கொடையாளன் பண்பு
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,483
பண்டைத் தமிழகம். அப்பப்பா! பொறி பறக்கும் பாலை நிலம்; போக முடியாத நீண்ட வழி கடக்க முடியாத பெருங் காடுகள்.
அக்காடுகளின் இடையே, வில்லேர் உழவர் வாழ்கின்றனர். அவர்கள் யாருக்கும் அஞ்சாத மறவர்கள். ஆறலைகள்வர். வழிப்பறி செய்வதே அவர்கள் தொழில். மக்கள் பொருள் தேடும் பொருட்டு, அயல்நாடு செல்வது உண்டு. அவர்கள் அப்பாலை நிலத்தைக் கடந்து செல்ல வேண்டும். பரற்கற்கள் பாதத்தைப் புண்ணாக்கும்; உடலைக் கிழிக்கும் முட்புதர்கள் நிறைந்த இத்தகைய நீண்ட வழிகளைக் கடந்து சென்றுதான் பொருள் தேட வேண்டும்.
வணிகக் கும்பல் ஒன்று அவ்வழியே சென்றது. கோடை கடுமையாக எரித்துக் கொண்டிருந்தது… பாலை நிலம் கொதித்துக் கொண்டிருந்தது….
ஆனால், அவ்வெம் பாலையைக் கடந்து சென்ற வணிகர்கள் பட்ட பாட்டை என்னென்பது. திடீரென்று அக்கும்பலின் மேல், அம்புகள் பாய்ந்தன. அவர்கள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அம்புபட்ட வணிகர்கள் கீழே வீழ்ந்தனர். கதறித் துடிதுடித்து இறந்தனர்.
மறைந்திருந்து அம்பெய்திய மறவர்கள், விற்களுடன் ஓடிவந்தனர். வீழ்ந்தோரிடமிருந்த பொருட்களைக் கவர்ந்தனர், பிணங்களின் மேல் கற்களை அடுக்கி, மறைத்து விட்டுச் சென்றனர்.
ஆனால், “யாரும் பிணங்களைப் பார்க்கக் கூடாது” என்பது அவர்கள் எண்ணம். ஆனால், பிணங்கள் அழுகி நாற்றம் எடுக்கத் தொடங்கினதும், கழுகும் பருந்தும் சூழ்ந்து கொண்டன. ஆயினும், கற்குவியல்களின் மேலே அமர்ந்து குரலெடுத்துக் கூவி வருந்தின.
பாலைநிலக் கொடிய வழிகளின் காட்சியைப் பார்த்தீர்களா? என்ன கொடுமை, எவ்வளவு துன்பம்!
இத்தகைய கொடிய வழிகளைக் கடந்து உயிரோடு வந்தனர் சிலர். எதற்காக வந்தனர்? அரசனைக் காண்பதற்காக ! அவர்கள் யார்? இரவலர்கள்! மனக்குறிப்பை முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே, அறிந்து கொடுத்து மகிழும் கொடையாளனாகிய வழுதியின் அருளை எண்ணியே புலவர்கள் இத்தகைய கொடிய வழியிலும் நடந்து வந்துள்ளனர்.
அவர்கள் கூறும் பாலையின் கதை, அப்பப்பா, எவ்வளவு பயங்கரம், பாலையில் படுகொலை.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026