கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்கள்




அந்த சிறைச்சாலை கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பெயர் சொல்லி அழைத்தான் அந்த காவலன்.
அனைவரும் வரிசையாய் வந்து நின்றனர். ம்..நடங்கள், அவர்கள் கால்களில் கட்டியிருந்த சங்கிலிகளை அவிழ்த்தவன் விரட்டினான்.
இன்று மன்னரின் தாய் நினைவு நாளாயிறே ! அரசுக்கு எதிராக பேசியவர்களை சுட்டு கொல்ல நாளைக்குத்தான் நாள் குறித்திருந்தாரே, திடீரென்று இன்றே ஏன் இவர்களை கொண்டு வர சொல்கிறார், ஒரு காவலாளி மற்றொரு காவலாளியிடம் கேட்டான்.
காவலாளி சிரித்தான், மன்னரை பற்றி தெரியாதா? என்ன செய்வார், என்ன சொல்வார் என்று யாருக்கு தெரியும். எதற்கும் முந்திக்கொள்வதுதான் அவருக்கு பிடித்த விஷயமாயிற்றே !
ஏற்கனவே பல நாள் பட்டினியில் அரை உயிராய் இருந்த கைதிகள் அந்த சங்கிலியின் அவிழ்ப்புக்கே பெரிய விடுதலையாய் உணர்ந்தவர்கள், இந்த விடுதலை இன்னும் சற்று நேரமே அதன் பின் ஒவ்வொருவராய் சுட்டு கொல்லப்படத்தானே போகிறோம், இந்த எண்ணம் வந்தவுடன் அவர்களின் நடை தள்ளாட்டமானது. மரணத்தின் பிடிக்குள் தெரிந்தே போகும் தங்களுக்கு விடுதலை என்பது இதுதானா? தங்களை விடுதலைக்கு அழைத்து செல்வதாக கூறியவனும் இப்பொழுது தங்களுடன் வரிசையில் தலை குனிந்துதானே வருகிறான்..
இவர்கள் அனைவரின் எண்ணத்திலும் வந்த பிளெமின் இதோ மரணத்தின் வாசலுக்குள் சென்று கொண்டிருக்கும் கைதிகளின் வரிசையில் மூன்றாவதாக சென்று கொண்டிருக்கிறான். பிளெமின் முகம் இறுகி இருந்தது. இந்த நாட்டில் மன்னனுக்கு எதிராய் ஜனநாயகம் வேண்டும் என்று பேசுபவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை காட்டவே நம்மை பொது வெளியில் கொண்டு சென்று சுட்டு கொல்லப் போகிறார்கள். என் முன்னாலும் பின்னாலும் வந்து கொண்டிருப்பவர்கள் பாவம் என் கருத்தை கேட்க மட்டும் தானே செய்தார்கள், அவர்களுக்கும் இப்படி ஒருமுடிவா? மனம் வேதனைப்பட முகத்தை சுருக்கினான்.
ம்..நடங்கள் பின்னால் காவலாளி ஒருவனை இடிக்க அவன் தள்ளாடி முன்னால் இருப்பவன் மேல் விழ அடுத்தவன் அடுத்தவனாய் ஒவ்வொருவரும் கீழே விழுந்தனர். மற்றொரு காவலாளி கொஞ்சம் மனிதாபி மானம் உள்ளவன் போலிருக்கிறது, அவர்களை எழுப்பி விட்டான்.
கொலைக்களமான மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். அவர்களை வேடிக்கை பார்க்க ஏராளமான பொது மக்கள் நின்று கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அவனுக்கு தண்டனை அளிக்கப்போவதாக அறிவித்து அந்த உயரமான மேடையில் நிற்க வைத்து எதிரில் மேடையில் நின்று கொண்டிருக்கும் ராணுவ வீரனால் அந்த கைதி சுட்டு கொல்லப்படுவான்.
இத்தனை ஏற்பாடுகளை செய்து முடித்த அந்த இராணுவ தலைவன் மன்னனுக்காக காத்திருந்தான்..
மன்னனும் அவனது பரிவாரங்களுடன் சற்று தள்ளி அமைக்கப் பட்டிருந்த மேடையில் அமர்ந்தான். அதற்கு பின் அவனருகில் அமர்ந்த ஏராளமான அதிகாரிகள் அடுத்து நடப்பதை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
முதலாமவனை பெயர் சொல்லி அழைக்க முற்பட்ட காவலாளியை உரத்த குரலில் நிறுத்த சொன்னான் பிளெமின். கேள்விக்குறியாய் பார்த்த காவலாளியிடம் முதலில் என் பெயரை அறிவி. நான் மட்டுமே இங்கு குற்றவாளி, இவர்கள் நான் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள்.
காவலாளி மன்னனின் முகத்தை பார்க்க அவனும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.
