தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,266 
 
 

“”என்ன சந்திரா… வயசான காலத்தில் உனக்கெதுக்கு பிடிவாதம். பசங்க போனில் சொன்னபோது நான் நம்பலை. நேரில் வந்து பார்த்த பின்தான் தெரியுது.
“”உனக்கென்ன குறை? அருமையான பிள்ளைகள், கிரானைட் பிசினசில் கொடிகட்டிப் பறக்கிறாங்க. கோடிக்கணக்கில் லாபம் வருது. உன்னையும் சகல வசதிகளோடு நல்லபடியாக பாத்துக்கிறாங்க. அப்புறம் எதுக்கு பிடிவாதமாக ஆளுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுக் கணும்ன்னு கேட்கிற… உனக்கு அப்படி என்னப்பா செலவு?”
பசுமை வெல்கசந்திரசேகரின் அக்கா கணவர், குடும்பத்தில் மூத்தவர் என்ற உரிமையில் கேட்டார்.
“”இங்க பாருங்க… உங்களுக்கு சொன்னா புரியாது. அதான் பிசினசில் நல்ல லாபம் சம்பாதிக்கிறாங்க இல்லையா… அப்பா கேட்டா மறுப்பு சொல்லாம கொடுக்க வேண்டியதுதானே?”
“”அதெப்படிப்பா… இவ்வளவு பெரிய தொகையை, காரணம் கேட்காம கொடுக்க முடியும்? நீயே சொல்லு…”
“”நான் செலவு பண்ணி, படிக்க வச்சு ஆளாக்கினதாலே, இப்ப அவங்களால் நிறைவாக வாழ முடியுது. எனக்குள்ள செலவுகளை நான் அவங்ககிட்டே சொல்லிட்டு இருக்க முடியாது. அவங்க பிடிவாதமாகக் கொடுக்க மறுக்கும் பட்சத்தில், நான் கோர்ட் படியேறவும் தயங்க மாட்டேன்!”
உறுதியாகப் பேசும் சந்திரசேகரை, ஆச்சரியம் மேலிடப் பார்த்தார்.
“”பேரன், பேத்திகளுக்கு சொத்து சுகம் எதுவும் சேர்த்து வைக்காட்டியும், நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தைக் கேட்கிறாரே… உங்கப்பாவுக்கு அப்படி என்ன செலவு. இந்தப் பணம் சரியான வழியில் செலவு பண்ண அவர் கேட்கலை. எனக்கென்னவோ அவர் நடத்தையையே சந்தேகப்படும்படி இருக்கு…” மனைவி சொல்ல, மவுனமாக இருந்தான் பரணி.
சந்திரசேகரின் மகன்கள், காரணம் தெரியாமல் பணத்தை அவருக்குக் கொடுக்க மறுக்க, சொன்னது போல், வக்கீல் மூலம் கோர்ட்டில் கேஸ் போட, சொந்தங்கள் எல்லாருமே, அப்பாவே, மகன் மேல் வழக்கு தொடர்ந்ததை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
பிள்ளைகள் பாதுகாப்பில் இருந்தாலும், வயதானாலும் தனி மனிதர். அவருக்கான சுதந்திரம் இருக்கிறது. அவர்களுடைய வளர்ச்சிக்கு மூலக் காரணமாக இருந்தவர்.
கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிள்ளைகளுக்கு, இது ஒரு பெரிய தொகை இல்லை என்பதால், எவ்வித மறுப்பும் சொல்லாமல், அவர் கேட்ட தொகையை கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது.

பெட்டியுடன் கிளம்பிய அப்பாவைப் பார்த்து, “”இந்த வீட்டை விட்டே போறதாக முடிவு பண்ணிட்டீங்களா?” என்று கேட்டான் பரணி.
“”வயதான காலத்தில் பேரன், பேத்திகளுக்கு சொத்து எழுதிக் கொடுக்கிற பெரியவங்களைத் தான் பார்த்திருக்கோம். பேரன்களுக்கு சேமித்து வைக்கிற பணத்தை வாங்கிட்டு கிளம்பறவரை இப்பதான் பார்க்கிறோம்!” கோபப் பார்வையுடன் சொன்னாள் மருமகள்.
