பாரத்துடன் சிறிய ஸ்டேசனாகத் தெரிந்தது. ஒரு சிறிய நகரம்போல் இருந்தது. அங்கு அம்புலன்ஸ் சந்தம் கேட்டது. அதிகாரிகள் ஆரம்பத்திலே அம்புலன்சை அழைத்திருக்கவேண்டும்.
இப்பொழுது அம்புலன்ஸ், பிளாட்போமில் ரயில் அருகருகே வந்து நின்றது. அதில் இறங்கிய இருவர் ரயிலிலிருந்து கவனமாக தங்களது ஸ்ரெச்சரில் அவரை ஏற்றிய சந்தர்ப்பத்தில் இதுவரை சலனமற்று அமைதியாக நின்ற வெரோனிக்கா ரயிலை விட்டு இறங்குவதற்கு முன்பாக எனதருகே ஓடிவந்து கையை பிடித்து இறுக்கமாக அழுத்திவிட்டு ‘மன்னிக்கவும் அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்றாள்.
நான் வெலவெலத்துப்போனேன். வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.
அப்பொழுது பக்கத்தில் நின்ற சியாமளா என்னைப் பார்த்தார்.
அந்தப் பார்வையை தாங்காது நான் தரையைப் பார்த்தேன்
சிறிது நேரம் கழித்து ‘நீங்கள் ஒரு கொலைக்கு முக்கிய சாட்சி ‘ என்றார்.
‘நல்லவேளை… நாங்கள் மூன்று நாட்கள் மட்டுமே பிரான்சில் இருக்கப்போகிறோம். ஆனாலும் நான் ஒரு கருணை கொலைக்கு உதவினேன்’ என்றேன்.
அப்போது ஏறக்குறைய நடு நிசியாகிவிட்டது.
லூர்து நகரை நோக்கி எங்கள் ரயில் ஒரு உறுமலுடன் புறப்பட்டது.