கொடுங் கோன்மை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,581
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
நடுவு நிலைமை இல்லாமல் ஆளும் அரசின் தன்மை
செங்குட்டுவன் தாய், சோழன் மகளாகிய நற் சோணை. இவளது சகோதரனான சோழன் அரச னாகச் சோழநாட்டை ஆண்டு வந்தவன் இறந்தான். இறந்த சோழன் மகன் இளமைப்பருவம் உடைய வன். இவன் பெயர் நெடுமுடிக்கிள்ளி. இவன் முடி சூட்டிக்கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் சோழ அரச மரபினர் ஒன்பதுபேர் சோழநாட்டில் கலகம் செய்து “கள்வன் அம்புடனிருந்து வழிச் செல்பவர் பொருளைப் பறிப்பது போல” மக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் பொருள்களை அடித் துப் பறித்தனர். இவ்விளஞ் சோழனை அடித்துத் துரத்தினர். இவர்களுக்குப் பயந்து நெடுமுடிக் கிள்ளி சேரநாட்டிற்கு ஓடி அத்தை மகனான செங் குட்டுவனிடம் குறையைச் சொல்ல அவன் பெரும் படையுடன் சோழநாட்டில் நுழைந்தான். சோழ அரசமரபினர் ஒன்பது பேரும் செய்த துன்பம் தாங்காமையால் சோழமக்கள் அனைவரும் செங்குட் டுவன் பக்கம் சேர்ந்தனர். இவரோடு அரச விசு வாசமுடைய சோழர்படையும் சேர்ந்தது. செங் குட்டுவன், கலகம் விளைத்த ஒன்பது பேரையும் உறையூருக்குத் தெற்கே உள்ள “நேரி வாயில்” என் னும் இடத்தில் சண்டை செய்து அழித்தான். தன் மைத்துனச் சோழனான நெடு முடிக்கிள்ளியை அரி ஆசனத்தில் அமர்த்தி முடிசூட்டினான். பின்னும் கண்ணை இமைகாப்பதுபோலச் சோழனைக்காத்து வந்தான். இவ்விதம் கொடுமை செய்யும் அரசர் விரைவில் அழிவர் என்று வள்ளுவரும் கூறினர்.
வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு. (40)
கோலொடு = தண்டித்தல் தொழிலோடு
நின்றான் = நின்ற அரசன்
இரவு = (குடிகளிடம் மிக்க பொருளைக்) கேட்டுப் பெறுதல்
வேலொடு நின்றான் = (வழிப்பறி செய்யு மிடத்துத் தனியே) வேல்கொண்டு நின்ற கள்வன்
இடு = (வழிச்செல்வோனைத் தடுத்து உன் கையில் உள்ள பொருளைத்) தா
என்றதுபோலும் = என்று வற்புறுத்தி வாங்குதலைப் போன்ற தாகும்.
கருத்து: மிக்க பொருளை விரும்பி வாங்கும் மன்னன் வழிப்பறி கள்வனுக்கு ஒப்பாவான்.
கேள்வி : இடு என்று வேலொடு நிற்கும் அரசன் எவர்க்கு ஒப்பாவான்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.