“”வாய்க்கு வாய், பேரன்களுக்கு என்ன சொத்து சேர்த்து வச்சுட்டு போறீங்கன்னு, கேட்கறவங்களுக்கு மத்தியில், நான் இனியும் இருந்தா நல்லா இருக்காதுப்பா. உங்களுக்கும் கோர்ட் மூலமாக பணத்தை வாங்கிட்டேன்னு என் பேரில் மனக்கசப்பு இருக்கும்…
“”இதை மீறியும் நான் இங்கே இருக்க விரும்பலை. எனக்கு நிறைவேத்த வேண்டிய கடமைகள் சில இருக்கு. வேணுங்கிற அளவுக்கு பணத்தோடு தான் போறேன். என்னை பத்தி கவலைப்பட வேண்டாம். நான் வரேன்…”
“”ஐயா… நீங்க சொன்ன மாதிரி பாரஸ்ட் நர்சரியிலிருந்து பத்தாயிரம் மரக்கன்றுகளை லாரியில் ஏத்திட்டு வந்துட்டேன்…”
“”சரி வேலு… இன்னைக்கு சாயந்திரம் பஞ்சாயத்து தலைவர்கிட்டே சொல்லி பொதுக்கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்… பார்ப்போம்…”
“”மனுஷனாக பிறந்த நாம் எவ்வளவோ இடர்பாடுகளை சமாளித்துதான் வாழ்ந்துட்டு வர்றோம். மரங்கள் தான் நமக்கு நுரையீரல் மாதிரி, அது வெளிவிடற சுத்தமான காத்தை தான் நாம் சுவாசிக்கிறோம். ஆனா, இப்ப மரங்களை வெட்டி, காட்டை அழிச்சு, நாட்டையே பாலைவனமாக மாத்திட்டிருக்கோம்…
“”இந்த நிலை மாறணும்ன்னு, “பசுமை வெல்க’ங்கற ஒரு திட்டத்தை தனி மனுஷனாக நான் ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கு உங்களோட ஆதரவும், உழைப்பும் எனக்கு வேண்டும்.
“”நான் பிறந்த இந்த கிராமத்திலிருந்து அதை தொடங்கணும்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். நம்ப கிராமத்து மக்கள் எல்லாருக்கும், தலா இரண்டு மரக்கன்றுகள் தரப் போறேன். அதை உங்க பிள்ளைகளைக் கவனிக்கிறது போல், உங்க இடத்தில், உங்க பொறுப்பில் நட்டு, வளர்த்து பாதுகாக்கணும்.
“”வருஷா, வருஷம் செழிப்பாக வளர்ற கன்றுகளுக்கு, என் சார்பில் ஊக்கத் தொகையும் கொடுக்கப் போறேன். இந்தத் திட்டத்துக்கு நீங்க எல்லாரும் முழு மனசாக ஆதரவு கொடுக்கணும்.”
கிராமத்து மக்கள் ஆவலோடு மரக்கன்றுகளை வாங்கிச் சென்றனர்.
மரக்கன்றுகள் துளிர்விட்டு வளர ஆரம்பிக்க, சந்தோஷப்பட்டார் சந்திரசேகர்.
“”நம்ப கிராமத்து குளத்தை தூர்வாற ஏற்பாடு பண்ணுங்க. அதுக்கான செலவை நானே ஏத்துக்கறேன். தண்ணீர் சேமிப்பு, வீட்டையும், நாட்டையும் பாதுகாக்கும்!”
சந்திரசேகர் சொல்வதை ஏற்றுக்கொண்டார் அவ்வூர் பள்ளிக்கூட முதல்வர்.