பிளெமின் பெயர் அறிவிக்கப்பட அவன் மேடை ஏறினான். அவனை நோக்கி துப்பாக்கி குண்டை உமிழ காத்திருந்தது. மன்னன் திடீரென கை அசைத்தான். அனைவரும் மன்னனை பார்க்க அவன் எழுந்து எல்லோருக்காக உன் பெயரை முன் சொல்லி வந்ததால் நானும் உனக்கு ஒரு சலூகை அளிக்கிறேன். இந்த மேடையில் ஐந்து நிமிடங்கள் தருகிறேன். அதற்கு அடுத்து இரண்டு நிமிடங்கள் மரணத்தின் முன்னால் கிடைத்த இந்த ஐந்து நிமிடங்களில் நீ என்ன நினைத்தாய் என்று சொல். அதன் பின் உன் மரணத்தை உனக்கு அளிக்கிறேன்.
ஐந்து நிமிடங்கள் மயான அமைதி. பிளெமின் அசையாமல் அந்த மேடையில் கண்ணை மூடி நின்றான்.
மன்னன் கை தட்டினான். பிளெமின் கண் விழித்தான். சொல் இந்த மரணத்துக்கு முந்திய ஐந்து நிமிட அவகாசத்தில் என்ன நினைத்தாய்?
முதல் ஒரு நிமிடம் இதுவரை காணவே முடியாமல் இருக்கும் என் மனைவியையும், அவள் புதிதாய் பெற்றிருக்கும் எனது குழந்தையையும் நினைத்தேன்.
அடுத்த ஒரு நிமிடம் எனது பெற்றோர்கள், அவர்கள் இந்த நாட்டிற்கு செய்த சேவைகளை நினைத்தேன்
அடுத்த ஒரு நிமிடம் எனது ஊர் நான் வாழ்ந்த இடம், அனைவரையும் நினைத்தேன்
அடுத்த ஒரு நிமிடம் யாருக்காக இந்த செயல்? இறந்து போன உங்கள் தாயார் ஒரு முறை சிறு குழந்தையாய் இருந்த என்னையும், என் பெற்றோர்களையும், பெரிய வெள்ளம் அடித்து கொண்டு போனபோது தனது ஆட்களை நீரில் குதிக்க செய்து காத்து இரட்சித்தார்களே, அதை நினைத்து பார்த்தேன்.
அடுத்த ஒரு நிமிடம் அந்த தாயின் மகனல்லவா இந்த மன்னன் இவருக்கு எதிராக இந்த கருத்தை இதோ என் பின்னால் இருப்பவர்களிடம் சொன்னது தவறு. பாவம் அதை காதால் மட்டுமே கேட்டார்கள் இவர்கள். அதற்கு ஆதரவாக கூட ஒன்றும் பேசவில்லை. இவர்களுக்கும் ஏன் தண்டனை?
இதையும் மீறி அவர்களுக்கு மன்னன் தண்டணை கொடுக்க தயாரானால் இந்த மன்னன் வாழ்க என்று சொல்லி குண்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
அவர்களை மன்னிப்பதாக இருந்தால் மன்னன் எனக்கு மட்டும் தண்டனை கொடுத்து சுட்டு தள்ள வேண்டும், இல்லை நாடு கடத்தி விடவேண்டும். இப்படித்தான் நினைத்தேன்.
மன்னன் என்ன நினைத்தானோ இவனை நாடு கடத்தி மற்றவர்களை விடுதலை செய்து விடுங்கள். சொல்லி விட்டு இடத்தை விட்டு அகன்றான்.
பிளெமினை, நாடு கடத்துவதற்காக இரவு அவன் கையை கட்டி நாட்டை விட்டு வெகுதூரம் கொண்டு சென்றனர். போவதற்கு முன் அவனது ஆதரவாளர்களுக்கு இரகசியமாய் ஒரு தகவலை நம்பிக்கையானவர்களிடம் அளித்து விட்டுத்தான் சென்றான்.
மரணத்திற்கு பயந்து கருத்தை மாற்றி கொண்டதாக எண்ணாதீர்கள். மரணம் வந்து, முடிந்து போவதற்காக இந்த போராட்டத்தை நடத்தவில்லை., உங்கள் உயிரை காப்பாற்ற நான் கையாண்ட இது ஒரு தந்திரமாக நினையுங்கள். நம்மை அழைத்து வரும் போது இன்று அவன் அம்மாவின் நினைவு தினம் என்று சொல்லிக்கொண்டு வந்ததை கேட்டேன். எந்த செயலையும் முந்திக் கொண்டு செய்பவர்களை அவனுக்கு பிடிக்கும் என்றும் தெரிந்து கொண்டேன். அதை உபயோகப்படுத்தி கொண்டேன்.
என்னுடைய இந்த ஜனநாயக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும், அது உங்களையும் சீக்கிரம் வந்தடையும் கவலை வேண்டாம், அதற்காகவே மரணத்திடம் சிறிது அவகாசம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று நினையுங்கள்…