“”சரிங்க… நீங்க பெரியவரு, பொறுப்பெடுத்து செய்யணும்ன்னு நினைக்கிறீங்க. உங்க, “பசுமை வெல்க’ திட்டத்துக்கு நான் முழு உதவி செய்யறேன். எங்க பள்ளிக் கூடத்தை சுத்தி ஐம்பது மரக்கன்றுகள் நடலாம். அதை கொடுங்க… அதற்கான ஏற்பாடுகளை செய்யறேன்…”
பள்ளி மாணவர்கள், அதை ஆர்வத்துடன் தண்ணீர் விட்டு வளர்க்க ஆரம்பிக்க, தன் திட்டம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது.
“”உங்களைப் பார்க்க, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பெரிய மனுஷங்க வந்திருக்காங்க… ஐயா”
“”வாங்க…”
“”நீங்க இந்த கிராமத்துக்கு வந்து இரண்டு வருஷத்திலே, இந்தக் கிராமத்தையே மாத்திட்டிங்க. ஒரு பூஞ்சோலைக்குள் நுழைந்தது போல், குளுமையாக இருக்கு.
“”எங்கு பார்த்தாலும் மரங்களை நட்டு, அதை பராமரிக்கும் செலவையும் பகிர்ந்துகிட்டு, பார்க்கவே பசுமையா, மனதுக்கு இதமாக இருக்கு.
“”எங்க கிராமத்திலும் உங்க மேற்பார்வையில், ‘பசுமை வெல்க’ திட்டத்தை அமல்படுத்தணும். அதை, நாங்க முழுமனதோடு நிறைவேத்த தயாராக இருக்கோம்…”
மன சந்தோஷத்துடன் அவர்களை பார்த்தார். தன் செலவிலேயே மரக்கன்றுகளை வரவழைத்து, சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமங்களுக்கு அனுப்பினார்.
அவர் நினைத்ததைவிட, அதிக உற்சாகத்தோடு, கிராமத்து மக்கள் மரங்களை வீடுகளிலும், தெரு ஓரங்களிலும் நட்டு பராமரித்தனர். சந்திரசேகரின் புகழ் சுற்று வட்டார கிராமங்களிலும் பரவியது.
“”உங்களைப் பத்தி கேள்விப்பட்டு, கலெக்டர் ஐயா, பார்க்க வந்திருக்காரு…”
“”வணக்கம்… பெரிய பதவியில் இருக்கும் பெரிய மனுஷன் என் வீடு தேடி வந்தது, சந்தோஷமாக இருக்கு.”
“”உங்களுடைய சமூக பொறுப்புணர்வை கேள்விப்பட்டு, உங்களை நேரில் பார்த்து நன்றி சொல்லிட்டுப் போக வந்தேன். உங்களுடைய இந்த சேவை மகத்தானது…
“”கிராமத்தையே பசுமைப் பூங்காவாக மாத்திட்டீங்க. சுற்றுவட்டார கிராமங்களிலும் உங்க ஆலோசனைப்படி, மரங்கள் செழிப்பாக வளர ஆரம்பிச்சிருக்கு. தனி மனிதனாக சாதிக்க முடியுங்கிறதை உங்க திட்டம் நிரூபிச்சிருக்கு.
“”சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தனி நபருக்கு வழங்கப்படும், “இந்திராகாந்தி ப்ரியவரன் புரஸ்கார்’ விருது, உங்க திட்டத்துக்கு அரசு கொடுக்கப் போகுது. அந்த விபரத்தை சொல்லி, உங்களை நேரில் பாராட்ட வந்தேன்.”
“”நீங்க என்னை ரொம்ப புகழறீங்க… இதை என் கடமையாக நினைச்சுதான் செய்யறேன். இந்த உலகத்தில் நான் வாழ்ந்துட்டு போகும்போது, நாம் வாழ்ந்ததற்கான தடயங்களை விட்டுட்டுப் போகணும்ன்னு நினைச்சேன்.
“”உலக வெப்பமயமாதலை தடுக்கணும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கணும்ன்னு உலக விஞ்ஞானிகள் சொல்லிட்டு இருக்காங்க. நாம் நல்லபடியா வாழ்ந்துட்டு போனா மட்டும் பத்தாது… நம்ம தலைமுறைகளும் வாழணும் இல்லையா?
“”என் பிள்ளைகள் நல்ல நிலையில், கோடிக்கணக்கான சொத்துக்களோடு இருக்காங்க. அவங்ககிட்ட, தேவைப்பட்ட பணத்தை, கோர்ட் படி ஏறி வாங்கினேன். நிச்சயம் என் திட்டத்திற்கு அவங்க உயிர் கொடுப்பாங்களான்னு தெரியாது. அதனால், தனி மனிதனாக, இதை அமல்படுத்தினேன்.
“”மக்களோட ஆதரவோடும், ஒத்துழைப்போடும் இதுவரை பத்து லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, செழிப்பாக வளர்ந்துட்டிருக்கு. இந்த அஞ்சு வருஷத்தில் நான் நினைச்சதை சாதிச்சுட்டேன். அந்த நிறைவு எனக்கு போதுங்க!”
வாசலில் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி வரும் மகன்களையும், மருமகள்களையும் அன்போடு எதிர்கொண்டார்.
“”அப்பா… எங்களை மன்னிச்சிடுங்க… உங்களைப் பத்தி பேப்பரில் படிச்சோம். பணம் கேட்டு சண்டை போட்ட போது, உங்க நடத்தையையே சந்தேகப்பட்டோம். ஆனா, இந்த வயதிலும் தனி மனிதனாக, “பசுமை வெல்க’ திட்டத்தின் மூலம், பிறந்த பூமியை, பசுமை பூஞ்சோலையாக மாத்தியிருக்கீங்க. சந்தோஷமா இருக்குப்பா…”
“”இதுக்கெல்லாம் காரணம் என் மருமகள்கள் தான். இந்த எண்ணத்தை என் மனசில விதைச்சவங்களே அவங்க தான்…”
“”என்னப்பா சொல்றீங்க?”
“”ஒரு பெரிய மனிதனாக, உங்க பேரன், பேத்திக்கு, என்ன சொத்தைச் சேர்த்து வச்சுட்டு போறீங்கன்னு, கேட்பாங்க இல்லையா? நீங்க கோடி கோடியாக சம்பாதித்து, அவங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கலாம். ஆனாலும், அவங்க அதை அனுபவிச்சு சந்தோஷமாக வாழ, இந்த பூமியை பாதுகாக்க வேண்டாமா?
“”என் பேரன், பேத்திகள், என் தலைமுறைகள் இந்த பூமியில் சந்தோஷமாக வாழணும். அதுக்காக என்னால முடிஞ்ச உபகாரத்தை செய்யணும்ன்னு நினைச்சேன்…
“”காற்று மண்டலத்தில், மாசு கலப்பதைக் குறைப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், என் கடமையாக உணர்ந்தேன். அப்போது தான் பூமி வெப்பமயமாதலை தடுக்க முடியும். நம் வம்சாவழிக்காக, நாம் ஏன் அதை செயல்படுத்தக் கூடாதுன்னு நினைத்தேன்…
“”அதன் விளைவுதான், “பசுமை வெல்க’ திட்டம். அதன் மூலம் மரக்கன்றுகளை நட்டு, இன்னைக்கு, பத்து லட்சம் மரங்கள் வளர்க்கப்பட்டு, பசுமை போர்த்தியிருப்பதை பார்க்கும் போது, மனசு நிறைஞ்சிருக்குப்பா…
“”இதுதாம்பா, இந்த உலகத்தில் என் பேரன், பேத்திகளுக்காக நான் சேர்த்து வச்சுட்டு போற சொத்து. எனக்கு இது போதும்பா… இனி திருப்தியா இந்த உலகத்தை விட்டுப் போவேன்…”
தனிமனிதனாக நின்று சாதித்த அப்பாவை, பெருமை பொங்கப் பார்த்தபடி நின்றனர், அவரது மகன்களும், மருமகள்களும்!

– ஆர்.பி.கண்ணாயிரம் (நவம்பர் 2010)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *